வெள்ளி, ஜூலை 22, 2005

மயிலை முண்டகக்கண்ணியம்மன்

சென்னை: சாலையோர சாமிகளும் குடியேற்ற உளவியலும் :: பெ. நிர்மலா (முனைவர் பட்ட ஆய்வாளர்)

தென் சென்னையில் வங்கக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மயிலை, இலக்கியங்களில் இடம் பெற்று, பழமை வாய்ந்த ஊராகக் காணப்படுகின்றது. இது கபாலி நகரம், சுக்கிரபுரி, வேதபுரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு சமயக் கோயில்கள் அமைந்துள்ளன. மயிலை, கயிலைக்கு இணையாகத் தொன்று தொட்டு பேசப்பட்டு வந்துள்ளது. இந்த ஊரின் கிராம தேவதையாக, எல்லையம்மனாக வழிபடப்பட்டு வருவதுதான் முண்டகக்கண்ணி அம்மன் ஆகும்.

வன்னிய சாதியைச் சார்ந்த பூசாரி, அம்மனுக்கு நீராட்டி, அலங்கரித்து 108 போற்றிகளைக் கூற ஒலிப்பதிவு நாடா இசைக்கருவியில் இருந்து ஓம் என்பது பின்னணியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது முதலியார் சாதியைச் சார்ந்த கபாலி ஓதுவார் என்பவர் தேவாரப் பாடலைப் பாடுகிறார். ஒரே குடும்ப வழியில் இருந்து வந்த ஏழாவது தலைமுறையினர் இப்போது பூசாரிகளாக உள்ளனர். இந்த ஒரே வம்சாவழியைச் சார்ந்த சகோதரர்கள் 15 நாட்களுக்கொரு முறை முறைமாற்றி பூசாரிகளாகச் செயல்படுகின்றனர்.

பிரேசில் நாட்டிலுள்ள காமின்காங் இனக்குழுவினர், மழை வேண்டுமென்று விரும்பினால், தண்ணீருக்குள் வாயை வைத்துக் கொண்டு ஒலி எழுப்புவார்கள். பின் சிறிதளவு தண்ணீரை கையில் எடுத்துக் கொண்டு அதை உயரே வீசியவாறு இதோ பார் இதைப் போலவே செய் என்று கூக்குரலிடுவார்கள். (ஆ. சிவசுப்ரமணியன், 1988: 29).

இந்த அடிப்படையிலேயே நீரூற்றும் சடங்கும் ஏற்பட்டிருக்கலாம்.

நெற்றியில் சிகப்பு குங்குமம் (அ) மஞ்சள் பொட்டிடுதல் பூப்பெய்திய (அ) குழந்தைப் பேற்றின் பொழுது ஏற்படும் குருதியின் அடையாளமாகும் (சு. சண்முக சுந்தரம், 1991: 81)

திருமணமாகவும், குழந்தைப் பேற்றுக்காகவும் வேண்டிக் கொள்ளும் நாகப்புற்றிலும், நாகத்தோடு தொடர்பு கொண்டுள்ள வேம்பு மற்றும் அரசமரங்களிலும் இவ்வாறு மஞ்சள் குங்குமம் இடுவது எதற்காக என்பது மேற்கண்ட கருத்தின் மூலம் தெளிவாகிறது.

பாம்பு, லிங்கம் என்பனவெல்லாம் இன்று பாலியல் குறியீடுகளாகவே ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றன.

சிவன் கதை, லிங்கக் கதை என்பது மொகஞ்சதாரோ சிந்துவெளி, நாகரீகத்தின் காலத்தில் காணப்படுகின்றன என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு தெய்வாம்சம் கற்பிக்கப்பட்டது என்றாலும், அடிப்படை ஆபாசமான பால் உணர்ச்சியை மையமாகக் கொண்டே, புணர்ச்சி இன்பத்தை, போக ரசத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த தெய்வீகப் பூச்சு பூசப்பட்டிருக்கிறது.(கி. வீரமணி, 1999: 13)


கூம்பு வடிவம் என்பது லிங்கத்தின் குறியீடு. (சு. சண்முக சுந்தரம், 1991 : 80)

"ஊரார் உறங்கட்டண்டி பெண்ணே
உன் புருஷன் தூங்கட்டன்டி
நல்ல பாம்பு வேசம் கொண்டு பெண்ணே
நான் வருவேன் சாமத்திலே
என்ற நாட்டுபுறப் பாடலிலும்"

அர்ச்சுனன் பாம்பு வடிவம் எடுக்க கிருஷ்ணன் பிடாரனாகி அல்லியிடம் பாம்பை அடைக்கலமாக விட்டுச் செல்கிறான். அல்லியும் அப்பாம்பை விருப்பத்துடன் வாங்கிக் கொள்கிறாள். இரவில் பாம்பு அவளைப் புணர்கிறது. இது அல்லி அரசாணி மாலையில் இடம் பெற்றுள்ளதையும்,

ஒரு ஊர்ல ஒரு அம்படையாள் பொண்டாட்டி ரெண்டு பேரும் இருந்தாங்க. அந்தப் பொண்டாட்டி ஒரு பாம்ப கள்ளப் புருஷனா வச்சிருந்தா. அந்த ஊர்ல இருக்கிற கொளத்தாங்கரையில ஒரு அரசமரம் இருந்தது. அந்த அரச மரத்து பொந்துலதான் அந்தப் பாம்பு வாழ்ந்துகிட்டு இருந்தது... (சு. சண்முக சுந்தரம், 1991 : 65)


தோட்டுக்காரி அம்மன் கதைப்பாடலில் குழந்தைப் பேரற்ற மந்திரப் பூமாலை காணும் கனவு பின்வருமாறு:-

"தெய்வ லோகப் பொற்கிளிதான்
திருமடியில் வரவுங் கண்டாள்
பாம்வரவம் மடியேறிப் படம்
விரித்ததாடக் கண்டாள்......"

இதில் பாம்பரவம் மடியேறுதல் என்பது உடலுறவின் குறியீடே ஆகும்.

ஹராப்பாவில் கிடைத்த முத்திரை ஒன்றில் தலைகீழாக நிற்கும் நிர்வாணமான பெண்ணொருத்தியின் கருப்பையிலிருந்து செடியன்று வளர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. (ஆ. சிவசுப்பிரமணியன், 1988 52)


தாய்த்தெய்வ வழிபாட்டினடிப்படையாக, இங்கு கும்பம் என்பது பெண்ணின் பிறப்புறப்பு குறியீடாகவே அமைகிறது. மேலும், சிவசுப்ரமணியன், தாராசுரம் எனும் ஊரில் கோவிலில் உள்ள சக்ராயி எனும் தெய்வத்தைப் பற்றிக் கூறும் பொழுது,

"இத்தெய்வத்தின் சிற்பமானது நிர்வாணமாகவே அமைந்துள்ளது. உட்கார்ந்த நிலையில் கால்களை அகலமாக விரித்துக் கொண்டு, பெண் குறியினைக் காட்டிய நிலையில் இச்சிற்பம் காட்சியளிக்கிறது. மனிதத் தலைக்குப் பதிலாக மலர்ந்த தாமரை மலர் தலையாக வடிக்கப்பட்டுள்ளது."


இக்கோயிலிலும் முண்டகக்கண்ணியின் உருவமாக, உடல் போன்ற தூணும், தலை இருக்க வேண்டிய இடத்தில் தாமரை மொட்டுப் போன்ற வடிவமும் காணப்படுகிறது.

முளைப்பாரி என்பது ஒரு செழிப்புச் சடங்காகும். இது தானியச் செழிப்பை மட்டுமின்றி, மானிடச் செழிப்பையும் தூண்டுவதாகும். குழந்தை வேண்டுவோர், முளைப்பாரி வைத்து, இக்கோயிலில் நாகப் பிரதிஷ்டை செய்கின்றனர். சில கிராமங்களில் முளைப்பாரிச் சடங்கின் போது, கும்பம் வைத்து அதைச் சுற்றி நின்று பெண்கள் கும்மியடிப்பர். இங்கு கும்பம் என்பது கருப்பையின் குறியீடு. இப்பொழுது நாகவழிபாட்டின் போது (பிள்ளை வேண்டி) முளைப்பாரிச் சடங்கு ஏன் நடத்தப்படுகிறது என்பது புலனாகிறது. கும்பம் பெண்ணின் கருப்பை குறியீடாகவும், அதிலுள்ள நீர் விந்துவின் குறியீடாகவும் கொள்ளலாம். இதுவும் ஒரு பாவனைச் சடங்கே. தானியங்கள் எவ்வாறு செழித்து, முளைத்து வருகிறதோ அதுபோல குழந்தை கருப்பையில் முளைக்க வேண்டும் என்பதே ஆகும். இச்சடங்கே மாரியம்மன் கோவில்களில் மழைவேண்டிச் செய்யப்படும் சடங்காகவும் அமைகிறது.

பலியிடுதல் சடங்கு தற்போது இங்கு தடைசெய்யப்பட்டிருப்பினும், இதற்கு முன்னர் நடைபெற்றே வந்துள்ளது. இது அச்சத்தின் காரணமாக எழுந்ததாகும். தன் உயிருக்கும், தன்னைச் சார்ந்தவர்களின் உயிருக்கும் ஈடாகப் பிற உயிரை பதிலாக அளித்து, துன்பத்தில் தீமையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியே ஆகும்.

கிராமங்களில் உப்பும், மிளகும் கொண்டு வீட்டைச் சுற்றித் தூவுவர். ஏனென்று காரணம் கேட்டபின், இதைத் தாண்டி பாம்பு வராது. இதன் அருகில் கூட அது வராது. எனவே, பாதுகாப்புக் கருதி அவ்வாறு போடப்டுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் கோயிலில் பாம்பு உலவும் புற்றின் அருகே ஏன் போடப்படுகிறது? அக்காலங்களில் கோயில்கள் அடர்ந்த புதர் நடுவிலும், செடிகொடிகள் நடுவிலும் இருந்து வந்ததால் பாம்பிற்குப் பயந்து இச்செயலை மக்கள் செய்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இதற்கான காரணம் மறைந்து, வேறு காரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீட்சியாகத்தான் இச்சடங்கு இன்றும் நிறுவனமயமாக்கப்பட்டச் சமயக்கோயில்களிலும், தமிழகத்திலுள்ள கிறித்துவ மாதா கோயில்களிலும் நடைபெற்று வருகிறது.

"ஆவியுலகக் கோட்பாடு " என்ற அடி நிலையில் தோன்றிய சமய நம்பிக்கை, அதன்படி மலர்ச்சி நிகழ்வில் இறுதியாக ஒரு கடவுள் வழிபாடு என்ற உச்சநிலையை அடைந்தது. (சீ. பக்தவச்சல பாரதி, 1990 : 503)


சென்னை, கலைஞர் கருணாநிதி நகரைச் சார்ந்த லட்சுமி என்ற பெண்மணி அம்மன் பற்றிக் கூறும்பொழுது, "முண்டக்கண்ணி அம்மா கூழ் குடித்துவிட்டு இங்கே படுத்தாளாம். அப்படியே குளிர்ந்து விட்டாளாம்" என்றார்.

இன்றும் கிராமங்களில் அம்மை கண்டு இறந்தவரை, இறந்துவிட்டார் என்று கூறாமல் குளிர்ந்து விட்டார் என்றே கூறுவர். இவ்வாறு கூறுவது விலக்கு (Taboo) ஆகும்.

"விலக்கு என்பது ஒரு எதிர்மறைத் தடுப்பாணையாகும். அதாவது சிலவற்றினைச் சொல்லக் கூடாது, செய்யக்கூடாது, தொடக்கூடாது என்பது போன்ற தடுப்பாணைகளைக் குறிப்பதாகும். இத்தடையை மீறினால் மனித (அ) இயற்கை கடந்த சக்தியினால் தண்டிக்கப்படுவர்". (ஆ. செல்ல பெருமாள், 1998 : 1)


"செங்கல் (அ) கல்லொன்றினை தாம்பாளத்தில் வைத்து, அதனை இறந்தவராக உருவகித்து, பால், தேன், இளநீர், எண்ணெய், தண்ணீர் ஆகியவற்றை அதன் மீது தனித்தனியாக ஊற்றி, திருநீராட்டு நிகழ்த்துவர். பின்னர் வழிபாடு செய்து நீர்நிலையில் விடுவர். இதனைக் கருமாதி (அ) கல்லெடுப்பு" என்று குறிப்பிடுவர்.
(சு. சண்முக சுந்தரம், 1993 : 19)

பார்வை நூல்கள்

1. சண்முக சுந்தரம்.சு, 1991 - நாட்டுப்புறவியல் உளவியல் பார்வை.

2. சண்முக சுந்தரம். சு, 1993 - சுடலை மாடன் வழிபாடு சமூக மானிடவியல் ஆய்வு

3. சிவ சுப்பிரமணியன், ஆ 1988 - மந்திரமும் சடங்குகளும்

4. செல்ல பெருமாள். ஆ., 1998 - சமூக மானிடவியல்

5. செம்பொற் செவ்வேள் 1997 - முண்டகக்கண்ணி முப்பது

6. பஞ்சாங்கம் . ப., 1994 - பெண்ணென்னும் படைப்பு

7. பக்தவச்சல பாரதி 1990 - பண்பாட்டு மானிடவியல்

8. வீரமணி. கி., 1999 - சக்தி வழிபாடு.

1 கருத்துகள்:

நன்றி பாலா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்!

இந்த பதிவையும் பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்து அந்த கருத்தின் வாத நிலைக்கு பலம் கொடுத்ததற்கும் நன்றி! இப்பொழுது தான் பார்த்தேன், கில்லியிலும் சேர்த்து இருப்பதை - மேலும் பலர் கருத்து பரிமாற உதவி செய்ததற்கும் நன்றி!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு