திங்கள், மே 16, 2005

பாவண்ணன் - திண்ணை

நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும்
வளவ.துரையன்: பாவண்ணனின் "நூறுசுற்றுக் கோட்டை" - நூல் அறிமுகம்

இந்நூல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "வண்ணமும் வாழ்வும்" என்னும் முதல் பகுதியில் கன்னடமொழியல் நவீனத்துவம் படர்ந்தபிறகு எழுதப்பட்ட கதைகளில் நவீனத்துவத்தின் நிறம் சரியாகப் புலப்படும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் உள்ளன. மூன்று தலைமுறைக்கு முந்தைய மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிறுகதை முதல் இருபத்தைந்து வயது இளைஞனுடைய சிறுகதைவரை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. "ஆறுகளின் தடங்கள்" என்னும் இரண்டாம் பகுதியில் மூத்த கன்னடப் படைப்பாளிகளின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளன. "அணையாத சுடர்கள்" என்னும் மூன்றாம் பகுதியில் மறைந்துபோன முக்கிய கன்னடப் படைப்பாளிகள்பற்றி பாவண்ணனே தனிப்பட்ட வகையில் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

புராணப்பின்னணியில்ஆமைந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் "குசேலரின் கொள்ளுப்பேரன்" மனிதமன ஆழத்தை அறிய முயலும் கதை. குசேலர் வறுமையில் வாடியவர். கிருஷ்ணனுடைய உதவியால் வறுமை அகன்ற வாழ்வை அடைந்தவர். குசேலருக்கு அச்செல்வத்தில் நாட்டமில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்துவிடுகிறார். அடுத்தடுத்த தலைமுறைகள் அச்செல்வத்தில் திளைக்கிறார்கள். இப்போது புதிதாக முளைத்த மூன்றாம் தலைமுறைக்கு தன் பழமை வறுமை சார்ந்து மதிப்பிடப்படுவதில் விருப்பமில்லை. புதிய புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவினால் பழமைக்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. மனத்தின் விசித்திரம் இது. கதையை வாசித்து முடித்ததும் நம் கண்ணில் காணப்படும் நிறங்களில் உண்மை எத்தனைப் பங்கு புனைவு எத்தனைப் பங்கு என்று அலசத் தோன்றுகிறது. மானுட சரித்திரம் முழுக்க இப்படிப்பட்ட புனைவுகளால் உருவான ஒன்றுதானா என்கிற கேள்வி உருவாக்கும் மலைப்பும் கூச்சமும் கொஞ்சநஞ்சமல்ல.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் "சூரியனின் குதிரை" சிறுகதை மிக நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. சூரியனின் குதிரை என்னும் தலைப்பு புராணம் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கத் து£ண்டுகிறது. இறுதியில்தான் அத்தலைப்பு ஒரு சாதாரண புழுவைக் குறிப்பிடக்கூடிய ஒரு கன்னடப்படிமம் என்று கண்டடைகிறோம். கதையில் இடம்பெறும் வெங்கட் ஜோயிஸ் அக்கம்பக்கத்தார், ஊரார், நண்பர்கள், மனைவி, மகன் என எல்லாராலும் சாதாரணமாக, பிழைக்கத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக, ஒரு புழுவைப்போல மதிக்கப்படுபவன். மற்றவர்கள் தலைக்கு எண்ணெய் மஸாஜ் செய்து மகிழ்ச்சியடையக்கூடியஆந்தச் சாதாரணன் இறுதியில் சூரிய ஒளியில் தளரிலைமீது நௌ¤கிற ஒரு புழுவைக்கண்டு ஆனந்தப் புன்னகை கொள்கிறான். ஒரு புழு இன்னொரு புழுவைப் பார்த்துச் சிரிப்பதான சித்திரம் நம் கண்முன் விரிகிறது.

(நூறு சுற்றுக் கோட்டை - தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : பாவண்ணன். வெளியீடு: அகரம். விலை. ரூ 110. பக்கங்கள் 216)



அன்பினால் ஆன உலகம்
க.நாகராசன் :: பாவண்ணனின் "தீராத பசிகொண்ட விலங்கு" - நூல் அறிமுகம்


உங்கள் மனத்தில் பிடித்தவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா அல்லது பிடிக்காதவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா என்னும் எளிமையான கேள்வியைக்கொண்ட முன்னுரையோடு பாவண்ணனின் "தீராத பசிகொண்ட விலங்கு" தொடங்குகிறது. வணிகமயமான இன்றைய மானுட வாழ்க்கை அனுபவங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்துபார்க்கும்போது பிடிக்காதவர்களின் நினைவுகள்தாம் அதிகமிருக்குமோ என எண்ணத் து£ண்டுகிறது. இதை விவரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாரதக்கதையான கண்ணன்-சகுனி-மாயக்கண்ணாடி கதை முக்கியமானது. கேள்வியின் அடுத்த பகுதிக்கு விடையாகச் சொல்லப்பட்ட "தொடர்ந்து கொட்டிவரும் தேளை விடாமல் காப்பாற்றும் பெரியவரின் கதை" அன்பினால் ஆன உலகத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பார்த்துப் பழகிய தனக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளை படைப்பாளர் 22 கட்டுரைகளாக இத்தொகுதியில் விவரித்துள்ளார்.

வெவ்வேறு கடல்களைப்பற்றிய பாவண்ணனின் வர்ணனைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.


தரங்கம்பாடி கடல் = மிகப்பெரிய முற்றத்தைக்கொண்ட வீடு

விசாகப்பட்டணம்கடல் = கைவிலங்கை அகற்றச்சொல்லி அலறித் துடிக்கும் பைத்தியம்

பேகல் கடல்= முஷ்டி உயர்த்தி ஆர்ப்பரிக்கும் இளைஞனின் குரல் ஒலிக்கும் இடம்

கார்வார் கடல்= கதைபேசி கைகோர்த்து நடப்பதுபோல குது£கலம் கொப்பளித்து நிற்பது

திருவனந்தபுரம் சங்குமுகக்கடல் = கலகலவென்று சிரித்தபடியும் கைவீசியபடியும் துள்ளித்துள்ளி ஓடுகிற இளம்பெண்களின் கூட்டத்தைப்போன்ற இனிய இரைச்சலைக்கொண்டது.

(தீராத பசிகொண்ட விலங்கு - பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம். விலை.ரூ50)

நன்றி: திண்ணை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு