MTV's 'Cribs'
பொழுது வேகமாகப் போய்க் கொண்டிருந்த பனி மாலைப்பொழுது. சன் டிவியில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததைப் பார்க்கப் பிடிக்காமல் கன்னல் திருகிக் கொண்டிருந்ததில் எம்.டிவியின் 'க்ரிப்ஸ்' கிடைத்தது. தொலைக்காட்சியின் கன்னல் பட்டியலில் அடுத்தடுத்து வரும் எம்.டிவியும் வி.எச்.1-உம் குழந்தைகளுடன் பார்த்தால், அவர்களிடமிருந்து நிறையக் கேள்விகளை வரவழைக்கும். வி.எச்.1-இன் 'தலை நூறு சூடான சீன்'கள் பார்க்க நினைத்தாலும், பார்ப்பதை அப்படியே கடைபிடிக்க விரும்பும் சிறுவயதுப் பார்வையாளரை வைத்திருப்பதால் முடியாது. பெரும்பாலும் 'ரியல் வோர்ல்ட்' போன்ற அறுவைகளைப் போடுவதால் எம்.டிவியும் ஓடிப் போக வைக்கும் கன்னல்.
ஆனால், எம்.டிவியில் கூடைப்பந்து நட்சத்திரம் ஷக்கீல் ஓநீலைப் பார்த்தவுடன் ரிமோட் ஓட்டுவதை நிறுத்தினேன். பிரபலங்களின் வீடுகளை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். அவர்களின் வரவேற்பறை, சாப்பாட்டு அறை, சமையல் உள் என்று ஆரம்பிக்கிறார்கள். படுக்கை அறையையும் விடுவதில்லை. பிரும்மாண்டம் பிரமிக்க வைத்தாலும், அவர்களின் 'க்ளோஸெட்' -- துணிமணி வைத்துக் கொள்ளும் அறைகள்தான் எங்களை மிரள வைத்தது. நான் இருக்கும் அபார்ட்மெண்ட் சைஸுக்கு நீள்கிறது.
பெண்களின் காலணி அறைகளுக்குள் பார்த்தால் 'பாட்டா' ஷோரூமுக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும். அமெரிக்க ஷூ கடைகளே நாணிக் கோணி வெட்கப்பட வைக்கும் அளவு அசத்தல் கலெக்ஷன்கள்.
வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி, திரையரங்கு என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துள்ளார்கள். தோட்டங்களில் செயற்கை மலைகள், அருவிகள், என்று தொடர்கிறார்கள். வீட்டை ரொம்ப ரசனையோடு தேக்குகளாலும், சலவைக் கல்லினாலும் கலைப் பொருட்களிலும் இழைத்திருக்கிறார்கள்.
Mariah Careyயின் தல தரிசனம் இன்னும் கிட்டாவிட்டாலும், புகைப்படங்களையாவது MTV Cribs அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.
ஒஸாமாவின் குகை வீடு என்று நக்கல் ஃப்ளாஷ் பதிப்பு பரவாயில்லையாக பின் லேடனை வாறுகிறது. GOYK.COM-இன் Ghetto MTV Cribs பார்ப்பது 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்கிறது.
'ப்ளேபாய்' மனையகத்தையும் அரகராப் போடும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். தசரதருக்கு மனைவிகளை எண்ணி விடலாம். ஹ்யூக் ஹெஃப்னர் (Hugh Heffner) காதலிகளை எண்ண ஐன்ஸ்டீனால் கூட முடியாது. 'காதலர் தின'த்தன்று பரிசு கொடுத்தே சொத்து கரைந்துவிடும் போலத் தோன்றுகிறது. இந்த மாதிரி ஜலபுலா ஜல்ஸ் வீடுகளைத் தொடர்ந்து ரஸ்ஸல் சிம்மன்ஸின் (Russell Simmons) தியானம்/யோகம் செய்ய, மனம் ஒருநிலைப்பட உள்ள அறைகளையும்; அவர்களிடம் உள்ள புத்தரில் ஆரம்பித்து கிருஷ்ணர் வரை உள்ள மினி கோவில்களையும் காட்டுவார்கள். திங்கட்கிழமைதோறும் இரவு பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.
அனேகரின் வசிப்பிடங்களில் வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம் (வெளியில் இருந்தால் படங்கள் சுட்டு விடுவார்களே!); சினிமாஸ்கோப் சைஸ் மீன்தொட்டிகள்; குறைந்தபட்சமாய் ஆறு கார்கள்; இளமைக்காலங்களை நினைவு கூற லாலிபாப் கொடுக்கும் மெஷின்கள்; என்று ஒரே மாதிரி இருப்பது -- சுதந்திரமாக என்னைப் போல் வெளியில் உலாவி அடைய முடியாததை, வீட்டுக்குள் அடைப்பட்டு சாதிக்கிறார்களோ என்னும் பச்சாதபத்தையும் கொடுத்தது.
இசைஞர்களின் வீடுகளில் அவர்கள் வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளையும், திரைப்பட வட்டுக்களையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பாத்ரூமில் கூட ஐம்பது இன்ச் டிவி வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த வரைக்கும் ஒருவரின் வீட்டில் கூட புத்தக அலமாரி இல்லாதது ஆச்சரியப்படவைக்கவில்லை.
ஆனால், எம்டிவி. பார்த்தால் சிறார்களிடமிருந்து விவகாரமான கேள்வி வரும் என்று சொன்னேன் அல்லவா... அன்றும் கேட்கப்பட்டேன்.
"நாம எப்ப இந்த மாதிரி வீடு வாங்கப் போறோம்?"
Official Site: MTV Cribs
நீங்க எப்ப இந்த மாதிரி வீடு வாங்கப் போறீங்க ? வாங்கியவுடன் தெரிவியுங்க?
SnackDragon சொன்னது… 2/08/2005 01:20:00 PM
என்னுடைய முதல் ஆங்கில நாவல் வெளிவந்தவுடன் வாங்கி விட வேண்டியதுதான்... அதற்கு முன்னாடி உங்க வீட்டுக்கு ஒரு விஸிட் கொடுத்து 'எப்படி கட்டுவது' என்று பார்த்தும் வைத்து கொள்ள வேண்டும் ;-)
Boston Bala சொன்னது… 2/08/2005 01:44:00 PM
சரி சரி ஒரு நல்ல builder-ஆ பாத்து சட்டுபுட்டுன்னு வேலைய முடிங்க. Greenspan வேற ஏத்திக்கிட்டே போறாரு.
(சின்னப்பசங்க கேள்விக்கு பதில்: நமக்கு அப்டி ஒரு 'தலைவலி' தேவையா?! :-) mortgage, insurance, 1008 bills, sub division fees, property tax etc. Furnishing...oops! )
ரொம்ப நாளா சொல்ல நெனச்சது:
The template looks bad. I mean real bad :-)
Some simple, yet effective template is always welcome.
பரி (Pari) சொன்னது… 2/08/2005 02:42:00 PM
pari... can U send me a sample/suggested template by email for blogger??? Thanks in adavance. bsubra yahoo dot com
Boston Bala சொன்னது… 2/08/2005 02:49:00 PM
கண்ணை மூடி கனவு கண்டுக்கிட்டே இருந்தா இப்படித்தான். :)) [மன்றம், என் ப்ளாக் எங்கேயுமே போகலையா] visit http://blogger-templates.com
SnackDragon சொன்னது… 2/09/2005 08:43:00 AM
இரண்டையுமே பார்த்திருந்தேன் கார்த்திக். ஆனால், நானே சென்று, ஒன்றைத் தேர்ந்தெடுக்க சோம்பேறித்தனமாக இருந்தது. அதுதான் உதவி கோரினேன்.
Boston Bala சொன்னது… 2/09/2005 09:59:00 AM
will write mail
SnackDragon சொன்னது… 2/09/2005 01:01:00 PM
கருத்துரையிடுக