வெள்ளி, ஜனவரி 21, 2005

கவிதை

மனக்குடித்தனம்

ஒவ்வொரு மனத்துள்ளும்
பெண் ஆண் குழந்தை கிழடு
எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று
ஒட்டி நெருக்கிக் கொண்டு
ஒண்டுக்குடித்தனம் நடத்தும்.
பெண் வலிது கிழித்தல் கண்டு இரக்கம் தூது விடும்;
ஆண் வலிதுக்கு வலிது வா பார்ப்போம் என்றி எடுந்து கூவும்;
குழவி செய்வதறியாது பெண் மடி உள்ளொதுங்கி
ஆண் பின் மறைந்து அழுதிருக்க,
முதிது பழையன கழியும் என்று பாரம் பரம் மேற் போட்டிருக்கும்.
அகம் தன் அகம் வாழ் குடித்தனத்தார்,
வெளிவரு வலிவு காண வகை செய்ய்த்துணி வடிவுகளின் வலிவு
காண்சமரில்
நேரம் சிறுபிள்ளைக்கைக் களிமண் பொம்மையாய் வடிவுகள் பெற்று,
பிழற்ந்து போர் கொல்ல நண்டு பிளந்து வந்த குழுவன்புதிது வலி
பெற்று இறக்க
உழலும்.
வெளிக்காண் பால் பருவம் உருவம் எல்லாம் பொய்யாக்கி
ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரு முழு உலகே
மற்றதை அடுத்தது நெருக்கி மயக்கி
ஒண்டிக்குடித்தனம் முரண்பட்டுக் கூட்டாய் நடத்தும்.




ம்ம்ம்ம்....

தொலைந்து போகவில்லை
என் மனம் எந்தத்தூரத்து இருப்புகளிலும்
என் சொந்தக் கிராமம் விட்டு
எத்தொலைவிற்கும்.
தூக்கத்திலும்
மனக்கால் தூக்கத் தூக்கப் புதைந்தே கிடக்கிறது,
என் ஊர்ப்புழுதி மணலிலும்
முக வரி விழுந்த மனிதர்களிலும்.
நினைவுப்புதை மணல் விழுந்தவன் நான்,
கயிறு தந்தாலும் எழுந்திட மறுத்துப் புதைந்து மறைந்திருப்பேன்
என் சொந்த உலகத்தே,
முன்னைச் சொந்தங்களோடு
அவர் சுகங்கள், துக்கங்களோடு.
கவலை விடும்.

விமானப்பயணங்கள்
எனக்கு என்றும் அந்நியமானவை,
இங்கு என்னை இன்று சுற்றிக் கிடக்கும்
எத்தனையோ மனிதரைப்போல், மரங்களைப்போல்.
ஆனால்,
பேருந்துப்பயணங்கள்,
என் பெற்ற தாயினைப் போல்,
ஏதோ பற்றிக் கிடந்த சுற்றம்போல்.
ஆதலினால்,
இற்றைக்குப் எடுத்துப் பேச
ஏதும் என் நினைப்பிலில்லை.
அத்தனைதான்;
மிச்சப்படிக்கு,
விமானம் சொர்க்கமென்று
சொக்கிக் கிடக்கும் குற்றம்
ஒன்றும் மனமில்லை.

இத்தனைக்கும் என் ஊரில்,
பேருந்துப்பயணம்
வெறும் தலை நீட்ட முடியாத
கால் தூக்கி நின்றாடும்
மணிநேரக் கஷ்டத்துடன் முடிவதில்லை.
ஆறு மைல் தூரத்துக்கோர் தடவை
ஆறுதலாய் இறங்கி,
ஊண், உடை, உள்ளதெல்லாப்
பையெல்லாம் கையெடுத்து,
உயிரை அடையாள அட்டையிலே
தேக்கி வைத்து,
தலை மறைத்த முகமூடி முன்னாலே
அவன் தலையசைத்தால்,
என் தலைபோகும் என்று
கருமுளைத்த பெண்போல
தளர்ந்து நடைபோட்ட
இராணுவ முகாங்கள்
நான் மறவேன் ஐயா.

என் வெளி ஊணுள் மட்டுமல்ல,
உள்தூங்கு உயிருள்ளும் தேடித்
தமிழனென்ற முகம் கண்ட
நாட்கள் அவை.

ம்ம்ம்ம்....
விமானப் பயணங்களிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தூரத்தே எங்கோ,
குண்டொன்று உயிர்துறக்க,
சில துப்பாக்கி கொண்டோர் உயிர் பறக்க,
சொந்தக்கவலைகள் தின்னப் பயணப்பட்ட
சொந்தங்கள் எத்தனை இறக்குண்டு
உயிர் மென்று தின்னப் பட்டிருக்கும்?
என்று நாம் அறிவோம்;
வேறு யார் அறிவார்?

ம்ம்ம்ம்....
இவை மறந்து
விமானப் பயணங்களிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேன் நான்.

எமது பயணங்கள்,
இடத்துக்காகவும்
பேருந்து தள்ளலுக்காகவும்
பிரச்சனைப்பட்டிருத்தல்
தொலைத்துப் பல காலம்.
எமது கவனங்கள்,
எம் கழுத்துகளிலும்
மறந்தும் பயணம் முடியும்வரை
சொந்தமொழியில்
ஒரு சொல் உதிர்க்கப்படக்கூடாதென்பதிலுமே
பயன் ஜனனிக்கக்
குறி வைத்திருப்போம்.
ஏறுகையில்
உள்ளிழுத்த மூச்சு,
இறங்குகையில் மட்டுமே
வெளிவிடப்படமுடியும்
என் நாட்டில்.

ம்ம்ம்ம்....
என்னவாய் அது இருந்தென்ன?
விமானப் பயணங்களிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தாலியைப் பெண்கள்
கைப்பையுட் கழற்றி ஒளிப்பதும்
கட்டியவனே பேருந்து ஏறமுன்,
குங்குமம் அழித்துவிடுவதும்
எந்நாட்டில் மட்டுமே
சாத்தியமாகும் இந்நேரத்தும்.
குழந்தைகள் "அம்மா" என்றழைத்தால்,
வில்லங்கம் ஆகிவிடுமென்று
வாய்க்குள் அவை கடிக்க,
விரலை விட்டுக் கிடந்த பெற்றோர்
எத்தனைபேர்!
என் இன்னும் குருடற்ற இரு கண்முன்னே
எத்தனைபேர்!

ம்ம்ம்ம்....
இவை எல்லாம் இங்கெதற்கு?
விமானப் பயணங்களிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேன் நான்.

தீப்பெட்டி, மின்கலம்,
மெழுகுவர்த்தி, மருந்துவகை
பெட்டிக்குள் அகப்பட்டால்,
மீண்டும் பயணம் தொடங்குகையில்,
பயணிகள் தொகை குறைந்திருக்கும்.
பின்னேதோ காலத்தே,
காணாமற்போன மனிதர் பட்டியலில்
கொட்டிக்கிடக்கும் அவர் பெயர்.
இப்படியானவை எம் பயணங்கள்.
இளம் மொட்டை மதகுருக்களுக்கு
இடம் விட்டு எழுந்து நிற்க வேண்டும்,
தளர் கிழங்கள், நிறை கர்ப்பணிகள்.
என் நாட்டு நியாயம் அது.
இராணுவத்திற்கு கைமோதிரங்கள்,
கழுத்துச்சங்கிலிகள், கைவளைக்காப்புகள்
அவர் விரும்பத் தானம் கொடுத்து
உயிர்த்தானம் பெற்று மீள்வதெல்லாம்
காற்றிலே போன கதைகள் இல்லையையா,
கல்லிலே பொறித்துவைத்த கண்ண“ர்த்துளிகள்.

ம்ம்ம்ம்....
இத்தனை ஏன்? விட்டு விட்டும்.
விமானப் பயணங்களிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேன் நான்.

ஒற்றைநாள் உலகம்
சுற்றுப்பயணங்களில்
ஒட்டிப்போவதில்லை
என் மனது;
ஓடிருக்க உள்ளே ஒட்டாமற் கிடக்கும்
புளி
என் உள்ளம்.
அது சுற்றும் எங்கெல்லாம்,
ஆயினும்,
நிற்கும் அதன் முளை இறுகி
என் நாட்டில், அதன் நடப்பில்.

உடல் இயக்க உயிர் பிழைக்க,
பொருளாதார அகதியென்று,
புது நாடு தஞ்சம் புகுந்து
திரிசங்கு நரகத்தே வாழ்ந்தாலும்
இன்னும் காற்சட்டைப்பைத் தூங்கு
சிறு தீப்பெட்டிக்குள் கனத்துக்
கிடக்கிறது என் நாட்டு வ“ட்டுவாயில்
அழுக்குச் சேர்ந்த பூமி மண்.
"நாளை ஜெருசலேமில்,"
அல்லது உலகப்பந்தில் எங்கேனும்
எரிந்த என் உடற்சாம்பலோடாவது
கலந்து கடலுக்குப் போகட்டும்;
என்றேனும்,
உளம் புரிந்த பேரலைகள் எடுத்துச் செல்லும்
உடல் எரிந்த சாம்பல் + அது எழுந்த பூமி மணல்,
ஒரு நாள் என் நாடு.

ம்ம்ம்ம்....
ஆயின், என்ன?
விமானப் பயணங்களளிற்
சொக்கிப்போய்
சொர்க்கம் போய்விட்டேனாம்
ஈழம் குண்டெடுத்து உயிர் சுட்டுத்தின்ற
இன்னொரு அகதிப்புத்திரன்
இவன்.


அன்று கேட்ட கேள்விக்கு விடை : திருமலை

இந்தக் கவிதைகள் எழுதியவரின் அனுமதியின்றிதான் இங்கு இட்டிருக்கிறேன். படைப்பை வைத்தே எந்த வலைப்பதிவர் எழுதியது என்று கண்டுபிடிக்க முடியுமா?

1 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு