அன்னியன் தேவை
வி.விவேகா : Junior Vikatan.com :: மதுரை பஸ் ஸ்டாண்டு...
பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு ஆள் வந்தான். அவன் கையில் ஒரு துணிப்பை. சுற்றுமுற்றும் பார்த்தபடி என்னிடம் பேச ஆரம்பித்தான். நானும் அவனை ஒருவித சந்தேகத்துடன் கவனித்தேன். அவனிடமிருந்த பையை பிரித்து என்னிடம் காட்டினான். அதில் புத்தம் புதிய புடவைகள்.
"நான் ஒரு ஜவுளிக்கடையில வேலை பார்க்குறேன். ஜவுளி பார்சல்களை லாரிகளில் இருந்து இறக்கி வெச்சதால கூலியா கிடைச்சது. இந்த மூணு புடவைகளையும் எடுத்துக்கங்க! இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்" என்று திடீர் வியாபாரம் பேசினான். அந்தப் புடவைகளின் மதிப்பு நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். என்னதான் இலவசமாகக் கிடைத்தாலும், இவ்வளவு விலை குறைச்சலாக யாரும் விற்க மாட்டார்கள்! 'எங்கேயாவது திருடின புடவையாக இருக்கும்' என்று நினைத்து, 'வேண்டாம்பா' என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
இருந்தாலும் விடாப்பிடியாக என்னைத் துரத்திய அந்த ஆள், ஐம்பது ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்டான். அப்போதும் நான் மசியவில்லை. ஒருகட்டத்தில், "நீங்க சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன். அது சரிதான்! திருட்டுப் புடவைங்கதான் சார். ஆனா, புது புடவை. என்னால தினமும் தண்ணிப் போடாம இருக்க முடியாது. அதுக்காகத்தான் திருடினேன். காசுக்காக விக்கிறேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தான். நான் அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால், எனக்கு பின்னால் வந்த ஒரு நபர், அதே புடவைகளை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்று விட்டார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டு, அந்த ஆள், அருகில் இருந்த ஒயின்ஷாப் பக்கம் ஒதுங்கியதை பார்த்தேன். இந்தமாதிரி திருடர்களை நாம் புறக்கணிக்காதவரையில் அவர்கள் திருட்டுத் தொழிலை எந்நாளும் விடமாட்டார்கள். பொருள் வந்தவிதத்தைப் பார்க்காமல், திருடர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான நபர்களும் திருடர்கள்தான் என்பதை உணர்வார்களா?
கருத்துரையிடுக