திங்கள், ஜனவரி 24, 2005

புகைபிடிக்க விட்டவை

புயலுக்கு முன் அமைதி மாதிரி சனி காலை மேகமூட்டமாய் மட்டுமே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சனிக்கிழமை சாயங்காலம்தான் பனி போட ஆரம்பித்தது. நிறையப் போட்டுக் கொண்டே இருந்தது. இரண்டடி உயரத்துக்கு பனி விழப் போகிறது என்று டிவியில் சொன்னார்கள். காரை சுத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை பயன்பட்டது.

நியு இங்கிலாந்து பாட்ரியாட்ஸ் அமெரிக்கக் கால்பந்தில் மீண்டும் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றார்கள். ஜெயிப்பதை மிக எளிதாக செய்துகாட்டியதன் மூலம், சூப்பர் பௌலை வெல்வது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. பத்து பனிரெண்டு டிகிரி ஃபாஹ்ரென்ஹெய்ட்டில் சளைக்காமல் ஆடுகிறார்கள். குளிரில் பத்து நிமிஷம் நடந்தாலே மூக்கெல்லாம் உலர்ந்து, மாநிற முகம் கூட சிவந்து போய், கிளவுஸுக்குள் கை உறைந்து போகுமாறு எனக்கு ஆகிப் போகிறது. மனைவி மக்களுக்கு ஜலதோஷம், தும்மல், இருமல் எல்லாம் ஒட்டிக் கொள்கிறது.

கடந்த வருடத்துக்குப் பின், மீண்டும் நுழைந்த அடுக்களையில் புதிது புதிதாக பாத்திரங்கள் வந்திருந்தது. நான் மட்டும் தனியே இருந்தபொழுது இரண்டு கை விரலுக்குள் அடங்கும் உபகரணங்களைக் கொண்டு எளிதாக காலந்தள்ளியதை மனைவியிடம் நினைவு கூறாமல் புழங்க முடியவில்லை. பூண்டு முதல் பெப்பர் வரை அனைத்துப் பொடிகளும் போட்ட என்னுடைய பாஸ்டாவை ரசித்து சாப்பிட்டு பாராட்டிய பொழுது, நானும் அவ்வப்பொழுதாவது நல்லாயிருக்கிற சாப்பாட்டை, சத்தமாக வெளியே சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு வாங்கினால் பெரிய கிச்சனாய் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்திருக்க வேண்டிய அண்டை வீட்டார், இன்றுதான் வருகிறார்கள். இணையத் தளத்தின் மூலம் எங்கே இருக்கிறார்கள், எப்படி வருகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவது மிகவும் வசதி. லண்டனிலிருந்து மாஸ்கோ சென்று அங்கிருந்து மாண்ட்ரியால் வந்து சேர்ந்து பாஸ்டன் கொண்டு வந்து விடுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் சொல்லியிருந்தது.

ஒரு வயது குழந்தையுடன் நான் சென்றபோது இது மாதிரியெல்லாம் நடந்திருந்தால் கடவுளைக் கொஞ்சம் திட்டியிருப்பேன். சில நாள் முன்பு பார்த்த கார்ட்டூன் மனதில் ஊசலாடியது:

விமான நிலையம். எக்கச்சக்க பயணிகள் காத்திருக்கிறார்கள். அறிவிப்பில் நிறைய 'Delayed/Canceled'. கைக்குழந்தையுடன் உள்ள பெண்மணி 'டயாபர்' பிச்சை எடுப்பதாக வரைந்திருந்தார்.

குழந்தைகளுக்கென சிறப்பு உணவு, பழரசங்கள், ஓவ்வாத பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு என்று இந்தக்கால குழந்தைகளுக்கு நிறைய மரியாதை. அப்படியே 'கொலாடர'லில் டாம் க்ரூய்ஸ் சொல்லும் வசனமும் தோன்றியது: 'ஒன்பது மாதம் உன்னைக் கருவில் சுமந்தவளுக்கு இந்த மரியாதை கூட செய்ய மாட்டியா?'

இதே டயலாக்கை தல அஜீத் சொல்லியிருந்தால் மனசில் பதிந்திருக்காது. அமெரிக்கன் சொன்னவுடன் 'நீயும் மதிக்கிறாயா?' என்று மகிழவைத்தது.

போன வாரம் என்.எஸ்.கே.யின் 'நல்லதம்பி'. இந்த வாரம் டி.ஆர். ராமச்சந்திரனின் 'சபாபதி', சென்னை சென்று வரும்போது வாங்கவேண்டிய பட லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பனியினால் பார்த்த படங்களை சிறு குறிப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  • குண்டர்கள் தடுப்பை மைக்கேல் மூர் ஸ்டைலில் சொல்லிய 'சூப்பர்சைஸ் மீ'.

  • சல்மான் கான் மேல் பரிதாபத்தை உண்டாக்காமல், கொஞ்சம் குழப்பமாக சென்ற 'ஃபிர் மிலேங்கே'. ('ஏக் அலக் மௌஸ'மாவது வித்தியாசமாக இருக்க வேண்டும்.)

  • அப்பு/சடக்-கின் ஒரிஜினலோ என்று நினைத்து எடுத்த 'டாக்ஸி ட்ரைவர்'. விஜய்க்கு பதிலாக ராபர்ட் டிநீரோவைக் கொண்டு 'திருப்பாச்சி'யை மார்ட்டின் சார்ஸீஸ் இயக்கியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்யவைத்தது.

  • 'மேகிங் ஆஃப்' போன்றவற்றிற்காக மீண்டும் பார்த்த 'கொலாடெரல்'. பொங்கல் பேட்டியில், சூர்யாவிடம் 'மெத்தட் ஆக்டிங்' தெரியுமா என்று கேட்டு மிரளவைத்தார்கள். டாம் க்ரூய்ஸும் மைக்கேல் மான்னும் மெத்தட் ஆக்டிங்கை விளக்கினார்கள்.

  • 'மேமாத'த்தில் அறிமுகமான சோனாலி குல்கர்னியின் இறப்பை குறித்த கேள்வியில் அசத்த ஆரம்பித்தார்கள் 'அக்னி வர்ஷா'. கடைசி க்ளைமாக்ஸ் வரை சிந்திக்க வைத்தது.

  • எதற்கு சிறந்த நடிகை என்று புரியாத 'மான்ஸ்டர்ஸ் பால்'. சான் பி டிட்டி கோம்ப்ஸ் நன்றாக நடிப்பார் என்று இப்பொழுதுதான் தெரிகிறது.


    அதற்கு முன் இன்று காலை புகைப்படபிடிக்க மறந்துபோன சில விஷயங்கள்:
  • பஞ்சத்தில் காய்ந்த பூமி பாளம் பாளமாய் வெடித்திருக்கும். இன்றைக்கு சார்ல்ஸ் நதியும் பாளம் பாளாமாய் பனிக்கட்டியாய் உறைந்து போய் இருந்தது.

  • வழுக்காமல் நடக்க கரடு முரடான 'ஸ்னோ ஷூக்கள்' போட்டுக் கொண்டு வருவது வழக்கம். சில அலுவலகங்களில் பிஸினசுக்கு ஏற்றவாறு கறுப்புக் காலணிகள்தான் யூனிஃபார்ம். பனிக்கான காலணியை அணிந்து கொண்டும், பிஸினஸ் ஷூவை தோள்பையில் மாட்டிக் கொண்டும் மக்கள் நடந்து கொண்டிருந்த காட்சி.

  • நான் உட்பட பலரும் வழுக்கி விழப் பார்த்து ஒரு காலில் பேலன்ஸ் செய்யும் வித்தைகள்.

  • பனி மலைகளின் நடுவே தங்களது கார்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள்.

    சன் டிவியின் 'சிறப்பு பார்வை' எளிமையாக முக்கியமான பதிவாக அமைந்தது. பஞ்சாபில் இருந்து சாமான்களைக் கொண்டு வந்த முன்னூறு சீக்கியர்களின் பணியை காண்பித்தார்கள். விவேக் ஓபராய் களத்தில் பணியாற்றியது போல் உடனடியாக, அமைதியாக சுனாமி மீட்புப் பணிகளில் செயலாற்றியவர்களில் சிலரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்கள். இது தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தால் இன்னும் சிலருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பங்குபெற ஊக்கமளிக்கலாம்.

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு