வார பலன்
வாரபலன் ஜூலை 17, 2003 :: மத்தளராயன்
காலச்சுவடு ஜூலை - ஆகஸ்ட் 2003 இதழில் அரவிந்தன் எழுதிய 'இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?' படித்தேன்.
'ஜெயகாந்தன் கதைகளை முன் வைத்து' என்று அவர் தொடங்குவது 'ஜெயகாந்தன் கதைகளை முன்வைத்து அவர் மீது நிகழ்த்தும் தடியடிப் பிரயோகம் ' என்பதன் தலைப்புச் சுருக்கம்.
'அவருடைய கதைகள் பற்றித் தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது' என்று ஆரம்பிக்கிறார் அரவிந்தன் கெத்தாக.
சரி சார், அப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாங்க எங்க வேலையைப் பார்க்கப் போகிறோம். காலச்சுவடு அதன் வேலையைப் பார்க்கட்டும். ஜெயகாந்தன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.
அட, ஒரு பேச்சுக்குச் சொன்னாப் போயிடறதா? ஜெயகாந்தனை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடலாம் வாங்க.
அரவிந்தன் நம்மை வாசலில் நிறுத்தி விட்டுச் சிடுசிடுத்தபடி பிரம்போடு விமர்சன வகுப்புக்குள் நுழைகிறார்.
'கதை முழுவதும் இரைச்சல்', 'மிகு உணர்ச்சி', 'ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்'
மனுஷன் மகா கோபமாக இருக்கிறார். ஜெயகாந்தனை பெஞ்சில் எழுந்து நிற்கச் சொல்லி விரட்டுகிறார்.
முதல் விளாசு - 'ஜெயகாந்தனின் முதல் கதையிலேயே அவர் ஏ தென்றலே என்கிறார். படிக்க எனக்கு மிகவும் கூச்சம் ஏற்படுகிறது'.
ஜெயகாந்தன், ஏன் இப்படிக் கஷடப் படுத்துகிறீர்கள்? அடிக்கத்தானே விமர்சகர்? அவர் இப்படிக் கூசிக் குறுகி நிற்கலாமா? 'இது என் முதல் நாவல்' என்று 'ஒரு புளியமரத்தின் கதை' முன்னுரையில் எழுதியதுபோல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்திருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா? உமக்கு ஏன் புத்தி கெட்டுப் போனது?
(வெகுஜனப் பத்திரிகையான கல்கியில் வெகுஜன எழுத்தாளரான குட்டிகிருஷ்ணன் - கி.ராஜேந்திரன் -இருபத்தைந்து வருடம் முன்னால் இதுதான் புளியமரம் என்று அறிமுகப் படுத்தாமல் இருந்தால் எனக்கும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும், புன்னை மரத்துக்கும் புளிய மரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காது. குட்டிகிருஷ்ணனுக்கு நன்றி சொன்னால் அரவிந்தன் என் தலையில் ஓங்கிக் குட்டுவார்).
ஜெயகாந்தன் கதைகளில் அடிக்கடி ஆவும் ஓவும் போட்டுக் கொண்டிருந்தால் எப்படித் தாங்குவது என்று இன்னொரு முறை பிரம்பை ஓங்கி விட்டு, கை வலிக்கிறதே என்று அலறுகிறார் அரவிந்தன்.
சுஜாதா ஒரு தடவை தயங்கித் தயங்கிச் சொன்னாரே - 'ஓ'வை ஜெ.கே ஒரு கதையில் கொஞ்சம் போல் பயன்படுத்தியிருக்கிறார் என்று. அது இல்லையா விஷயம்? அவர் போட்ட மீதி 'ஓ'வை எல்லாம் நான் ஏன் பார்க்காமல் போனேன்? ஓ ஜெயகாந்தன், ஓய் ஜெயகாந்தன், அடிக்க வாகாக உள்ளங்கையை இப்படி நீட்டுமய்யா. பெஞ்சில் நின்றால் குனியக் கூடாதா என்ன? இனிமேல் ஓ போடாமல் கதை எழுதுவேன் என்று நூறு முறை இம்போசிஷன் எழுதும்.
பாக்கியராஜ் படம் மாதிரிக் கதை எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று அடுத்த அடி. பாக்கியராஜ் இங்கே எங்கே வந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்புறம் அரவிந்தன் கை முருங்கைக் காய் பறிக்கப் போயிருக்குமா என்ன? உங்களுக்கும் ரெண்டு சாத்து. ஆமா.
'வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற ஜெயகாந்தனது துடிப்பு கடைசி வரை ஓய்ந்ததாகத் தெரியவில்லை'
அரவிந்தனின் இந்தக் 'கடைசி வரை'யை இன்னொரு தடவை அவசரமாகப் படித்து, காலச்சுவடைத் தொப்பென்று போட்டு விட்டு ஓடியே போய் இந்து பத்திரிகையைத் தேடினேன். ஸ்போர்ட்ஸ் பேஜில் ஓபிச்சுவரியை வரி விடாமல் படித்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். நலம். நலமே.
ஜெயகாந்தன் கதைகளை இது வரை விமர்சித்தவர்கள் (அதாவது பாராட்டியவர்கள்) அரவிந்தனின் கண்ணில் அடுத்துப் படுகிறார்கள். ஒரு குறுஞ்சிரிப்போடு அவர்கள் பக்கத்தில் போக, முன்வரிசையில் பாவம், நடுங்கியபடி நவபாரதி. (ஆமா, தோத்தாத்திரி எங்கே? அரவிந்தனின் பிரம்புக்குப் பயந்து ஆப்செண்டா?)
நவபாரதிக்குதான் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்று எத்தனை வித அர்ச்சனை! 'ஆராதகர் நவபாரதி', 'உபாசகர் நவபாரதி', 'ஜெயகாந்தனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்த நவபாரதி'.
அது யார் பொன்னீலனா? 'தமிழ் நாட்டுப் பண்பாட்டுத் தளத்தை ஜெயகாந்தன் கதைபோல் ஆரோக்கியமாக உலுக்கிய இன்னொரு சிறுகதையை நான் இன்றுவரை அறியவில்லை' என்கிறாரா அவர்?
அரவிந்தன் ஒரு வினாடி பொன்னீலனின் கண்களைப் பார்க்கிறார். மனுஷன் சாமி வந்த மாதிரி நிற்கிறார், பார் என்று நம்மிடம் சைகை செய்கிறார். பொன்னீலன் புல்லரிக்கிறதாக அவர் புறங்கையைப் பார்த்து விட்டுத் தீர்மானமாகச் சொல்கிறார்.
இந்த நவபாரதியின், இந்தப் பொன்னீலனின் மிரட்டலையும் மீறி ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நுழைந்தாராம் அரவிந்தன். கேட்கவே ரத்தம் கொதிக்கிறது. மூர்ச்சை போட்டவரும், புல்லரித்துப் போய் நிற்கிறவரும் அப்படியே படுத்தும், புறங்கையைச் சொரிந்து கொண்டும் கிடக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு இப்படி அரவிந்தனை மிரட்டுகிறார்கள்?
சரி, இந்த மிரட்டலையும் மீறித் துணிவோடு அந்த அடலேறு அக்கினிப் பிரவேசத்துக்குள் போய்ப் பார்த்தால் அம்மா பெண்ணுக்குத் தலையில் தண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறாள். அம்புட்டுத்தானா என்று ஏமாற்றம் அரவிந்தனுக்கு. ஜெயகாந்தன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால், புத்தகம் வாங்கிய காசுக்கு அவருக்குத் திருப்தி கிடைத்திருக்கும் :
1) ஸ்ரீவேணுகோபாலன் எச்சமாகத் தொடர்ந்து எழுதியது போல் அந்த கங்காவைத் தலையில் நெருப்பு வைத்துக் கொல்லலாம். குறைந்த பட்சம் அவள் தலையில் வென்னீரையாவது ஊற்றியிருக்கலாம். அரவிந்தனுக்கு ஜலதோஷம் பிடித்து அடுக்கடுக்காக இப்படித் தும்மல் வராது.
2) கங்காவும் அவள் அம்மாவும் காலச்சுவடு பத்திரிகையைப் புரட்டி, அரவிந்தனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் 'விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே விழும் வெளியைச் சாத்தியப்படுத்தும் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனம் காண முயலும் பிரக்ஞைக்கு ஒற்றைப் பரிமாண போதனைகளால் எந்தப் பலனும் இருக்காது' என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவாதித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவோ, சேர்ந்து கையெழுத்துப் போட்டு காலச்சுவடுக்கு வாசகர் கடிதம் எழுதுவதாகவோ முடிக்கலாம்.
3) சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் படுத்துக் கொள்ளப் போகவைத்திருக்கலாம்.
'நல்ல' எழுத்தைப் படித்த திருப்தியும் வேண்டும். தீவிர எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் ஆழ்ந்த தொந்தரவிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று 'பல் எனாமல் பாதுகாப்புக்கும், ஈறுகளின் உறுதிக்குமான பற்பசை கோல்கேட்' என வாயசைவுக்கு வார்த்தை ஒட்டாமல் சொல்லும் டி.வி விளம்பர பல் டாக்டர் போல் சொல்கிறார் அரவிந்தன். அரவிந்தன் குரல் அவருடைய சொந்தக்குரல் தானா என்று நான் கேட்கமாட்டேன்.
கோபால் பல்பொடி ஒண்ணு கொடுப்பா. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றதாமே?
நன்றி: திண்ணையில் மத்தளராயன் படைப்புகள்
கருத்துரையிடுக