திங்கள், ஜூலை 25, 2005

திரைப்படங்கள்

'படே படே தேஷோன் மே, ஏஸி சோட்டி சோட்டி பாத்தேன் ஹோதி ரஹ்தே ஹை'

வயதுகள் நெருங்கியிருந்ததால் மனதுகளும் இணைந்திருப்பதாக நினைத்த கல்லூரி காலங்களில் பார்த்த 'தில்வானியா துல்ஹானியா லே ஜாயேங்கே'வில் கேட்டு, படிந்து போன வசனம்.

அம்பியிடம் இதே அறிவுரையை அப்பா சேரியமாய் எடுத்து வைத்தாலும், சின்னத் தவறுகளைப் பொறுக்க முடியாமல் தண்டனை வழங்க ஆரம்பிக்கிறான் அந்நியன். யானா குப்தா எப்பொழுதும் மந்தகாசத்துடன் ஈஷுகிறாள். நந்தினிக்கு நந்தவனங்கள் அனுப்புவதை நிறுத்தி விட்டு யானாவை காதலி என்று 'வள்ளி' ரஜினி மாதிரி போதிக்க எவரும் இல்லாத ரெமோவும் இருக்கிறார்.

அமெரிக்காவில் வண்டியை நிறுத்தாமல் போவதுதான் நல்லது. நடு ரோட்டில் நிறுத்தி காப்பாற்றினால் டெக்சாஸில் நீரில் மூழ்குபவனைக் காப்பாற்றிய கதை மாதிரி சிறையில் தள்ளிடுவார்கள். அவர்களை நோக்கியும் சுட்டுவிரல் நீட்டமுடியாது. 6'2" மாதிரி சாட்சிக்காரனே சண்டைக்காரனாக இருக்கும் காலம் இது. இடைவேளை வரை வித்தியாசமான தமிழ்ப் படம். இடைவேளைக்குப் பின் விசிஆருக்கு வேலை கொடுக்கும் படம்.

அன்னியர்கள் உலகை எடுத்துக் கொள்ளப் போவதை 'I,Robot' எடுத்து வைக்கிறது. சம்பந்தமில்லாமல் ப்ரிட்ஜெட் மொய்னஹானின் குளியல், ஒற்றையாக லட்சக்கணக்கான ரோபோக்களை வீழ்த்துதல், ஆங்காங்கே புரியாத மொழியில் கேள்விகளைக் கலைத்து விளையாடுதல் என்று அன்னியனை பிரதியெடுத்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்கும் படம்.

ஹாலிவுட்டின் ஜூட் லா-வை (Jude Law) அடியொற்றி நடக்கும் ஹிந்தியுலக சூப்பர் ஸ்டார் அமிதாபை தமிழுலக ரஜினியும் விக்ரமும் பின்பற்றாதது மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அமிதாபுக்கு இது ஓவர்-ஆக்ட் காலம். இந்தி சினிமாவின் அனைத்துப் படங்களிலும் கண்டிப்பான அப்பாவாக அடிக்குரலில் பேசுகிறார். ராணி முகர்ஜி வாழ்ந்திருக்கும் ப்ளாக் (Black) போன்ற படங்களில் 'இது திரைப்படம்தான்' என்பதை சுட்டிக்காட்ட தன்னுடைய அதீத நடிப்பை கொட்டுகிறார். ஏபிசிஎல் நஷ்டங்களின் மூலம் பணத்தேவையேயானாலும், கொடுக்கின்ற காசுக்கு வஞ்சகம் வைக்கக் கூடாது என்னும் சீரிய எண்ணமென்றாலும், 'ஓவர்' ஆக்டிங்கை குறைத்தால் ஹிந்தி சினிமா பிழைக்கும்.

குழந்தைக்குப் பின் சிம்ரன் மீண்டும் நடிக்க வந்தால் '13 going on 30'-இன் தமிழ்ப் பதிப்பில் தோன்ற வேண்டும். கண்ணியமான திரைக்கதை, சிம்ரன் சிரிப்பைப் போலவே வெகுளியான ஜெனிஃபர் கார்னர் (Jennifer Garner) தோற்றம்.

'இந்தப் படம் உனக்குப் பிடிக்கும்' என்று நெட்ஃப்ளிக்ஸ் சொன்னதைக் கேட்டு What Have I Done to Deserve This பார்க்கக் கிடைத்தது. ஸ்பானிஷ் படங்களின் வழக்கமான கள்ளக் காதல் அடிநாதமாகக் கொண்டு அதிகம் பரிச்சயமில்லாத சம்பவங்களையும் மனிதர்களையும் கொடுக்கிறார். முதலில் Bad Education-இல் பிள்ளையார் சுழியிட்டுவிட்டு பெட்ரோ (Pedro Almodóvar)-இன் பழைய படங்களை கவனிக்கத் துவங்கவும்.

ஸ்பானிஷ் பட நாயகி போல் கனாக் கண்டேனில் கோபிகா நடித்திருக்கிறார் என்றவுடன் ஆவலுடன் பார்த்ததில் நடிப்பை சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஸ்ரீகாந்த் கோபத்தை வெளிப்படும் காட்சிகளில் சின்ன வயது கமலை நினைவூட்டுகிறார். 'அய்யோ பாவம்' என்று சிரிப்பாக வருகிறது. ஆசிரியர் அத்தையாக வரும் அமிதாவின் கதாபாத்திரம் முதல் அனைவராலும் விரும்பப்பட்ட பிருதிவிராஜ் வரை எல்லோருமே கச்சிதம்.

ஆர்யா ஆறு வித்தியாசங்களுக்கு மேல் காட்டிய 'உள்ளம் கேட்குமே' மற்றும் 'அறிந்தும் அறியாமலும்' டைட்டிலை பார்க்காதவருக்கு இருவேறு நடிகர்களை சுட்டும். முன்னது ஆர்ப்பாட்ட ரெமோ இல்லாத காதல் சித்தரிப்பு. பின்னது சங்கிலி முருகன், கோயி லட்கி ஹை(Dil To Pagal Hai), மௌன ராகம் 'கார்த்திக்' என்று பிரம்மச்சாரியின் வீடு போல் ரசனையோடு கலைத்துக் கோர்க்கப்பட்ட படம்.

தோழியுடன் மேற்கத்திய நடனம் கற்றுக் கொண்டதையும், கண்ணை மூடிக் கொண்டு ரயில் ஓட்டி ஏமாந்ததையும், வருடத்துக்கொருமுறை வந்து போகும் கல்ச்சுரல்ஸ் கூத்துக்களையும், மறுஒளிபரப்பாக 'உள்ளம் கேட்குமே' கலக்கல்.

இன்னும் நிறைய படங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

Unfaithful-ஆக 'சந்திரமுகி' நூறாவது நாள், சொல்லாவிட்டால், மாயவரத்தான் 'Man on Fire'-ஆகி, என்னை 'Run Lola Run' போல் ஓட செய்து 'The Stepford Wives' பக்கம் ஒதுங்க செய்து Bad santa ஆக்கிவிடுவார்கள்.

Pay it Forward செய்யாமல் Office Space-இல் எழுதுகிறேன்.

ஜெய் Swades.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு