பாக்தாத் திருடன்
tamiloviam ::
இப்பொழுது ராஜா-ராணி கதைகள் திரைப்படமாக கிடைப்பதில்லை. என்றாலும், அதே மாதிரி கதைகளுடன் ஹீரோக்கள் நாடு கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட அந்தக்கால பன்ச் டயலாக் பேசி மீள்வது - படமாக்கப்பட்டுத்தான் வருகிறது.
1960-இல் வெளிவந்த படம் பாக்தாத் திருடன். ஆடல் அழகி வைஜெயந்தி மாலா ஜரீனாவாகவும் புரட்சிக் கலைஞர் ம.கோ.ரா. அபுவாகவும் இணைந்து நடித்த படம்.
இன்றைய கதாநயகர்களுடன் வலம்வரும் விவேக் போல் அந்தக்கால டி. ஆர். ராமச்சந்திரன்; வஞ்சகத் தளபதி 'கய்யூம்'-ஆக அசோகன்; போலி இளவரசர் 'ஹைதர்'-ஆக எம். என். நம்பியார்; சத்யராஜ் ஸ்டைலில் நக்கலடிக்கும் பிரதான வில்லனாக டி. எஸ். பாலையா; பிரதான வில்லியாக முதல்வர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா; இளவரசி சுபேரா-வாக எம். என். ராஜம்; நட்சத்திரப் பட்டியல் கொண்ட பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
துணைத் தளபதி அசோகனின் துணையுடன் ராஜ்யத்திற்காக பாலையா அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துகிறார். அரசனும் அரசியும் கொல்லப்படுகிறார்கள். உண்மை இளவரசன் பச்சிளங் குழந்தை 'அபு' பசுவோடுக் கட்டப்பட்டு தப்பிக்க வைக்கப்படுகிறார். திருடர் கூட்டத்தினரால் கண்டெடுக்கப்பட்டு வளர்கிறார். ராபின் ஹ¤ட் போல் இருப்பவர்களிடம் இருந்து திருடி, இல்லாதவர்களிடம் கொடுக்கிறார்.
அத்துமீறி அடிமைப்படுத்தி அதிகாரத்தை அளவுக்கு மீறிப் பாய்ச்சும் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கோ, தன்னுடைய கூட்டத்துக்கோ எந்தவிதமான மகிழ்ச்சியும் கிடையாது என்று சூளுரைக்கிறார் அபு. அனைத்து ஆதரவாளர்களிடமும் 'திருமணமோ காதலோ செய்யமாட்டேன்' என்று சத்தியமும் பெற்றுக் கொள்கிறார் ம.கோ.ரா.
அடிமைப் பெண் வைஜெயந்தி மாலாவை அபு மீட்டெடுக்கிறார். போராளிக் கூட்டத்தில் செய்த சத்தியத்தை முதல் ஆளாக மீறி, மணமும் முடிக்கிறார். சகாக்களை சமாதானம் செய்து, நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டி, நிறைய கத்திச் சண்டைகள், சமயோசிதமான திட்டங்களின் மூலம் அசோகன் - நம்பியார் - பாலையா கொண்ட மூவர் கூட்டணியை வீழ்த்தி உரிமையை நிலைநாட்டுகிறார்.
இன்று பார்த்தால் கூட சமீப கால நிகழ்வுகளுடனும் புதுப்படங்களுடனும் ஒப்பிடக் கூடிய திரைக்கதை வசனத்தை எழுதியவர் ஏ.எஸ். முத்து. இளவரசி சுபேரா பல்லக்கில் வெளியே வருவதற்கு முன் நகரவீதிகளில் இருக்கும் டிராஃபிக்கை நிறுத்தி வைக்கும் காட்சி இதற்கு எடுத்துக்காட்டு. செய்த குற்றம் என்னவென்று கேட்பதற்குக் கூட உரிமையில்லாமல்' தடா போன்ற அடக்குமுறைகளைக் கொண்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள் பொதுமக்கள்.
மருதகாசி நிறையப் பாடல் எழுதியிருக்கிறார். கோவிந்தராஜுலுவின் இசை காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.
தற்சமயத்தில் மட்டும் ரஜினி கீழ்க்காணும் வசனங்களைப் பேசியிருந்தால், முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி குறியீடாகப் பேசியதாக அர்த்தப்பட்டிருக்கும்:
'அநீதியைச் செய்வது மிருகத்தனம்;
அதைக் கண்டு ஒதுங்குவது கோழைத்தனம்;
எதிர்த்து ஒழிப்பதுதான் மனிதத்தனம்'
என்று தங்கள் சித்தாந்தத்தை முன் வைத்து அறிமுகமாகிறார் புரட்சித் தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன்.
"அதிகார போதையிலே அத்துமீறி நடக்கும் இறுமாப்புக்காரி... மக்களை மாக்களாக மதிக்கும் உன் மமதைகொரு முடிவு கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்!"
என்று அபு முழங்கும்போது வீட்டில் அடக்கியாளப்படும் கணவன்களுக்கு தாற்காலிகமான அகமகிழ்வும் மனைவியை நோக்கி உதட்டோர புன்முறுவலும் வந்திருக்கும்.
'சகலகலாவல்லவ'னில் வரும் 'கட்ட வண்டி... கட்ட வண்டி... காப்பாத்த வந்த வண்டி' என்பது போன்ற ஹீரோயினை நக்கலடிக்கும் பாடல் இருக்கிறது. மொட்டை பாஸ¤ம், (ஆட்டோவுக்கு பதிலாக) குதிரைக் கும்பலும் அனுப்பப் படுகிறார்கள். பத்து நிமிடத்துக்கொரு தடவை பாடலோ சண்டைக் காட்சியோ இடம் பெறுகிறது. நல்ல மசாலா படத்துக்குரிய இலக்கணம் என்றும் மாறாது.
அரசாங்கமே தண்ணீர் தட்டுப்பாட்டை உண்டாக்குகிறது. ஏமாளி பொதுமக்களிடம் அநியாய விலைக்கு தண்ணீரை விற்கிறது. குடிநீர் வசதி செய்து தர வேண்டிய அரசே பயிரை மேயும் சித்தரிப்புகள் படம் நெடுக சாடப்படுகிறது. தங்கள் கூட்டத்தின் திடீர் கொள்கை பரப்பு செயலாளராக காதலி செரீனாவை அபு அறிமுகம் செய்கிறார். நெடுநாள் விசுவாசிகளிடம் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், காலப்போக்கிலே தலைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
'தூள்' விக்ரமைப் போல அபுவும் சுற்றுப்புறச்சூழல் கேட்டினை எதிர்க்கிறார். நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கு பஞ்சதந்திர குள்ளநரியாக வில்லி எம். என். ராஜத்தை மயக்கி மாற்று மருந்தினைப் பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார்.
புது அமெரிக்க மனைவிகளுக்கு கார் ஓட்டக் கற்றுத் தருவது இந்தியர்களின் வாரயிறுதி பொழுதுபோக்கு. அப்பொழுது 'என்ன வண்டி ஓட்டுறே...', 'உனக்கு ஒன்றுமே தெரியவில்லை' என்று சதாய்த்து மகிழ்வது வழக்கம். அதே போல் ஆடலழகி வைஜெயந்தி மாலாவுக்கு கத்திச் சண்டைக் கற்றுத் தந்து சலித்துக் கொள்கிறார் அபு.
பன்ச் வசனங்களை விட்டுவிட்டு பார்த்தாலும் பல இடங்கள் ரசிக்க வைக்கிறது.
பாலையா: திட்டம் நிறைவேறாவிட்டால் நீதான் மூன்றாவது பறவையாவாய்.
அசல் ராஜா சதாம் ஹுசேனா அல்லது கவர்ந்த அரசன் ஜார்ஜ் புஷ்தானா அல்லது நடுவில் குளிர்காயும் ஒஸாமாவா என்று இன்றைய நிலைமையில் யார் உண்மையான பாக்தாத் திருடன் என்று யோசிக்கும் தருவாயில் மறுமுறை பார்க்க வேண்டிய படம்.
- பாஸ்டன் பாலாஜி
கருத்துரையிடுக