அயோத்தியாவும் ஷாக்-கும்
சனிக்கிழமைகளில் சௌகரியமான இரவு பதினோரு மணிக்கு விடுமுறைக் கொண்டாட்டமாக திரைப்படங்களைப் போட்டு வருகிறார்கள் சன் டிவி. இதனால் 'சென்ற வார உலகம்' நின்று போனதும், பூத் / ஷாக் / ராஸ் ஆகியவற்றை விட பயமுறுத்தலான 'காதல் எஃப்.எம்' போன்ற படங்களும் கிடைத்தாலும், மீண்டும் 'சதி லீலாவதி', மீண்டும் 'ஆளவந்தான்', முதன் முறையாக 'அயோத்தியா' போன்றவைகளும் கிடைக்கிறது.
'சதி லீலாவதி' வாஞ்சையான படம். உள்ளே இருக்கும் அரக்கன் எட்டிப் பார்த்தால் ரமேஷ் அரவிந்த் போலத் தெரியலாம். வாடர் டேங்க் அடியில் நடந்த கசமுசாவை அகஸ்மாத்தாக கிண்டலடித்துக் கொள்ளும் பால்ய காலத் தோழி; தப்பிக்க சான்ஸ் கிடைத்தால் தவறு செய்ய நினைக்கும் ஹீரோ; குடும்பத்துடன் விடுமுறை அடிக்க நினைக்கும் மாமனார். இளையராஜாவின் 'மகராஜனோடு ராணி வந்து சேரும்' பாடலும், பாலு மகேந்திராவின் கனவு போன்ற காட்சிகளும், பாடற்காட்சியென்றால் ரெஸ்ட்ரூம் போக நினைப்பவர்களையும் விமர்சனத்திற்கு குறிப்பு எடுத்துக் கொள்பவர்களையும் ப்ரேக் போடவைக்கும்.
'ஆளவந்தான்' இலக்கிய செறிவான மிடில் மேகஸின் போல் இருக்கிறது. முதல் புரட்டலில் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தது. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தபோது ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியது. இரண்டு வருடம் கழித்து மீள் பார்த்தபோதும், விறுவிறுப்புடன் சென்றது. நந்து என்பவனை குரங்குக்கு ஒப்பீடாக முன்னிறுத்தி அறிமுகம். ரவீணா டாண்டனுடன் சிட்-காம் போன்ற மெல்லிய புன்னகையை வரவைத்துக் கொண்டேயிருக்கும் நகைச்சுவை. (வசனம்: கமல்) சுவற்றில் மனீஷா போஸ்டரை தேய்த்துவிட்டு விடைபெறுதல். முண்டத்தைப் பேசவைத்துப் பார்க்கும் எள்ளல். கல்யாணமாவதற்கு முன்பே கர்ப்பம் என்பதை லைட்டாக எடுத்துக் கொள்ளும் சிட்டி அப்பா சரத்பாபு. சிறிது நேரமே வந்து போகும் மனீஷா முதல் வித்தியாசமான வியாதியுடன் வரும் மாமா வரை பொருத்தமான கேரக்டரைஸைஷன். சந்திரமுகியில் டாடா இண்டிகாம் போல், கோல்ட் வின்னர் பலூன் க்ளைமாக்ஸில் குதித்தது தவிர, 'சண்டான்ஸ்' விருதுகளுக்கு எற்ற படம்.
அஜீத்தின் கடந்த மூன்று வருடப் படங்கள் கொடுத்த ஏமாற்றம் மாதிரி இல்லாமல் 'அயோத்தியா' மெலிதான ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. 'நீ எந்த ஊர்' என்று முகவரி இல்லாத நடிகர்களைக் கொண்டு, சமீபத்திய தலைவலியான 'திருப்பாச்சி'களை விட -- திருப்தியும் லாஜிக்கும் மெஸேஜும் மசாலாவும் கலந்த படம்.
இந்து சி.ஈ.ஓ.வும் முஸ்லீம் சி.ஓ.ஓ.வும் பிஸினஸ் பார்டனர்கள். அவர்களிடம் வேலை பார்த்து தில்லுமுல்லாடும் மணிவண்ணன் இருவருக்குமிடையே பூச்சி மருந்தை விதைத்து, கொசு வலையை நெய்கிறார். பிரிகிறார்கள். இருவரின் மனைவியரிடையே நட்பு தொடர்கிறது. ஒருவரின் பிள்ளைப்பேற்றில் ஆபத்து என்பதை அறிந்து, தமிழ் சினிமா கோட்பாடுகளின்படி, குழந்தைகள் இடம்மாறி வளர்கிறார்கள். இருவரும் வளர்ந்தபிறகு, எதிர் கேம்ப் முறைப் பெண்களை, மதம் விட்டு மதம் மாறாமல் காதலிக்கிறார்கள்.
மணிவண்ணனின் சத்யராஜ் ஸ்டைல் நக்கல், 'மெட்டி ஒலி'/டும் டும் டும் டெல்லி குமாரின் அமரிக்கையான மதராஸா ஆசிரியர் தோற்றம், வில்லத்தனத்தால் பைத்தியக்காரராகும் இளவரசு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாலைந்து வருடம் முன்பு எல்லா படங்களிலும் தலையை காட்டிக் கொண்டிருந்த மணிவண்ணன், ஏன் இப்போது வருடத்துக்கு ஓரிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்!?
போரடிக்காத திரைக்கதை, நம்பக் கூடிய காட்சியமைப்பு, ஒத்துக் கொள்ளக் கூடிய, ஆனால் எதிர்பார்க்கவைக்கும் முடிவு என்று எல்லாம் பளிச் பளிச். ஸ்டார் வேல்யூ இல்லாவிட்டாலும் இரு (அறிமுக?) நாயக நாயகிகளும் அலட்டாமல் தோன்றியிருந்தார்கள். பாட்டுக்கள் எதுவுமே பெரிதாக ரசிக்கும்படி இல்லாததுதான் ஒரே குறை.
ரஜினி நடித்திருந்தால் ஓடியிருக்கும். குறைந்தபட்சம் ரகஸியாவோ மும்தாஜோ ஆட்டம் போட்டிருந்தால் கூட விகடனில் இடம்பிடித்திருக்கும்.
நல்லாச் சொன்னீங்க. இதே அயோத்தியாவுக்கு நான் ஒரு பதிவு( விமரிசனம்)
போட்டப்ப நம்ம ஜனங்க கேட்டாங்க, 'நிஜமாவே இப்படி ஒரு படம் வந்துச்சா?'ன்னு!
சொன்னது… 5/10/2005 08:16:00 PM
கவனிக்க விட்டுப் போச்சே துளசி. உங்கள் பதிவின் சுட்டியை கொடுங்க ப்ளீஸ்...
-பாலாஜி
பெயரில்லா சொன்னது… 5/11/2005 07:35:00 AM
http://thulasidhalam.blogspot.com/2005/03/blog-post_11.html
பெயரில்லா சொன்னது… 5/11/2005 11:58:00 AM
கருத்துரையிடுக