வெள்ளி, ஜூலை 01, 2005

சோலை

Kumudam REPORTER ::

காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் செயல் தலைவி.

முன்னர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். லக்னோவில் தந்தை பெரியாருக்கு சிலை வைக்க முயன்றார். மேட்டுக்குடியினர் சீற்றம் கொண்டனர். போர்க்கோலம் பூண்டனர். பெரியாருக்கு சிலை வைக்கும் அளவிற்கு, அவர் பிராமண எதிர்ப்பில் ஈட்டி முனையாக இருந்தார்.

பிராமண சமுதாயத்திற்கும் பி.ஜே.பி.க்கும் அவர் சூட்டிய பெயர் மனுவாதிகள் என்பதாகும். அதாவது பிறப்பால் நால்வருணத் தத்துவத்தைச் செயல்படுத்துகிறவர்கள் என்று பொருள். அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குத்தான் பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிராம் தொடங்கினார். மேட்டுக்குடியினருக்கு மேலே தலித் மக்களை வானவில்லில் குடியேற்றி வாழ்வளிப்போம் என்று பிரகடனம் செய்தனர்.

சமுதாயத்தின் இருண்ட குகைக்குள் பயணம் செய்த தலித் மக்களுக்கு அந்தக் கட்சி விடிவெள்ளியாக மினுமினுத்தது. எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பிராமணர்கள்தான் என்ற போதத்தை அவர்கள் நம்பினர். பிராமண எதிர்ப்பில் பிறந்த பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மாவட்டந்தோறும் மாநாடு நடத்தியது. பின்னர் மாநில மாநாட்டையும் மங்களகரமாக நடத்திவிட்டது. என்ன மாநாடு? பிராமணர் மாநாடுதான்.

தலை வணங்காத் தலைவி என்று கருதப்பட்ட அந்த அம்மணி, மாநில மாநாட்டில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்கின. பூரணகும்ப மரியாதைதான். நன்றாகவே தலை வணங்கினார். பிராமணர்களுக்கு சந்தனத் திலகமிட்டார். தலித் மக்கள் அடக்கப்பட்டவர்களாம். பிராமண மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாம். இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாம். இவர்களுடைய அணிதான் தமது லட்சியம் என்று மாயாவதி அறிவித்தார்.

முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இந்த மூன்று சமுதாயங்களும் பின்னணியாக இருந்தன. அந்தப் பழைய நினைப்பில் இப்போது தலித், இஸ்லாமிய, பிராமணர் கூட்டணிக்கு முயல்கிறார். மாநில மக்கள் தொகையில் தலித்துகள் 21 சதவிகிதம்; பிராமணர் 20 சதவிகிதம்; இஸ்லாமியர் 15 சதவிகிதமாக உள்ளனர்.

அரசியலில் எட்டு அடிக்குள் எந்த மாளிகையும் எழுப்ப முடியாது. தலித் வாக்கு வங்கியை மட்டும் நம்பி சிம்மாசனத்திற்குச் செல்ல முடியாது என்பதனை அவர் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவிகிதத்தினர் பிராமணர்கள்தான். அவர்களைக் காங்கிரஸ் கைவிட்டது! அந்தச் சமுதாயத்தின் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் கண்டு கொள்ளவில்லை.

1991-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இப்போது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் அன்றைக்கு ஒரே தொகுதியில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ் இன்று 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு 221 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இன்று 80 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அன்றைக்கு 12 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் இன்று 98 தொகுதிகளில் வென்றது.

பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மூன்றுமுறை ஆட்சி அமைத்தது. முதல்வராக ஒரு பிராமணருக்குக் கூட முடி சூட்டியதில்லை. மாநில பி.ஜே.பி. தலைவராக ஒரு பிராமணர்கூட வீற்றிருந்ததில்லை. ஆனால், அந்தச் சமுதாயம்தான் பி.ஜே.பி.யின் அடித்தளமாக இருந்தது.

பிராமண சமுதாயத்தில் பி.ஜே.பி. இழந்து வரும் செல்வாக்கை பகுஜன் சமாஜ் கட்சி சுவீகரிக்க விரும்புகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் கட்சி 25 சதவிகித வாக்குகள் பெற்றது. இப்போது மேல் தட்டினர், நடுத்தர மக்களின் வாக்கு வங்கியில் குறி வைக்கிறது. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, நேற்று வரை சண்டை போட்ட மேல் நிலைச் சமுதாயத்தின் பொற்பாதங்களில் விழலாம் என்று முடிவு செய்துவிட்டது. எனவே, பிராமணர் மாநாடுகளை நடத்துகிறது.

அந்தச் சமுதாயத்தைக் கந்தகச் சொற்களால் விமர்சித்தே வளர்ந்த பகுஜன் கட்சியை பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் மாயாவதி மனுவாதத் தத்துவம் பேசினால் என்ன செய்வது? கண்களில் கனவுகளைத் தேக்கி இருப்பவர்கள் இப்படி கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஊர் மணக்கும் அந்தர்பல்டிகள், உலகம் அறிந்ததுதான். ஒவ்வொரு தேர்தலிலும் மதவாத பி.ஜே.பி.யோடு மல்லுக்கட்டும். ஊது உலையில் சூடேற்றப்பட்ட நெருப்புக்கனிகள்தான் விமர்சனங்கள். தேர்தல் தீர்ப்பு வெளியானதும் அரியணைக்காக அந்த மனுவாதக் கட்சியுடன் பேரம் பேசும். கூட்டணி காணும். முதல் இரண்டரை ஆண்டுகள் மாயாவதியே முதல்வர் என்று உடன்பாடு காணும். இப்படி பி.ஜே.பி.யின் முதுகில் ஏறி மாயாவதி இரண்டு முறை முதல்வரானார். இதனை ஜனநாயகத்தின் அதிசயம் என்று வாஜ்பாய் கூட இசை பாடினார்.

ஆனால் அந்த இரு முறையும் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற அம்மணி அனுமதிக்கவில்லை. கொட்டிக் கவிழ்த்துவிட்டார். பி.ஜே.பி.யின் கனவு கங்கையில் வெள்ளப் பெருக்கே ஏற்படவில்லை.

அதே பாடத்தை இன்றைக்கு பிராமண சமுதாயத்திற்கும் மாயாவதி படித்துக் காட்டலாம் அல்லவா? எனவே உதவிக்குப் போகும் கரங்கள் சொர்க்கத்தையும் எதிர்பார்க்க வேண்டும். சூன்யத்தையும் எதிர்நோக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஜாதிக் கட்சிகளுக்குத்தான் அங்கே சலங்கை கட்டியிருக்கிறார்கள். யாதவர்-ராஜபுத்திரர் இஸ்லாமியர் என்று ஓர் அணியை உருவாக்க முலாயம் சிங் முயல்கிறார். எனவே தாமும் ஜாதிக் கூட்டணியை உருவாக்க மாயாவதி முனைகிறார்.

பிராமண சமுதாயத்திற்கு நைலான் வலை விரிக்கின்ற வேலையை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 பிராமணர்களுக்குத் தேர்தல் டிக்கெட் தந்தார். எட்டுப் பேர்தான் வெற்றி பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு பேரை நிறுத்தினார். பிரிஜேஷ் பதக் என்ற ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

மாயாவதி முதல்வராக இருந்த போது சதீஷ் மிஸ்ரா என்ற பிராமணர், அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அவரை ராஜ்ய சபைக்கு அனுப்பியிருக்கிறார். அக்கிரகாரத்து நந்தவனங்களில் பட்டாம்பூச்சிகள் பிடிப்பதில் அவர் வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இனம் புரியாத மோதல் இருந்ததாம். இப்போது இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே மாயாவதி மகிமையால் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டதாம். பிரதான அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பிராமண சமுதாயம், இனி தலை நிமிர்ந்து நிற்கும் என்கிறார் இந்த மிஸ்ரா.

வெளவால்கள் குடியிருக்கும் வீட்டிற்குப் போனால் நாமும் தலைகீழாகத் தொங்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிராமண சமுதாயத்திற்கும் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

மாவட்டந்தோறும் சகோதரத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைவரும் துணைத் தலைவரும் பிராமண சமுதாயத்தினர். செயலாளர் சேரியில் பிறந்தவர். சமூக நல்லிணக்கத்திற்கு இதுதான் சரியான வழி என்கிறார் மாயாவதி.

இப்போது அந்தச் சமுதாயத்தின் மீது அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்திருக்கிறது. காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய கட்சியை முலாயம் சிங் உடைத்தார். தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விலை போயினர். ஆனால் ஒரு பிராமண எம்.எல்.ஏ.கூட சோரம் போகவில்லை. அதன் பின்னர் தான் அந்தச் சமுதாயத்தை முழுமையாகக் கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பி.ஜே.பி.யில் உள்ள மூத்த தலைவர்கள் பலருக்குக்கூட இப்போது சிந்தனை மாறியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் நம்பிக்கையான அரசியல் அரங்கம் என்றால் அதன் பின்னே அணிவகுக்கத் தயாராகிறார்கள். அந்த அளவிற்கு மாயாவதி நடத்திய பிராமண மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தையே உலுக்கி எடுத்திருக்கின்றன.

வாஜ்பாய் கூறியது போல இது ஜனநாயக அதிசயமா? அல்லது பொம்மலாட்டமா? என்பது மீண்டும். அம்மணி முதல்வரான பின்னர்தான் தெரியும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு