சனி, டிசம்பர் 11, 2004

தி போலார் எக்ஸ்பிரஸ்

'நம்பினார் கெடுவதில்லை; நான்குமலை தீர்ப்பு' என்பதுதான் அடிநாதம். சாண்டா க்ளாஸ் இருக்கிறார் என்று நம்புவது சிறிய பருவம். இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படுவது இன்னொரு பருவம். நம்பியவர் கண்ணில் நிச்சயம் தெரிவார் என்பதை கிறிஸ்துமஸ் பூர்வமாக சொல்கிறார்கள்.

விதவித வேடங்களில் டாம் ஹாங்க்ஸ். ஆனால், அவர்தான் என்று தெரியாதபடி புதுவித கணினி வித்தை. நடிகர்களின் முகங்களுக்கு ஏற்ப அனிமேஷன் முகங்கள் தயார் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைப் போலவும்; கணினியில் வரையப்பட்ட நிறைய குணநலன்களையும் கொண்டு, கலந்து கட்டி செய்யப்பட்ட தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பே, அனைத்து நடிகர்களும் நீலத் திரைக்கு முன் நடித்து ஒளிப்பதிந்து கொள்கிறார்கள். அதை கணினியில் ஏற்றி, ஏற்கனவே செய்த முகங்களுடன் மிக்ஸ் செய்து, நிஜப் படம் தயாராகி இருக்கிறது.

பெரும் பொருட் செலவில் உருவான படம். அவ்வளவு எல்லாம் மெனக்கிட்டிருக்க தேவையே இல்லை. (கணினி வித்தை காட்டாமல் திரைக்கதை நம்பியதற்கு சமீபத்திய உதாரணம்: தி இன்கிரெடிபிள்ஸ்)

3-டி திரைகளிலும் வெளிவந்திருக்கிறது. அதற்காகவே என்னவோ, மான்கள் கொம்புகளை நீட்டுகின்றன. ஓடும் ரயிலின் மேலே நடக்கிறார்கள். கன்வேயர் பெல்ட்களில் உருண்டு பிரளுகிறார்கள். 'ஹாட் ப்ரட்ஸ்' உணவுகள் வாய்க்கு அருகே நீட்டப்படுகின்றன. பனிகளில் வண்டி சறுக்குகிறது. 'டோரா டோரா' போன்ற ரோலர்-கோஸ்டர்களின் மேலே செல்லுகிறார்கள்

படம் பெரியவர்களின் பொறுமையை சோதிக்கும் 'மெட்ராஸ் பாஸெஞ்சர்' வேகத்தில் நகர்கிறது. கடவுள் கற்பனையே என்றாலும் நம்பிக்கையால் அன்றாட நிகழ்வுகளிலும் கண்டு கொள்ளலாம் என்பதை சாண்டாவின் பின்புலத்தில் அருமையாக சொல்கிறது.

த்ரீ-டியில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த காசுக்கு ROI வரலாம்.

1 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு