வியாழன், ஜூன் 23, 2005

சச்சின்

மூன்று பொங்கல் படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினியின் ஐ.எஸ்.ஓ. 9000 முத்திரையுடன் சந்திரமுகி வெற்றி.

ரஜினி திரைக்கதை எழுதினால் 'பாபா'. கமல் எழுதினால் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. நடிகர்கள் திரைக்கதை அமைத்தால் அறுவை. கமலின் சில படங்கள் மனதை வருடும். சிரிப்புக்காக வருபவை மனதில் தங்கும். மசாலா கூட 'கிஸ்ஸை பாருங்கப்பா' என்று பேச வைக்கும். கமல் ரசிகர்களே 'Take a break... Kamal' சொல்ல வைக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி.

விஜய்யும் மூன்று விதமான படங்களில் நடிக்கிறார். கதாநாயகிகளை நம்பி எடுக்கும் படங்கள் முதல் வகை. அதிரடி சண்டைக் காட்சிகளை மசாலா தூவி கொடுக்கும் படங்கள். கடைசியாக ஷாஜஹான், யூத் போன்ற காதல் படங்கள்.

கத்திரிக்காயைக் கண்டாலே எனக்கு ஆகாது. கத்திரி பிட்லாவை நன்கு வதக்கி காய் தெரியாவிட்டாலும், உட்பொருளில் கத்தரிக்காய் இடம்பெற்றிருக்கிறது என்றால் பகிஷ்கரிப்பேன். ஒரு காலத்தில் விஜய் படம் என்றாலே aversion. மோகினி, சங்கவி, நாயகிகளை அரையாடையில் திரையில் நீச்சலடித்ததால் சில வெற்றிகளை அடைந்தார். விஜய் ரசிகர் அல்லாத என்னைப் போன்றோரைக் கூட 'பூவே உனக்காக', 'மின்சார கண்ணா' போன்ற மென்மையான இயக்குநர் காவியங்களின் மூலம் கவனிக்க வைத்தார்.

சச்சின் மற்றுமொரு இதமான படம். திருப்பாச்சி, மதுரவின் சத்தம் இல்லாமல், தன்னுடைய பன்ச் வசனங்களை தானே கிண்டலடித்துக் கொள்ளும் பதிவு. கல்லூரிப் பெண்கள் அடிக்கடி சொல்லும் 'So silly', 'Shut up' போன்ற பிரயோகங்களை அதே மாதிரி உபயோகிக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்திற்கு மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்னும் பயம் உண்டு. படம் நெடுக தேவையற்ற போலித்தனங்கள் சாடப்படுகிறது.

ஜோதிகாவின் அதீத சுட்டித்தனத்தாலும் சூர்யாவின் மீதான வாலி எதிர்பார்ப்புகளினாலும் மும்தாஜின் நடிப்பினாலும் 'குஷி' கொட்டாவியாக இருந்தது. காய்கறிக்காரன் கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுக் கொடுப்பது போல் பாய்ஸ் நாயகியும் கொஞ்சமே கொஞ்சம் செயற்கை காண்பிக்கிறார். ஆனால், கல்லூரிப் பெண்களிடையே இவ்வித செயற்கைத்தனம் இயல்பு. உதட்டளவில் ஹாய் சொல்வது, நவீன இலக்கியத்திற்காக மேஜிகல் ரியலிஸம் எழுதும் படைப்பாளி போல் நாகரீகத்திற்காக உவப்பில்லாத ஆடைகளை அணிவது, தனிமையில் சுதந்திரத்தை ரசிப்பது என்று பதின்மர்களை படம் பிடித்திருக்கிறார்கள்.

இளைய தளபதி இயல்பாக வந்து போகிறார். இரண்டே சண்டைக் காட்சிகள். காலேஜ் கோமாளித்தனங்கள். சச்சினாக விஜய் வருடத்துக்கு ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

5 கருத்துகள்:

// 'மின்சார கண்ணா' போன்ற மென்மையான இயக்குநர் காவியங்களின்//

"மின்சார கண்ணா" மென்மையான இயக்குனரின் காவியமா ? நல்ல காமெடி சென்ஸ் உங்களுக்கு :-)

தலைவர் இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கும் அளவு மென்மையான இயக்குநருங்க ;-)

//சச்சினாக விஜய் வருடத்துக்கு ஒரு முறையாவது நடிக்க வேண்டும். //

பாபா விஜய் நல்லாருக்றது புடிக்கலியா?

;-)

பொங்கல் படங்களா? புத்தாண்டு வந்து 75 நாள்தான் போயிருக்குபா!

மும்பை எக்ஸ்பிரஸ்ஸோடு பாபாவை கம்பேர் பண்ணிட்டீங்களே! பாபாவோட வெயிட் வெளியே தெரிய இன்னும் கொஞ்சம் நாளாகும். அதுவரை நற...நற..!

>> பொங்கல் படங்களா?

அச்சச்சோ... மன்னிக்கவும் :-)

>>மும்பை எக்ஸ்பிரஸ்ஸோடு பாபாவை கம்பேர்

ரெண்டும் போர் அடிக்கிறது. ரஜினி ரசிகனால் பாபா-வைத் தாக்குப்பிடிக்க முடியும். கமல் விரும்பியும் கஷ்டப்பட்டாவது முழு மும்பையும் பார்த்து விடுவான். ஆனால், ஒப்புமையில் இரண்டுமே தொய்வாகத் தெரிகிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு