நியு யார்க் டைம்ஸ்
ஆர்தர் மில்லரின் இரங்கல் ஆரம்பத்தில் 'காலையில் இறங்கி வந்து, பென்சிலை எடுத்துவைத்துக் கொண்டு, யோசிக்க முயல...' என்னும் மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார் பாப் ஹெர்பர்ட். சிந்தனாவதிகளின் இழப்பை எடுத்துச் சொல்லும் பதிவு.
அட... நாம கூட காலையில் இங்கு வந்தவுடன், ப்ளாகர் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு சிந்தனையை தட்டிவிடுகிறோமே என்று நினைத்தவுடன், நியு யார்க் டைம்ஸ் என்னும் அச்சு ஊடகம் தலையில் கொட்டியது. வலைப் பதிவர்களின் பேனா கத்தி வீச்சினால் பதவியிழந்த சி.என்.என். செய்தி மேலாளரை பின் தொடர்ந்து அலசியிருந்தார்கள். 'பொறுப்பு கிடையாதா!? மெய் அலசி உணராமல் தலைகளை வெட்டி வீழ்த்துபவர்களா!? சுதந்திரம் என்னும் பம்மாத்து காட்டித் திரியும் ஓநாய் கூட்டங்களா!?' என்று கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.
வலைப்பதிவில் மட்டுமல்ல... அனைத்து ஊடகங்களிலும் 'கதை விடுபவர்கள்' அதிகரித்துவிட்டார் என்கிறார் ஹாரி ஃப்ரான்க்ஃபர்ட். பரிசலில் வினோபா முன்பொருமுறை குறிப்பிட்டது போல் அத்தியாவசியமாக அலப்ப வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. மேம்போக்காக பேசிச் சொல்வது, ஆழமாக சிந்திக்க மறுப்பது, பொய்யர்களுக்கு இருக்கும் தர்க்க விவாத நெறிகளைக் கூட (இத்தகையவர்கள்) அலட்சியப் படுத்துவது என்று போட்டுத் தாக்குகிறார்.
ஈராக்கில் தேர்தல் முடிவுகளை அலசத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஷியா வாக்கு வங்கிகள் வெற்றி பெற்றதை முன்னிறுத்துகின்றன. வாக்குசாவடி பக்கமே எட்டிப் பார்க்காத சன்னி-களை ப்ளோ-அப் வேண்டாம். ஆறு பாயிண்ட் எழுத்துருவில் நுணுக்கி விடுகிறார்கள். யார் ஜெயித்தாலும் தொடர்வது அமெரிக்க ஆட்சிதான் என்பதும், பொருளாதாரத்தை சுய பரிபாலனம் செய்ய அனுமதிக்காததையும், பெரிதாக கண்டுகொள்ளாமல், 'எது சுதந்திரம்; எப்படி விடுதலை' என்று வார்த்தை ஆராய்ச்சி நடத்த இவர்களுக்கு நிறைய மேட்டர் கிடைக்கிறது.
நியு யார்க்கில்தான் தமிழ் வலைப்பதிவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். மனக்காட்சியில் தோன்றுபவர்களில் பிகேயெஸ், சீமாச்சு, அருண், தமிழோவியம் கணேஷ் சந்திரா என்று சிலர்தான் குதித்தார்கள். செண்ட்ரல் பார்க் பக்கம் யாராவது சென்றால் கேட்ஸ் குறித்த நேரடி வர்ணணை கிடைக்கலாம். க்ரிஸ்டோவும் ழான் க்ளாடும் 7,500 நுழைவாயில்களை அமைத்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய கலைப் படைப்புகளை பார்க்கும்போது வாய் பிளக்கிறேன்.
நுழைவுச் சீட்டு, ஆண்டுச் சந்தா என்றெல்லாம் காசு கறக்காமல், அரசிடமிருந்து நயாபைசா கை வைக்காமல், பொதுமக்களிடமிருந்தும் நன்கொடை வாங்காமல் இவ்வளவு பெரிய, ரம்மியமான ஆக்கங்களை செய்ய ரொம்பப் பெரிய மனசு வேண்டும். நம்ம ஊராக இருந்தால் மஞ்சக் கொடி, சொர்க்க வாசல், கல்கி அவதாரம் என்று நிறைய கற்பனையைத் தட்ட விட்டிருப்பார்கள்.
'திட்டிவாசல்' குறித்து டைம்ஸ் விரிவாக எழுதி வருகிறார்கள். வலைப்பதிவாளர்களும் வழக்கம்போல் பதிவொன்றைத் தொடங்கி விட்டார்கள்.
மேலும் தகவல்களுக்கு: The Gates
Good Info....Try visiting NY this long wknd to catch a glimpse of this Spectacular GATES..
சொன்னது… 2/16/2005 04:37:00 PM
கருத்துரையிடுக