திங்கள், ஜூன் 20, 2005

கருணாநிதி

'மெட்டி ஒலி' பாராட்டு விழா :: மெட்டி ஒலியை பார்த்தேன் என்று இங்கு எல்லோரும் சொன்னார்கள். மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு ஒத்துக் கொள்ளாத நேரம். அந்த நேரத்தில்தான் அரசியல், இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்.

ஆனாலும் மெட்டி ஒலி ஒளி பரப்பான 810 நாட்களில் 400 நாட்களாவது நான் கண்டு ரசித்திருக்கிறேன். பாதியளவு இந்த தொடரை பார்த்து ரசித்ததிலேயே மெட்டி ஒலி பாராட்ட தகுதி வாய்ந்த தொடர்தான் என்பேன்.

இங்கே மனோரமா பேசும் போது, பழைய கால நிகழ்ச்சிகளை தொடர்ந்து பேசி, என்னையும் அந்தக் காலத்துக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் சேர்ந்து நடித்த உதயசூரியன் கட்சி பிரசார நாடகத்தில் காங்கிரஸ் காரனாக நடிக்கும் என்னை தி.மு.க. வுக்கு அவர்தான் அழைத்து வருவதாக குறிப்பிட்டார். இதைப் பார்த்த சிலர், நாடகம் என்று கருதாமல் மனோரமாதான் என்னை தி.மு.க.வுக்கு அழைத்து வந்ததாக கருதக்கூடும். அப்படி நடந்திருந்தால் எனக்கு எவ்வளவோ தொல்லைகள் விட்டுப் போயிருக்கும்.

மெட்டி ஒலியில் ஒரே நிலையில் (ஷாட்டில்) காட்சிகள் படமாக்கப்பட்டது சாதனை என்றார்கள். டி.வி.யில் இதுதான் முதல் முறை என்றார்கள். நான் வசனம் எழுதிய ராஜா ராணி படத்தில் 850 அடி நீள காட்சியை ஒரே ஷாட்டில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் பேசி நடித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக அம்மையப்பன் படத்திற்கு டைரக்டர் பீம்சிங் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதுபோல வசனம் எழுதியிருந்தேன். வேறொரு நடிகர் அதைப் பேசுவதாக இருந்தது, முடியாமல் போனதால் அதை சிவாஜிக்கு கொடுத்திருக் கிறார்கள். சிவாஜி உடனே, கலைஞர் இன்னொரு நடிகருக்கு எழுதிய வசனத்தை நான் பேச மாட் டேன்' என்று கூறி விட்டார். உடனே நான் அப்போதே எழுதிக் கொடுத்த வசனத்தைத்தான் ஒரே ஷாட்டில் சிவாஜி பேசி நடித்தார். இப்படியாக அன்றைக்கு சிவாஜியின் கோபத்தை தணித்தேன்.

இப்போது மெட்டி ஒலியில் நடித்த பெரியவர் பற்றி நாடு முழுக்க பேசப்படுகிறது. மாமியார் கேரக்டர் பற்றியும் பேசுகிறார்கள். வீடு கெடுவதற்கு மாமியாரும், நாடு கெடுவ தற்கு சாமியாரும் காரணம். நான் எல்லா மாமியாரையும், சாமியாரையும் சொல்லவில்லை.

இந்த தொடரில் கெட்ட மாமியாராக இருந்து ஒரு சோக நிகழ்ச்சியின் மூலம் திருந்துகிற நல்ல மாமியாராகி விடுகிறார். இந்த தொடர் முழுவதும் ஒரு குடும்ப கதை. பாரதத்தில் வருகிற பல சிறுகதைகளை ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. 5 பெண்கள் பற்றிய கதை. பாரதத்திலும் 5 பேர் தான் வருகிறார்கள்.

மெட்டி ஒலி வரவேற்பு பலகையில் 12 உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயும் 12 பேர் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டை யாரும் அலட்சியம் செய்யாதீர்கள்.

கலைஞரின் பேச்சு வழக்கம் போல் ரசிக்கத்தக்கதாகவும் விஷயங்கள் நிறைந்ததாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருந்தது. 'எச்சில் வசனம்' என்று சிவாஜி தூக்கியெறிந்ததை சவாலாக எடுத்துக் கொண்டு, ராவோடு ராவாக புதிய வசனம் எழுதிக் கொடுத்தது; பெரும்பாலான உரையை 'குறிப்பு'களைப் பார்க்காமலேயே உரையாற்றியது; அந்தக்காலத்தில் எழுதியதை இன்றும் நினைவு கூர்ந்தது; இந்த வயதிலும் மொழி பிழறாமல் அசத்தலாக உச்சரித்தது;

மேற்கத்திய உலகைப் போல் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் நேரடி விவாதம் வைத்தால், தேர்தல்களில் அதிமுக ஜெயிக்கவே முடியாது!
-பாலாஜி

1 கருத்துகள்:

வெகு நாளைக்குப் பிறகு., கலைஞரின் பேச்சை கேட்ட நிறைவு. நன்றி பாலா!!.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு