சனி, டிசம்பர் 04, 2004

வளைவு - பிரமிள்

ஒப்புமைத்
தத்துவப் பின்னலை
ஓயாத வலையாக்கும்
காலவெளி நியதி
தன் வலையில் தானே
சிக்கித் தவிக்கிறது.
அண்டத்தின் அநந்த
சூரியன்களுள்
மிகைப்பட்ட ஈர்ப்பு.
அங்கே
வெளி ஒன்றை
இன்னொரு வெளி ஊடுருவும்
பிறழ்ச்சி பிறக்கிறது.

காலவெளிப் பரப்பில்
ஜடத்தினுள் ஜடம்சிக்கி
எங்கோ ஒரு
ஈர்ப்பு வலை முடிச்சில்
அதீத ஜடத்திணிப்பு
பிரபஞ்ச நியதியில்
பிறக்கிறது புரட்சி.

ஒரு ஒளிப் புள்ளி நோக்கி
சரிகிறது அண்டம்.
வளைகிறது
வெற்றுப் பெருவெளி
உள் நோக்கி விழும்
உலகங்களை விழுங்கி
ஒளிரும் ஜடப் பிழம்பு
எல்லையிலே
ஈர்ப்பின் கதி மாறி
தன் ஒளியைத் தானே
கபளீகரிக்கிறது.
வெளி வளைந்து குவிந்து
பிறக்கிறது
வெளியினுள் ஒரு
பேரிருள் பிலம் -
இன்னொரு பரிமாணம்

அங்கே உயிர்க்கின்ற
உலகங்களில்
உலவுகின்றன -
இருள் மின்னல்கள்.

வெளியான இதழ்: மீள் சிறகு 1

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு