சனி, டிசம்பர் 11, 2004

ஓசியன்ஸ் ட்வெல்வ்

கமல், சத்யராஜ், அஜீத், பாக்யராஜ், லிவிங்ஸ்டன், முரளி, பாண்டியராஜன் என்று பத்து ஹீரோ; ஸ்னேஹா ஹீரோயின். சில வருடம் முன்னாடி இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு, எல்லாருக்குமே சம அளவு உரிய மரியாதையும் காட்சிகளும் கொடுத்து ரசிக்கத்தக்க படமாக இருந்தது 'ஓசியன்ஸ் லெவன்'.

அதே பத்து நாயகர்கள். கூட சிம்ரன் போல இன்னும் ஒரு ஹீரோயின். இந்த 'ஓசியன்ஸ் ட்வெல்வ்' எடுத்து முடிக்க இயக்குநர் திணறியிருக்கிறார்.

அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்றது பிரச்சினையாக இருந்திருக்கலாம். புத்திசாலித்தனமான திருட்டு வித்தைகள், புரியும்படியான வழிமுறைகள், லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரசியமான திருப்பங்கள் கிடையாது. ஆசுவாசப்படுத்தக் கூட நேரம் இல்லாமல் நுனிப்புல் ஓட்டத்தில் கதை, சப்பைக்கட்டு வாதங்கள் என்று படமெங்கும் ஓட்டைகள்.

போன முறை "ஓசியன்ஸ் லெவனில்" நூற்றைம்பது கோடிக்கு ஏமாற்றப்பட்டார் சூதாட்ட விடுதி தலைவர். அந்தப் பணம் காப்புரிமை மூலமாக அவருக்கு கிடைத்துவிட்டது. இருந்தாலும் திருடிய பதினோரு பேர்களையும் அடையாளம் கண்டுகொள்கிறார். அவர்களுக்கு இரு வாரம் கெடு கொடுக்கப்படுகிறது. திருடிய பணத்தையும் அதற்கான கந்துவட்டியுடன் எண்ணி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்; ஜெயில்; சிறை!

அட்டகாசமான ஆரம்பம். செட்டப்பை மாத்தி கெட்டப்பை மாத்தி போல், பத்து + நாயகியின் அமைதியான வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுத்து மிரட்டிச் செல்கிறார் வில்லன் - சூதாட்ட விடுதி தலைவர்.

அதன்பிறகு ஆரம்பிக்கும் சறுக்கல்கள், நிற்காமல் கடுப்பேத்துகிறது. போன முறை தெளிக்கப்பட்ட நகைச்சுவை, இந்த முறை சுழிக்க மட்டுமே வைக்கிறது. சின்னப்பையன் மாட் டேமனை அழைத்துச் சென்று சதாய்க்கும் காட்சி மட்டும் புன்முறுவலில் தேவலாம்.

காதரீன் ஜீடா ஜோன்ஸ் அநியாயத்துக்கு வேஸ்ட் செய்யப் பட்டிருக்கிறார். ஜூலியா ராபர்ஸ் பாத்திரம் அவரையும் கா. ஜீ. ஜோன்சையும் மிஞ்சும் அளவு மோசமாக்கப் பட்டிருக்கிறது. இரு அருமையான நடிகைகள். இரு அவசரக்கோலங்கள்.

படத்தின் இறுதி கட்டத்தில் மிஸ்டர். பாரத் ஸ்டைல் சவடால்கள் 'அட' என்று கொஞ்சம் ஆறுதல். ஆனால், குழப்பாச்சு, குப்பாச்சு மாதிரி தொடரும் விளக்கங்கள்... 'ஆஆஆஆஆவ்வ்வ்வ்'.

வீடியோவில் வேண்டுமானால் பார்க்கலாம். நிறைய 'டெலீடட் சீன்ஸ்' கொடுத்திருப்பார்கள். அதன்மூலமாவது வாடகை டாலர்களுக்கு ஏற்ற திருப்தி கிடைக்கும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு