வெள்ளி, ஜூலை 01, 2005

சுகுமாரன்

க.நா.சு. - நினைவோடையில் துலங்கும் முகம் ::

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது. க.நா.சு. தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை 'சாமி' கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல. எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.

2 கருத்துகள்:

Excellent article by Sugumaran. Thanks for this post.

- suresh kannan.

சுரேஷ்,

இந்த மாசத்து புத்தக உலகத்துல சுகுமாரன் கேரளத்து பாலியல் கொடுமைகள் பத்தி பிரமாதமா ஒரு கட்டுரை எழுதியிருக்கார். முடிந்தால் நானும் தட்டச்சுகிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு