இரவல் பிழைப்பு
கல்கி: ஒரு நண்பர் என்னிடம் பலமாகச் சண்டை பிடித்தார். நான் புனை பெயர் வைத்துக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதுவது தான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ''ஏன் சொந்தப் பெயர் போட்டுக் கொண்டு எழுதக்கூடாது? சொந்தப் பெயரைச் சொல்லிக்கொள்ள வெட்கமாயிருக்கிறதா?
"ஏன் இந்தக் கோழைத்தனம்?'' என்று அவர் கேட்டார். உண்மை என்னவென்றால், அவருக்கு ஒரு பிரமை.
என்னுடைய கதைகள், கட்டுரைகள் முதலியவற்றினால் எனக்கு வரவேண்டிய கீர்த்தி (!) அவ்வளவும் என்னைச் சேராமல் அநியாயமாய்க் கொள்ளை போய்விடுகிறதென்பது அவருடைய கவலை.
பெயர் போட்டுக் கொள்ளாததற்குக் கோழைத்தனம் காரணமல்ல என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
அப்படி வெட்கப்படும்படியான சங்கதி ஏதேனும் நான் எழுதுகிறேனா என்ன? ஒன்றுமில்லை. பின்னர், புனைபெயர் ஏன்? உலகத்தின் மனப்போக்குதான் அதற்குக் காரணம். சொந்தமாகச் சிந்தனை செய்யும் சக்தியை, இந்த உலகத்தில் பகவான் மிகவும் கொஞ்சமாக வைத்துவிட்டார். நம்மில் பெரும்பாலோர் பிறருடைய அபிப்பிராயங்களையே நம்முடைய சொந்த அபிப்பிராயமாகக் கொண்டு போராடுகிறோம்.
................
ஏதேனும் ஒரு விஷயம் கேள்விப்பட்டால், அதன் குணா குணங்களைப் பற்றி முதலில் ஆராய்வதில்லை. அதைச் சொல்வது யார் என்று முதலில் கவனிக்கிறோம்.
சொல்பவர் பிரசித்தி பெற்றவராயிருந்தால் அல்லது நமக்குப் பிடித்தவராயிருந்தால் உடனே விஷயத்தை ஆதரிக்கத் தொடங்குகிறோம்; அதைப் பாராட்டுகிறோம்; அதன் புகழைப் பாடுகிறோம். சொல்பவர் சாதாரணப் பேர்வழியாயிருந்தால் உடனே அதை மறந்துவிடுகிறோம். சொல்பவர் நமக்குப் பிடிக்காதவராயிருந்தாலோ, உடனே குறை சொல்லத் தொடங்கி விடுகிறோம். இலக்கியத் துறையில் மட்டுமல்ல; அரசியல், சங்கீதம், சமூக சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றிலும் இப்படித்தான்.
பெரும்பாலும், எல்லாவற்றிலும் நாம் இரவல்பிழைப்பே பிழைத்து வருகிறோம். சென்னையிலுள்ள எனது நண்பர் ஒருவருக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் அபார பிரேமை. ஆகையால் அவருக்குப் பண்டித நேருவைக் கொஞ்சமும் பிடிக்காது. ஒருநாள் நான் பத்திரிகை படிக்க அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்திய சட்டசபையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் செய்த பிரசங்கத்தைப் படித்தேன். அப்போது அவர் அடைந்த உற்சாகத்தையும், காட்டிய சந்தோஷத்தையும் சொல்ல முடியாது.
பிரசங்கம் முடிந்ததும், ''ஓ! நீர் என்னதான் சொல்லும், அந்த ஒரு மனுஷனால்தான் இப்படிப் பேச முடியும்!'' என்றார் நண்பர். ''சுவாமி! மன்னிக்க வேண்டும். பெயர் தவறாகச் சொல்லிவிட்டேன். இப்பொழுது படித்தது பண்டித நேருவின் பிரசங்கம்'' என்றேன் நான். அவரால் நம்ப முடியவில்லை. பத்திரிகையை வாங்கிப் பார்த்துவிட்டு, ''சரிதான்; தொலையட்டும். நடுவில் கொஞ்சம் சந்தேகமாய்த்தானிருந்தது. இவ்வளவு அசம்பாவிதமாய் ஐயங்கார் பேசியிருக்க முடியாதே என்றுகூட நினைத்தேன்'' என்றார்.
சற்று முன்னால், நான் பிரசங்கம் நன்றாயில்லையென்று சொல்லியிருந்தால், அவர் என்னை அடிக்கவே வந்திருப்பார்.
- கல்கி கட்டுரைகள் (தொகுதி -3) :: மணிவாசகர் பதிப்பகம்
;-)
சொன்னது… 4/27/2005 09:50:00 AM
கல்கி சொல்லியிருப்பதால ஒத்துக்கறேன் :-)
- சத்யராஜ்குமார்
சொன்னது… 4/27/2005 01:56:00 PM
கருத்துரையிடுக