திங்கள், பிப்ரவரி 07, 2005

தமிழ் - ஹிந்தி - தெலுங்கு

சுஜாதா: "ஒரு தெலுங்குப் படத்துக்கான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பதுடன், இந்திப் படம் போல ரிச்-சாக எடுத்திருக்கிறார் பிரபுதேவா!"


வழக்கம் போல் போகிற போக்கில் 'அசால்ட்'டாக சொல்லியிருக்கிறார். அவரை 'மென்டல்' என்றாலும் 'டென்ஷன்' ஆகாமல் கவனிக்கவேண்டிய பதிவு. தெலுங்குப் படங்கள் கூட பேரை 'ரிப்பேர்' ஆக்காமல் காப்பாற்றுகிறது என்பது 'ஃபீலிங்' ஆகவேண்டிய சமாசாரம்.

சமீபத்தில் இரண்டு ஆக்ஷன் மசாலாக்களைப் பார்த்தேன். முதலில் 'சத்ரபதி'. இரண்டாவது ஹிந்தி 'முஸாஃபிர்'.

தமிழோவியம் எல்லாம் போதிய அளவு எச்சரித்தாலும் பார்த்த படம். 'இது ஒரு மனிதனின் கதை'யில் வந்த காட்சி நினைவுக்கு வந்து போனது. தியாகு (தானே?) கிட்டத்தட்ட பூரணமாக தேறியபின் "நீங்கள் இனிமே மதுவே அருந்தக் கூடாது... எனினும், ஒரு 'பெக்' அடிக்கறீங்களா?" என்று டாக்டர் ஆசை காட்டுவார். நோயாளி ஹீரோவும் "சரி' என்பார்.

உடனே, ஐ.சி.யூவிற்குத் தேவையான ஐ.வி. திரவங்கள், ஈ.சி.ஜி. என்று லாகிரி அயிட்டங்கள் அறைக்குள் வந்து சேரும். தியாகுவும் ட்ரின்க்ஸ் (அப்பாடா.... சுஜாதா உபயோகித்த இன்னொரு வார்த்தையும் கொண்டு வந்தாச்சு ;-)) எடுக்க.... நிலைமை படு மோசமாகும்.

இவ்வாறு தலைவலி, திருகுவலி சித்திரவதைக்கப் போகும் படத்தைப் பார்த்தவுடன் antidote வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு 'முஸாஃபிர்' அமைந்தது.

'நம்ம ஊர் படம்தானே.... இப்படித்தானே போகும்' என்னும் முன்னெச்சரிக்கையுடன் கையில் இந்தியா டுடேவை வைத்துக் கொண்டு ஓட விட்டேன். ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காமிரா கோணங்கள் புத்தகத்தை மூட வைத்தது. சஞ்சய் தத்தின் சத்யராஜ் போன்ற நக்கல்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தையை ஏற்படுத்தியது.

Musafir படத்தின் கதை எல்லாம் சொல்லி உங்களின் அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஃப்ளாஷ்பேக் சொல்லும் வித்தையில் வெறுமனே 'கறுப்பு-வெள்ளை'/கலர் என்று எல்லாம் வித்தியாசம் காட்டுகிறேன் என்று பந்தா இல்லை. இரண்டு பேரின் பார்வையை இத்தாலிய படம் போல் காட்டுகிறேன் என்று எல்லாம் சிரமப்படாமல் மினுக்கிறார்கள்.

ஹீரோயிஸத்தைக் கூட அதற்குத் தேவையான கிண்டலுடன் காட்டுகிறார்கள். பாடல்கள் எல்லாம் இடையூறாக இருந்தாலும், படத்துடன் பொருந்திப் போக வெகுவாக சிரத்தையெடுத்திருக்கிறது. காட்சி மாற்றங்களில் பார்வையாளனின் புத்திசாலித்தனத்தை சோதிக்காமல் நகர்த்தல். உரையாடல்களில் வளவளா இல்லாத கூர்மை.

கிழட்டு கோவாகாரராக முன்னாள் விமர்சகர் -- இன்னாள் இயக்குநர் மஹேஷ் மஞ்சரேகர். தீர்க்கமாக கொள்ளையடிக்கும் உள்ளூர் போலீஸாக ஆதித்யா பன்சோலி. பாவம் வரவைக்கும் வில்லனாக அனில் கபூர். அப்புறம் அப்பிராணி போல் இருக்கும் பெயர் நினைவில் இல்லாத இரண்டு அரைகுறை நாயகிகள்.

தமிழ்ப் படங்களுக்கும் ஹிந்திப் படங்களுக்கும் வித்தியாசம் நிறைய என்பதை உணர முடிகிறது. ஹீரோ எப்பொழுதுமே ஜெயிப்பதில்லை. கதாபாத்திரத்துக்கு நாற்பது வயதானால் அதற்கேற்ற தோற்றம் உள்ளவர்தான் கதாநாயகர். இமேஜுக்காக பதினெட்டாக்கிக் கொள்வதில்லை. நூறு சதவீதம் கெட்டவன் என்று யாருமே இல்லை. வில்லன் உட்பட அனைவரும் தேவைக்கேற்ப அவ்வப்போது காமெடி உதிர்க்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாயகிகளுக்கு ஹிந்தியில் ஃபேஷன் சென்ஸ் அதிகம். கச்சிதமாக வருகிறார்கள். எசகு பிசகாக ஆடுகிறார்கள். ஆங்கிலப் படங்களில் 'R' முத்திரைக்கு இணையாக பாலுறவு காட்சிகள் வருகிறது.

இதற்கும் மேலாக நவநாகரிக ஆண்களும் பெண்களும் அழகாக சுத்தமான ஹிந்தியில் பேசிக் கொள்கிறார்கள். தலைப்பையும் ஆங்கிலத்தில்தான் வைப்பேன் என்று வறட்டு ஜம்பம் எதுவும் செய்வதில்லை. ஆனால், தயாரிப்பில் ஹாலிவுட்டை சர்வசாதாரணமாக தொடுகிறார்கள்.

ஹிந்திக்கும் தமிழுக்கும் 'உருப்படியான' சினிமாவில் டயானாவுக்கும் சார்லஸுக்கும் உள்ள தூரம்! Probably so close... yet, verrrry farrrr!

3 கருத்துகள்:

இனிய பாலா,

முஸாஃபிரில் கோவாப் பெண்ணாக வருபவர் சமீரா ரெட்டி. இன்னொருவரின் பெயர் சரியாக நினைவில்லை.

அன்புடன்
ஆசாத்

Dear BALA,

Good comparison of Hindi movies with Tamil cinema. FYI, the other heroine is 'Koena Mitra'
I will have to definitely watch this movie as it has both Sameera and Koena :-))

enRenRum anbudan
BALA

ஆசாத், முஸாஃபிரை நீங்க பார்த்துட்டீங்களா? சமீரா அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

பாலா, எப்படி சார் எல்லா ஹீரோயின் பெயர்களையும் சொல்கிறீர்கள்? படம் பார்த்தபோதே, இருவரும் ஒருவரோ என்று நான் குழம்பிப் போகுமளவு ஒரே ஜாடை/ஆடைகள்/சித்தரிப்பு! கலக்கறீங்க சார்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு