வியாழன், மார்ச் 24, 2005

ஊக்கமது கைவிடேல்

tamiloviam.com:

கிரிக்கெட்டில் முன்பு மனோஜ் பிரபாகர் குண்டு போட்டார். அதே போல் அமெரிக்காவில் பேஸ்பாலுக்கு ஹோஸெ கான்ஸெகோ (Jose Canseco) குண்டு போட்டிருக்கிறார். கபில் தேவில் ஆரம்பித்து பலரும் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை மோசமாக்கிக் கொண்டதாக பேட்டி கொடுத்தார் மனோஜ். ஸ்டெராய்ட்கள், உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள், அம்·பிடமின் போன்றவற்றை எடுத்துக் கொண்டதால்தான் சிறப்பாக சிலர் விளையாடுவதாக கான்ஸெகோ எழுதியிருக்கிறார். பேஸ்பாலில் சிக்ஸர் போன்ற 'ஹோம் ரன்' அடித்து நொறுக்குபவர்களில் பலரும் ஊக்க மருந்து உட்கொள்வதாக சொல்கிறார்.

இதன் தொடர்பாக அமெரிக்க காங்கிரசில் நேற்று விசாரணை. டெண்டுல்கர், கங்குலி, ஸ்ரீநாத், ஷெவாக் போன்ற பேஸ்பால் கதாநாயகர்களை அழைத்திருந்தார்கள். கான்ஸெகோவை கங்குலிக்கு ஈடாக சொல்லலாம். சிறப்பான திறமை, அணியை வெற்றிக்குக் கொண்டு செல்லும் பண்பு எல்லாம் இருக்கும். ஆனாலும், இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக கபில், டெண்டுல்கர், ஷெவாக் போன்றவர்களே தலைப்புச் செய்திகளாவார்கள். கங்குலியின் புகழை நீக்குவதற்கு டெண்டுல்கர் உதவுவது போல், கான்ஸெகோவின் புகழை அஸ்தமிப்பதற்கு மார்க் மெக்குவெய்ர் (Mark McGwire). இருவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாக விளையாடினார்கள்.

மார்க் மெக்குவெய்ர் டைம் பத்திரிகையில் 1998-ஆம் வருடத்தில் ஹீரோ என்று கொண்டாடப்பட்டவர். மூன்று மாமாங்கத்துக்கு மேலாக நிற்கும் ஹோம் ரன் சாதனைகளை முறியடித்தவர். ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் அட்டைப்படத்தில் ரோமானிய டோகா அணிந்து கௌரவிக்கப்பட்டவர். 'அண்ணாமலை' போன்ற புகழ்பெற்ற தொடரில் அமெரிக்காவின் ராதிகாவான ஹெலன் ஹண்ட்டை முத்தம் கொடுத்தவர். போப்பினுடன் அந்தரங்க சந்திப்பு கிடைக்கப்பெற்றவர்.

ஆனால், அவருக்கும் சுனில் காவஸ்கரின் மும்பை லாக்கர் தர்மசங்கடம் போல் ஒன்று நிகழ்ந்தது. கவாஸ்கரின் எழுபது லட்ச ரூபாய் கண்டுபிடிப்பு மூடி மறைக்கப்பட்டது போல் மார்க் மெக்வெய்ரின் ஆண்ட்ரோஸ்டெண்டியோன் (androstenedione) ஊக்க மருந்தும் சலசலத்து அடங்கிவிட்டது.

அப்பொழுது பேஸ்பால் சட்டத்திலோ ஆட்ட விதிகளிலோ ஊக்க மருந்துகளுக்கு எவ்விதமான தடையும் இருக்கவில்லை. 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்பதைத் தவிர. ஆட்டத்தை முன்னேற்றுவது மட்டுமே அப்போது அவர்களுக்கு முக்கியமானதாகப் பட்டது. மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செல்லும் பேஸ்பாலை விட அதிரடியான அமெரிக்க கால்பந்தும், மைக்கேல் ஜார்டனின் உள்ளங்கைக்குள் இருந்த கூடைப்பந்தும் மக்களை சொக்குப்பிடி போட்டிருந்தது.

செத்தவன் கையில் ஜர்தா கொடுத்தது போன்ற ஆட்டம், விளையாட்டு வீரர்களின் பணப் பேராசை எல்லாம் பேஸ்பாலை அதள பாதளத்தில் தள்ளிவிட்டிருந்த காலம். சச்சின் போல வந்தார் மார்க் மெக்வெய்ர். கூடவே 'சபாஷ்... சரியான போட்டி'யாக மேற்கிந்தியாவின் லாரா போல் சம்மி ஸோசா (Sammy Sosa). அமெரிக்கவை மீண்டும் பேஸ்பால் பக்கமாக திரும்பி பார்க்க வைத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பேஸ்பாலின் மீது மீண்டும் காதல் பிறந்தது. எந்தக் காதலும் என்றாவது மனமுறிவுக்கு இட்டுச்செல்லும் என்பது போல் தற்போது ஊக்க மருந்து பிரச்சினை வெடித்திருக்கிறது. காதலி ஏமாற்றியிருக்கிறாள். நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாக கான்ஸெகோ பரபரப்பாக பேச ஆரம்பித்தார். காதலில் மயங்கி கிளைத்திருக்கும் வரை உலகமே ரம்மியமாகவும், காதலரே உத்தமராகவும், காதலியே உன்னதமாகவும் எண்ணி வந்தார்கள். முதல் ஏமாற்றம் கிடைத்தவுடன், பேச்சு முற்றி, தோண்டத் தோண்ட பூதம் என்பது போல் சூதாட்டம், மேட்ச் ·பிக்ஸிங், நிறப் பிரிவுகளின் தலைத்தூக்கல், கன்னாபின்னா வளர்ச்சி, வன்முறை, பணம் படைத்த அணிகளின் கொழிப்பு, என எல்லாவிதமான பாண்டோரா குழப்பங்களும் வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.

பிரச்சினையை முடிந்த வரைக்கும் மூடி அமுக்கிவிட நினைத்த பேஸ்பால் வாரியம் 'ஊக்க மருந்து விலக்கு கொள்கை'யை சமீபத்தில் அறிவித்திருந்தது. ஊக்க மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்களா என்பதற்கு சோதனைகள் இனி செய்யப்படும். இவை மூன்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப் பட்டதுதான் என்றாலும், இப்பொழுது இன்னும் கொஞ்சம் விரிவாக ஒலிம்பிக்கில் செய்யப்படும் பரிசோதனை போல் முழுமையாக்கப்பட்டுள்ளது. முதல் குற்றத்திற்கு பத்து நாள் ஆட்ட விலக்கோ அல்லது பத்தாயிரல் டாலர் அபராதமோ கட்ட வேண்டும். எந்த ஆட்டக்காரர் எதை உட்கொண்டார் என்பது எல்லாம் வெளியில் அறிவிக்கப்படாது.

அலுவலகத்தில் வலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தட்டியோ அல்லது தடுமாறியோ பலான பக்கம் வந்தடைகிறோம். அரை மணி நேரம் ஆசை தீர மேய்கிறோம். நடுவில் பாஸ் கண்டிபிடித்து விசாரிக்கிறார். அவருக்கு பத்து டாலர் அபராதம் கட்டி விட்டால் போதும். மேட்டர் அங்கேயே முடிந்து விடும் என்றிருந்தால் தப்பு செய்வதற்கு எவ்வளவு வசதியாக இருக்கும்!

ஒரு ஆட்டத்திற்கு மில்லியன் டாலர் கணக்கில் பணம் வாங்கும் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களுக்கு 10,000 டாலர் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்குமா?

ஊக்கப் பொருட்களை எடுத்துக் கொண்டு விளையாட்டுக்களில் கலந்து கொள்ளுதல் பல வருடங்களாக நடந்து வருவதுதான். பென் ஜான்ஸனின் ஒலிம்பிக் வீழ்ச்சி இந்த நிகழ்வின் மேல் பெரிய வெளிச்சத்தைக் காட்டியது. தொடர்ந்து பிரதிமா, மல்லேஸ்வரி போன்ற இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர்களே கலந்து கொடுத்தது, சமீபத்தில் மாரியான் ஜோன்ஸின் (Marion Jones) அம்பலங்கள் வரை ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் தொடர்ந்தே வருகிறது.

தங்களின் அபிமான நட்சத்திரங்களின் திரண்ட புஜங்களையும் பராக்கிரமங்களையும் பார்த்து மிகச் சிறிய வயதிலேயே அவற்றை எட்ட நினைக்கும் பள்ளிச் சிறுவர்களும் ஸ்டெராய்ட்களை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். போதைப் பொருட்களை விட மோசமான பின் விளைவுகளை கொடுக்க வல்லது ஸ்டெராய்ட். பல வருடங்கள் அடிமையாக்கி வைத்திருந்தாலும் புகை பிடித்தல், மது, போதை போன்றவை மனிதனை உடனடியாக தீர்த்துக் கட்டாது. ஆனால், ஊக்க மருந்துகள் பல மாணாக்கர்களை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது.

ஊக்க மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தவுடன் விளையாட்டு அணிகளில் இடம் கிடைக்கிறது. சிறிது காலம் கழிந்தவுடன்தான் பரிசோதனைக்கு உட்படுகிறார்கள். எனவே, தடாலடியாக ஸ்டெராய்ட் உபயோகத்தை கைவிடுகிறார்கள். அதனால், பலவித கையாலாகத்தனத்தின் கோபத்துக்கும், மனச்சோர்வினால் ஏற்படும் வெறிக்கும் இடையே குழம்புகிறார்கள்.

அமெரிக்காவில் பதின்மூன்று சதவிகிதப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஊக்க மருதுக்கான சோதனைகளை அவ்வப்போது நடத்துகிறது. பரிசோதனைகளை அடிக்கடி செய்வதும், பள்ளி நிர்வாகங்களுக்கு எளிதான காரியமில்லை. ஒருவருக்கு ஸ்டெராய்ட் சோதனை செய்ய ஐம்பதில் இருந்து நூறு டாலர் வரை செலவாகும். போதைப் பொருட்களை சோதனை செய்ய பத்தில் இருந்து முப்பது டாலர் வரைக்குமே பிடிக்கிறது.

நியுஸ்வீக்கின் கருத்துக்கணிப்பின்படி கடந்த வருடத்தில் மட்டும் எட்டாவதில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பிற்குள் மூன்று லட்சம் மாணவர்கள் ஸ்டெராய்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மாணவிகள். இளம் வயதிலேயே ஊக்க மருந்து எடுத்துக் கொள்வதினால் முகப்பருவில் ஆரம்பித்து முடிகொட்டல் வரை பல சிறிய பெரிய நோய்கள் வரும். உடலியல் மாற்றங்களாவது பரவாயில்லை. போதைப் பழக்கத்தையொத்த ஊக்க மருந்தினால் தற்கொலை செய்து கொள்ளும் சிறுவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

காபி குடிக்கிறோம். கண் துஞ்சாமல் காம்ப்ளான் குடிக்கிறோம். வேலையில் கவனத்தைக் கொண்டு வருவதற்கும் நினைவாற்றலுக்கும் தேயிலையில் ஆரம்பித்து மெமரிவிடா வரை பல்வகைப்பட்ட திரவங்களையும் கொடுக்கிறோம். இந்தியாவில் படிப்பில் வெற்றி பெறுவதற்கு குழந்தைகளை வலுக்கட்டாயம் செய்வது போல், அமெரிக்காவில் விளையாட்டுக்களில் வெற்றி பெற மாணவர்களைத் திணிக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் தோள்வலிமை இருக்கும் சக மாணவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு, உடல் அமைப்புக்குக் கிடைக்கும் மரியாதை போன்ற தன்னிறக்க சம்பவங்கள் கூட இளவயதினரை ஸ்டெராயிட் பயன்பட்டுக்கு இட்டுச் செல்கிறது.

புதிதாய் கற்கும்போது நிரலி எழுத உதவிப்பக்கங்களைத் தேடுகிறோம். காயகல்பம், மனமகிழ்வுக்கு செயிண்ட் ஜான்ஸ் வோர்ட், டெக்கீலா போன்றவை அதிகாரபூர்வமாகக் கிடைக்கிறது. இன்னும் சில நாள்களில் ஜீன் தெரபி எல்லாருக்கும் எளிய முறையில் எவருக்கும் வெளிக்காட்டாவண்ணம் கிடைக்கலாம். இன்றும் தடுக்கப்பட்ட ஊக்க மருந்துகள் பட்டியலில் இல்லாத பல ஸ்டெராய்ட்கள் பள்ளி மாணவர்களுக்குக் கூட வரப்பிரசாதமாக மிக எளிதாகக் கிடைக்கிறது. திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் ஊக்க மருந்தை நிறுத்த முடியாது.

ஊக்க மருந்துகளை வளர்ந்த விளையாட்டு வீரர்கள் உபயோகிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்கக் கூடாது. அவர்கள் புதிய சாதனைகளை ஏற்படுத்த விரும்புகிறார்கள். நவீன மருத்துவ முறைகளை கையாண்டு உடல் உபாதைகளை காப்பாற்றிக் கொள்கிறார்கள். நாற்பது வயதில் ஓய்வு பெற்றவுடன் நூறு ஏக்கர் தோட்டத்தில் ரிலாக்ஸ் எடுக்கிறார்கள். பணத்திற்காக உடலை விற்பது போல், புகழுக்காகவும் சாதனைகளுக்காகவும் மேன்மேலும் செல்வத்திற்காகவும் ஊக்க மருந்தினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.

பத்து நொடிக்குள் நூறு மீட்டரை கடக்க நினைப்பவரும், பளு தூக்குபவரும், சிக்ஸர் அடிக்க விரும்புபவரும், ஐந்து செட் பிரென்ச் ஓபன் ஆடுபவரும், ஊக்க மருந்து உபயோகிப்பதை அதிகாரபூர்வமாக்க வேண்டும். எவர் எப்படி ஏமாற்றுகிறார்கள், எங்கே எதை உட்கொள்கிறார்கள் என்று கள்ளனுக்குக் கவலைப்பட்டு காப்பானுக்கு கோடி கோடியாக செலவு செய்வதை நிறுத்த வேண்டும். மெக்டோவல் விளம்பரத்தில் எம்.பி சத்ருகன் சின்ஹாவும் ஜாக்கி ஷ்ரா·பும் தோன்றுவது போல், ஸ்டெராய்ட் அனுபந்தத்துடன் கூடிய புரதக் கலவை விளம்பரத்தில் சச்சினும் மல்லேஸ்வரியும் வரலாம். கூடவே 'ஊக்க மருந்து உடலுக்குக் கேடு' என்று ஓரத்தில் அறிவித்து விடலாம்.

விஜயெந்திரரும் ஜயேந்திரரும் அப்புவை துணைக்கு வைத்துக் கொள்வதை படிக்கிறோம். அரசியல்வாதிகளின் அராஜகத்தை மாற்றி மாற்றி ஒப்புக் கொள்கிறோம். பாதிரியார்கள் குழந்தைகளை வன்புணர்வதை அறிகிறோம். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை பார்க்கிறோம். இவை எல்லாம் அல்லாதவை என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். அதே போல், இன்னுமொரு பாடத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் தருணம் இது.

- பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு