வியாழன், டிசம்பர் 30, 2004

குறிப்பிடத்தக்க ஆங்கிலப் படங்கள்

  • Eternal Sunshine of the Spotless Mind: Adaptation எடுத்தவரின் அடுத்த படம். இரண்டு படங்களுமே கொஞ்சம் மண்டை காய வைப்பதால், ரொம்ப நாள் அசை போட வைத்து யோசிக்கவும் வைக்கும்.

  • Collateral : தலை டாம் க்ரூய்ஸ் நடித்திருப்பதால் நான் குறிப்பிடுகிறேன். துணை நாயகருக்கு கோல்டன் க்ளோப் பரிந்துரையும் கிடைத்திருக்கிறது.

  • Maria Full of Grace: கதையைக் கேட்டவுடன் பார்க்கத் தூண்டிய படம். கர்ப்பிணிப் பெண் போதை கடத்துகிறாள் என்பதை (கொஞ்சம் ஓவர்) உருக்கமாய் காட்டுகிறார்கள்.

  • Incredibles: ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படம்.கலக்கிட்டாங்க!

  • Kinsey: பேசாப் பொருளைப் பேச வைத்த கதை.

  • Bad Education: ஸ்பானிஷ் ஆய்த எழுத்தின் நாயகர் 'பெர்னால்' நடித்திருக்கிறார் என்பது முக்கிய அம்சம். நினைவுகள் எங்கே முடிகிறது; படம் எங்கே ஆரம்பிக்கிறது என்பதைத் தெரியாமல் காலச்சுவடில் (ரமேஷ் வைத்யா?) கதை ஒன்று படித்த ஞாபகம். இது திரைப்படம்.

  • Kill Bill - II : கொன்னுட்டாங்க ;-)

  • Closer : யார் யாரை நேசிக்கிறார்கள் என்று குழம்பிப் போகுமளவு கதை எழுதலாம். ஆனால், 'ஏன்' பிறரை காயப்படுத்துகிறார்கள் என்று ஜூலியா ராபர்ஸையும் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.

  • The Manchurian Candidate : இது தேர்தல் வருடம். பருவத்துக்கு ஏற்ற டென்ஸல் வாஷிங்டன்.

  • National Treasure: மசாலாதான் என்று சொல்லிவிட்டு -- ஏமாற்றாமல் ஓட வைக்கிறார்கள்.

  • குறிப்பிடத் தகாதப் படங்கள்

  • The Passion of the Christ : உம்மாச்சி கண்ணை குத்திடும்.

  • Fahrenheit 9/11 : புலம்பல்

  • Harry Potter and the Prisoner of Azkaban : நோ மேஜிக்; லாஜிக்கும் லேது.

  • Oceans Twelve: அஅஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் (பனிரெண்டு எழுத்தில் விமர்சனம் :-)

  • Meet the Fockers: எல்லா சிரிப்பையும் ட்ரெயிலரில் (மட்டும்) கண்டு களிக்கலாம்.

  • The Polar Express: முப்பரிமாணத்தில் (3-டி) பார்த்தால் மட்டுமே பெரியவர்களுக்கு ரசிக்கும்.

  • Shrek 2: கருத்து நல்ல கருத்து. வினாடிக்கு நிறைய ஜோக் கொடுப்பதால் கிரேஸி ஸ்டைலில் பறக்கிறது. ஆற அமர டிவிடியில் பார்க்கணும்.

  • பொங்குமாக்கடல் - அருணன்

    ஈரோடு தமிழன்பன் - "நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்"

    1. செம்மாங்குடிகள் பாட்டில்
    இசையிருக்கிறது
    நம் கொல்லங்குடிகள் பாட்டில்
    இதயம் அல்லவோ இருக்கிறது
    கற்றவனுக்குக்
    கம்பன் அமுதக் கிண்ணம்
    கல்லாதவனுக்கோ
    கண்ணதாசனும்
    பட்டுக்கோட்டையும்
    கஞ்சிக் கலயம்


    சினிமாப் பாட்டு பற்றிய சர்ச்சையே கவிதையாகியிருக்கிறது. எளியவர்பால் கொண்ட அன்பு, கலையில் எளிமையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறது.

    2. நீ உயர முடியவில்லை
    என்பதற்காக மலை மீது
    கற்களை விட்டெறியாதே
    உனக்கும்
    உண்மைக்கும் ஊடல் என்றால்
    பொய்யின் கன்னத்திலா
    போய் முத்தமிட்டுக்
    கொண்டிருப்பாய்


    எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பவர்களை இதைவிடக் கவித்துவமாகக் கண்டித்துவிட முடியுமா?

    நன்றி: பொங்குமாக்கடல் - அருணன் : வசந்தம் வெளியீட்டகம்; பக்கங்கள்: 400; விலை: ரூ. 150/-

    வெளியான இதழ்: இந்தியா டுடே

    திங்கள், டிசம்பர் 27, 2004

    மின்மடலில் வந்தவை

  • Oxfam: தவணை அட்டை மூலமாக நன்கொடை வழங்குவதற்கு ஏற்ற தளம். இலங்கை, தெற்காசியாவில் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகப் போய் சேரும். அமெரிக்கா, இங்கிலாந்தில் வசிப்பவர்களுக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.

  • குப்பை கூளங்களைக் கூட பயனுள்ள பொருட்களாக ஆக்கி விற்கும் தளம். பழைய வட்டுகள், காலியான வெண்குழல் பெட்டிகள், மென்தட்டுகள், கிராமஃபோன், என்று எல்லாவற்றின் செட்டப்பையும் கெடப்பையும் மாற்றியிருக்கிறார்.

  • VPN மூலமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் கையில் ஒரு பேஜர் போன்ற கருவியின் மூலம் ஆறு இலக்க எண்ணை வைத்துக் கொண்டிருப்போம். இப்பொழுது வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாள்ர்களுக்கு இதே பாதுகாப்பு முறையைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஏற்கனவே இவை அறிமுகமாகி இருந்தாலும், அமெரிக்காவில் ஈ*ட்ரேட் (E*Trade) அடுத்த வருடம் முதல் இந்த வசதியைக் கொடுக்கிறது. தானியங்கி வங்கிகளிலிருந்து பணம் எடுக்கும்போது வேவு பார்ப்பது, கடவுச்சொல்லை கண்டுபிடுத்துத் திருடுவது போன்ற கள்ளர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள நல்ல வழிமுறை.

  • புதன், டிசம்பர் 22, 2004

    உதவி தேவை

    ஃபயர்ஃபாக்ஸ் உதவி



    நெருப்புநரியில் எந்த யூனிகோட் பக்கம் சென்றாலும் எனக்கு மேற்கண்டவாறுதான் தெரிகிறது. இதை நிவர்த்தி செய்ய ஆலோசனைகள் சொல்லவும். தீர்த்து வைப்பவர்களுக்கு மைக்ரோசாஃப்ட்டின் எரிச்சல் கிடைக்கும். என்னுடைய மனமார்ந்த நன்றிகளும்.

    என்னுடைய செட்டிங்ஸ்:
    தமிழ் | யூனிகோட்

    View --> Character Encoding --> Auto Detect --> Off என்று எல்லாம் போட்டு பார்த்தேன். Always Use My Fonts - On / Off செய்து பார்த்தேன். எதற்கும் சரிப்படாமல் விநோதமாகவேத் தெரிகிறது.

    தொழில்நுட்பம் முழுவதும் தெரிந்திருப்பது நல்லது. ஒன்றும் தெரியாவிட்டால் டபுள் ஒகே. என்னை மாதிரி கொஞ்சம் தெரிந்தால் வினைதான். உதவ வேண்டுகிறேன்.

    இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தமிழோவியம், திசைகள், மரத்தடி போன்ற அனைத்து யூனிகோட் பக்கங்களும் அழகாகத் தெரிகிறது. ஃபயர்ஃபாக்ஸின் மூலம் விசிட் அடித்தால், எல்லா பதிவுகளும் புத்தம் புதிய தமிழில் கண்ணைக் கெடுக்கின்றன.

    அடுத்த வருடம் வரை இனி எனக்கு விடுமுறை. சில பழைய நண்பர்கள் (காசி) சந்திப்பு, விருந்துகள் என்று வீட்டிலேயே கழிக்க எண்ணம். அனைவருக்கும் இனிய போஷாக்கான புத்தாண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    அப்புறம், ஊரே அல்லோலகல்லப்படுகிறது. ஞாயிறு, ஜனவரி, 2, 2005 - Ash on 60 Minutes என்று. அறுபது நிமிடங்கள் என்று சொல்லி நாற்பது நிமிடம் ஒளிபரப்பாகும் செய்தித் தொகுப்பொன்றில் ஐந்து நிமிடம் ஐஷ்வர்யா செவ்விக்கப் போகிறார்.

    இவங்களுக்கு வேற வேலையே கிடையாது என்பது போல், பிபிசியில் அடுத்த தேர்தலை தொடங்கி விட்டார்கள். யாருக்கு ஏன் ஓட்டுப் போடம் மாட்டேன் என்று சொல்வதை விட, பல தெரியாத முகங்களை அறிந்து கொண்டேன்.

    இப்பொழுது வீடியோக்களைத் தேடுவதுதான் கஷ்டமான காரியம். Video searches on Web don't always click yet என்று சொல்லி விட்டு, Yahoo! Video Search போன்றவற்றின் தொழில்நுட்பங்களையும் சொல்கிறார்கள். கலைஞர் கைது, ம.கோ.ரா. அமரர் ஊர்வலம் (டிச. 24 நினைவு நாள்) என்று தேடிப் பார்த்தேன். எதுவும் மாட்டவில்லை. உங்களுக்கு வேண்டியதைத் தேடிட்டு சொல்லுங்க.

    Baazee.com விவகாரம் சூடாக இருக்கும்போதே, அமெரிக்காவில் செல்பேசிகளில் நீலப்படங்கள் குறித்த நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளலாம். இப்போதைக்கு இலை மறை காய் ஒகேவாம். ஆனாலும், 40% இணையத் தேடல்கள் செக்ஸ் சம்பந்தமானவை என்பது நமது அறிவின் தாகத்தை எடுத்துறைக்கிறது.

    Neocons setting up Rumsfeld as Iraq fall guy என்னும் பதிவில் விடை உறுத்திய கேள்விக்கு வழி தெரிந்தது. ரம்ஸ்ஃபீல்ட் எப்படி நியோகான்களின் பலியாடாகிறார் என்பதை அரசியல்பூர்வமாக எடுத்துரைக்கிறார்கள். தலைவனின் தவறு அல்ல... தளபதியின் தவறு என்பதை தூவ ஆரம்பித்திருக்கிறார்கள். தம்பி ஜெப் புஷ்ஷுக்கு வளமான எதிர்காலமும் சாமர்த்தியமான கார்ல் ரோவும் துணையிருக்க பயமேன்!

    நெட்டில் படித்தது: Martini's are like the breasts of a woman: one is not enough, three are too many--and two are just right. -- Jose Espino

    செவ்வாய், டிசம்பர் 21, 2004

    அருட்பா? மருட்பா?

    சக்தி விகடன்: பிறருக்காக அழுது அழுது, தொழுது தொழுது பாடியவை வள்ளலாரின் பாடல்கள். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டிய அவரது பாடல்களை மக்கள் 'திரு அருட்பா' என்று போற்றினர். இந்தப் போற்றுதல் ஒலி சிலருக்கு நாராசமாகப் பாய்ந்தது. எதிர்ப்புக் குரல் எழுந்தது. ‘அருளாளர்கள் பாடியவைதான் அருட்பா. சாதாரண மானிடர் ராமலிங்கம் பாடியதெல்லாம் எப்படி அருட்பா ஆகும்? அவை வெறும் மருட்பா (மயக்கத்தில் பாடியது)’ என்று வாதிட்டனர் சில தமிழறிஞர்கள். இவர் களுக்குத் தலைமை தாங்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேல்பிள்ளை என்ற தமிழறிஞர்.

    வள்ளலாரின் சீடர்கள், 'ஐயா, இவ்வளவு நடந்தும் தாங்கள் மௌனமாக இருக்கிறீர்களே?' என்று முறையிட்டனர். அதற்கு அடிகளார், 'தம்மை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றையவை மருட்பா. மூவர் பாடியவை தேவாரம் என்றும் மணிவாசகருடைய பாட்டை திருவாசகம் என்றும், மற்றும் தமிழ் வேதம், திருப்பாட்டு, திருவிசைப்பா என்பதெல்லாம் மரபு ஆகும்' என்று சாந்தமாகக் கூறினார்.

    மருட்பா கட்சியினர் இதை வழக்காக்கினர். ‘ராமலிங்கத்தின் பாடல்களை 'அருட்பா' என்பது தவறு.’ என்று வாதிட்டனர். வள்ளலார் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கவேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை. வழக்குத் தொடுக்கக் காரணமான கதிரை வேல்பிள்ளையே நீதிமன்றம் வர விரும்பவில்லை. ‘சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்திவிட்டனரே.' என வருந்தினார். அவரைச் சமாதானப்படுத்தி நீதிமன்றம் அழைத்து வர வேண்டியதாயிற்று.

    வழக்கு தினத்தில் ராமலிங்க அடிகளார் நீதிமன்றத்தில் நுழைந்தார். கதிரைவேல்பிள்ளை, வழக்கறிஞர்கள் முதலிய அனைவருமே எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர். நீதிபதியும் இருக்கையை விட்டு எழுந்து, பின் அமர்ந்தார்.

    நீதிபதி தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தார். ‘வழக்குத் தொடுத்த எதிரிகள் உட்பட அனைவருமே வள்ளலாரை வணங்கிப் போற்றியதைக் கண்டோம். பகைவரும் வணங்கும் பெருமையுடைய வள்ளலார் மீது வழக்கு எதற்கு? அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்' என்று அறிவித்தார்.

    வைகுண்ட ஏகாதசி

    சக்தி விகடன்: வைணவர்கள் முக்கியமாகக் கருதுவது நான்கு ஏகாதசிகள். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியிலிருந்து ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி வரை திருமால் யோகநித்திரை செய்வதாகக் கூறப்படுகிறது.

    ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி அன்று பெருமாள் வலப்புறமாகத் திரும்பிப் படுப்பார். அந்த நாளுக்கு பரிவர்த்தனை ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏதாதசியன்று அவர் துயில் கலைந்து எழுந்திருக்கும் நாள். அந்த நாளை உத்தான ஏகாதசி அல்லது பிரபோதனி ஏகாதசி என்பர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று _ ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    திங்கள், டிசம்பர் 20, 2004

    மேடை - ஜெயபாஸ்கரன்

    Jayabaskaran Kavithaigal:

    இதுவரை
    இருபது முறைகளுக்கு மேல்
    எதிரிகளை
    ''எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்''
    என்றாய்.
    சலனமற்றுக் கிடந்த
    உன் ஆதரவாளர்களின்
    முன்னிலையில்

    ''நான் சொல்லிக் கொள்வது
    என்னவென்றால்''
    என்பதைத் தாண்டி
    எதுவுமே விளங்கவில்லை
    நீ சொல்லிக் கொண்டது
    எதுவும்.

    ''இன்னொன்றையும்
    குறிப்பிட்டாக வேண்டும்'' என்று
    பலமுறை அறிவித்தாய்!
    ஆயினும்,
    ஒருமுறைகூட
    குறிப்பிடவில்லை
    அந்த 'இன்னொன்றை!''

    ''இறுதியாக ஒன்றைச் சொல்லி''
    விடைபெறுவதாக முழங்கினாய்
    அந்த ஒன்றையாவது
    சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா நீ?

    நன்றி: ஆறாம்திணை

    ஞாயிறு, டிசம்பர் 19, 2004

    குருதிப்புனல் (நாவல்)

    முன்னுரை - இந்திரா பார்த்தசாரதி

    தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

    இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை 'தேசாபிமானி' இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

    'நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது' என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

    ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப் படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

    காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

    அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

    இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

    ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் கநா சுப்ரமணியன்.

    குருதிப்புனல் - ரூ. 85/- : கலைஞன் பதிப்பகம்

    கீழ்வெண்மணி - மணா

    44 உயிர்களும் அரைப்படி நெல்லும்

    36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம்.

    1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள்.

    தஞ்சை மண்ணில் 'பண்ணையாள் முறை' ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது.

    அவர்களிடமும் வந்தது விழிப்பு. "நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே... கண்ணைத் திற ஊமையாக இருக்காதே - பேசு..." என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல்.

    அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. 'தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது' என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள்.

    ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி.

    1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர்.

    கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம்.

    நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் 'விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது'. 'நாட்டுக்கே அவமானம்' என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள்.

    106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். 'இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்' என்று சொன்னது போலீஸ்.

    'அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல...' என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை.

    நன்றி: புதிய பார்வை - செப். 1 2004

    வெள்ளி, டிசம்பர் 17, 2004

    Sex Sells... but (துளி 'ஏ')

    BBC NEWS | South Asia | CEO held over student sex video: பாஸி.காம் (Baazee.com) நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கம்பியெண்ணப் போகிறார். 'பாஸி' தளத்தில் டெல்லி ஸ்கூல் செக்ஸ் வீடியோவை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ இரண்டு நிமிடங்கள் முப்பத்தேழு விநாடிகள் ஓடக்கூடியது போன்ற தகவல்கள் சொல்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு.

    ஐ.ஐ.டி. மாணவரும் கைதாகியுள்ளார். விசிடி போட்டு 125 ரூபாய்க்கு விற்றவனுக்கும் ஜெயில் வாசம்.

    இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். அவரின் கைது பலரையும் எழுப்பும். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்கள் பயப்படுவார்கள்.

    கைதுகள் த்ரிஷா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அச்சத்தைக் கொடுக்கும். விற்றவனை பிடித்தால், ஒரிஜினலாக தயாரித்தவன் என்றாவது அகப்படுவான். அப்போது மானநஷ்ட வழக்குத் தொடுக்க வசதியாக இருக்கும்.

    ஒருவரின் சம்மதத்தோடு எடுக்கப்படும் வீடியோக்களை விற்பதில் தவறில்லை. அது குஷ்பூ நடித்ததாக இருக்கலாம்; அல்லது ஷகீலா படமாக இருக்கலாம். இந்தப் படங்கள் அவர்களின் நிதிநிலைமையின் முன்னேற்றத்திற்காகவோ, லட்சிய வெறிக்காகவோ செய்து கொள்ளப்பட்ட சமரசங்கள். இவை செய்யும் இடங்களில் ரெய்டு செய்து, டாக்டர். பிரகாஷ் போன்றவர்களை உள்ளே தள்ளுவதை விட, பாஸி.காம், ஐ.ஐ.டி. மாணவர் போன்ற கைதுகள் முக்கியமானவை.

    மின்மடலின் மூலம் ஃபார்வார்ட் செய்வது, பொதுத்தளங்களில் சுட்டி கொடுப்பது, போன்றோரை நிறுத்தினால், இந்த மாதிரி படம் எடுப்போரும் குறைந்து போவார்கள். வரைவின் மகளிரைக் கைது செய்வது தேவையா என்பதை விட, அவ்வகை சமாசாரத்திற்கு தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் சட்டத்தின் பிடியில் மாட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    வலைப்பதிவுகளில் மின்னிதழ்களில் பின்னூட்டங்களின் மூலம் பிட் நோட்டிஸ் போடுவது கூட மான நஷ்ட வழக்கிற்கு வழிவகுக்கலாம் என்கிறார் நாவி. இந்த கருத்து இந்தியாவில் உள்ளவர்களும் கவனிக்கப்பட வேண்டிய சட்ட ஆய்வு. ஏதோ 'கண்டதை சொல்கிறேன்' என்பது இருக்கட்டும். ஆனால், இங்கிருந்து வீடியோவை இறக்கிக் கொள்ளலாம் என்பது குற்றம். வீடியோவை இன்னொருத்தருக்குக் கொடுப்பதும் குற்றம்.

    'ஜெபர்டி' விநாடி-வினா நிகழ்ச்சியில் முன்கூட்டியே போட்டியாளர் கென் ஜெனிங்ஸ் தோற்பார் என்பதை சொன்னதற்காக அமெரிக்க வலைத்தளம் மீது ஸோனி நிறுவனம் கேஸ் நடத்துகிறது.

    அமெரிக்காவில் இருப்பவர்கள் இதற்கென காப்புரிமையும் பெற்று வைத்துக் கொள்ளலாம். மானநஷ்ட வழக்கு தொடுத்தால், அதற்கான வக்கீல் செலவுகளை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு விடும். யாரும் வழக்கு தொடுக்கா விட்டால், மாதா மாதம் முப்பது டாலர் பணம் செலுத்தினதுதான் செலவு. ஆனால், பிறர் மேல் வழக்கு தொடுத்தே மில்லியனராகுபவர்கள், உங்களை விட்டுவிடுவார்கள்.

    யோசித்து எழுதவேண்டும். கவனித்து சுட்டி கொடுக்க வேண்டும்.

    வியாழன், டிசம்பர் 16, 2004

    தேவதையைக் கண்டேன்

    மாமா பைய்யா - ரஞ்சித் - நா முத்துக்குமார் - 3.5 / 4

    நா முத்துக்குமார் சோகரசத்தை புன்முறுவலோடு எழுதியிருக்கிறார்.

    'கோயிலாண்ட வரச் சொன்னியே
    வந்தேனே...

    குங்குமத்தைத் தரச் சொன்னியே
    தந்தேனே...

    புருஷனா நான் நெனச்சேன்
    என்ன பூசாரியா ஆக்கிப்புட்டியே

    ஜீன்ஸ கிழிச்சுப் போடச் சொன்னியே
    போட்டேனே...

    ஜிம்முக்குத்தான் போகச் சொன்னியே
    போனேனே...

    அஜீத்துன்னு நான் நெனச்சேன்
    எனக்கு அல்வ்வாவைக் கொடுத்துப்புட்டியே

    ரிக்ஷா இழுத்தாலும்
    ரிச்சா வாழ வைப்பேன்'

    'கிருதாவை வைக்கச் சொன்னியே
    வெச்சேனே...

    மீசையத்தான் எடுக்கச் சொன்னியே
    எடுத்தேனே...

    பந்தான்னு நான் நெனச்சேன்
    என்னை பாகவதராக்கிப்புட்டியே

    கையவிட்டு ஓட்டச் சொன்னியே
    செஞ்சேனே...

    ஸ்டைலுன்னு நான் நெனச்சேன்
    என்ன ஸ்ட்ரெச்சரிலே ஏத்திப்புட்டியே'



    ஒரே ஒரு தோப்பிலே - சபேஷ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி - வேலம் சி மனோஹர் - 2 / 4
    'குன்றத்திலே கோயில் கட்டி' மாதிரி ம்ம் கொட்ட வைக்கும் ஆங்கிலப் பாடல் ஆரம்பம். கதை சொல்கிறார்கள். இரட்டுற மொழிதல் விருப்பம் உள்ளவர்கள் பல அர்த்தங்களைக் காண்பார்கள்.


    துண்டக் காணோம் - அனுராதா ஸ்ரீராம், தனுஷ் - திரைவானம் - 1.5 / 4
    எங்கேயோ கேட்ட இசையாய் துக்கடாக்கள் வருவதால் தேவாவின் இசை என்பதை தெளியலாம். தற்கால ஜானகியான அனுராதா ஸ்ரீராமை இசையமைப்பாளர்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தமே.


    விளக்க ஒண்ணு - கிரேஸ், யுகேந்திரன் - பா விஜய் - 3 / 4

    'பொதுவாக என் மனசுத் தங்கம்' கொஞ்சம். இன்னும் சில கண்டுபிடிக்க முடியாத க்ளாசிக்ஸ் கொஞ்சம். மும்தாஜுடன் ஆட்டம் கட்டுகிறார் தனுஷ்.

    'பொம்பள ஆசைதான் எரியும் கொசுபத்தி
    இரவு முழுக்கவும் எரியும் எரியும்
    ஆம்பிள ஆசைதான் எரியும் ஊதுபத்தி
    கொஞ்ச நேரம்தான் புகையும் புகையும்'

    'என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் ஃப்ளைட் போறது'



    அழகே பிரம்மனிடம் - கங்கா, ஹரீஷ் ராகவேந்திரா - வேலம் சி மனோஹர் - 1.5 / 4
    கூத்தாடும் வகுப்பில் இழுத்திப் போர்த்துக் கொண்டு odd man out. ஸ்ரீதேவிக்கு ஏற்ற சாதாரண காதல் டூயட்.


    எனக்கு தேனிசைத் தென்றல் பிடிக்கும். ரீ-மிக்ஸ்கள் போல் அந்தக்கால ஹிட்களை நமக்கே தெரியாமல் கலந்துகட்டுவதும் பிடிக்கும். கவலைப்படாமல் கொஞ்ச நேரம் டப்பங்குத்த இன்னும் பிடிக்கும்.

    கேட்க : musicindiaonline.com

    புதன், டிசம்பர் 15, 2004

    தமிழோவியம் தீபாவளி மலர் - விமர்சனம்

    கட்டுரைகள்

  • நரகாசுரனின் தற்கொலை - நாகூர் ரூமி : கமல் கூட தமிழோவியம் படிக்கிறார் போல. அவரும் ஹிட்லரின் தற்கொலையை குறித்து எழுதியுள்ளார். அருமையான சரித்திரப்படத்தின் திரைக்கதை போல் எழுதப்பட்டிருக்கிறது.

  • ஜோதிடம் : அடிப்படை ஜாதகம் தெரிந்திருக்க வேண்டும். 1, 4, 7, 10 கேந்திரம் போன்றவைகளுக்கு எங்காவது ஹைப்பர்லிங்க் கொடுக்க வேண்டும். லக்கினாதிபதியை லக்கி நாதிபதி ஆக்கிய பிழைகளை தவிர்க்கவும். கோட்ஸே குறித்த அலசல் புதிய விஷயங்களை சொல்லியது.

  • பா ராகவன் : நினைவலைகள். ஷங்கர் படம் என்று 'ஜீன்ஸ்' ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தவுடன் கிடைத்த அனுபவம் கிடைத்தது. வண்ணமயம்; ஆனால், திருப்தியில்லை.

  • காதல் - பிச்சினிக்காடு இளங்கோ : தற்காலத்தின் தாரக மந்திரம் காதலை அலசுகிறார். சிங்கப்பூர் நிலை குறித்தும் அறியமுடிகிறது.

  • மதுரை - திருமலை : பெரிய கட்டுரைகள் (ப்ரிண்ட்-அவுட் எடுக்காமல்) படிக்க எனக்கு அலர்ஜி. துள்ளல் பேச்சும் சிலம்புக் குறிப்புகளும் தாவவிடாமல் தக்கவைக்கிறது.

    இன்ன பிற

  • காசி பேட்டி : கேள்விகள் சூப்பர். பதில்கள் யதார்த்தம்.

  • சுமித்ரா ராம்ஜி : நையாண்டி. சீரியஸான அடிநாதம். டிவி தொடர்களில் நிலையும் தெரிகிறது. சிரிப்பும் வருகிறது.

  • ஸுப்பரு - பேப்பி பர்த்டே டு ஸ்டார்.

  • காத்தாடி ராமமூர்த்தி சந்திப்பு : அனைவரின் பங்களிப்பு, நகர எல்லையின் விரிவு, அவன் அவளானது -- 'அய்யோ... அம்மா... அம்மம்மா' என்று சிரிக்காமல் யோசிக்க வைக்கிறார்.

    சிறுகதைகள்

  • வீடு - சித்ரன் : ஒத்த மனமுள்ளவர்களாக குடித்தனம் வைப்பது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் விஷயம். நீண்ட நாள் பிரிந்திருந்த மகன் திரும்புவது மனதுக்கு நெருக்கமான விஷயம். பின்னியிருக்கார்.

  • அம்மா பிறக்கப் போகிறாள் - நிர்மலா : நிஜத்திற்கு அருகே நிற்கும் பிண்ணனிதான். ஆனால், படித்து முடித்தவுடன் 'அட்வைஸ் போதுமே' என்று எனக்கு பட்டது.

  • மௌனம்தான் பேசியதே - ஷைலஜா : ரொம்ப பிடித்திருந்தது. துள்ளல் நகைச்சுவை. தீபாவளி டச். எல்லா குடும்பத்திலும் நடக்கும் ஊடல். எழுத்தாள நாயகன். ஜாலியாக இருக்கு.

  • தேய்பிறைகள் - சத்யராஜ்குமார் : அலசி காயப்போட்டு மீண்டும் உடுத்தி தோய்க்கப்பட்ட மேட்டர். இதைக் கூட அப்பாவியாக ஆரம்பித்து, முகம் மாற்றி சீரியஸாக்கி, உறையவைக்கிறார். 'நல்ல தகப்பனா இருப்பேனா?' -- பயமுறுத்துகிறார்.

  • மாயமான் - பவித்ரா : ரசனை குறித்த பதிவு நிமிரவைக்கிறது. இனிமையான படப்பிடிப்பு. சடாரென்று முடிந்துவிட்டது.

  • நிலையை உடைத்து செய்த ஏணி - ஸ்ரீவித்யா சங்கரன் : மனைவியின் கதை. The best story in the Malar என்று சொல்லுவேன் :-)

  • உங்கள் ஓட்டு ரகசியமானது - பாஸ்டன் பாலாஜி : சில வருடம் முன்பே எழுதியது. கொஞ்சமே கொஞ்சம் சொந்த அனுபவம். கார்த்திக்ராமஸ் மட்டும் தனிமடலில் எதிர்க்குரலிட்டிருந்தார்.

  • 30 வருஷம் - முத்துராமன் : பைண்டிங் தாத்தா முத்தையாவுக்கும் நடராஜ தாத்தாவுக்கும் மேஜிகல் கனெக்ஷன் என்னவோ?! ஒரு வீடு இரு வாசலாக இருக்கிறது. இரண்டு கதைகளும் இணையாமல் இருந்திருந்தால் அருமையான தாக்கம் கிடைக்கலாம்.

  • காட்சிப்பிழை - என் சொக்கன் : டிவி பேசும் ரியலிஸம். வெளிப்படையான கருத்துக்களை தாங்கும் சக்தி நமக்கிருக்கிறதா? ரஷியாவின் நஞ்சு வைத்தியம் போல்தான் அனைத்து சுதந்திர நாடுகளிலும் ஊடகங்களா? சிந்தையைப் புரண்டு விழிக்கவைக்கும் படைப்பு.

    கவிதைகள்

  • ...திருக்கலாம் - ராஜ்குமார் : தீபாவளி ஸ்பெஷலில் கவனிக்க மறந்தவை.

  • இருப்புகள் - பாலாஜி பாரி : மறந்து போன போலிகளின் அடையாளம்?

  • கோவில், கடவுள், மனிதன் - மீனாக்ஸ் : மனசு, எளிமை, உணர்ச்சி.

  • சாலை குறித்த பூர்வாங்க விவாதம் - ஆதவன் தீட்சண்யா : கவிதையில் உரையாடல் நான் பார்த்ததில்லை. அந்த வகையில் புதுமையான பிரயோகம். அரசியலுக்கும் பொதுஜனத்துக்கும் இல்லாத இணைப்பை பறைகிறது.

    வடிவமைப்பு

  • கதைகளுக்கு படம் போட்டது போல், கவிதைகளுக்கும் புகைப்படங்கள் இட்டிருக்கலாம்.

  • அச்சு எடுக்க முடியவில்லை.

  • மேற்கோள் வைத்துக்கொள்ள நினைக்கும் பகுதிகளை காப்பி-பேஸ்ட் செய்ய முடியாது.

  • எளிய முறையில் பக்கத்துக்கு பக்கம், அச்சு புத்தகம் போல் புரட்ட முடியவில்லை. பேஜ் டவுன், பேஜ் அப் போன்ற பழக்கப்பட்ட திசைகள், ஸ்க்ரால்பார் கொண்டு டக்கென்று நாற்பதாவது பக்கத்துக்கு விரையும் மைக்ரோசாஃப்ட் வோர்ட் போன்ற பிரயோகங்கள் இல்லாதது, ஈ-கலப்பை இல்லாமல் தமிழ் அடிக்க வைப்பது போல் படுத்துகிறது.

  • மைக்ரோசாஃப்ட் ரீடர் கொடுக்கும் எளிய வசதிகளான குறிப்புகள் எடுத்துக் கொள்வது, புத்தகக் குறிகள் போன்றவையும் சாத்தியமில்லை. அடோபி, ஃபையர்ஃபாக்ஸ் போன்ற சுலபமான நிரலிகள் இருக்கும் காலத்தில், இவ்வகை வடிவமைப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

    Download from tamiloviam.com

    மேலும்

  • அரசியல், உலக நடப்பு, சினிமா, இசை, விமர்சன, மொழி, விஞ்ஞான, மொழிபெயர்ப்பு, பிற கலை, தத்துவ கட்டுரைகள் என்று வெரைட்டி காட்டலாம்.

  • ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமான துணுக்குகள், பொருத்தமான நிழற்படங்கள் இட்டிருக்கலாம்.

  • இணைய ஸ்பெஷல் என்பதால் தமிழ் வலை குறித்த பதிவுகளோ, சுட்டிகளோ, தொகுப்புகளோ சேர்த்திருக்கலாம்.

  • செவ்வாய், டிசம்பர் 14, 2004

    பத்து 'தலை'

    Barbara Walters' Most Fascinating People: கடந்த வருடத்தில் வியக்கத்தக்க பத்து பெயர்களை ஏபிஸி தொலைக்காட்சியில் பார்பரா வால்டர்ஸ் பட்டியலிட்டார். போன வார நிகழ்ச்சியில் அவர்களின் பேட்டியும் இடம்பெற்றது.

    Karl Rove: ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். இரண்டாம் முறை வெற்றிக்கனியை பெற வைத்தவர்.

    Mel Gibson: இருபத்தைந்து மில்லியன் செலவழித்து உம்மாச்சி படம் எடுத்தவர். 'ப்ரேவ்ஹார்ட்' போன்ற படங்கள் நடித்து இயக்கியிருந்தாலும், 'பாஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்'டில் பெரிய நட்சத்திரங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய நிறுவனங்கள் விநியோகிக்க மாட்டோம் என்று கைவிரித்துவிட, சொந்தமாக ரிலீஸ் செய்தவர். இதுவரை ஐநூறு மில்லியன் லாபம் பார்த்து இருக்கிறார்.

    Google Founders Larry Page and Sergey Brin: நம்ம கூகிள்... புத்தம்புதிய Google வழிகாட்டி பார்த்தாச்சா?

    World Series-winning Boston Red Sox pitcher Curt Schilling: ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் முதல் தி ஹிந்து வரை பாராட்டும் ரெட் சாக்ஸ் அணி சார்பாக காலில் கட்டுடன் செவ்வி கொடுத்தார்.

    Michael Moore: ரொம்ப ஃபாரன்ஹீட் ஏற்றாமல் அமைதியாகப் பேசினார்.

    Usher: ரெக்கே & ப்ளூ பாடல் பாடும் ஆப்பிரிக்க அமெரிக்கர். பாடி கேட்டதில்லை.

    Paris Hilton: பாரிஸ் ஹில்டன் இடம்பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

    Oprah Winfrey: ஐம்பதிலும் இந்திரா காந்தி போன்ற நளினமான வசீகரம். அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கார் பரிசளித்து பிறந்த நாள் கொண்டாடியவர். இவர் வாய் திறக்கக் கூட வேண்டாம்... கண் காட்டினால் போதும். மார்குவேஸ் முதல் மடிக்கணினி வரை விற்று தீர்ந்துவிடும்.

    Donald Trump: மஞ்சக் கடுதாசி கொடுத்தாலும் மற்றவர்களின் சீட்டை (வேலையில் அமர்த்திக் கொள்ளாமலே) நீக்கி வருபவர். நிஜமாகவே நிஜ-நாடகக் காட்சியான 'அப்ரெண்டிஸி'ல் சுவாரசியப்படுத்துபவர்.

    Ken Jennings: தமிழ் வலைப்பதிவுலகில் (Final Jeopardy - Domesticated Onion) வெங்கட், பிபி (Of Cabbages and Kings: They Killed Kenny!) என்று பலராலும் பதியப்பட்டவர்.



    தமிழில் சென்ற வருட 'தலைகள்' யாரு?

  • ஜெயேந்திரர்
  • விஜயகுமார் (டி.எஸ்.பி.)
  • ஜெயலட்சுமி (சிவகாசி)
  • சோனியா அகர்வால்
  • ப. சிதம்பரம்
  • சௌந்தர்யா
  • வைரமுத்து
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
  • திருமுருகன் (மெட்டி ஒலி)
  • சுஜாதா
  • ஏ. ஆர். ரெஹ்மான்
  • ரம்யா கிருஷ்ணன்
  • த்ரிஷா
  • திருச்செல்வன் (கோலங்கள்)
  • ஜோதிகா

  • லேடரல் கேள்விகள்

    (கடி) விடை கொடுப்பதற்காக ஒரேயொரு சாம்பிள்:
    Q. How can you lift an elephant with one hand?
    A. It is not a problem, since you will never find an elephant with one hand.

    1. முட்டையை கான்க்ரீட் தரையில் போடும்போது உடைக்காமல் போடுவது எப்படி?

    2. ஒரு சுவற்றை எழுப்புவதற்கு எட்டு மனிதருக்கு பத்து மணி நேரம் பிடித்தது. அப்படியென்றால் நான்கு பேருக்கு எத்தனை நேரம் எடுக்கும்?

    3. உங்களின் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் மூன்று ஆரஞ்சுகளும் நான்கு ஆப்பிள்களும் இருந்தால், மொத்தம் என்ன இருக்கும்?

    4. எட்டு நாள் தூங்காமல் மனிதனால் எப்படி இருக்க முடியும்?

    5. சிவப்பு நிறமுடைய கல்லை, நீலக்கடலில் போட்டால், கல் என்னவாகும்?

    6. பாதி திராட்சையை ஒத்திருப்பது எது?

    7. காலையில் சாப்பிடவே முடியாதது எது?

    8. சக்கரம் கண்டுபிடித்தவுடன் என்ன நிகழ்ந்தது?

    கரெக்டாக சொல்வதற்காக மொழிபெயர்க்க இயலாத இன்னொரு சாம்பிள்:
    9. Bay of Bengal is in which state?
    A : Liquid

    சனி, டிசம்பர் 11, 2004

    சென்ற வாரம்

  • Remembering MS Subbulakshmi என்று லேஸிகீக் தன்னுடைய வலைமனையில் காட்டிய விதம், எம்.எஸ். கொள்ளை கொண்ட விதத்தைச் சொன்னது.

  • 'நான் சின்ன வயசில் இருந்தே உங்க ப்ரொகிராமைப் பார்ப்பேன்' என்று 'பெப்சி' உமாவைப் பார்த்து சீரியஸாக சொன்னார் நடிகர் ஷாம்.

  • 'செல்லமே' படத்தை சிரிப்பு வருமாறு கிண்டலடித்தார்கள் சூப்பர் 10.

  • மொஸாம்பிக் தேர்தல் முடிந்துவிட்டது. அர்மாண்டோ க்வெபூஸா (Armando Guebuza) வெற்றி பெறுகிறார். 1986-இல் இருந்து ஆளும் ஜோகிம் சிஸானோ (Joaquim Chissano) ஒருவழியாக ஜனாதிபதி பதவியை விடுகிறார்.

  • அமெரிக்காவின் புகழ்பெற்ற செல்பேசி நிறுவனங்களில் ஸ்பிரிண்ட் பிசிஎஸ் முக்கியமானது. இதை வைத்துக் கொண்டிருப்பவர்களை நக்கலடிப்பது மற்ற செல்பேசி விளம்பரங்களின் முக்கிய அம்சமாகும். நின்றால் அவுட்-ஆஃப்-நெட்வொர்க். வீட்டில் இருந்தால் 'ரோமிங்' என்று முகஞ்சுளிக்க வைக்கும் கம்பியில்லா வலைப்பின்னல். ஆனாலும், குறைந்த விலையில் அதிக நிமிடங்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக மூன்றாண்டுகள் சாசனம் எழுதுபவர்கள் பலர். (நானும் இரண்டாண்டுகள் வெறுப்பான செல்பேசி காலம் தள்ளியதுண்டு.)
    இவர்கள் மூன்று பில்லியன் டாலர் செலவில் தங்களின் நெட்வொர்க்கை மேம்படுத்தப் போகிறார்கள்.

  • பெட்ரோல் விலை மிகவும் குறைந்துவிட்டதாக ஓபெக் நாடுகள் மூக்கால் அழுது, விலையேறுவதற்கு ஆவன செய்ய முடிவெடுத்துள்ளார்கள். (ப. சிதம்பரம் கனவில் மண்?)

  • ஈ.டி.ஏ. பிரிவினைவாதிகளின் ஸ்பெயின் குண்டுவெடிப்பில் யாரும் இறக்காதது சந்தோஷமான விஷயம்.

  • காங்கோவில் மாதாமதம் 31,000 பேர்கள் இறக்கடிக்கப் படுகிறார்கள். போர் முடிந்தாலும், பட்டினி சாவுகளை நிறுத்த முடியாத ஐக்கிய நாடுகள் அமைப்பு.

  • சார்க், ஆசியான், ஈயூ போல தென் அமெரிக்க நாடுகளும் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்று யூனியன் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். வர்த்தகம் பலுப்படவும், ஒற்றுமையாக அமெரிக்காவிடம் கோரிக்கைகள் வைக்கவும் இது உதவலாம்.

  • தாய்லாந்தில் ஆரிகமி (பேப்பர் கலை) பறவைகளை பறக்க விட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சித்ததை சன் செய்திகள் காண்பித்தது. ஆனால், அடுத்த நாளே, அமைதிப் பறவைகள் விட்ட தெற்கு பகுதியில், குண்டுகளும் வெடித்தது. பேப்பர் எல்லாம் பறக்கவிட்டு ஸ்டண்ட் அடிக்காமல், எதற்கு தாக்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாமே!?

  • நேஷனல் ட்ரெஷர்

    நம்ப முடியாததை நம்ப வைப்பது திரைப்படங்கள். அமெரிக்காவின் ஆளுமைக்குப் பிண்ணனியில் சாணக்கியத்தனங்கள் இருந்தாலும், பில்லியனாதி பில்லியன்கள் எங்காவது ஒளிந்திருக்கும் என்று யாராவது சொன்னால், கீழ்பாக்கம் கேஸ் என்று எண்ணுவோம்.

    இந்தப் படம் பார்த்தபிறகு, அவரிடம் 'எனக்கு அது எங்கே இருக்கு என்று தெரிய வேண்டும்' என்று சிரத்தையாக கேட்போம்.

    'நிக்கோலஸ் கேஜி'ற்கு பால்ய பருவத்தில் இருந்து பாட்டி சொன்ன கதையாக 'நேஷனல் ட்ரெஷர்' வேறூட்டப்படுகிறது. அமெரிக்காவின் மூதாதையர்கள் (முரண்தொடை?!) நாட்டின் அவசரத் தேவைக்காக கோடானுகோடி சொத்தை எங்கோ புதைத்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஒற்றை வரி க்ளு மட்டுமே இருக்கிறது.

    இந்தப் புதையலை கண்டுபிடிப்பதற்காக ஹீரோவின் குடும்பம் லாபம் விரும்பா அமைப்பொன்றை நடத்தி வருகிறது. கடகடவென்று நகரும் டைட்டிலின் இறுதியில் பெரியவனாகும் ஹீரோ, முக்கிய துப்பான கப்பலை கண்டுபிடிக்கிறார். கப்பலுக்குள் புதையல் இருந்ததா என்பதில் ஆரம்பிக்கும் சண்டை, ஹீரோவை அனாதரவாக விட்டு வில்லன் கோஷ்டியை உண்டு செய்கிறது.

    தொடர்ந்து அதிபயங்கர பாதுகாப்பில் இருக்கும் சுதந்திர தின சாசனத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.

    ஹீரோயின் ஒட்டிக் கொள்கிறார். நக்கலடிக்கும் விவேக் போன்ற கதாநாயகத் தோழன் என்று ஹீரோவின் மூவர் அணி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த வில்லன் கூட்டணி. இவர்கள் இருவரையும் வேட்டையாடும் எஃப்.பி.ஐ.

    விஷமம் செய்யும் குழந்தையைத் தடுக்க ஓடும் பெற்றோரின் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. ஆனாலும் ஒன்ற வைக்கிறது.

    புத்திசாலியான ஹீரோயின் முரண்டு பிடிக்கிறார். கிண்டல் அடிக்கிறார். சாகசங்கள் புரிகிறார். படம் முழுக்க அதிக ஆடைகள் மாற்றி ஜொலிக்காமல் வந்தாலும், அழகாக மனதில் இடம் பிடிக்கிறார்.

    ஹீரோவின் தோழராக வருபவரின் நச் காமெண்ட்கள் சீரியஸான படத்தின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ப்ராக்டிகலாக யோசித்து, கற்பனைகளில் உலாவும் அபாயத்தை பார்வையாளனைப் போல் சொல்வதால் ரொம்பவே பிடித்துப் போகிறது.

    தேவைக்கேற்ப பிருமாண்டம், சாதாரண நடுத்தர வர்க்கம் போன்ற ஹீரோ, அற்புதங்கள் எல்லாம் நிகழ்த்தாமல் ஆங்காங்கே சூழ்நிலைக்கேற்ப அச்சப்படும் நாயகன் என்று வெகுவாக நம்பவைக்கும் படம். அவ்வப்போது லாஜிக் சறுக்கல்கள் இருந்தாலும் மன்னிக்கலாம்.

    சைக்கிள் ரிக்ஷா, நடராஜர், தட்டுமுட்டு சாமான், செப்பு பித்தளை பாத்திரம், பிரமிடு தலைகள் என்று குறைவான செலவில் தயாரான காட்சி ஏமாற்றம். கப்பல் காட்டுகிறேன் என்று பனி சூழ்ந்த நிலத்துக்கு சென்று, சிறிய படகை காண்பித்து நம்மை ஒத்துக் கொள்ள சொல்வது கூட பட்ஜெட் தட்டுப்பாடுதான் காரணமாக இருக்கலாம். தவணை அட்டை விடுவது, அப்பா வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்வது, மற்றவர்கள் வியர்க்க, ஹீரோயின் விறுவிறுக்காதது என்று மைக்ரோஸ்காப் கொண்டு அலசலாம்.

    ஆனால், கொடுத்த காசுக்கு இரண்டரை மணி நேரம் சுவையான, அதிகம் மூளையைப் பிராண்ட வைக்காத அடிதடி மசாலா.

    ஓசியன்ஸ் ட்வெல்வ்

    கமல், சத்யராஜ், அஜீத், பாக்யராஜ், லிவிங்ஸ்டன், முரளி, பாண்டியராஜன் என்று பத்து ஹீரோ; ஸ்னேஹா ஹீரோயின். சில வருடம் முன்னாடி இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு, எல்லாருக்குமே சம அளவு உரிய மரியாதையும் காட்சிகளும் கொடுத்து ரசிக்கத்தக்க படமாக இருந்தது 'ஓசியன்ஸ் லெவன்'.

    அதே பத்து நாயகர்கள். கூட சிம்ரன் போல இன்னும் ஒரு ஹீரோயின். இந்த 'ஓசியன்ஸ் ட்வெல்வ்' எடுத்து முடிக்க இயக்குநர் திணறியிருக்கிறார்.

    அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றது பிரச்சினையாக இருந்திருக்கலாம். புத்திசாலித்தனமான திருட்டு வித்தைகள், புரியும்படியான வழிமுறைகள், லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரசியமான திருப்பங்கள் கிடையாது. ஆசுவாசப்படுத்தக் கூட நேரம் இல்லாமல் நுனிப்புல் ஓட்டத்தில் கதை, சப்பைக்கட்டு வாதங்கள் என்று படமெங்கும் ஓட்டைகள்.

    போன முறை "ஓசியன்ஸ் லெவனில்" நூற்றைம்பது கோடிக்கு ஏமாற்றப்பட்டார் சூதாட்ட விடுதி தலைவர். அந்தப் பணம் காப்புரிமை மூலமாக அவருக்கு கிடைத்துவிட்டது. இருந்தாலும் திருடிய பதினோரு பேர்களையும் அடையாளம் கண்டுகொள்கிறார். அவர்களுக்கு இரு வாரம் கெடு கொடுக்கப்படுகிறது. திருடிய பணத்தையும் அதற்கான கந்துவட்டியுடன் எண்ணி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்; ஜெயில்; சிறை!

    அட்டகாசமான ஆரம்பம். செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தி போல், பத்து + நாயகியின் அமைதியான வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுத்து மிரட்டிச் செல்கிறார் வில்லன் - சூதாட்ட விடுதி தலைவர்.

    அதன்பிறகு ஆரம்பிக்கும் சறுக்கல்கள், நிற்காமல் கடுப்பேத்துகிறது. போன முறை தெளிக்கப்பட்ட நகைச்சுவை, இந்த முறை சுழிக்க மட்டுமே வைக்கிறது. சின்னப்பையன் மாட் டேமனை அழைத்துச் சென்று சதாய்க்கும் காட்சி மட்டும் புன்முறுவலில் தேவலாம்.

    காதரீன் ஜீடா ஜோன்ஸ் அநியாயத்துக்கு வேஸ்ட் செய்யப் பட்டிருக்கிறார். ஜூலியா ராபர்ஸ் பாத்திரம் அவரையும் கா. ஜீ. ஜோன்சையும் மிஞ்சும் அளவு மோசமாக்கப் பட்டிருக்கிறது. இரு அருமையான நடிகைகள். இரு அவசரக்கோலங்கள்.

    படத்தின் இறுதி கட்டத்தில் மிஸ்டர். பாரத் ஸ்டைல் சவடால்கள் 'அட' என்று கொஞ்சம் ஆறுதல். ஆனால், குழப்பாச்சு, குப்பாச்சு மாதிரி தொடரும் விளக்கங்கள்... 'ஆஆஆஆஆவ்வ்வ்வ்'.

    வீடியோவில் வேண்டுமானால் பார்க்கலாம். நிறைய 'டெலீடட் சீன்ஸ்' கொடுத்திருப்பார்கள். அதன்மூலமாவது வாடகை டாலர்களுக்கு ஏற்ற திருப்தி கிடைக்கும்.

    தி போலார் எக்ஸ்பிரஸ்

    'நம்பினார் கெடுவதில்லை; நான்குமலை தீர்ப்பு' என்பதுதான் அடிநாதம். சாண்டா க்ளாஸ் இருக்கிறார் என்று நம்புவது சிறிய பருவம். இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படுவது இன்னொரு பருவம். நம்பியவர் கண்ணில் நிச்சயம் தெரிவார் என்பதை கிறிஸ்துமஸ் பூர்வமாக சொல்கிறார்கள்.

    விதவித வேடங்களில் டாம் ஹாங்க்ஸ். ஆனால், அவர்தான் என்று தெரியாதபடி புதுவித கணினி வித்தை. நடிகர்களின் முகங்களுக்கு ஏற்ப அனிமேஷன் முகங்கள் தயார் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைப் போலவும்; கணினியில் வரையப்பட்ட நிறைய குணநலன்களையும் கொண்டு, கலந்து கட்டி செய்யப்பட்ட தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பே, அனைத்து நடிகர்களும் நீலத் திரைக்கு முன் நடித்து ஒளிப்பதிந்து கொள்கிறார்கள். அதை கணினியில் ஏற்றி, ஏற்கனவே செய்த முகங்களுடன் மிக்ஸ் செய்து, நிஜப் படம் தயாராகி இருக்கிறது.

    பெரும் பொருட் செலவில் உருவான படம். அவ்வளவு எல்லாம் மெனக்கிட்டிருக்க தேவையே இல்லை. (கணினி வித்தை காட்டாமல் திரைக்கதை நம்பியதற்கு சமீபத்திய உதாரணம்: தி இன்கிரெடிபிள்ஸ்)

    3-டி திரைகளிலும் வெளிவந்திருக்கிறது. அதற்காகவே என்னவோ, மான்கள் கொம்புகளை நீட்டுகின்றன. ஓடும் ரயிலின் மேலே நடக்கிறார்கள். கன்வேயர் பெல்ட்களில் உருண்டு பிரளுகிறார்கள். 'ஹாட் ப்ரட்ஸ்' உணவுகள் வாய்க்கு அருகே நீட்டப்படுகின்றன. பனிகளில் வண்டி சறுக்குகிறது. 'டோரா டோரா' போன்ற ரோலர்-கோஸ்டர்களின் மேலே செல்லுகிறார்கள்

    படம் பெரியவர்களின் பொறுமையை சோதிக்கும் 'மெட்ராஸ் பாஸெஞ்சர்' வேகத்தில் நகர்கிறது. கடவுள் கற்பனையே என்றாலும் நம்பிக்கையால் அன்றாட நிகழ்வுகளிலும் கண்டு கொள்ளலாம் என்பதை சாண்டாவின் பின்புலத்தில் அருமையாக சொல்கிறது.

    த்ரீ-டியில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த காசுக்கு ROI வரலாம்.

    வியாழன், டிசம்பர் 09, 2004

    பாஸ்டன் முப்பெரும் விழா

    பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

  • 'கலக்கல்' காசிக்கு பாராட்டு விழா
  • கேள்வி நாயகர் கார்த்திக் ராமஸுக்கு வேள்வி விழா
  • கஞ்சி ஊற்று சுந்தருக்கு கஞ்சி வழங்கு விழா




    நிகழ்ச்சி நிரல்

    தேதி: டிசம்பர் 25, 2004
    கிழமை: சனி
    நேரம்: 4:00
    இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை


    தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்
    வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்
    தலைமையுரை: பெயரிலி பேரவை
    விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு
    சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்
    ஏற்புரை: 'கலக்கல்' காசி
    முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி
    தேசிய கீதம்: கதிர்

    ஒளிப்பதிவு: 'காண்பதுவே' மாது



    வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

    வெள்ளி மாலையன்று (டிச.24) -- விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!

    முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!






    மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் :-)

  • புதன், டிசம்பர் 08, 2004

    இணையப் பொறுக்கன்

    (என்னுடைய குறிப்புகள் அடைப்புக்குறிக்குள்)

  • செந்தில்: புதுமைபித்தன் போன்ற நகைச்சுவை எழுத்தாளர்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு கல்கியையே சேரும் என்னும் எழுதப்பட்ட கட்டுரையின் முரண்களை சொல்கிறார். (The Hindu : Magazine: கல்கியும் உயிருடன் இல்லை... பு.பி.யும் இல்லை... யார் வந்து மறுக்கப் போகிறார்கள்?)

  • டீகட: 'ஈழத் தமிழர்களின் சாதனையை தமிழ்நாட்டு தமிழர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் சாதாரணமாகத் தெரிகிறது' -- பாரதிராஜா. (The Hindu: அடுத்து நெய்வேலியில் மீட்டிங் இருந்தால், நெய்வேலித் தமிழர்கள் போல் கடின உழைப்பாளிகளை நான் சென்னையில் கூட கண்டது இல்லை என்று டய்லாக் ரெடியா?)

    CNN: இரண்டாயிரத்து மூன்னூறு பேர் கரகோஷமிட இராணுவ மந்திரியை நோக்கி குரலெழுப்புகிறார் போர் வீரர். ஈரக்கில் கேட்கபட்ட தர்மசங்கடமான கேள்விகளுக்கு, நிர்தாட்சண்யமான பதில்கள். (ஜனாதிபதி உங்களைத் தக்க வைத்துக் கொண்டதற்கு இந்த மாதிரி தூக்கியெறிந்து பேசுவதுதான் காரணமா?)

  • Simon: ஆத்மதிருப்தியோ, சுத்தி-கரிப்போ -- வலைப்பதிவதின் தாத்பர்யங்களை எடுத்துரைத்து, பதினைந்து விநாடி புகழ் பெறுவதற்கு வழிமுறைகளை பட்டியலடுகிறார். (உங்கள் வலைப்பதிவும் புகழ் பெற வேண்டுமானால், இந்த மாதிரி பட்டியல் போட்டுத் தள்ளுங்கள். படிப்பதற்கு நாலு பேர் வருவார்கள்.)

  • Zen and Japanese Stories: குழந்தைகள் முதல் பெரியவர்கள் புரிவது போல் எளிதில் விளங்கி, நிறைய முடியை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஜென் கதைகள். (சம்பந்தா சம்பந்தமில்லாமல் மேற்கோள் காட்டி கொல்வது போல், ஜென் கதைகள் சொல்லியும் வாதங்களை திசைதிருப்ப பயன்படும்.)

  • Send Mary Shodiya to Barnard College: நல்ல பல்கலை.யில் இடம் கிடைத்தாலும், கட்டணம் கட்ட முடியாத பொருளாதாரம். நைஜீரியாவில் பிறப்பு. 'தெய்வத்தால் ஆகாதெனினும்...' என்னும் குற்ளையொற்றி, பணம் சேர்த்த கதை. (விக்ரமனின் அடுத்த படத்துக்கு கதை ரெடி.)

  • celebrity design - Yahoo! Mail: யூனிசெஃப், எயிட்ஸ், Tuberous Sclerosis, போன்ற ஆராய்ச்சிகளுக்கு மின்மடலாடிக் கொள்வதன் மூலம் யாஹுவை தானம் வழங்க வைக்கலாம். (விக்ரம், சாயாசிங், ரீமா சென் எல்லாம் அடுத்த தீபாவளிக்குப் போட்டு விடுங்க சாமீயோவ்!)

  • சித்து: எங்கிருந்தோ வந்த நவஜோத் சிங் சித்துவின் வர்ணனை மொழிகள். ('ஆம்லெட் போடணும் என்றால் முட்டையை உடைத்துதானே ஆக வேண்டும்' போன்ற நெட்மொழிகள் நிறைந்தவை. யாராவது மானநஷ்ட வழக்குப் போட்டுவிடப் போகிறார்கள்.)

    Far from the madding crowd: உங்களுக்கு எவ்வளவு த.சு. (தலைப்பு சுருக்) தெரியும் என்று சொவ்வறையாளர்களுக்கு சவால் விடும் தொடுப்பு கொடுக்கிறார். (Acronym Anarchy: எழுபத்தைந்து தெரிந்தால் மென்பொருளாளர்; நூறும் தெரிந்தால் சும்மா ஜிகிடி செய்யும் கன்சல்டண்ட்.)

  • செவ்வாய், டிசம்பர் 07, 2004

    ஓட்டுப் பெட்டி

    இரண்டு தேர்தல்கள் சூடு பிடித்திருக்கிறது.

    'மதுர'விற்கு போடுங்க ஓட்டு என்கிறார்கள் : www.new7wonders.com (மார்க்கம்). இன்றைய தினமலரிலும் அறைகூவுகிறார்கள்: மீனாட்சி கோயிலை உலக அதிசயமாக்க தேவை உங்கள் ஓட்டு.

    உலக அதிசயமாக தேர்ந்தெடுக்கப் பட்டால், கோவிலில் தீ பிடித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா, சுற்றுலா வசதி எப்படி மேம்படுத்தலாம் என்று எல்லாம் எழுத அருமையான வாய்ப்பு கிடைக்கும்.



    இரண்டாவது 2004 Weblog Awards. இந்தியப் பழங்குடியில் இருந்து எவராவது அகப்படுகிறாரா என்று துழாவியதில் Rajan Rishyakaran மட்டுமே கண் முன்னே வந்தார். அவரும் தென் கிழக்கு ஆசியாதான். இந்தியாவும் அது சார்ந்த தரமான வலைப்பூக்களும் பரிந்துரைக்கப்படவே இல்லை. நம்மவர்களுக்கு என்றுதான் பதவி, பட்டம், வெற்றி ஆசைகள் வருமோ :-P

    கொடுக்கும் விருதுகள் பட்டியல் கவர்ச்சியாக இருக்கிறது. அவற்றை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்தால் இப்படி சொல்லலாம்:

    1. தலைசிறந்த வலைப்பூ

    2. சிறந்த புதிய பதிவு (ஜூன் 2004-த்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது)
    3. சிறந்த குழுப் பதிவு (ஒன்றாவது பரிந்துரைக்க முடியுமா?)
    4. சிறந்த நகைச்சுவை/கிண்டல்/நக்கல் பதிவு

    5. சிறந்த சமூக/கலாசார பதிவு
    6. சிறந்த புகைப்படப் பதிவு
    7. சிறந்த வடிவமைப்பூ

    8. சிறந்த கட்டுரையாளர்
    9. சிறந்த சிறுகதையாளர்
    10. சிறந்த கவிஞர்

    11. சிறந்த மேற்கத்திய பதிவுகள்
    12. சிறந்த ஈழ பதிவுகள்
    13. சிறந்த தமிழக பதிவுகள்

    14. பெண்களுக்கான சிறந்த பதிவு
    15. சிறுவர்களுக்கான சிறந்த பதிவு
    16. சிறந்த அரசியல் பதிவு

    17. சிறந்த வலதுசாரி பதிவு
    18. சிறந்த இடதுசாரி பதிவு
    19. சிறந்த ஊடகப் பதிவு

    20. சிறந்த முகமூடி பதிவு
    21. சிறந்த கேலி சித்திர பதிவு
    22 சிறந்த சமய பதிவு

    எல்லோருக்கும் ஒரு விருது வழங்க வேண்டுமானால், இன்னும் ஈராறு தலைப்பை சேர்த்துக் கொள்ளலாம் ;;-)


    மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் - ஞாநி

    thatstamil.com: ராஜீவ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் உள்துறை இணை அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்டது என்று கருதப்பட்ட ஆயுத சரக்குப் பெட்டகம் டெல்லி விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தனிலிருந்து வந்தது. விமான நிலைய காவல் துறை இதை சோதனை போட்டுக் கொண்டிருந்தபோதே அதை 'ரா' உளவுத்துறை அதிகாரிகள் வந்து தங்களுக்கானது என்று எடுத்துச் சென்று விட்டார்கள். அந்த பெட்டகத்தில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற சில ஆயுதங்கள் அடுத்த சில வாரங்களில் பஞ்சாபில் ஒரு தீவிரவாத குழுவால் பயன்படுத்தப்பட்டன.

    அவை வெடித்த சமயம்தான் நடாளுமன்றத்தில் பஞ்சாப் மாநில நெருக்கடி நிலை நீடிப்புக்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற வேண்டிய நாள். ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்த ஒப்புதலுக்காக உளவுத்துறை ஏற்பாடு செய்த வேலை இது என்று அப்போது பத்திரிகையாளர் திரேன் பகத் அம்பலப்படுத்தினார். (பின்னால் அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.) அது பற்றி அவையில் கேள்வி எழுந்ததும், ப.சிதம்பரம் ஓர் அரசு தேசப் பாதுகாப்புக்காக சில விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். அவற்றைப் பற்றி அவையில் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக சொன்னார். அத்துடன் நம் பிரதிநிதிகள் அதை விட்டுவிட்டார்கள். எதெல்லாம் அரசு ரகசியம் பார்த்தீர்களா? தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகள் மட்டும் அல்ல நம் அரசே கூட உதவி செய்யும் என்ற விசித்திரங்கள் அரசு ரகசியம்தானே.


    முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
    அறிவுத்திறன் குறைந்தவர்களுக்குத்தான் நினைவாற்றலும் குறைவாக இருக்கும். உரையாடல் சொற்பொழிவு, தகவல்கள், காதில் கேட்பது, படிப்பதை நீண்டநாள் நினைவில் வைத்திருக்கும் திறன் எனக்கு உண்டு. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நடந்த உரையாடல் விவரங்களை நான் எனது நினைவாற்றல் மூலம் மீண்டும் வெளியிட்டேன்.

    ஆங்கிலம் இந்தியர்களை உயர்த்தியதா?

    இதுவரை வெளிவராத Thanks to Dinamani Kathirபாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு என்னும் சுரேஷ் கண்ணனின் பதிவைப் படித்தேன். இந்த வார தினமணிக்கதிரில், 22 பிப்ரவரி 1910-இல் விஜயாவில் எழுதிய கட்டுரையின் சாம்பிள் கொடுத்திருக்கிறார்கள்.

    கதிரில் இருந்து:

    பாரதி ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழான "விஜயா'வில் வெளிவந்த, இதுவரை நூல் வடிவம் பெறாத கட்டுரை இது. டிசம்பர் 5 காலை, கோவை பாரதி வித்யா பவனில் வெளியிடப்படும் "பாரதி - விஜயா கட்டுரைகள்' என்னும் நூலிலிருந்து "கதிர்' வாசகர்களுக்காக முன்னோட்டமாக இங்கு வெளியிடப்படுகிறது. நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. நூலின் 25 பக்க அளவிலான விரிவான முன்னுரையில் தன் தேடல் முயற்சியையும் தொகுத்தெடுத்த முறையினையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். "காலச்சுவடு' வெளியிட்டுள்ள இந்நூலின் மொத்தப் பக்கங்கள் 440; விலை ரூ. 225.

    நன்றி: Dinamani.com - Kadhir

    திங்கள், டிசம்பர் 06, 2004

    அரை குறை சிந்தனைகள்

    'வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது' என்றார் முன்னாள் ரஜினி. தமிழக Commando 'மனிதன்' திரைப்பட வெள்ளி விழாவின் போது அவ்வாறு சொற்பொழிவாற்றவில்லை.

    ஆபாசத்தை வளர்க்க வேண்டாம் என்கிறார் ஜெயலலிதா. 'ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி' நடித்தவுடன் ஜெயலலிதா சொல்லியிருந்தால் -- கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையே இருக்கும் லஷ்மண் ரேகாவை விளக்கியிருப்பார்.

    'உள்ளே வெளியே', 'அண்ணாமலை' என்று அரை நிர்வாண காட்சிகள் வந்தாலும், இன்னும் lesser known mortals படமெடுத்தால் மட்டுமே பிரச்சினை கிளம்புகிறது.

    காதல் அரங்கம் படம் என்பது காமத்தை பற்றி மக்கள் புரிந்துகொண்டு அதன் பிடியிலிருந்து வெளிவர வேண்டும் என்ற ஒரு கல்வியை வெளிப் படுத்தும் விதத்தில் உருவாகி இருக்கிறது என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன்.

    இது போன்ற பேட்டிகள் படத்தை விநியோகிப்பதற்கு உபயோகப்படும். கமல் நடித்திருந்தால் முத்த காட்சி எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஆத்மதிருப்தி படம் என்றால் இன்னும் வளைவு சுளிவுகள் காட்டவேண்டியிருக்கும். ஆபாசம் எட்டிப்பார்க்காவிட்டாலும், கமல் படங்களுக்கு கண்டனங்கள் கிளம்பும்.

    விகடனில், ‘‘என்ன சார் இது? கமல்ஹாசன்னா டிபனுக்கு கொஞ்சம் செக்ஸ், மத்தியான உணவுக்கு அப்புறம் கொஞ்சம் செக்ஸ், சாயங்காலம் ஜலக்கிரீடை, அப்புறம் தூங்கப் போறதுக்கு முன்னால இன்னும் நெறைய செக்ஸ்... அப்பிடினு நெனச்சுண்டு கிட்ட வந்து பாத்தா, ரொம்ப ஏமாற்றமா இருக்கு!'' என்றாராம் பாலகுமாரன்.

    ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல் மனவொற்றுமையைத் தேடித் தேடி அலைந்து கடைசியில் ஆதர்ச துணையை (கௌதமி?) கண்டுபிடித்திருக்கிறார். நிம்மதியான மனநிலை படைப்பாளிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது வழக்காடுமன்ற தலைப்புக்குரிய மேட்டர். அங்கு செல்லாமல், மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நாம் காண்பது ரசிக்கத்தக்க ஆபாசமா அல்லது அருவருக்கத்தக்க கவர்ச்சியா என்றே தொடர்ந்து யோசிக்கலாம்.

    திரைப்படங்களாவது பரவாயில்லை. வீடியோவிலோ, விசிடியிலோ பார்க்கும்போது குறிப்பிட்ட இடங்களை ஓட்டி சுய தணிக்கை செய்துவிடலாம். ஆனால், சினிமாச் செய்திகளைக் காண விழையும் வலைவாசகனின் இடைமுகம் எவ்வாறு இருக்க்கிறது என்று பார்த்திருப்பீர்கள். தட்ஸ்தமிழ், வெப்-உலகம் போன்ற தளங்களில் soft-porn படங்கள் தூவப்பட்டிருக்கும். இலக்கிய பக்கம், அரசியல் செய்திகள் என்று எங்கு சென்றாலும், 'என் இடையைப் பார்; என் தொடையைப் பார்' என்று இடது பக்கங்களிலும், பேனர்களிலும் கதாநாயகிகள் க்ளிக்க கூவுகிறார்கள்.

    எப்பொழுதாவது எட்டிப் பார்க்கும் மேனேஜரும், நமுட்டுச் சிரிப்போடு 'வேலையை முடிச்சா சரி' என்று சென்று விடுகிறார். வீட்டில் நிலைமை இன்னும் மோசம். 'ராத்திரி முழிச்சிருந்து இது என்ன வேடிக்கை?' என்று வினா. நான் இலக்கியம்தான் படிக்கிறேன் என்பதை நம்ப மறுக்கும் பக்க அமைப்புகள். நானறிந்த இணையத்தளங்களில் சென்னைஆன்லைன்.காம் மட்டும் தேவலாம்.

    செக்ஸ் வாசகர்களைக் கூட்டி வருகிறது.


    சில ஆங்கில சினிமாச் செய்திகள் வழங்கும் தளங்களின் வலைமுகங்களையும் பாருங்கள்:

  • E!
  • IMDB
  • Hollywood
  • AOL

    ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லாருமே கவர்ச்சிப் படுத்துவதில்தான் பிழைக்கிறார்கள். ஹாலிவுட் அந்தரங்க செய்திகளை பரபரப்பாக்கினாலும், நடிகைகளின் எசகிபிசகான போஸ்டருடன் வலையிடுவதில்லை. தமிழ் வலைத்தளங்கள் பெரும்பாலும், கவர்ச்சிப் படம் இல்லாமல் செய்திகளே வெளியிடுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். புண்ணியத்தால் இது மட்டுப்படலாம்.

    (கொங்கு-ராசா சொன்னதின் மூலம்) கிருபாவின் வலைப்பதிவிற்கு திடீரென்று நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்கள் வருவது தெரிந்து கொள்ளலாம்.

    Sex sells.

    த்ரிஷாவின் குளியலை கண்டனம் செய்யவும் அந்த ஹோட்டலில் தங்கிய பிற நடிகைகளின் வீடியோக்கள் கிடைக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளவும் குடும்பத்தை வம்புக்கிழுக்கவும் நிறைய வாய்ப்புகள். வாய்ப்பு கிடைத்தால் பார்க்காமல் இருப்பாயா, உன் குலப்பெண்ணாக இருந்தால் இதே காமத்துடன் டவுன்லோட் செய்வாயா என்று கேள்விகள்.

    மேல்தட்டு மக்களிடையே மட்டும் புகழ்பெற்றிருந்த மாடல் 'பாரிஸ் ஹில்டன்' இவ்வாறு புகழ் பெற்றார். காதலுடன் எடுத்த முதலிரவு ஒளிப்பதிவை இணையத்தில் வழங்கியதன் மூலம் இமேஜ் அடிபட்டாலும், அப்பாவி பெண் அடைமொழி கிடைத்தது. தொலைக்காட்சித் தொடர் தொடர்ந்தது. பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகி வாசனாதி திரவியம், ஆடை வகைகள் என்று அறிமுகம் நடக்கிறது.

    குளியலைறையில் படம் பிடிக்க த்ரிஷாவும், தமிழ்சினிமா.காமில் தொடர் எழுத சிம்ரனும் ஆணையிட்டிருக்கமாட்டார்கள். ஆனால், சிம்ரன் தன்னை ஒரு தலையாகக் காதலித்ததாக கமல் பீற்றிக் கொள்வது போல் அலட்டிக்கவும் மாட்டார்கள்.

    நடிகைகள் பகவத் கீதையின் படி பற்றற்ற நிலையில் தங்கள் நடிப்பைத் தொடர வேண்டும். கொஞ்ச காலம் கழித்து சன் டிவியில் 'உறவுக்காக' நடிக்கும்போது கிளிசரின் தேவைப்படாமல், தங்களின் explotation-ஐ நினைத்தே எளிதில் கண்ணீர் அருவிகள் கொட்ட வைக்கலாம்.

  • சனி, டிசம்பர் 04, 2004

    சொன்னதைச் செய்வோம்!

    லாலூ பிரசாத் யாதவ்:
    பிஹாரில் காட்டாட்சி நடப்பதாக சித்தரித்த ஒரு கார்ட்டூனில் என்னை புலியாக வரைந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அதில் நிதிஷ் குமார், எல்.கே.அத்வானி மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானை குரங்குகளாக சித்தரித்திருந்தார்கள்.


    கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சாங்கிலியானா 'தினகரனில்':
    வீரப்பனைக் கொன்றதற்காக அதிரடிப்படை வீரர்களுக்கு பரிசு வழங்குவது சரியல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.


    ராமதாஸ் 'தினத்தந்தியில்':
    சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மதுப்பெட்டிகள் அதிகமாக விற்பனை செய்ததுதான் தமிழக அரசின் சாதனை.


    வைகோ 'தினகரனில்':
    பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றதில் எனது வழக்கைப் பொறுத்தவரை எந்தப் பலனும் இல்லை. இதை முன் தேதியிட்டு அமல்படுத்தியிருந்தால் எங்களுக்கு மட்டுமல்ல, சிறையில் வாடுகிற பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.


    காங்கிரஸ் எம்.பி. கே.வி. தங்கபாலு 'தினமலரில்':
    காமராஜர் ஆட்சியும் கருணாநிதி ஆட்சியும் ஒன்றுதான். இருவரும் பச்சைத் தமிழர்கள்.


    விஜயகாந்த் 'தினத்தந்தியில்':
    என் அரசியல் பிரவேசம் பற்றி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ந் தேதி அறிவிப்பேன். அதுவரை ஊறுகாயை தொடுவது போல் என் படங்களில் அரசியல் பற்றிய வசனங்கள் தவறாமல் இடம்பெறும்.


    பாரதிராஜா 'குமுதத்தில்':
    பாடப்புத்தகங்கள், தையல் மெஷின்கள் வழங்குபவரெல்லாம் தலைவர்கள் ஆகிவிட முடியாது.


    கமல்ஹாசன் 'தினகரனில்':
    பஸ், கிஸ், பிளைட் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைக்கு தமிழாகி விட்டது. எனது அடுத்த படத்துக்கு பாதி இங்கிலிஸ், பாதி தமிழில் பெயர் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.


    அஜீத் 'குங்குமத்தில்':
    நம்பர் ஒன் இடத்தை பிடிச்சே தீருவேன். அதை யாரும் தாண்டக் கூடாது. மீறி தாண்டிப் போறதா இருந்தா என்னோட பிணத்தைத் தாண்டித்தான் போகணும்.


    16வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதைப் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 'தினகரனில்:
    போகிற போக்கை பார்த்தால் வரும் மாதங்களில் அதிமுக அமைச்சரவை மாற்றம் வெள்ளி விழா கொண்டாடும் போல தெரிகிறது.


    இந்துத்துவமும் தேசியவாதமும் ஒன்றே என்று பாஜக கூறியதற்கு சி.பி.ஐ. தலைவர் ஏ.பி. பரதன் பதில்:
    தேசியவாதம் என்ற பெயரில்தான் ஹிட்லர் உலகம் முழுவதும் நாசம் விளைவித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்.


    மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி:
    மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வேறு விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நான் மக்களின் எதிர்பார்ப்புகளின்படி நடந்தால் பைத்தியமாகி விடுவேன்.


    பா.விஜய் 'ஆனந்த விகடனில்':
    வைரமுத்துவை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, அவருடைய சாதனையை மிஞ்ச வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கிறது. அனால் வைரமுத்துவைவிட என்னை ஆச்சரியப்படுத்துவது வாலிதான். அவர் எம்.ஜி.ஆரிலிருந்து தனுஷ் வரைக்கும் ஈடு கொடுக்கிறார்.


    சத்யராஜ் 'ஆனந்த விகடனில்':
    எல்லா சாமியார்களும் காமெடியன்கள்தான். அதில் குட்டிச்சாமி பெரிய காமெடியன்.


    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் 'தினமணியில்':
    முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதை தற்போது எதிர்க்கும் முதல்வர், அந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றது ஏன்?


    ப்ரீத்தி ஜிந்தா:
    என்னை சக நடிகர்களுடன் இணைத்துப் பேசுகிறவர்களை அடிக்க வேண்டும். இதை மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன் - என்னுடன் நடிப்பவர்களை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டேன்.


    நமீதா 'குமுதத்தில்':
    நாடு முழுக்க வேலையில்லாத் திண்டாட்டம். அதைப் பத்தி யோசிக்காமல் என்னப் பத்தி யோசிச்சா என்ன பிரயோஜனம்?


    லாலூ பிரசாத யாதவ்:
    இந்திய ரயில்வே கடவுள் விஸ்வகர்மாவின் பொறுப்பில் இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பும் அவர் கையில்தான். பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவர்தான். நானில்லை.

    நன்றி: இந்தியா டுடே

    மகள் பிறந்தநாள்

    வீட்டின் நட்சத்திரத்துக்குப் பிறந்தநாள்.

    cindrella girl


    Happy Birthday in Barbie


    4th Birthday @ Home

    அன்பாதவன்

    என் நிறத்தைப் பார்த்த மாத்திரத்தில்
    அசூயைக் கொள்கிறாய்
    சாதியை வெளிச் சொல்லாமல்
    கருப்பு எனக் கேலி பேசுகிறாய்
    மூச்சுக் காற்றின் தீட்டும் படாமல்
    இருக்கிறாய் கவனமாய் நகர்ந்து
    என் நிழலையும்
    அருவருப்போடு பார்க்கிற
    உனக்கு நான் சொல்ல விரும்புவது
    இதுதான்
    முகம் கைகால் முதுகென
    புறப்பாகங்களைக் கொண்டு
    எடை போடாதே என் நிறத்தை
    நீண்டு விரைத்த என் குறியைப் பார்
    ஒருமுறை பார்த்தால்
    மாறக்கூடும் உன் முடிவுகள்
    குறியின் முனையைப் பிதுக்கத் தெரியும்
    உனக்குப் பிடித்த சிவப்பழகு
    காலங்காலமாய்
    சாதிப் பெருமை பீற்றுமுன்
    நாவால் வருடிப் பார்
    பொங்குமெனது ரவுத்திரம்
    வெண்மையாய்

    சுகிர்தாராணி

    நான் திகைக்க நினைக்கையில்
    அந்தரங்கம் அச்சிடப்பட்ட
    புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்
    என் கண்களின் ஒளிக்கற்றைகள்
    முன்னறையில் உறங்குபவனின்
    ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
    கோப்பை நிறைய வழியும் மதுவோடு
    என் உடல் மூழ்கி மிதந்தது
    கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
    சன்னமாய்ச் சொல்லியவாறு
    சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
    பறவைகளின் சிறகோசை கேட்டதும்
    என்னை... என்னிடத்தில் போட்டுவிட்டு
    ஓடிவிட்டது இரவு மிருகம்

    வளைவு - பிரமிள்

    ஒப்புமைத்
    தத்துவப் பின்னலை
    ஓயாத வலையாக்கும்
    காலவெளி நியதி
    தன் வலையில் தானே
    சிக்கித் தவிக்கிறது.
    அண்டத்தின் அநந்த
    சூரியன்களுள்
    மிகைப்பட்ட ஈர்ப்பு.
    அங்கே
    வெளி ஒன்றை
    இன்னொரு வெளி ஊடுருவும்
    பிறழ்ச்சி பிறக்கிறது.

    காலவெளிப் பரப்பில்
    ஜடத்தினுள் ஜடம்சிக்கி
    எங்கோ ஒரு
    ஈர்ப்பு வலை முடிச்சில்
    அதீத ஜடத்திணிப்பு
    பிரபஞ்ச நியதியில்
    பிறக்கிறது புரட்சி.

    ஒரு ஒளிப் புள்ளி நோக்கி
    சரிகிறது அண்டம்.
    வளைகிறது
    வெற்றுப் பெருவெளி
    உள் நோக்கி விழும்
    உலகங்களை விழுங்கி
    ஒளிரும் ஜடப் பிழம்பு
    எல்லையிலே
    ஈர்ப்பின் கதி மாறி
    தன் ஒளியைத் தானே
    கபளீகரிக்கிறது.
    வெளி வளைந்து குவிந்து
    பிறக்கிறது
    வெளியினுள் ஒரு
    பேரிருள் பிலம் -
    இன்னொரு பரிமாணம்

    அங்கே உயிர்க்கின்ற
    உலகங்களில்
    உலவுகின்றன -
    இருள் மின்னல்கள்.

    வெளியான இதழ்: மீள் சிறகு 1

    நாம் புதியவர்கள் - மும்பை புதியமாதவி

    நான் தென்றலாக
    வரவில்லை
    அதனாலேயே
    புயல் என்று
    யார்... சொன்னது?

    நான் கனவுகளாக
    வரவில்லை
    அதனாலேயே
    நிஜம் என்று
    யார்... சொன்னது?

    நான் காதலியாக
    வரவில்லையே
    அதனாலேயே
    சகோதரி என்று
    யார்... சொன்னது?

    நான் மழையாக
    வரவில்லை
    அதனாலேயே
    சூரியன் என்று
    யார்... சொன்னது?

    நான் விடியலாக
    வரவில்லை
    அதனாலேயே
    இருட்டு என்று
    யார்... சொன்னது?

    நான் அதாக
    வரவில்லை
    அதனாலேயே
    இதாக இருக்க
    யார்... சொன்னது?

    நான் நானாக
    நீ நீயாக
    நீயும் நானும்
    புதிதாகப் பிறந்தவர்கள்...

    நான் யார்...?
    நாளைய
    அகராதி
    எழுதும்...
    அதுவரை இருக்கின்ற சொற்களில்
    என்னைக் கழுவேற்றி
    உன்னை
    முடித்துக்கொள்ளாதே.

    வெளியான இதழ்: நடவு - இதழ் 11

    வெள்ளி, டிசம்பர் 03, 2004

    பொன்சிரிப்பும் புன்சிரிப்பும்


    சில பதில்கள்

    கேள்விகளுக்கான விடைகள்:

    யோசிங்க
    1. மணிமேகலை
    2. பாரதிதாசன்
    3. நாமக்கல் கவிஞர்; மனோன்மணீயம் சுந்தரனார்
    4. நாலடியார்; உலக நீதி
    5. வள்ளலார்
    6. திருமூலர்
    7. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    8. கவிமணி தேசிக விநாயகம்
    9. கவிஞர் கண்ணதாசன்.

    பதில் தெரியுமா

  • ரஷ்யப் பத்திரிகையில் வெளியான செய்தி இதுதான். 'நடைபெற்ற கார் பந்தயத்தில் கடைசியாக வந்த காருக்கு முந்தின காராக அமெரிக்க கார் வந்தது. ரஷ்ய கார் இரண்டாவதாக வந்தது!'
  • அந்தத் தக்காளி கீழே விழும் முன் அவனே தன் கையால் பிடித்து விட்டான்!

  • சிற்றின்பம்



    வெள்ளிக்கிழமை கற்பகாம்பாளைக் கும்பிடலாம். எப்பொழுதோ மனதில் பதிந்த பாடல் இது. தவறுகள் இருக்கும். எப்படியெல்லாம் பெண்பித்து ஆட்டிவைக்கிறது என்பதை கோபமாக உணர்ச்சிவேகத்தில் கொட்டியிருக்கிறார்.

    பொய் வைத்த சிந்தை
    மடமங்கையரின் பூங்குழலிலே நிழலிலே
    பொழியம்பு போலுமிரு விழியம்பிலே
    பொடிப்பூச்சிலே கைவீச்சிலே
    செய்தொப்பமிட்ட செப்பெனும்
    முலையிலே துடிச்சிற்றிடையிலே
    உடையிலே தெட்டிலே நன்னுதற் பொட்டிலே
    வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே
    பைவைத்த விடவரவ என்னும் நிம்பதத்திலே
    பாழறிவழிந்து மூழ்கி பரகதிக்கொருதுவுயுமில்லா
    செய்யும் கொடும்பாதகனை ஆள்வதென்றோ
    மெய்வைத்த கையான் இடத்தில் வளர் அமுதமே
    விரிபொழில் திருமயிலைவாழ் விழைமலர்குழல்வல்லி
    மறைமலர்பதவல்லில் விமலி கற்பகவல்லியே!


    Abirami Anthaathi - With explanations:

    "விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
    அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
    கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே
    .

    அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்."

    வியாழன், டிசம்பர் 02, 2004

    நகர்பெயரும் கிராமங்கள் - பட்டிக்காட்டான்


    ஒரு நேசமுடன் மடலில், தான் சென்னைவாசியாக இருப்பதைப் பற்றியும், தனக்கென்று ஒரு கிராம அனுபவம் இல்லாததைப் பற்றியும் வெங்கடேஷ் மிகவும் ஆதங்கப் பட்டிருந்தார். இதே ஆதங்கத்தை நகரங்களில் பிறந்து, வளர்ந்த வேறு பலரிடமும் கண்டுள்ளேன். ஆனால் இவர்கள் எல்லாம் ஏங்கும் அளாவிற்கு கிராமங்கள், கிராமங்களாகவே இன்னும் இருக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. கிராமாம் என்றால் பாரதிராஜா படத்தில் வருவது போல் மதகில் பெருகி ஓடும் சிற்றறிவியோடும், பசுமையான வயல்வெளிகளோடும், நிமிர்ந்து நிற்கும் கோபுரங்களோடும், தென்னை,மா தோப்புகளோடும், கள்ளங்கபடற்ற மக்களோடும், இன்னும் கிராமமாகவே இருக்கிறதா என்ந்து எனக்குத் தெரியவில்லை. மோக முள்ளைப் படித்து விட்டு, பாபுவின் கிராமத்தை யாராவது சென்ற தேட முயன்றால் ஏமாற்றமே கிட்டும். நானறிந்தவரை எனது கிராமத்தின் நிலை, என் கண் முன்னாலேயே வேகமாக மாறி வருகிறது.

    அமெரிக்க இந்திய சமூகத்தில் பிறந்தநாள் விருந்துகள் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சம். பல பிறந்தநாள் விழாக்களில் தமிழர்கள் பலரையும் சந்திக்க நேர்வதுண்டு. அவ்வாறு சந்திக்கும் தமிழ் நண்பர்களை, பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன், எந்த ஊர் என விசாரிக்க்கும் பொழுது பொத்தாம் பொதுவாக சென்னை என்பார்கள். பின்னர் சின்ன தயக்கத்துடன் அம்மாவுக்கு திருச்சி பக்கம் ஏதோ ஊர் என்றோ, அப்பாவுக்கு தஞ்சாவூர் பக்கம் ஏதோ ஒரு கிராமம் என்றோ மெதுவாகக் கூறிவிட்டு, ஆனால் நாங்கள் அந்தப் பக்கமெல்லாம் அதிகம் சென்றதில்லை என்று முடித்துக் கொள்வார்கள்.

    அதற்குப் பின் பேச்சு அரசியல், பொருளாதாரம், வீட்டு விலை நிலவரம், டாலர் மதிப்பு, இந்தியாவுக்குத் திரும்பிப் போகலாமா, வேண்டாமா போன்ற விஷயங்களுக்குத் திரும்பி விடும். இதுவே, மதுரை, நெல்லை, திருச்சி என்றால் ஊர் குறித்து பேச பல விஷயங்கள் அகப்பட்டு விடும். பொதுவாக சென்னை வாசிகளின் அவசர வாழ்க்கை முறை, தென்பகுதி மக்களை விட சற்று வேறானது. பெரும்பாலான சென்னை வாசிகளுக்கு (எல்லோருக்கும் அல்ல), தாம்பரத்துக்கு கீழே என்ன நடக்க்கிறது, என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு தேவையான நேரமோ அக்கறையோ இருப்பதில்லை. அவர்களது அவசர வாழ்க்கை முறை அப்படி. இதற்கு அவர்களை குற்றம் சொல்ல முடியாது.

    மதுரை, நெல்லை வாசிகளுக்கு எதிலுமே அவசரம் இருப்பதில்லை, நிதானமான வாழ்க்கை முறை. இன்னும் எத்தனையோ வேறுபாடுகள். அதிலும் சென்னையில் வளர்ந்த ஒரு பெண், நெல்லை போன்ற பரபரப்பற்ற வாழ்க்கை முறையில் வளர்ந்த ஆணை திருமணம் செய்யும் பொழுது ஒருவித கலாச்சார அதிர்ச்சி கூட ஏற்படலாம். பொதுவாக செனை வாசிககள் என்றாலே, ஊரற்ற பரபரப்பு மனிதர்கள் என்ற எண்ணம் இது வரை நான் பழகிய சென்னைவாசிகள் மூலம் ஏற்பட்டு விட்டது. இன்றைய அவசர உலகில் இது தவிர்க்க முடியாததுதான். பிற தென்பகுதி நகரங்களிலும் இப்போது நிலைமை பரபரப்பாக மாறியிருக்கலாம்.

    பிற மாவட்டக் காரர்களிடம் தங்கள் ஊர் குறித்த பெருமையும், தனது பகுதியைச் சார்ந்தவர்களின் பால் ஒரு வட்டார ஈர்ப்பையும் எப்பொழுதும் கண்டிருக்கிறேன். வறண்ட இராமநாதபுர மாவட்டக் காரர்கள் கூட, ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, ஊர்ப்பக்கம் போயிருந்தீங்களா,ஏதாவது மழை தண்ணி உண்டா என்று பரஸ்பரம் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அது போல் எந்த ஊர் என்று கேட்டுவிட்டால் போதும் தன் ஊர் பற்றிக் கூறாமல் விடமாட்டார்கள். எனது ஊரை விட்டு, வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடு என்று ஆண்டுகள் பல ஆயின போதிலும், இன்றும் என்னை யாராவது எந்த ஊர் என்று கேட்டால் போதும், ஊர் பேர் பற்றி அளக்க ஆரம்பித்து விடுகிறேன். வளர்ந்தது வேறு ஊராக இருப்பினும், இன்னும் சொந்த மண்ணின் மேல் உள்ள பாசம் மட்டும் போகவேயில்லை. அதனாலேயே எங்கள் மண்ணின் மனத்தை எழுதிய வண்ண நிலவன், வண்ணதாசன் கதைகளிடம் எனக்கு சற்றே ஈர்ப்பு அதிகம்.

    அவர்கள் கதைகளில் வருவது போன்ற தாமிரவருணிக் கரையோரம், ஒரு வைணவக் கோவிலைச் சுற்றி அமைந்த, ஒரு அமைதியான கிராமமாகத்தான் எனது கிராமமும் இருந்தது. தற்பொழுது ஊரின் கிராமத்து முகம் கொஞ்சம், கெஞ்சமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் ஊருக்குள் நுழைய ஒரு மைல் நடக்க வேண்டும். திருநெல்வேலி செல்லும் மெயின் ரோட்டில் இறங்கி, கல் துருத்திக் கொண்டிருக்கும் மண் ரோட்டில் நடக்கும் பொழுது கூடவே இருபுறமும் வரும் தென்னந்தோப்பும், மாந்தோப்பும், குயிலோசையும் ஊருக்குள் நுழையும் வரை கூடவே வரும். அதிலும் அதிகாலை பேருந்தில் இறங்கி ஊருக்குள் நுழையும் பொழுது தழுவும் அதிகாலைக் குளிரும், மெலிதாக இருட்டு விலகும் நேரத்தில் தோன்றும் மரங்களும், வயல்வெளிகளும் ஒரு பரவச அனுபவத்தைக் கொடுக்கும்.

    இறங்கியவுடன் எதிர்படும் இசக்கி அம்மனின் பயங்கரத் தோற்றம், நானிருக்கிறேன் போ என்ற நம்பிக்கையை அளிக்கும். வாய்க்கால்க் கரையில் காலைக் கடன்களை முடித்து விட்டு ரோட்டடி வரை வந்து கொண்டிருக்கும் மனிதர்களின் அன்பான உபசரிப்பு, இது நம்ம ஊர் என்று உறுதிப் படுத்தும். மண்பாதையில் சற்றே உள்ளே சென்றால், ஆற்றங்கரையில் இருந்து பிரித்து செலுத்தப்பட்ட வாய்க்காலும், அதை அடர்த்தியாக போர்த்திக் கொண்டு வானுயர நிற்கும், மாமரங்களும், அதில் வாசம் புரியும் பறவைகளும், தலையசைத்து, குரலெலிப்பி, வா வாவென ஊருக்குள் அழைப்பதாகத் தோன்றும். இது எனது மண் என மனம் குதுகலிக்கும்.

    அதிகாலை வாய்க்கால் கரையில் பாத்திரங்கள் தேய்த்துக் கழுவவும், வீட்டு உபயோகத்துக்கென தண்ணீர் பிடிக்கவும் வரும் மகளிரின் கரிசனமான உபசரிப்பைக் கேட்காமல் மேலும் நடக்க முடியாது. அதையும் தாண்டினால், முழுக்க ஆற்றுமணல் நிறைந்த சாலையாக மாறி, ஊருக்குள் கொண்டு விடும். வாய்க்காலும், அதன் கரையில் அமைந்த அடர்ந்த மாமரங்களும், பட்சிகளும், சிறு கோவில்களும், ஆற்றுமண் நிறைந்த சாலைகளும், தேரடியும், சாணி தெளித்துக் கோலமிட்ட வாசல்களும், அகண்டு நிற்கும் கோவிலும், கம்பி அழி போட்ட வீடுகளும், கோவிலுக்குப் பின் ஓடும் தாமிரவருணி ஆறும் என்று, அணு, அணுவாக நான் ரசித்து வளர்ந்த அந்தக் கிராமம், இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக தன் முகம் மாறி, பொலிவிழந்து, கான்க்கிரீட் மேக்கப் போட்டுக்கொண்டு, சற்றே விகாரமாக நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

    திரையரங்கம் இல்லாத கிராமம். ஊர் முழுக்க ஒரு பொது வானொலி காலையில் வந்தே மாதரத்துடன் தொடங்கி, இரவு செய்திகளுடன் முடியும். நல்லது, கெட்டது எதுவென்றாலும் அந்த வானொலியின் அடியில் ஊர் கூடும். ஊரின் ஊடே மாட்டு வண்டிகள், ஒரு சில சைக்கிள்கள், எப்பொழுதாவது பப்பாய்ங் என்று ஹார்ன் அடித்துக் கொண்டு ஒரு சில பெரிய வீட்டுகளுக்கு வரும் ப்ளஷர் கார்கள் தவிர வேறு போக்குவரத்து எதையும் பார்க்க முடியாது.

    ஆற்றங்கரையில் குளித்து விட்டு, அன்கேயே ஊற்றுத் தோண்டி குடி தண்ணீரையும் குடத்தில் எடுத்துக் கொண்டு, சரக் சரக் என்ற ஈர உடையெழுப்பும் சப்தம் அதிகாலல் நேரத்தை நிரப்பும். பகல் பொழுதுகளில் கரையும் காக்கைச் சத்தத்தையும், பெண்கள் தங்கள் பிள்ளைகளைச் சத்தம் போட்டுக் கூப்பிடும் கூப்பாடும், தயிர்கார, கீரைக்கார பெண்மணிகளின் ராகம் போட்ட அழைப்புகளையும் தவிர வேறு ஓசை கேட்பதறிது. மாலை நேரங்களிலும், பூஜா காலங்களிலும் கோவிலில் இருந்து எழும்பும் மணியோசையும், நாதஸ்வர,தவில் இசைகளும் ஊரையையே நிறைத்து அடங்கும். இரவு ஆங்காஙே எழும்பும் நாய் குரைப்புகள். மீண்டும் புல்லினங்களின் இசையோடு காலை புலரும்.

    ஆற்றில் வற்றாது தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது போலவே, ஊரும் அமைதியாக காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்கும். திருவிழாக் காலங்கள் கிராமத்துக்கு ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தாலும், பத்து நாள் கழிந்து, மீண்டும் களையிழந்த திருமண வீடு போல், அமைதியான கிராமமாகி விடும். ஊரின் பெருமை ஒவ்வொருவர் பேச்சிலும் தளும்பும். அதெல்லாம் அந்தக் காலம்.

    அதே கிராமம் இப்பொழுது உருமாறி, இரைச்சலும் தூசியும், குப்பையும் நிறைந்த இரண்டும் கெட்டான் ஊராக மாறி வருகிறது. ஊருக்குள் புகுந்து அமைதியைக் குலைக்கும் ஆட்டோக்களும், மக்கள் வசதிக்காக வீட்டு வாசல் வரை விடப்பட்ட பஸ்களும், தார்ச் சாலைகளும், மணல் உறிஞ்சப்பட்டு, தண்ணீருக்குப் பதிலாக வேலிகாத்தான் மரங்களால் நிறைந்த ஆறுமாக என் கண் முன்னாலேயே ஒரு அசிங்கமான நரகமாக, விரைவாகக் கற்பழிக்கப்பட்டு வருகிறது. பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்க்கு கோவிலைத் தவிர அங்கு மிச்சங்கள் அதிகமில்லை.

    ஊருக்குள் போக இப்பொழுதெல்லாம் நடக்க வேண்டாம், ஒரு சில பேருந்துக்கள் ஊருக்குள்ளேயே வருகின்றன, இல்லாவிட்டாலும் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன, ஆகவே பேருந்தை விட்டு இறங்கியவுடன், அன்புடனும், வாஞ்சனையுடனும், 'ஏ வா, இப்பதான் வந்தியா, வா, வா' என்று நெல்லைத் தமிழிலில் நலம் விசாரிக்கும் நேயமுள்ள மனிதர்களும் எதிர்படுவதில்லை. வாய்க்கால் கரையும், மா, வேம்பு, தென்னை மரங்களும் காணாமல் போய் காங்கிரீட் வீடுகள் முளைத்துள்ளன. உயர்ந்த கம்பிக் கிராதிகளை சின்ன ஜன்னல்கள் இடமாற்றம் செய்துள்ளன, மணற்படுக்கையான சாலைகள், சற்றே, தார் பூசிக் கொண்டு, குண்டும் குழியுமாக தூசியைப் பரப்பிக் கொண்டு அசிங்கமாகப் பல்லிளிக்கின்றன. வாய்க்காலும் அதன் கரைகளும், அதன் மேல் பல நூறு வருடங்கள் நிழல் கொடுத்த மரங்களும் சுத்தமாகக் காணாமல் போயிருந்தன.

    வீட்டிற்குள்ளேயே கழிவறைகள் வந்துள்ளதால், மக்கள் வாய்க்கால் கரையில் சந்திக்க் வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு வாசலில் உள்ள மணற்பாங்கான தரைகள் எல்லாம், அம்மாவின் கோவில் புனருத்தாரன புண்ணியத்தில் சிமிண்ட் தரைகளாக மாறியுள்ளன. மண்வாசலோடு, வாசல் தெளித்துக் கோலம் போடும் பொழுது மூக்கை எட்டிப் பரவசப் படுத்தும் மண்வாசனையும் காணாமல் போய் விட்டன. கோடைக் காலங்களில் வாசலில் காலெடுத்து வைத்தால், பரத நாட்டியமே ஆட வேண்டி வரும்.

    நீண்ட கம்பிக்கிராதிகள் எடுக்கப் பட்டு, சின்ன ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அகலமான கம்பிக் கிராதிகள் வழியே நுழைந்து பின்வாசல் வழியே சென்று வீட்டை குளிரூட்டும் இலவச ஏசியும் கம்பி அழியோடு காணாமல் போய் விட்டன. ஊருக்குள்ளே தார் சாலைகள். வீட்டின் வாசலுக்கே பஸ் வசதிகள். வேகம் செல்லும் பேருந்துகள் வீட்டுக்குள் அனுப்பும் ஒரு வண்டி தூசி இலவச இணைப்பு. ஆட்டோக்கள், லாரிகள், பஸ்கள், பைக்குகள், இரைச்சல், பேரிரைச்சல். சுற்றுப் புற நதியும், நதி கொணர்ந்த மணலும், அதில் வளர்ந்த மரங்களும் காணமல் போனதால், அவற்றோடு இணைந்த பொதிகைத் தென்றலும் சொல்லாமல் போய் விட்டது.

    வெப்பம், வேர்வை, கரண்ட் கட், உள்ளும், புறமும் புழுக்கம். ஆற்றங்கரை, கிராமத்தின் ஜீவ நாடி, இப்பொழுது பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. அகண்டு, விரிந்தோடும் தாமிரவருணி, இப்பொழுது ஒட்டி, ஒதுங்கி, சிறு குட்டையென மாறி விட்டது. அகண்டு கிடக்கும் மணற்படுகை அள்ளப்பட்டு, சகதியாகி, கருவேலங் காடுகளாக மாறிப் போயுள்ளன. ஆற்றைப் பார்க்கும் பொழுது இனம் புரியா சோகம் மனதை கவ்விக் கொள்கிறது. எதை இழந்து, எதைப் பெற்றுள்ளோம்? அனேகமாக தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களின் நிலை இதுதான் என நினைக்கிறேன்.

    மலிவான மேக்கப் போட்டுக் கொண்டு அரைகுறை நகரமாக மாற முயற்சித்தாலும், எனது வேர் அந்தக் கிராமம், எனது பழைய நினைவுகளின் மிச்சங்கள் இன்னும் சிதறிக்க் கிடக்கின்றன. என் அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத்தாத்தாவும், எனக்கு விட்டு சென்றிருக்கும் ஒரு அடையாளம் அந்தக் கிராமம். அதன் மூலம் நான் கற்றதும் பெற்றதும் நிறைய.

    ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் தென்படும் முகங்களை எல்லாம் இந்தக் கிராமத்திலும் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அதனாலேயே சுஜாதாவின் படைப்பை என்னால் அனுபவித்து ரசிக்க முடிந்தது. எனது ஊரின் முகம் மாறிவிட்டாலும் என்னால் மறக்கவோ வெறுக்கவோ முடியவில்லை. அதனால்தான், தொல்பொருள் துறைக்குச் சென்றிருக்க வேண்டிய ஒரு பழைய வீட்டை இடித்துக் கட்டியிருக்கிறேன். வீடு ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில்தான் முடியும். காரைச் சுவர்களையும், பனை மரத் உத்தரங்களையும், எடுத்து விட்டு காங்கிரீட் சுவர், மற்று கூரை போட நேரிட்ட பொழுது, வருத்தமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை, பழைய வீட்டில் தேள்களூம், பூச்சிகளும் சேர்ந்து விட்டன,இடித்துத்தான் கட்ட வேண்டி வந்தது. பெங்களூரிலோ, சென்னையிலோ ஒரு ஃபிளாட்டை வாங்காமல் இந்தக் கிராமத்தில் வந்து பணத்தைச் செலவழிக்கிறானே இந்தக் கிறுக்கன் என்று ஏளனம் செய்தவர்களும் உளர்.

    பசுக்கள் நிறைந்த தொழுவமும், இரட்டை வண்டி மாடும், நிறைந்த நெற்குதிர்களும், காய்த்துக் குலுங்கும், தென்னையும், மாவும், கத்துங்குயிலோசையும், மோரும், தயிரும், வீட்டு வாசலுக்கு வரும் அரிசிக்குப் பண்டமாற்றம் செய்யப்படும் அரைக்கீரையும், காய்கறிகளும், அதிகாலை வரும் குடுகுடுப்பாண்டியும், பனை நார்க் கட்டிலும், பத்து நாள் திருநாளும், கோவில் திருநாளும், டும் டும் கொட்டும், அமிர்தமான சாப்பாடும், ஒளிந்து விளையாடிய வொவால் வாசனையுள்ள பிராகரங்களும், மாடங்களும், நீஞ்சக் கற்றுக் கொடுத்த ஆறும், குளிந்த்தபின் ருசித்த உப்பும், புளியும் சக்கரையும், பாட்டி வார்த்துப் போடும் தடிமனான தோசையும், அகலமான இட்டலியும், வைகுண்ட ஏகாதேசியில் விழித்திருந்து வாங்கும் லட்டும், இன்னும் பிறவும், என் காலம் முழுக்கத் நினைவுகளில் மட்டுமாவது தொடர்ந்து வரும். நினைவுகள் மட்டும் இன்று மிச்சமிருக்கின்றன.

    எனது காலம் வரையில் என் நினைவுகளில் இருந்து பிரிக்க முடியாத அந்த ஊருடன் உள்ள உறவு தொடரும். நினைவுகள், நினைவுகள், நினைவுகள், மறக்க முடியா நினைவுகள். என்னதான் மாறிவிட்டாலும், இன்னும் ரசிக்க வேண்டிய மிச்சங்கள் நிறைய எனது கிராமத்தில் இருக்கிறது என்றுதான் இன்னமும் நினைக்கிறேன். அதிர்ஷ்டமிருந்து, என்றாவது ஒரு நான் ஊருக்குச் செல்ல நேரும் வேளையில், ஆற்றில் தண்ணீர் வரும் பட்சத்தில், ஆற்றங்கரைக் குளியலையும், முள்ளு மரங்களால் மறைக்கப் படாத ஒரு ஓரத்தில் இருந்து சற்றே அனுபவிக்கலாம்தான். பசுமையான வயல் வெளிகள் இன்னும் பல மிச்சமிருக்கின்றன, அவற்றின் கரைகளில் நிதானமாக நடக்கலாம், அப்பொழுதான் இறக்கப்பட்ட பதநீர் பருகலாம் அல்லது இளநீர் அருந்தலாம், கோவிலில் வாசிக்கப்படும் கீதங்களைக் காது குளிர கேட்கலாம். ஆனால் மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு எச்சங்களும், காலத்தின் ஓட்டத்தில் வேகமாகக் காணாமல் போய்க் கொண்டிருப்பதுதான் சோகம்.

    எதிர்காலத்தில் என் குழந்தையை யாரவது எந்த ஊர் என்று கேட்டால், அவளும் இந்தியாவின் தென் கோடிக்கருகில் உள்ள தாமிர நதிக்கரையில் உள்ள பழம்பெரும் கிராமம் என்று சொல்ல வேண்டும் என விழைகிறேன். ஆனால் அது வரை அந்த ஊர் தன் முகவரியைத் தொலைக்காமல் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை. இன்றைய நிலவரம். இப்படியெல்லாம் மாறாத கிராமங்கள் ஒன்றிரண்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இன்னும் இருக்கலாம். அப்படி நிறம் மாறாக் கிராமங்கள் இருந்தால், அது அந்தக் கிராமத்தார் செய்த தவப்பயனாகத் தான் இருக்க முடியும்.

    இப்படிக்கு
    பட்டிக்காட்டான்



    இது எவருடைய ஊர் என்று கண்டுபிடிச்சுட்டீங்களா?

    கமல் & ராஜ்ய சபா

    மாவீரர் மருதநாயகம்முகமது யூசுப்கான் - கே.வி.குணசேகரன்
    மாவீரர் மருதநாயகத்தின் வரலாறு தெளிவான முறையில் சொல்லப் பட்டிருக்கிறது. நூல் முழுவதும் துறுதுறு நடையில், வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கிச் சொல்கிறார் கே.வி.குண சேகரன். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய வீரத்தால் குறுநில மன்னர் அளவுக்கு உயர்ந்தவர் மாவீரர் மருதநாயகம். அவரது வரலாறும், அவர் வாழ்ந்து மறைந்த இடங்களின் புகைப்படங் களும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக் கிறது. நல்ல ஆவணம்!

    பசும்பொன் பதிப்பகம், 9-கி, சித்தார்த்தா அபார்ட்மெண்ட்ஸ், 203, அபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை|600017. விலை: ரூ.60.



    கழுகு விகடன்: "அரசியல்ரீதியான தாக்குதலில் இருந்து ஜெயேந்திரரை அதே அரசியல்தான் காப்பாற்ற முடியும். எனவே, அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்குவதுதான் நல்லது. தேவைப்பட்டால், பி.ஜே.பி.யிலோ அல்லது வேறு சங்பரிவார் அமைப்பிலோ ஜெயேந்திரருக்கு முக்கிய பதவி ஒன்றையும்கொடுத்து, தேசிய அளவில் அரசியல் அந்தஸ்து கொடுப்போம்..." என்று வாஜ்பாயிடம் சொல்லியிருக்கிறாராம் சுரேந்தர் குல்கர்னி.

    எது எப்படியோ ஜெயேந்திரரின் தமிழக ஆதரவாளர்கள் மத்தியில் பரவிவிட, "இந்தளவுக்கு ஆனபிறகு பெரியவாள் அரசியலுக்கு வர்றதும் நல்லதுதான். தென்னிந்தியாவிலிருந்து விஸ்வரூபம் எடுக்கும் ஒரு சாது, இந்திய தேசத்துக்குத் தலைவராக வந்து இந்தியாவை வல்லரசாக ஆக்குவார் என்று தீர்க்கதரிசி நாஸ்டர் டாமஸ் சொல்லியிருக்கிறார். அது பலிக்கத் தான் போகிறது!" என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.


    நிலமெல்லாம் ரத்தம் 2,3,4

    பா. ராகவன்
    ரிப்பேர்ட்டர் தொடரில் இருந்து சில பகுதிகள்

    இரண்டு

    ஆபிரஹாம் பெரியவருக்கு தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.

    "இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது" என்று ஒரு குரல் கேட்டது.

    தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.

    அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார். அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல். சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக்.

    ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)

    ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான ‘தோரா' சொல்கிறது.

    யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ரேல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.



    மூன்று
    சிரியா அப்போது ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அடைக்கலம் கோரி வந்தவரை அரவணைத்து, சிரியாவின் ஒரு சிறு மாகாணத்துக்கு அவரை கவர்னராக நியமித்து கௌரவித்துவிட்டார்கள். அவருக்கு ஒரு கனவு இருந்தது. எப்படியாவது ஜுதேயாவின் (இஸ்ரேலின் அன்றைய பெயர்) மன்னனாக தான் ஆகிவிடவேண்டும். அதற்கு முதலில் ஹாஸ்மோனியர்களின் ஆட்சியை ஒழிக்கவேண்டும். அதற்கு ரோமானியர்களின் உதவி வேண்டும். தளபதி மனம் வைத்தால் காரியம் நடக்கும்.

    ஒரு சரியான சர்வாதிகாரியின் மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. நினைத்ததைச் செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தார். பொறுமையாக, தருணத்துக்குக் காத்திருந்து மார்க் ஆண்டனியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். நண்பர் என்று ஆகிவிட்டபடியால் அவரும் கவர்னரின் விருப்பத்துக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார். கி.மு. 37_ம் ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்த முப்பத்து மூன்று வருடங்கள், தன் மரணம் வரை ஜுதேயா எனப்பட்ட இஸ்ரேலை ஆண்ட அவரது பெயர் ஹெரோத்.

    சகிக்கமுடியாத ஆட்சி என்று வருணிக்கப்பட்டாலும் ஹெரோத் ஒரு தீவிர யூதர் என்பதால், தாம் பதவிக்கு வந்ததுமுதல் யூதர்களுக்கான பாதுகாப்பு என்கிற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவந்தார். அவர் செய்தவற்றுள் உருப்படியான பணி என்றால், பாலைவனமாக இருந்த அன்றைய இஸ்ரேலில், நிலமற்ற அத்தனைபேருக்கும் ஒரு துண்டு நிலமாவது கிடைக்கும்படிச் செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அது ஓர் அற்புதம்தான்.

    கிருஷ்ணன் பிறந்தபோது, அவனைக் கொல்லுவதற்கு கம்சன் மேற்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் ஹிந்துமதக் கதைகள் விவரிக்கின்றனவோ, அதற்குச் சற்றும் சளைக்காத கதைகள் இயேசுவின் பிறப்பு தொடர்பாகவும் உண்டு.

    அங்கே கம்சனின் பெயர் ஹெரோத். இரண்டாவது கோயிலைக் கட்டிய அதே யூதமன்னன் ஹெரோத்.


    நான்கு
    யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான்.

    இயேசுவைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்' (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும்.) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு. ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு. இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.

    டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது' என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் குறிப்பிட்டதில்லை.

    அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார். வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் ‘இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.

    இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.

    சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.

    புதன், டிசம்பர் 01, 2004

    யாஹூ பொம்மைகள்

    அரட்டை பெட்டியில் போட்டு விளையாட....

    (*) - ரஜினி காந்த்

    (~~) - கிரண்

    :-@ - பட்டக்கத்தி சிவாஜி

    :(|) - சிம்பு

    *-:) - ஜொலிக்குது... ஜொலி ஜொலிக்குது... ஸ்னேஹா

    @};- : குஷ்பூ

    :-" - விசில் மன்னன் எம்.பி.பி.எஸ்

    >:D< - மும்தாஜ்

    $-) - பொன் மகள்

    3:-O - அம்மா... ஜெ.ஜெ.

    %%- - பச்சை ராசி

    ~o) - இராயர் க்ளப்

    ~:> - கூவுது

    **== - பறக்குது

    >-) - ஈராக்கில் அமெரிக்கப் படை

    =:) - அமெரிக்காவில் H-1 மாந்தர்

    :-$ - என்ன சத்தம் இந்த நேரம்

    [-X - வெட்கப் படுகிறேன்... வேதனைப் படுகிறேன்

    8-X - கனாக் காணும் காலங்கள்

    b-( - கனா நிறைவேற்றிய காலங்கள்

    :@) - கவுண்டமணிக்கு செந்தில்

    [-o< - மதுர காப்பாத்து... திருவண்ணாமலையேத்து!

    :)>- - போடுங்கம்மா ஓட்டு

    ^:)^ ^:)^ ^:)^ - சங்கர மடம் பக்கம் சென்றால்

    (புத்தமுபுது யாஹு தூதுவன் உபயோகிக்கவும்!)

    மாரோ மாரோ

    தேர்தல் சுறுசுறுப்பின்போதுதான் அந்த வார்த்தையை கேட்டேன். 'ஸ்டெம் செல்' (Stem Cell). சென்ற வார நியு யார்க் கோவிலில் மீண்டும் அந்த வார்த்தையில் தடுக்கி விழுந்தேன்.

    எதற்கு ஆராய்கிறார்கள், என்ன நன்மை என்று ஒரு இழவும் விளங்காமல், கெர்ரி 'எனக்கு அந்த ஆராய்ச்சி பிடிக்கும்' என்றும், அந்தப் பக்கம் புஷ், 'உம்மாச்சி கண்ணை குத்திடும்' என்றும் ஆழமாக விவாதித்தார்கள்.

    ஸ்டெம் செல் என்றால் 'விளையும் அணு'. வெற்று வீடு போல் வாடகைக்கு ரெடியாக இருக்கும் மனை. நரம்பணு, கிட்னி அணு, என்று ரகம் ரகமாக பச்சோந்தித்தனம் செய்யவல்லது. இதய அணுவாக மாற்றிவிட்டால் டிக் சேனிக்கும் இன்ன பிற இதய நோய் உள்ளவர்களுக்கும் அணுக்களை நட்டுப் பயிரிட்டு விடலாம். இதய அணுவாக மாற்றுவதற்கு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    சர்க்கரை வியாதி முதல் கேன்சர் வரை தீர்வு காண ஸ்டெம் செல்கள் பயன்படும். ரத்த தானம் கொடுப்பது போல் ஸ்டெம் செல் தானம் தர முடியாது. ஆராய்ச்சிக்காக பணம் கொடுப்பதா அல்லது உயிரை காப்பதற்காக மட்டுமே ஆராய்வதா என்பதில்தான் (முன்னாள்) ஜனாதிபதி வேட்பாளர்களிடையே கருத்து வேறுபாடு.

    2001-இல் புஷ் 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சியை சட்டமாக்கும் வரை அமெரிக்க அரசு இதற்கு நிதி வழங்கவில்லை. அதன்பிறகு கொஞ்சமே கொஞ்சம்தான் என்றாலும் ஆராய்ச்சியாளர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஸ்டெம் செல் கிடைக்கும் விதங்களில் மாற்றம் எதுவுமே இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல், கருவிலே தவறிப்போன சிசுக்களில் போன்ற அரிதான இடங்களின் மூலமே ஸ்டெம் செல்கள் கிடைக்கிறது.

    TIME.com-இன் 2001-இல் வெளிவந்த கவர் ஸ்டோரியும் படிக்கலாம்.

    நியு யார்க் ·ப்ளஷிங் கோவிலில்தான் அந்த அருமையான வாய்ப்பு கிடைத்தது. சங்கர மடம் செல்லும்போது கூப்பிட்டு சாப்பாடு போடுவார்கள். (இப்ப இருள்நீக்கியோ, நீக்காமலோ -- ஜெ.எஸ்.எஸ். ஹாட் டாபிக் அல்லவா ;-) ·ப்ளஷிங் கோயிலில் அன்போடு 'போன் மாரோ' (Bone Marrow)-விற்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    நோயாளிக்கான போன் மாரோவும் நமதும் பொருந்தினால் ஸ்டெம் செல் வழியாகவும் தானம் கொடுக்கலாம் என்றவுடன் 'அத்தரிபாச்சா கொழுக்கட்டை' போல் கெர்ரி வந்து போனார்.

    இருபதாயிரத்தில் இருவருக்குத்தான் ஒரே விதமான 'மாரோ' இருக்கும் சாத்தியங்கள் இருக்கிறது. நல்ல வேளை. ரத்த தானமாவது ஏழைந்து வகைக்குள் அடக்கி, எளிதில் கொடுக்கல்-வழங்கல் நடக்குமாறு கடவுள் அமைத்திருக்கிறார்!

    இரண்டு விதமாக 'மாரோ' தானம் கொடுக்கலாம்.

    முதல் வழி ரொம்ப காலமாக செய்யப்பட்டு வருகிறது. இடுப்பில் மேல் பகுதியில் நம் உடம்பில் விளையாடும் மூன்று சதவீதம் மாரோக்களை இறக்கிக் கொள்கிறார்கள். இரண்டு நாளைக்குப் பிள்ளை பெற்றவள் போல இடுப்பு வலிக்கலாம். ஆனால், பத்து நாளைக்குள் விட்ட மாரோக்களைத் திரும்பவும் சுரந்து விடுவோம்.

    இரண்டாம் வழியில் பல்பு போட்டு பார்த்து எடுக்கிறார்கள். மாரோ தானம் கொடுப்பதற்கு நானகைந்து நாட்களுக்கு முன் ஊசி போடுகிறார்கள். அந்த மருந்து ஸ்டெம் செல்களை மட்டும் ஒளிரச் செய்கிறது. ஒரு கையில் எடுக்கும் ரத்தத்தில் இருந்து மாரோக்களை மட்டும் கீழிறக்கிக் கொண்டு, இன்னொரு கை வழியாக ஸ்டெம் செல் இல்லாத நமது ரத்தத்தை நமக்கே 'வைச்சுக்கோப்பா' என்று கொடுத்து விடுகிறார்கள். துளி வலி கூட கிடையாது.

    நாம் தானம் கொடுக்கும் 'போன் மாரோ' ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே குணப்படுத்துகிறது. முதல் காரியமாக 'போன் மாரோ' கொடுக்க சம்மதம் என்று ஒரு வரி சொல்லி, எழுதிப் போட்டு, மின்னஞ்சல் செய்து, தொலைபேசி, ரத்தப் பரிசோதனைக்கு ஆவன ஏற்பாடு செய்து விடுங்கள்.

    How To Help: எப்படி உதவுவது என்று சிறு குறிப்பு.
    How to Arrange Drives: தெற்காசியர்களிடையே விழிப்புணர்வையும் மாரோ வங்கியையும் அதிகரிப்பது எவ்வாறு என்று சொல்லும் பதிவு.



    குட்டிக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், Blind faith is dangerous என்று சொல்லும் இந்தக் கதை - இன்று என்னுடைய உள்ளம் கவர்ந்த வலைப்பதிவு:-)

    சில பதில்கள் - ஆனந்த் சங்கரன்

    1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.

    வலை அனுபவம்னா அது 94ல இருந்து. அது ரொம்பப் பழைய கதை. தமிழ் வலை அனுபவம்னா அது 2001 ல இருந்து.

    தினகரன்,விகடன், குமுதம் முதலில் பார்த்த வலைதளங்கள். அப்புறம் திண்ணை, கிளப். அப்புறம் மரத்தடி, தமிழோவியம், பதிவுகள்,திசைகள்.

    இவ்வளவு இணையத்தளம் / குழுக்கள் படிச்சாலும் என்னமோ எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு. விகடன் / குமுதம் ஒரே மாதிரி.
    பதிவுகள்,திசைகள்,தமிழோவியம் எல்லாம் ஒரே மாதிரி. திண்ணை கொஞ்சம் வித்தியாசம்; எப்படினா அதிகமா அடிதடி இருகறதால.


    2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

    விரும்பி படிக்கற ப்ளாக்கள் வந்து,

    பாரா - கொஞ்சம் நக்கல், மற்றும் நிறைய விஷயங்களை பற்றி அலசுவதால்.

    அருண் - எழுதுற விஷயத்தில் பின்வாங்காமல் இருந்தல். தெளிவான சிந்தனை. கார்ட்டூன்ல படத்தை விட மேட்டர் நல்லா இருக்கும்.

    மூக்கு சுந்தர் - இதுதான்னு சொல்ல தெரியலை; இவரோட ஸ்டைல் நமக்கு தோதா இருக்கும்.

    வெங்கடேஷ் - ஆழமா யோசிச்சு எழுதுவாரு.

    ரூமி - இவரோடது மொதல்ல பின்னூட்டம் எவ்வளவு பார்ப்பேன். அது பத்துக்கு மேல போச்சுனா வில்லங்கமா எழுதியிருக்காருன்னு அர்த்தம். பாவம் ரூமி பேரு இருக்கறதாலேயே நிறைய பேரு கலாய்க்கறாங்க.

    வெங்கட் - இவரு மைக்ரோசாப்ட் திட்டி எழுதுவாரு பாருங்க; அதுக்காகவே இவரோடதை படிப்பேன்.

    மீனாக்ஸ் - இவரோட மார்கெட்டிங் மேட்டர் சூப்பர்.

    சந்திரவதனா (மகளிர்) - நிறைய விஷயங்கள் சர்வ சாதாரணமா எழுதற ஸ்டைல்.

    அப்புறம் தமிழ்மணம் சூடான பகுதியில வர்ற அயிட்டங்கள்.


    3. விரும்பிப் படித்த பதிவுகள் ?

    பரபரப்பா இருக்குற மேட்டர் எல்லாமே நேயர் விருப்பம்தானே.

    4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?

    பாரா - கொஞ்ச நாளா எழுதறது இல்லே

    பி பி - அப்போ அப்போ தான் எழுதுவாரு

    பி.கே.எஸ் - இவரு மேட்டர் ரொம்ப நீளம் அதனால சமயத்துல அப்புறம்ன்னு விட்டுவேன். அது அவ்ளோதான்.

    வந்தியதேவன், சுந்தரவடிவேல் - இவங்க ப்ளாக் முன்னாடி படிச்சேன், நடுவுல ரொம்ப அடிதடி நடந்து கன்னா பின்னா எழுதினதுல
    ஆர்வம் போயிடுச்சு.

    5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?

    எனக்கு வலைப்பதிவா ? அப்புறம் எவனாவது நம்மளை இந்த மாதிரி போட்டு தாக்கவா. ஏதோ வேலைக்கு போனோமா, அரட்டை அடிச்சோமா, வலைப்பதிவுகள் படிச்சோமா இருக்கனும் :)

    6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?

    பாரா சொல்லி என்ன ஆச்சு பார்த்தீங்களா. கேள்வினா அதுல எடக்கு மடக்கா ஒண்ணு கேட்கனமுன்னு என்ன சட்டம் ?

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு