புதன், மே 18, 2005

கல்கி

kalkiweekly.com:: கலை விமரிசனத்தில் நான் கையாளும் முறையைப் பற்றி இங்கு சிறிது சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ, சங்கீதக் கச்சேரியையோ பற்றி எழுத விரும்புகிறவன், இரண்டு முறையில் அவற்றைப் பார்க்க வேண்டும். ஒரு பூந்தோட்டத்துக்கு நாம் போகிறோமென்று வைத்துக்கொள்ளலாம். அதை எப்படிப் பார்க்கிறோம்? முதலிலே சற்று தூர இருந்து தோட்டம் முழுவதையும் ஒருங்கே பார்த்து அனுபவிக்கிறோம். பிறகு தோட்டத்திற்குள் புகுந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு பூவாகப் பார்த்து இன்புறுகிறோம்.

புத்தக விமர்சனங்கள், நாடக விமர்சனங்களைக் கையாள வேண்டிய முறையும் இதுதான். முதலில் முழுமையாகப் பார்த்து, "மொத்தத்தில் இது நன்றாயிருக்கிறதா? இலக்கிய வளர்ச்சிக்கோ, கலை வளர்ச்சிக்கோ உதவி செய்யக் கூடியதா?" என்று தீர்மானிக்க வேண்டும். முழுமையாகப் பார்க்கையில் நன்றாயிருந்தால், அதனுடைய உள் விவரங்களில் உள்ள குறைகளைப் பிரமாதப்படுத்த வேண்டியதில்லை; குறைகளை நிவர்த்திக்கும் நோக்கத்துடன் அவற்றை எடுத்துக் காட்டினால் போதும்.

முமுமையாகப் பார்க்கும்போது, "பயனற்றது" "கலை வளர்ச்சிக்குத் தீங்கு பயப்பது" என்று தோன்றினால், அதைப் பற்றி எழுதும் முறையே வேறு. அசோக வனத்தை அழிப்பதில் அனுமார் கையாண்ட முறைதான் அதற்குச் சரி. "இங்கே ஒரு செடி நன்றாயிருக்கிறதே" 'அங்கே ஒரு பூ நன்றாயிருக்கிறதே!" என்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்த 'முழுமை நோக்கம்' எவ்வளவு அவசியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். மிகச் சிறந்த புத்தகம் ஒன்றை நீங்கள் படிக்கிறீர்கள். அதனுடைய இலக்கியச் சுவையை நினைத்து நினைத்து மகிழ்கிறீர்கள். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு அதைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறீர்கள். அவர் படித்து விட்டு வருகிறார். "புத்தகம் எப்படியிருந்தது?" என்று கேட்கிறீர்கள். "முப்பத்தேழாம் பக்கம் இருபத்து நாலாவது வரியில் ஓர் அச்சுப்பிழை இருந்ததே... அதைக் கவனித்தீர்களா?" என்று கேட்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? "பகவானே, இவ்வளவு அற்புதமான புத்தகத்தில் இவருக்கு ஓர் அச்சுப் பிழையைத்தானா அனுபவிக்கத் தெரிந்தது" என்று நினைத்து அனுதாபப்படுவீர்கள் அல்லவா?

அதற்குப் பதிலாக அவர், "புத்தகம் மிக நன்றாயிருக்கிறது; எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்காது. ஆனால் அச்சுப் பிழை ரொம்ப இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை யாராவது வெளியிடக்கூடாதா?" என்றால், நீங்களும் சேர்ந்து 'ஆமாம்' போடுவீர்கள்.

இன்னொரு உதாரணம் : 'மாலி' ஒரு சித்திரம் வரைகிறார். அதில் வரும் மனிதர்களின் மனநிலைமையை அற்புதமாய் முகபாவத்தில் சித்திரித்துக் காட்டியிருக்கிறார். அவர்களைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருகிறது. எல்லாம் எங்கேயோ பார்த்த முகங்களாகத் தோன்றுகின்றன. நண்பரிடம் காட்டுகிறீர்கள். அவர் உற்றுப் பார்த்துவிட்டு, "ஆமாம்! இந்த 'மாலி' நாற்காலியே பார்த்ததில்லையோ?' பின் சட்டம் இல்லாமல் நாற்காலி போட்டிருக்கிறாரே! நாற்காலி எப்படி நிற்கும்?" என்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்?

ஆகவே, இலக்கியம், நாடகம் ஆகியவைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்லுமுன், அவற்றை முழுமையாகப் பார்த்துச் சிந்தித்து முடிவு செய்தல் இன்றியமையாதது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு