புதன், ஜூலை 20, 2005

அ. ராமசாமி

தீராநதி ::

நோய்க் கூறுகள் நிரம்பிய சுதந்திர இந்தியாவின், குறிப்பாக, தமிழ்நாட்டின் நிகழ்காலச் சீர்கேடுகளுக்கான காரணங்களைப் பற்றிப் பேசும் அவரது படங்கள் - ஜெண்டில்மேனில் தொடங்கி இந்தியன், முதல்வன் வரை - எதிலுமே தமிழ் நாட்டுக் கிராமங்களைப் பற்றிய நினைவு வெளிப்பட்டதில்லை. அந்த வரிசையில் ஒரு புதுப்படமாக இல்லாமல் அவற்றின் தொடர்ச்சியாக வந்துள்ள அந்நியன் முற்ற முழுதாகக் கிராமத்தை மறந்த, கிராமத்தை மறுத்துள்ள ஒரு படம்.

அய்யங்காரின் சாகசங்கள்தான் அந்நியன்.

சோம்பேறி இளைஞன், படத்தின் தொடக்கத்தில் அம்பியின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த விட்டு, அவனது பின்கட்டுக் குடுமியைக் கேலி செய்து விட்டுப் போனவன் என்று காட்டுவது கவனித்திருக்க வேண்டிய ஒன்று. திராவிட இயக்கம் செய்த தீவிர எதிர்ப்புப் பிரசாரத்தால், பிராமணர்களின் அடையாளங்களான பூணூலும் பஞ்சகச்சமும் பின்கட்டுக் குடுமியும் கேவலமான அடையாளங்களாகப் பேசப்பட்டன என்பதும், தயிர்சாதமும் ஊறுகாயும் கேலிக்குரிய உணவுப் பொருட்களாகச் சித்திரிக்கப்பட்டன என்பதும் சென்ற நூற்றாண்டின் தமிழக வரலாற்றுக்காட்சிகள். (அடிவாங்கும் போது தன்னுடைய உடம்பு தயிர்சாதம் சாப்பிட்ட உடம்பு; அடியைத்தாங்கும் வலிமை அதற்கு இல்லை என்று அம்பி கூறுவதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்)

இந்த வரலாற்றுச் சொல்லாடல்களின் போது, பிராமணர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் அல்ல; வடநாட்டிலிருந்து வந்தேறிய குடிகள்; இன்னும் சொல்வதானால் இந்திய நாட்டிற்கே அந்நியர்கள்தான் என்றெல்லாம் வாதங்கள் நடந்தன.இந்தப் பின்னணியில் ஷங்கரின் படத்தைப் பார்க்கத் தொடங்கினால் அந்நியன் என்ற சாதாரண வணிக சினிமாவுக்குள் இருக்கும், அரசியல் அர்த்தங்கள் வேறுவிதமாக விரியத் தொடங்கி விடும். அப்பாவிப் பிராமணர்களை வகைமாதிரிக் கதாபாத்திரங்களாக்கி, ஒட்டுமொத்த பிராமணர்களையும் காப்பாற்ற நினைக்கும் அந்த அரசியல், நுண் அரசியல் அல்லாமல் வேறல்ல.

அம்மாஞ்சிகளாக இருந்த அம்பிகளின் அடையாளம் மார்கழி மாதப் பஜனையாகவும் திருவையாற்று பஞ்சரத்தின கீர்த்தனையில் பங்கேற்பதாகவும் இருந்தது. அவர்கள்தான் இன்று கம்ப்யூட்டர் மென்பொருட்களைத் தயாரிக்கத் தெரிந்த புத்திசாலிகளாகவும், மேற்கத்திய அறிவையும் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்த சேர்த்தவர்கள் என்பது நிகழ்கால உண்மை. அத்துடன் இந்தியப் பாரம்பரிய அறிவின்மீதும், கலைகளின் மீதும் பற்றுக் கொண்ட தேசப்பற்றாளர்கள்; ஜனநாயக நடைமுறைகளின் மீது நம்பிக்கை கொண்ட பொறுப்பான இந்திய மற்றும் தமிழகப் பிரஜைகள். இந்த உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், தங்களை இந்த மண்ணில் அந்நியர்களாகக் கருதும் போக்கு தொடரும் நிலையில், அவர்களின் அடிமனம் வன்முறையை நாடுகிறது என்கிறது படம்.

நோய்க் கூறு போல இருக்கும் இந்த அடிமன விருப்பம் வெறுக்கத்தக்கதல்ல; விரும்பத்தக்கது; தக்க வைத்துக் கொள்ள வேண்டியது என்றும் படம் பேசுகிறது. நீதிமன்ற ஆலோசனைப்படி அந்த உணர்வு வெளிப்படாமல் இருந்தால்தான் வெளிப்படையான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்பதை டாக்டரின் வழி அறிந்து கொண்ட அந்நியன், நடப்பு உண்மைகளை ஏற்றுக் கொண்டவனாக மாறி விட்டது உண்மை அல்ல; அது வெறும் நடிப்பு. அவனிடம் அந்த வன்மம் - அந்நியனாக மாறிக் கொலைகளைச் செய்து விடும் வன்முறை - இப்பொழுது இயல்பாக மாறி விட்டது என்பதுதான் படம் சொல்லும் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கை யாரை நோக்கி என்பது மட்டுமே படத்தில் தெளிவு படுத்தப்படவில்லை. எச்சரிக்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கலாம்; தனக்கு எதிரானவர்களுக்கும் இருக்கலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு