புதன், மார்ச் 02, 2005

மெளன அஞ்சலி

ஆறாம்திணை : ஜெயபாஸ்கரன்

எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.

இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்

இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த முரணுமில்லை எனக்கு.

ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.

கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை

ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்,
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.

ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.

2 கருத்துகள்:

Bbaba, Can i get the details of the Author?

எனக்குத் தெரியாதே சார். ஆங்காங்கே பார்த்தது, கேள்விப்பட்டதோடு சரி...

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு