சனி, டிசம்பர் 11, 2004

நேஷனல் ட்ரெஷர்

நம்ப முடியாததை நம்ப வைப்பது திரைப்படங்கள். அமெரிக்காவின் ஆளுமைக்குப் பிண்ணனியில் சாணக்கியத்தனங்கள் இருந்தாலும், பில்லியனாதி பில்லியன்கள் எங்காவது ஒளிந்திருக்கும் என்று யாராவது சொன்னால், கீழ்பாக்கம் கேஸ் என்று எண்ணுவோம்.

இந்தப் படம் பார்த்தபிறகு, அவரிடம் 'எனக்கு அது எங்கே இருக்கு என்று தெரிய வேண்டும்' என்று சிரத்தையாக கேட்போம்.

'நிக்கோலஸ் கேஜி'ற்கு பால்ய பருவத்தில் இருந்து பாட்டி சொன்ன கதையாக 'நேஷனல் ட்ரெஷர்' வேறூட்டப்படுகிறது. அமெரிக்காவின் மூதாதையர்கள் (முரண்தொடை?!) நாட்டின் அவசரத் தேவைக்காக கோடானுகோடி சொத்தை எங்கோ புதைத்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஒற்றை வரி க்ளு மட்டுமே இருக்கிறது.

இந்தப் புதையலை கண்டுபிடிப்பதற்காக ஹீரோவின் குடும்பம் லாபம் விரும்பா அமைப்பொன்றை நடத்தி வருகிறது. கடகடவென்று நகரும் டைட்டிலின் இறுதியில் பெரியவனாகும் ஹீரோ, முக்கிய துப்பான கப்பலை கண்டுபிடிக்கிறார். கப்பலுக்குள் புதையல் இருந்ததா என்பதில் ஆரம்பிக்கும் சண்டை, ஹீரோவை அனாதரவாக விட்டு வில்லன் கோஷ்டியை உண்டு செய்கிறது.

தொடர்ந்து அதிபயங்கர பாதுகாப்பில் இருக்கும் சுதந்திர தின சாசனத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.

ஹீரோயின் ஒட்டிக் கொள்கிறார். நக்கலடிக்கும் விவேக் போன்ற கதாநாயகத் தோழன் என்று ஹீரோவின் மூவர் அணி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த வில்லன் கூட்டணி. இவர்கள் இருவரையும் வேட்டையாடும் எஃப்.பி.ஐ.

விஷமம் செய்யும் குழந்தையைத் தடுக்க ஓடும் பெற்றோரின் வேகத்தில் திரைக்கதை பறக்கிறது. ஆனாலும் ஒன்ற வைக்கிறது.

புத்திசாலியான ஹீரோயின் முரண்டு பிடிக்கிறார். கிண்டல் அடிக்கிறார். சாகசங்கள் புரிகிறார். படம் முழுக்க அதிக ஆடைகள் மாற்றி ஜொலிக்காமல் வந்தாலும், அழகாக மனதில் இடம் பிடிக்கிறார்.

ஹீரோவின் தோழராக வருபவரின் நச் காமெண்ட்கள் சீரியஸான படத்தின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ப்ராக்டிகலாக யோசித்து, கற்பனைகளில் உலாவும் அபாயத்தை பார்வையாளனைப் போல் சொல்வதால் ரொம்பவே பிடித்துப் போகிறது.

தேவைக்கேற்ப பிருமாண்டம், சாதாரண நடுத்தர வர்க்கம் போன்ற ஹீரோ, அற்புதங்கள் எல்லாம் நிகழ்த்தாமல் ஆங்காங்கே சூழ்நிலைக்கேற்ப அச்சப்படும் நாயகன் என்று வெகுவாக நம்பவைக்கும் படம். அவ்வப்போது லாஜிக் சறுக்கல்கள் இருந்தாலும் மன்னிக்கலாம்.

சைக்கிள் ரிக்ஷா, நடராஜர், தட்டுமுட்டு சாமான், செப்பு பித்தளை பாத்திரம், பிரமிடு தலைகள் என்று குறைவான செலவில் தயாரான காட்சி ஏமாற்றம். கப்பல் காட்டுகிறேன் என்று பனி சூழ்ந்த நிலத்துக்கு சென்று, சிறிய படகை காண்பித்து நம்மை ஒத்துக் கொள்ள சொல்வது கூட பட்ஜெட் தட்டுப்பாடுதான் காரணமாக இருக்கலாம். தவணை அட்டை விடுவது, அப்பா வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்வது, மற்றவர்கள் வியர்க்க, ஹீரோயின் விறுவிறுக்காதது என்று மைக்ரோஸ்காப் கொண்டு அலசலாம்.

ஆனால், கொடுத்த காசுக்கு இரண்டரை மணி நேரம் சுவையான, அதிகம் மூளையைப் பிராண்ட வைக்காத அடிதடி மசாலா.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு