நகர்பெயரும் கிராமங்கள் - பட்டிக்காட்டான்
ஒரு நேசமுடன் மடலில், தான் சென்னைவாசியாக இருப்பதைப் பற்றியும், தனக்கென்று ஒரு கிராம அனுபவம் இல்லாததைப் பற்றியும் வெங்கடேஷ் மிகவும் ஆதங்கப் பட்டிருந்தார். இதே ஆதங்கத்தை நகரங்களில் பிறந்து, வளர்ந்த வேறு பலரிடமும் கண்டுள்ளேன். ஆனால் இவர்கள் எல்லாம் ஏங்கும் அளாவிற்கு கிராமங்கள், கிராமங்களாகவே இன்னும் இருக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. கிராமாம் என்றால் பாரதிராஜா படத்தில் வருவது போல் மதகில் பெருகி ஓடும் சிற்றறிவியோடும், பசுமையான வயல்வெளிகளோடும், நிமிர்ந்து நிற்கும் கோபுரங்களோடும், தென்னை,மா தோப்புகளோடும், கள்ளங்கபடற்ற மக்களோடும், இன்னும் கிராமமாகவே இருக்கிறதா என்ந்து எனக்குத் தெரியவில்லை. மோக முள்ளைப் படித்து விட்டு, பாபுவின் கிராமத்தை யாராவது சென்ற தேட முயன்றால் ஏமாற்றமே கிட்டும். நானறிந்தவரை எனது கிராமத்தின் நிலை, என் கண் முன்னாலேயே வேகமாக மாறி வருகிறது.
அமெரிக்க இந்திய சமூகத்தில் பிறந்தநாள் விருந்துகள் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சம். பல பிறந்தநாள் விழாக்களில் தமிழர்கள் பலரையும் சந்திக்க நேர்வதுண்டு. அவ்வாறு சந்திக்கும் தமிழ் நண்பர்களை, பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன், எந்த ஊர் என விசாரிக்க்கும் பொழுது பொத்தாம் பொதுவாக சென்னை என்பார்கள். பின்னர் சின்ன தயக்கத்துடன் அம்மாவுக்கு திருச்சி பக்கம் ஏதோ ஊர் என்றோ, அப்பாவுக்கு தஞ்சாவூர் பக்கம் ஏதோ ஒரு கிராமம் என்றோ மெதுவாகக் கூறிவிட்டு, ஆனால் நாங்கள் அந்தப் பக்கமெல்லாம் அதிகம் சென்றதில்லை என்று முடித்துக் கொள்வார்கள்.
அதற்குப் பின் பேச்சு அரசியல், பொருளாதாரம், வீட்டு விலை நிலவரம், டாலர் மதிப்பு, இந்தியாவுக்குத் திரும்பிப் போகலாமா, வேண்டாமா போன்ற விஷயங்களுக்குத் திரும்பி விடும். இதுவே, மதுரை, நெல்லை, திருச்சி என்றால் ஊர் குறித்து பேச பல விஷயங்கள் அகப்பட்டு விடும். பொதுவாக சென்னை வாசிகளின் அவசர வாழ்க்கை முறை, தென்பகுதி மக்களை விட சற்று வேறானது. பெரும்பாலான சென்னை வாசிகளுக்கு (எல்லோருக்கும் அல்ல), தாம்பரத்துக்கு கீழே என்ன நடக்க்கிறது, என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு தேவையான நேரமோ அக்கறையோ இருப்பதில்லை. அவர்களது அவசர வாழ்க்கை முறை அப்படி. இதற்கு அவர்களை குற்றம் சொல்ல முடியாது.
மதுரை, நெல்லை வாசிகளுக்கு எதிலுமே அவசரம் இருப்பதில்லை, நிதானமான வாழ்க்கை முறை. இன்னும் எத்தனையோ வேறுபாடுகள். அதிலும் சென்னையில் வளர்ந்த ஒரு பெண், நெல்லை போன்ற பரபரப்பற்ற வாழ்க்கை முறையில் வளர்ந்த ஆணை திருமணம் செய்யும் பொழுது ஒருவித கலாச்சார அதிர்ச்சி கூட ஏற்படலாம். பொதுவாக செனை வாசிககள் என்றாலே, ஊரற்ற பரபரப்பு மனிதர்கள் என்ற எண்ணம் இது வரை நான் பழகிய சென்னைவாசிகள் மூலம் ஏற்பட்டு விட்டது. இன்றைய அவசர உலகில் இது தவிர்க்க முடியாததுதான். பிற தென்பகுதி நகரங்களிலும் இப்போது நிலைமை பரபரப்பாக மாறியிருக்கலாம்.
பிற மாவட்டக் காரர்களிடம் தங்கள் ஊர் குறித்த பெருமையும், தனது பகுதியைச் சார்ந்தவர்களின் பால் ஒரு வட்டார ஈர்ப்பையும் எப்பொழுதும் கண்டிருக்கிறேன். வறண்ட இராமநாதபுர மாவட்டக் காரர்கள் கூட, ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, ஊர்ப்பக்கம் போயிருந்தீங்களா,ஏதாவது மழை தண்ணி உண்டா என்று பரஸ்பரம் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அது போல் எந்த ஊர் என்று கேட்டுவிட்டால் போதும் தன் ஊர் பற்றிக் கூறாமல் விடமாட்டார்கள். எனது ஊரை விட்டு, வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடு என்று ஆண்டுகள் பல ஆயின போதிலும், இன்றும் என்னை யாராவது எந்த ஊர் என்று கேட்டால் போதும், ஊர் பேர் பற்றி அளக்க ஆரம்பித்து விடுகிறேன். வளர்ந்தது வேறு ஊராக இருப்பினும், இன்னும் சொந்த மண்ணின் மேல் உள்ள பாசம் மட்டும் போகவேயில்லை. அதனாலேயே எங்கள் மண்ணின் மனத்தை எழுதிய வண்ண நிலவன், வண்ணதாசன் கதைகளிடம் எனக்கு சற்றே ஈர்ப்பு அதிகம்.
அவர்கள் கதைகளில் வருவது போன்ற தாமிரவருணிக் கரையோரம், ஒரு வைணவக் கோவிலைச் சுற்றி அமைந்த, ஒரு அமைதியான கிராமமாகத்தான் எனது கிராமமும் இருந்தது. தற்பொழுது ஊரின் கிராமத்து முகம் கொஞ்சம், கெஞ்சமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் ஊருக்குள் நுழைய ஒரு மைல் நடக்க வேண்டும். திருநெல்வேலி செல்லும் மெயின் ரோட்டில் இறங்கி, கல் துருத்திக் கொண்டிருக்கும் மண் ரோட்டில் நடக்கும் பொழுது கூடவே இருபுறமும் வரும் தென்னந்தோப்பும், மாந்தோப்பும், குயிலோசையும் ஊருக்குள் நுழையும் வரை கூடவே வரும். அதிலும் அதிகாலை பேருந்தில் இறங்கி ஊருக்குள் நுழையும் பொழுது தழுவும் அதிகாலைக் குளிரும், மெலிதாக இருட்டு விலகும் நேரத்தில் தோன்றும் மரங்களும், வயல்வெளிகளும் ஒரு பரவச அனுபவத்தைக் கொடுக்கும்.
இறங்கியவுடன் எதிர்படும் இசக்கி அம்மனின் பயங்கரத் தோற்றம், நானிருக்கிறேன் போ என்ற நம்பிக்கையை அளிக்கும். வாய்க்கால்க் கரையில் காலைக் கடன்களை முடித்து விட்டு ரோட்டடி வரை வந்து கொண்டிருக்கும் மனிதர்களின் அன்பான உபசரிப்பு, இது நம்ம ஊர் என்று உறுதிப் படுத்தும். மண்பாதையில் சற்றே உள்ளே சென்றால், ஆற்றங்கரையில் இருந்து பிரித்து செலுத்தப்பட்ட வாய்க்காலும், அதை அடர்த்தியாக போர்த்திக் கொண்டு வானுயர நிற்கும், மாமரங்களும், அதில் வாசம் புரியும் பறவைகளும், தலையசைத்து, குரலெலிப்பி, வா வாவென ஊருக்குள் அழைப்பதாகத் தோன்றும். இது எனது மண் என மனம் குதுகலிக்கும்.
அதிகாலை வாய்க்கால் கரையில் பாத்திரங்கள் தேய்த்துக் கழுவவும், வீட்டு உபயோகத்துக்கென தண்ணீர் பிடிக்கவும் வரும் மகளிரின் கரிசனமான உபசரிப்பைக் கேட்காமல் மேலும் நடக்க முடியாது. அதையும் தாண்டினால், முழுக்க ஆற்றுமணல் நிறைந்த சாலையாக மாறி, ஊருக்குள் கொண்டு விடும். வாய்க்காலும், அதன் கரையில் அமைந்த அடர்ந்த மாமரங்களும், பட்சிகளும், சிறு கோவில்களும், ஆற்றுமண் நிறைந்த சாலைகளும், தேரடியும், சாணி தெளித்துக் கோலமிட்ட வாசல்களும், அகண்டு நிற்கும் கோவிலும், கம்பி அழி போட்ட வீடுகளும், கோவிலுக்குப் பின் ஓடும் தாமிரவருணி ஆறும் என்று, அணு, அணுவாக நான் ரசித்து வளர்ந்த அந்தக் கிராமம், இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக தன் முகம் மாறி, பொலிவிழந்து, கான்க்கிரீட் மேக்கப் போட்டுக்கொண்டு, சற்றே விகாரமாக நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
திரையரங்கம் இல்லாத கிராமம். ஊர் முழுக்க ஒரு பொது வானொலி காலையில் வந்தே மாதரத்துடன் தொடங்கி, இரவு செய்திகளுடன் முடியும். நல்லது, கெட்டது எதுவென்றாலும் அந்த வானொலியின் அடியில் ஊர் கூடும். ஊரின் ஊடே மாட்டு வண்டிகள், ஒரு சில சைக்கிள்கள், எப்பொழுதாவது பப்பாய்ங் என்று ஹார்ன் அடித்துக் கொண்டு ஒரு சில பெரிய வீட்டுகளுக்கு வரும் ப்ளஷர் கார்கள் தவிர வேறு போக்குவரத்து எதையும் பார்க்க முடியாது.
ஆற்றங்கரையில் குளித்து விட்டு, அன்கேயே ஊற்றுத் தோண்டி குடி தண்ணீரையும் குடத்தில் எடுத்துக் கொண்டு, சரக் சரக் என்ற ஈர உடையெழுப்பும் சப்தம் அதிகாலல் நேரத்தை நிரப்பும். பகல் பொழுதுகளில் கரையும் காக்கைச் சத்தத்தையும், பெண்கள் தங்கள் பிள்ளைகளைச் சத்தம் போட்டுக் கூப்பிடும் கூப்பாடும், தயிர்கார, கீரைக்கார பெண்மணிகளின் ராகம் போட்ட அழைப்புகளையும் தவிர வேறு ஓசை கேட்பதறிது. மாலை நேரங்களிலும், பூஜா காலங்களிலும் கோவிலில் இருந்து எழும்பும் மணியோசையும், நாதஸ்வர,தவில் இசைகளும் ஊரையையே நிறைத்து அடங்கும். இரவு ஆங்காஙே எழும்பும் நாய் குரைப்புகள். மீண்டும் புல்லினங்களின் இசையோடு காலை புலரும்.
ஆற்றில் வற்றாது தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது போலவே, ஊரும் அமைதியாக காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்கும். திருவிழாக் காலங்கள் கிராமத்துக்கு ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தாலும், பத்து நாள் கழிந்து, மீண்டும் களையிழந்த திருமண வீடு போல், அமைதியான கிராமமாகி விடும். ஊரின் பெருமை ஒவ்வொருவர் பேச்சிலும் தளும்பும். அதெல்லாம் அந்தக் காலம்.
அதே கிராமம் இப்பொழுது உருமாறி, இரைச்சலும் தூசியும், குப்பையும் நிறைந்த இரண்டும் கெட்டான் ஊராக மாறி வருகிறது. ஊருக்குள் புகுந்து அமைதியைக் குலைக்கும் ஆட்டோக்களும், மக்கள் வசதிக்காக வீட்டு வாசல் வரை விடப்பட்ட பஸ்களும், தார்ச் சாலைகளும், மணல் உறிஞ்சப்பட்டு, தண்ணீருக்குப் பதிலாக வேலிகாத்தான் மரங்களால் நிறைந்த ஆறுமாக என் கண் முன்னாலேயே ஒரு அசிங்கமான நரகமாக, விரைவாகக் கற்பழிக்கப்பட்டு வருகிறது. பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்க்கு கோவிலைத் தவிர அங்கு மிச்சங்கள் அதிகமில்லை.
ஊருக்குள் போக இப்பொழுதெல்லாம் நடக்க வேண்டாம், ஒரு சில பேருந்துக்கள் ஊருக்குள்ளேயே வருகின்றன, இல்லாவிட்டாலும் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன, ஆகவே பேருந்தை விட்டு இறங்கியவுடன், அன்புடனும், வாஞ்சனையுடனும், 'ஏ வா, இப்பதான் வந்தியா, வா, வா' என்று நெல்லைத் தமிழிலில் நலம் விசாரிக்கும் நேயமுள்ள மனிதர்களும் எதிர்படுவதில்லை. வாய்க்கால் கரையும், மா, வேம்பு, தென்னை மரங்களும் காணாமல் போய் காங்கிரீட் வீடுகள் முளைத்துள்ளன. உயர்ந்த கம்பிக் கிராதிகளை சின்ன ஜன்னல்கள் இடமாற்றம் செய்துள்ளன, மணற்படுக்கையான சாலைகள், சற்றே, தார் பூசிக் கொண்டு, குண்டும் குழியுமாக தூசியைப் பரப்பிக் கொண்டு அசிங்கமாகப் பல்லிளிக்கின்றன. வாய்க்காலும் அதன் கரைகளும், அதன் மேல் பல நூறு வருடங்கள் நிழல் கொடுத்த மரங்களும் சுத்தமாகக் காணாமல் போயிருந்தன.
வீட்டிற்குள்ளேயே கழிவறைகள் வந்துள்ளதால், மக்கள் வாய்க்கால் கரையில் சந்திக்க் வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு வாசலில் உள்ள மணற்பாங்கான தரைகள் எல்லாம், அம்மாவின் கோவில் புனருத்தாரன புண்ணியத்தில் சிமிண்ட் தரைகளாக மாறியுள்ளன. மண்வாசலோடு, வாசல் தெளித்துக் கோலம் போடும் பொழுது மூக்கை எட்டிப் பரவசப் படுத்தும் மண்வாசனையும் காணாமல் போய் விட்டன. கோடைக் காலங்களில் வாசலில் காலெடுத்து வைத்தால், பரத நாட்டியமே ஆட வேண்டி வரும்.
நீண்ட கம்பிக்கிராதிகள் எடுக்கப் பட்டு, சின்ன ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அகலமான கம்பிக் கிராதிகள் வழியே நுழைந்து பின்வாசல் வழியே சென்று வீட்டை குளிரூட்டும் இலவச ஏசியும் கம்பி அழியோடு காணாமல் போய் விட்டன. ஊருக்குள்ளே தார் சாலைகள். வீட்டின் வாசலுக்கே பஸ் வசதிகள். வேகம் செல்லும் பேருந்துகள் வீட்டுக்குள் அனுப்பும் ஒரு வண்டி தூசி இலவச இணைப்பு. ஆட்டோக்கள், லாரிகள், பஸ்கள், பைக்குகள், இரைச்சல், பேரிரைச்சல். சுற்றுப் புற நதியும், நதி கொணர்ந்த மணலும், அதில் வளர்ந்த மரங்களும் காணமல் போனதால், அவற்றோடு இணைந்த பொதிகைத் தென்றலும் சொல்லாமல் போய் விட்டது.
வெப்பம், வேர்வை, கரண்ட் கட், உள்ளும், புறமும் புழுக்கம். ஆற்றங்கரை, கிராமத்தின் ஜீவ நாடி, இப்பொழுது பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. அகண்டு, விரிந்தோடும் தாமிரவருணி, இப்பொழுது ஒட்டி, ஒதுங்கி, சிறு குட்டையென மாறி விட்டது. அகண்டு கிடக்கும் மணற்படுகை அள்ளப்பட்டு, சகதியாகி, கருவேலங் காடுகளாக மாறிப் போயுள்ளன. ஆற்றைப் பார்க்கும் பொழுது இனம் புரியா சோகம் மனதை கவ்விக் கொள்கிறது. எதை இழந்து, எதைப் பெற்றுள்ளோம்? அனேகமாக தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களின் நிலை இதுதான் என நினைக்கிறேன்.
மலிவான மேக்கப் போட்டுக் கொண்டு அரைகுறை நகரமாக மாற முயற்சித்தாலும், எனது வேர் அந்தக் கிராமம், எனது பழைய நினைவுகளின் மிச்சங்கள் இன்னும் சிதறிக்க் கிடக்கின்றன. என் அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத்தாத்தாவும், எனக்கு விட்டு சென்றிருக்கும் ஒரு அடையாளம் அந்தக் கிராமம். அதன் மூலம் நான் கற்றதும் பெற்றதும் நிறைய.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் தென்படும் முகங்களை எல்லாம் இந்தக் கிராமத்திலும் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அதனாலேயே சுஜாதாவின் படைப்பை என்னால் அனுபவித்து ரசிக்க முடிந்தது. எனது ஊரின் முகம் மாறிவிட்டாலும் என்னால் மறக்கவோ வெறுக்கவோ முடியவில்லை. அதனால்தான், தொல்பொருள் துறைக்குச் சென்றிருக்க வேண்டிய ஒரு பழைய வீட்டை இடித்துக் கட்டியிருக்கிறேன். வீடு ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில்தான் முடியும். காரைச் சுவர்களையும், பனை மரத் உத்தரங்களையும், எடுத்து விட்டு காங்கிரீட் சுவர், மற்று கூரை போட நேரிட்ட பொழுது, வருத்தமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை, பழைய வீட்டில் தேள்களூம், பூச்சிகளும் சேர்ந்து விட்டன,இடித்துத்தான் கட்ட வேண்டி வந்தது. பெங்களூரிலோ, சென்னையிலோ ஒரு ஃபிளாட்டை வாங்காமல் இந்தக் கிராமத்தில் வந்து பணத்தைச் செலவழிக்கிறானே இந்தக் கிறுக்கன் என்று ஏளனம் செய்தவர்களும் உளர்.
பசுக்கள் நிறைந்த தொழுவமும், இரட்டை வண்டி மாடும், நிறைந்த நெற்குதிர்களும், காய்த்துக் குலுங்கும், தென்னையும், மாவும், கத்துங்குயிலோசையும், மோரும், தயிரும், வீட்டு வாசலுக்கு வரும் அரிசிக்குப் பண்டமாற்றம் செய்யப்படும் அரைக்கீரையும், காய்கறிகளும், அதிகாலை வரும் குடுகுடுப்பாண்டியும், பனை நார்க் கட்டிலும், பத்து நாள் திருநாளும், கோவில் திருநாளும், டும் டும் கொட்டும், அமிர்தமான சாப்பாடும், ஒளிந்து விளையாடிய வொவால் வாசனையுள்ள பிராகரங்களும், மாடங்களும், நீஞ்சக் கற்றுக் கொடுத்த ஆறும், குளிந்த்தபின் ருசித்த உப்பும், புளியும் சக்கரையும், பாட்டி வார்த்துப் போடும் தடிமனான தோசையும், அகலமான இட்டலியும், வைகுண்ட ஏகாதேசியில் விழித்திருந்து வாங்கும் லட்டும், இன்னும் பிறவும், என் காலம் முழுக்கத் நினைவுகளில் மட்டுமாவது தொடர்ந்து வரும். நினைவுகள் மட்டும் இன்று மிச்சமிருக்கின்றன.
எனது காலம் வரையில் என் நினைவுகளில் இருந்து பிரிக்க முடியாத அந்த ஊருடன் உள்ள உறவு தொடரும். நினைவுகள், நினைவுகள், நினைவுகள், மறக்க முடியா நினைவுகள். என்னதான் மாறிவிட்டாலும், இன்னும் ரசிக்க வேண்டிய மிச்சங்கள் நிறைய எனது கிராமத்தில் இருக்கிறது என்றுதான் இன்னமும் நினைக்கிறேன். அதிர்ஷ்டமிருந்து, என்றாவது ஒரு நான் ஊருக்குச் செல்ல நேரும் வேளையில், ஆற்றில் தண்ணீர் வரும் பட்சத்தில், ஆற்றங்கரைக் குளியலையும், முள்ளு மரங்களால் மறைக்கப் படாத ஒரு ஓரத்தில் இருந்து சற்றே அனுபவிக்கலாம்தான். பசுமையான வயல் வெளிகள் இன்னும் பல மிச்சமிருக்கின்றன, அவற்றின் கரைகளில் நிதானமாக நடக்கலாம், அப்பொழுதான் இறக்கப்பட்ட பதநீர் பருகலாம் அல்லது இளநீர் அருந்தலாம், கோவிலில் வாசிக்கப்படும் கீதங்களைக் காது குளிர கேட்கலாம். ஆனால் மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு எச்சங்களும், காலத்தின் ஓட்டத்தில் வேகமாகக் காணாமல் போய்க் கொண்டிருப்பதுதான் சோகம்.
எதிர்காலத்தில் என் குழந்தையை யாரவது எந்த ஊர் என்று கேட்டால், அவளும் இந்தியாவின் தென் கோடிக்கருகில் உள்ள தாமிர நதிக்கரையில் உள்ள பழம்பெரும் கிராமம் என்று சொல்ல வேண்டும் என விழைகிறேன். ஆனால் அது வரை அந்த ஊர் தன் முகவரியைத் தொலைக்காமல் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை. இன்றைய நிலவரம். இப்படியெல்லாம் மாறாத கிராமங்கள் ஒன்றிரண்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இன்னும் இருக்கலாம். அப்படி நிறம் மாறாக் கிராமங்கள் இருந்தால், அது அந்தக் கிராமத்தார் செய்த தவப்பயனாகத் தான் இருக்க முடியும்.
இப்படிக்கு
பட்டிக்காட்டான்
இது எவருடைய ஊர் என்று கண்டுபிடிச்சுட்டீங்களா?
கருத்துரையிடுக