செவ்வாய், டிசம்பர் 21, 2004

அருட்பா? மருட்பா?

சக்தி விகடன்: பிறருக்காக அழுது அழுது, தொழுது தொழுது பாடியவை வள்ளலாரின் பாடல்கள். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டிய அவரது பாடல்களை மக்கள் 'திரு அருட்பா' என்று போற்றினர். இந்தப் போற்றுதல் ஒலி சிலருக்கு நாராசமாகப் பாய்ந்தது. எதிர்ப்புக் குரல் எழுந்தது. ‘அருளாளர்கள் பாடியவைதான் அருட்பா. சாதாரண மானிடர் ராமலிங்கம் பாடியதெல்லாம் எப்படி அருட்பா ஆகும்? அவை வெறும் மருட்பா (மயக்கத்தில் பாடியது)’ என்று வாதிட்டனர் சில தமிழறிஞர்கள். இவர் களுக்குத் தலைமை தாங்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேல்பிள்ளை என்ற தமிழறிஞர்.

வள்ளலாரின் சீடர்கள், 'ஐயா, இவ்வளவு நடந்தும் தாங்கள் மௌனமாக இருக்கிறீர்களே?' என்று முறையிட்டனர். அதற்கு அடிகளார், 'தம்மை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றையவை மருட்பா. மூவர் பாடியவை தேவாரம் என்றும் மணிவாசகருடைய பாட்டை திருவாசகம் என்றும், மற்றும் தமிழ் வேதம், திருப்பாட்டு, திருவிசைப்பா என்பதெல்லாம் மரபு ஆகும்' என்று சாந்தமாகக் கூறினார்.

மருட்பா கட்சியினர் இதை வழக்காக்கினர். ‘ராமலிங்கத்தின் பாடல்களை 'அருட்பா' என்பது தவறு.’ என்று வாதிட்டனர். வள்ளலார் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கவேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. வழக்குத் தொடுக்கக் காரணமான கதிரை வேல்பிள்ளையே நீதிமன்றம் வர விரும்பவில்லை. ‘சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்திவிட்டனரே.' என வருந்தினார். அவரைச் சமாதானப்படுத்தி நீதிமன்றம் அழைத்து வர வேண்டியதாயிற்று.

வழக்கு தினத்தில் ராமலிங்க அடிகளார் நீதிமன்றத்தில் நுழைந்தார். கதிரைவேல்பிள்ளை, வழக்கறிஞர்கள் முதலிய அனைவருமே எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர். நீதிபதியும் இருக்கையை விட்டு எழுந்து, பின் அமர்ந்தார்.

நீதிபதி தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தார். ‘வழக்குத் தொடுத்த எதிரிகள் உட்பட அனைவருமே வள்ளலாரை வணங்கிப் போற்றியதைக் கண்டோம். பகைவரும் வணங்கும் பெருமையுடைய வள்ளலார் மீது வழக்கு எதற்கு? அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்' என்று அறிவித்தார்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு