புதன், ஜூன் 22, 2005

குமுதம் ஹெல்த்

எதற்குமே அனுசரித்துப் போகாதவர்கள் மனநோயாளிகளா?

ப்ரியா ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கம்பெனி எடுக்கும் பல முடிவுகளை இவரிடம் இறுதியாக ஆலோசித்து எடுக்கும் அளவிற்கு திறமைசாலி. கை நிறைய சம்பளம். வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். எல்லா திறமைகள் இருந்தும் இவரது குடும்பத்தார் முதல் கம்பெனி வாட்ச்மேன் வரை முகம் சுளிக்க வைக்கும் ஒரு குறைபாடும் இவரிடம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் யாரையும் எதையும் எதற்காகவும் அனுசரித்துப் போகவே மாட்டார். தான் சொன்னால் சொன்னதுதான். அதில் மாற்றமே இல்லை என்பதில் கொஞ்சம் அதிகப்படியான பிடிவாதமாக இருந்தார். அதனால் பல வழிகளில் இவர்மேல் பலருக்கு வெறுப்பு.

எல்லோரும் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டார். எதையும் அனுசரித்துப் போகாததால் (Adjustment disorder) இவருக்குள் எழுந்த உள்மனப் போராட்டம் இவரை நடைப்பிணமாக்கிவிட்டது.

சில சமயம் விரக்தியாகப் பேசுவார். சில சமயம் எரிந்து விழுவார். யாருடனும் ஒட்டாமல் தனிமையில் இருந்தார். குறிப்பாக ஆண்களை அனுசரித்துப் போகவே கூடாது என்பது அவரது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை மனதளவில் முடக்கிப் போட்டுவிட்டது. விளைவு, அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாமல், கை கால் பலம் இழந்து, கன்னம் ஒட்டிப்போய் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலைக்கு வந்துவிட்டார். அதன் பிறகுதான் வேறு வழியில்லாமல் மனநல மருத்துவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

இவருக்குள் இருக்கும் அனுசரித்துப் போக முடியாத மனநிலை தான் இவரது மனநலக் கேட்டிற்குக் காரணம் என்று மருத்துவர் கூறிவிட்டார்.

நமக்கு வரும் பல மனநோய்களுக்கு நம்முடைய உள்மனம் தான் காரணம். உள்மனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலர் உணர்வுபூர்வமாக கொதிப்படைந்து பேசுவதும், தாறுமாறான எண்ணங்களைக் கொள்வதும்தான் மனநலக்கேடுகள் வர மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன. உள்மனத்தில் ஏற்படும் குறைபாடு மேல் மனக்கோளாறாக மாறும்போது உடலிலும் பலவித நோய்கள் வெளிப்படும் என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.

அச்சப்படுவது, வெட்கப்படுவது, எரிச்சல் அடைவது, எதிலும் அனுசரித்துப் போகாத போக்கைக் கடைப்பிடிப்பது, ஆதங்கப்பட்டுப் பேசுவது என்று சின்னச்சின்ன உணர்வுகள் உள்மனத்தின் வேலையாக நம்மை ஆட்டிப் படைப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

காரணங்களும் அறிகுறிகளும் :-

  • சிலருக்கு புதிய சூழ்நிலையில், புதிய வேலையில் சேர்ந்தால் அனுசரித்துப் போக முடியாமல் போகும். ஆனால் நாளாவட்டத்தில் அதை அவர்கள் சரி செய்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு புதிதாக யார் வந்தாலும் அனுசரித்துப் போக மனம் வராது.

  • தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்காத பட்சத்தில் அவர்களை எதிராளியாக நினைக்கத் தொடங்கிவிடுவர்.

  • தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற மனோநிலை அடிக்கடி எழும்.

  • தன் பரம்பரை பற்றி தற்பெருமை அதிகம் பேசுவார்கள். இந்த சென்னை மாநகரமே தன் மூதாதையர் நிர்மாணித்ததுதான் என்ற ரீதியில் கூட அவர்கள் பேச்சு எழும்.

  • திருமணமான பெண்கள், மாமியாருக்கு அடங்கி நடப்பதுபோல் தெரிவார்கள். ஆனால் ஏறுக்குமாறாக எதையாவது செய்து வைப்பார்கள். கணவருக்கும் சமுதாயத்திற்கும் பயந்து தன்னுடைய அனுசரித்துப் போக முடியாத நிலையை - வெளிப்படுத்த முடியாத நிலையில் இப்படி நடந்து கொள்வார்கள்.

  • சிலருக்குக் குறைவாக இருக்கும். சிலருக்கு மிதமிஞ்சி இருக்கும். இதில் ஆபத்து என்னவென்றால், மிதமிஞ்சி இருப்பவர்கள் வெளியில் காட்டமாட்டார்கள். அதனால்தான் அவர்களின் உள்மனம் அவர்களை தேவையற்ற எண்ணம் கொள்ளச் செய்து மனக்கேடுகளை உருவாக்கி விடுகின்றது.

    அனுசரித்துப் போகாதது ஒரு பெரிய பிரச்னையா? இதைப் போய் எப்படி மனநோய் லிஸ்ட்டில் சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்புவர்கள் இருக்கிறார்கள். அப்படி கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான் ப்ரியா போன்றவர்கள் மனநலம் கெட்டு சிகிச்சை வரை வந்து போக வேண்டியதாகிவிட்டது. அனுசரித்துப் போக முடியாத மனநிலை கொண்டவர்களுக்கு, அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர, கீழே சொல்லப்பட்டுள்ள யோசனைகள் உதவக்கூடும்.

    1. நடத்தை சிகிச்சை:

    அனுசரித்துப் போக முடியாத மனநிலைக்கு உட்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் காரணங்களை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள். யார் யாருடன் எந்தந்த காரணங்களுக்காக நம்மால் அனுசரித்துப் போக முடியவில்லை என்று எழுதிப் பாருங்கள். திரும்பப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே சில விஷயங்கள் சிரிப்பைத் தரலாம். சில விஷயங்கள் உங்கள் மேலேயே கோபத்தை ஏற்படுத்தும். நாம் அதில் கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாமே என்று உங்கள் மனமே சொல்லும். இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, மறுநாள் அவர்களிடம் அனுசரித்துப் போக முயற்சி செய்யுங்கள். நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போனால், அவர்கள் அதைவிட இருமடங்கு உங்களுடன் அனுசரித்துப் போவார்கள்.

    2. மனதையும் உடலையும் தளர்வுபடுத்துங்கள்:

    உங்கள் உடலும் மனமும் ஸ்டிப்பாக இருப்பதால்தான் உங்களுக்கு இந்த மனநிலை. அதனால் ஓர் அமைதியான தனி இடத்தில் படுத்துக்கொண்டு கைகால்களை அவற்றின் போக்கில் விட்டு உடம்பைத் தளர்த்தும் பயிற்சியில் ஈடுபடுங்கள். அதே போல் மனதையும் தளர்ச்சிகொள்ள, எந்த துன்பம் தரும் எண்ணத்தையும் இந்த சமயம் நினைக்காதீர்கள்.

    3. உடற்பயிற்சி, யோகா, தியானம்:

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் முடிந்தளவு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்திற்கு இது உதவும். யோகா, தியானம் மனத்தை ஒரு முகப்படுத்தும்.

    4. நல்ல தூக்கம்:

    தூங்கி எழுந்த பின் உங்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் நீங்கள் நல்ல மூடில் இருப்பீர்கள். கண் எரிச்சல், மனத்திற்குள் ஒரு வித பயம், பதற்றம் இருந்தால் நீங்கள் சரியாகத் தூங்கவில்லை. நல்ல மனநிலையில் இல்லை என்று பொருள். எனவே குறைந்தது 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்காக நல்ல நூல்களைப் படிப்பது, தூக்கம் வரும் வரை இசை கேட்பது நல்லது.

    5. புகை, மது கூடவே கூடாது:

    பிறருடன் அனுசரித்துப் போக முடியாதவர்கள், துணைக்கு நாடுவது புகையையும் மதுவையும்தான். இது இம்மனநிலையை மேலும் மோசமடைய வைக்கும். அதனால் புகை, மது கூடவே கூடாது.

    6. போட்டி மனம் வேண்டாம் :

    தேவையில்லாமல் பிறருடன் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. போட்டி மனம் தான் உங்களை பலவீனப்படுத்தி, மற்றவர்களுடன் அனுசரித்துப் போகவிடாமல் செய்யும்.

    7. சமூக உறவைப் பலப்படுத்துங்கள்:

    தோழமையுள்ள நல்ல சமூக உறவை மற்றவர்களுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக முயன்றாலே இம்மனநிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களைத் தவிர்த்து விடலாம்.

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு