வெள்ளி, ஜூலை 08, 2005

சத்குரு ஜக்கி வாசுதேவ்

அத்தனைக்கும் ஆசைப்படு! ::

'ஈஷா யோக மையம்' கிராமப் புத்துணர்வு இயக்கத்தில் இவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறதே, உங்களுக்கு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?' என்று என்னை ஓர் இளைஞர் கேட்டார். எனக்கு அந்தக் கேள்வி வேடிக்கையாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

'வீட்டுக்குப் போய் உங்கள் தாயிடம் கேளுங்கள்... உங்களைப் பெற்றெடுத்தபோது பால் கொடுத்தாளே, அதற்கு என்ன உள்நோக்கம் என்று? அதே உள்நோக்கம்தான் எனக்கும்!' என்று அந்த இளைஞரிடம் சொன்னேன். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆதாயம் இல்லாமல், உள்நோக்கம் இல்லாமல் எதையும் செய்யத் தயாராக இல்லாதவர்களால் இந்தச் சமூகம் நிரம்பிவிட்டது. அதனால், யாவற்றையும் சந்தேகத்துடன் பார்ப்பதற்கே சமூகம் பழகிவிட்டது.

வாழ்க்கையைகணத்துக்கும் கணம் முழுமையாக அனுபவித்து வாழ வேண்டுமானால்,குறைவற்ற அன்பைச் செலுத்திப் பாருங்கள். மாறாக, வாழ்க்கையைக் கொடுக்கல் வாங்கலாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் நிம்மதி தொலைந்துவிடும்! எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

உங்களுக்கு மரியாதை என்பது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல. நீங்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதில்தான்! உங்கள் உண்மையான மதிப்பு, வெளியில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில்தான் இருக்கிறது!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு