வியாழன், ஜூன் 23, 2005

அமுதசுரபி - ஜூன் 05

வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி:: கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும். 2005 ஜூன் முதல் 2006 ஏப்ரல் வரை மாதம்தோறும் ஒரு சிறுகதை, முத்திரைக் கதையாகத் தேர்வுபெற்று அமுதசுரபியில் வெளியாகும். கதைகளை அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கதைகள், அமுதசுரபியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்.

மாதம்தோறும் சிறந்த ஒரு கவிதை தேர்வாகும். கவிதை, எந்தக் கருப்பொருளிலும் இருக்கலாம். முப்பது வரிகளுக்குள் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கவிதைக்கு ரூ. 500 பரிசு வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.



ஒருத்தி படுத்தும் பாடு

முந்தைய தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் உள்ள படைப்பாளிகளிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னவர் பலர், பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகம் எனச் சென்று முறையான கல்வி பெற்றதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் நிறைய வாசித்தனர். இன்றைய படைப்பாளிகளோ, முறையான கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெறுகிறார்கள். ஆனால், இவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் முறையான கல்வி பெற்ற - பெறாத படைப்பாளிகள் இடையிலான ஊடாட்டங்கள் பல. அவற்றுள் சிலவற்றை முறையான கல்வி கற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இங்கு இலேசாகத் தொட்டுக்காட்டுகிறார்.


பண்டிதர், பண்டிதர் அல்லாதார் எனப் படைப்பிலக்கியவாதிகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். முறையாகக் கல்வி கற்றவர்களைப் பண்டிதர்கள் என்று சொல்லலாம். கல்விக் கூடங்களில் முறையாகப் பயிலாதவர்களைப் பண்டிதர் அல்லாதார் வரிசையில் சேர்க்கலாம். முனைவர் மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி இவர்களெல்லாரும் பண்டிதப் படைப்பாளிகள். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்றோர் பண்டிதர் அல்லாத படைப்பாளிகள்.

பண்டிதர் அல்லாத படைப்பாளிகள் முறையாகக் கல்வி கற்கவில்லையே தவிர மற்றபடி மெத்தப் படித்தவர்களே. தனிப்பட்ட முறையில் அவர்கள் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்துத்தள்ளியிருப்பார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் எப்படி எழுத்தாளர் ஆக இயலும்?

ஜெயகாந்தன் முறையாகக் கல்வி கற்றதில்லை. ஆனால் பழைய இலக்கியங்கள் பலவற்றையும் வரிவரியாகப் படித்தவர். பாரதி விழாவொன்றில் பேசும்போது 'மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!' என்ற பாரதி வாசகம் பற்றி ஜெயகாந்தன் சொன்னார்: 'மாதர்களை நாமா இழிவு செய்கிறோம்? தேவையற்ற ஆடம்பர உடைகள் மூலமும் அணிமணிகள் மூலமும் மாதர்களே அல்லவா அவர்களை இழிவு செய்துகொள்கிறார்கள்? ஆகையால்தான் மகாகவி சொன்னார், மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று!' இப்படி ரா.அ. பத்மநாபன், சீனி விஸ்வநாதன் போல ஆய்வு நோக்கில் கருத்துச் சொல்ல வேண்டுமானால் பாரதி இலக்கியத்தை எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. ஜெயகாந்தன், முறையாகக் கல்வி கற்ற பண்டிதர் அல்லா விட்டாலும் இளமைக் காலங்களில் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நட்புறவில் ஏராளமான பழைய இலக்கியங்களைத் தனிப்பட்ட முறையில் பயின்றதுதான் அவரது எழுத்தின் இலக்கியச் செழுமைக்குக் காரணம். (இதைப் புதுமைப்பித்தனையும் அழகிரி சாமியையும் ஜானகிராமனையும் கூடப் படிக்காமல் இன்று எழுத வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.)

புதுவைப் பல்கலை முன்னாள் துணை வேந்தரான அமரர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் அழைப்பை ஏற்று, முறையாகக் கல்வி கற்காவிட்டாலும் புதுவைப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் கி.ராஜ நாராயணன். தமக்கு ஆங்கில இலக்கிய அறிவு சுத்தமாகக் கிடையாது என்பது போல் சொல்லிக்கொள்வார். ஆனால் அவரிடம் உரையாடும் போது ஆங்கில இலக்கியங்கள் குறித்து அவர் பேசும் பேச்சு பிரமிக்க வைக்கும்.

உயர்கல்வி கற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன சிலர் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் போல் தோற்றம் காட்ட முயன்றதுண்டு. (பழைய தீபாவளி மலர்களில் அப்படிப்பட்ட சிலரது மிகச் சராசரியான படைப்புகளை நாம் பார்க்க முடியும்.) நல்ல எழுத்தாளர்களாக இருந்த மிகச் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உண்டு. வி.எஸ். சுப்பையா ஐ.ஏ.எஸ். எழுதிய, அஞ்சல் ஊழியரைக் கதா நாயகனாகக் கொண்ட 'இரட்டை வாழ்க்கை' என்ற நாவல் எளிமையான நடையில் எழுதப்பட்ட ஒரு நல்ல படைப்பு. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ. இறையன்பு, நல்ல கட்டுரை யாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். (சிறந்த கட்டுரையாளரான பேராசிரியை வெ.இன்சுவையின் சகோதரர்.) எஸ்.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்., சிறந்த பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதிய படைப்பாளி. அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு "பிரயாணம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதற்கான நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி உள்பட, பலர் பங்கேற்றார்கள்.

ஜெயகாந்தன் "இலக்கணத்தை மீறலாம். இலக்கணம் அறிந்து ஒரு தேவை கருதி மீற வேண்டும். அப்படித் தேவை நேர்ந்தால் நான் மீறுவேன். அறியாமையால் இலக்கணத்தை மீறுவது சரியல்ல' என்று கருத்துச் சொன்னார். பிறகு சில மாதங்கள் கழித்து ஆனந்த விகடனில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற தொடரை அவர் தொடங்கினார். "இலக்கணப்படி ஓர் உலகம் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் என் கதாநாயகன் ஹென்றியின் தனித்த உலகம் என்பதைப் புலப்படுத்தவே ஒரு உலகம் என இலக்கணத்தை மீறி எழுதுகிறேன்' என்று அவர் விளக்கமளித்தார்.

நா.பா.வுக்கு கல்வியை முறையாக மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தீராத வேட்கை இருந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரி மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐம்பது வயதுக்கு மேல் முத்து கண்ணப்பரிடம் சேர்ந்து முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வையும் முடித்தார். ஆனால் பிஎச்.டி. பட்டம் வரவிருந்த தருணத்தில் அதைப் பெற இயலாமலே காலமானார்.

கல்வியாளர்கள் சிறந்த படைப்பிலக்கிய கர்த்தாக்களாக இருக்கமாட்டார்கள் என்பதாக தமிழ் எழுத்தாளர்களிடையே முன்பு பரவலாக ஒரு கருத்து இருந்தது. பிரமிள் கூட இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். இ.பா. போன்றவர்கள் வந்த பிறகுதான் இத்தகைய கருத்து மாறத் தொடங்கியது. 'தமிழின் பழைய இலக்கியங்களைப் படித்தால் சிறந்த படைப்பிலக்கியவாதி ஆவதை அது தடுத்துவிடும்' என்பது போன்ற அபத்தமான கருத்துகள் கூடச் சில சிறு பத்திரிகைகளில் எழுதப் பட்டது உண்டு.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு