சத்குரு ஜக்கி வாசுதேவ்
அத்தனைக்கும் ஆசைப்படு :: Vikatan.com
கலைத் துறையைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். ‘ஒரு செல்வந்தனுக்குக் கிடைக்கும் மரியாதையும் மதிப்பும், பிரம்மாவுக்கு இணையான ஒரு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லையே... ஏன்?’ என்று வருத்தத்துடன் கேட்டார்.
உண்மையில் யார் படைப்பாளி?
படைப்பு ஏற்கெனவே கச்சிதமாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. இருப்பதையெல்லாம் நீங்கள் இப்படியும் அப்படியுமாக மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறீர்களே தவிர, புதிதாக எதைப் படைத்தீர்கள்?
நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்ட உபயோகங்களை அடுத்து வரும் தலைமுறைகள் கண்டுபிடிக்கும்.
ஏற்கெனவே இருப்பதைத்தான் உங்களுக்கு வசதியாக விதம்விதமாகத் திருத்துகிறீர்கள். மாற்றி அமைக்கிறீர்கள். பயன்படுத்துகிறீர்கள். மற்றபடி, நீங்கள் புதிதாக எதைப் படைத்துவிட்டதாகப் பெருமை கொள்ள முடியும்?
நீங்கள் ஓவியராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். பாடகராக இருக்கலாம். எந்தக் கலைத் துறையிலும் இருக்கலாம்.
நீங்கள் செய்வது முதலில் உங்களுக்கு ஆனந்தம் தர வேண்டும். அப்போதுதான் உங்கள் திறமையை உங்களுக்கு விருப்ப மான விதத்தில் வெளிப்படுத்த முடியும்.
அப்படி வெளிப்படுத்தும் விதத்தில், மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் நீங்கள் உபயோகமாக இருக்கிறீர்களா? பாரமாக அழுத்தும் பிரச்னைகளை மறந்துவிட்டு, சில மணி நேரமாவது அவர்கள் அமைதியாக இருக்க நீங்கள் பயன்படுகிறீர்களா? அது போதும். நீங்கள் சிறந்த படைப்பாளி என்று கொண்டாடப்படுவதை விட அது மேன்மையானது!
உங்களைவிட அடுத்தவர் செல்வாக்கோடு இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே? உங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டுத்தான் போகட்டுமே?
நீங்கள் எந்த மதத்திலிருந்து வந்தாலும், உங்கள் கடவுள் எப்படி இருக்கிறார்? அவர் மீது பூச்சொரிந்து பூஜிப்பதால், உடனே சலுகைகள் காட்டுவதுமில்லை; அவர் மீது காறித் துப்புவதால், உடனே தண்டனை கொடுப்பதும் இல்லை. போற்றலையும், தூற்ற லையும் பொருட்படுத் தாமல்,அவருடைய செயலை நூறு சதவிகித ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்கிறார். உண்மையான படைப் பாளிக்கு அதுதானே அழகு?
கலைத்துறை என்றில்லை. எந்தத் துறையானாலும், உங்களுக்கு மட்டுமல்லாது, சுற்றியுள்ளவர்களுக் கும் ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள். அன்பைக் குழைத்து முழுமையான ஈடுபாட்டுடன் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
புகழும், செல்வாக்கும் தாமாகவே வந்து சேரும்!
கருத்துரையிடுக