பழைய புத்தக வியாபாரி
தெருவாசகம் - யுகபாரதி::
தெருவோர நூலகன்; படிக்கத்
தெரியாத வாசகன் தேர்ந்த
வறுமைக்கு அறிவை விற்கும்
வாத்தியார் என்பேன் இவனை
படித்தவர் வேலை இன்றி
பாவமாய்த் திரிய; இவனோ
படிப்போரை கொண்டு வாழும்
பாமரப் பள்ளிக் கூடம்
வேதநூல்; வீட்டுக் குறிப்பு;
வேதியல்; கலையை பேசும்
ஆதிநூல்; அறத்தை காக்கும்
அகராதி; இத்தனை பிரிவில்
எந்த நூல் உயர்வு? இல்லை
எந்த நூல் தாழ்வு? இவனின்
சிந்தைக்கு தெரிந்ததெல்லாம்
சில நிமிட பேரம்; முடிவில்
கிழிந்த நூல் தைக்கும் ஆசை
கிழிபட்ட நாளை; யாரோ
இழந்ததை எடுத்து விற்கும்
இவனொரு காகித மேய்ப்பன்
படித்தென்ன கிழித்தாய் சொல்க
பழிபேசி திரியும் நம்மில்
படிக்கவே கிழிந்த நூலை
பரப்புவான் கிழிசல் மூட
வைத்தகண் வாங்கா வண்ணம்
வாசிக்கும் பழக்கம் கொண்டால்
புத்தகப் புழுவே என்று
புகழ்வோம்; ஆனால் இவனோ
புழுமேயும் புத்தகத்தை
புழுதியான உட்கருத்தை
கழுவாத வயிற்றுக்காக
கடைவிரிப்பான் கூவிக்கூவி
உள்ளிருக்கும் மகிமை யாது?
ஒருக்காலும் உணர்ந்தானில்லை
செல்லரித்த அழுக்கு நூலாய்
செலவழிவான் சகாய விலைக்கு
புதியநூல் வாங்கி அதிலே
பூக்கின்ற வாசம் நுகர்வோர்
விதியதன் நெடியை இவன்மேல்
வீசுதல் அறியக் கடவீர்.
Thx: Anandha Vikadan
படித்தென்ன கிழித்தாய் சொல்க
பழிபேசி திரியும் நம்மில்
படிக்கவே கிழிந்த நூலை
பரப்புவான் கிழிசல் மூட
மெத்த உணர்வை தரும் வரிகள்
-ரகு
பெயரில்லா சொன்னது… 6/10/2005 09:03:00 AM
கருத்துரையிடுக