புதன், ஆகஸ்ட் 03, 2005

விமரிசனத்தின் எல்லைகள்

நன்றி: விமரிசனக்கலை (நர்மதா பதிப்பகம்) & மதி கந்தசாமி

க.நா. சுப்ரமண்யம் ::

இலக்கிய விமரிசனத்தைப் பற்றிச் சில சில்லரைச் சந்தேகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் (எனக்கும்தான்) விளக்கிக் கொள்வதற்காகவே நான் இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன். ஒரு கலையின் ஆரம்ப தசையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எல்லாமே முடிவானவையல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். என்னைப் பற்றிய வரையில் நான் இதுபற்றியெல்லாம் "உரக்கச் சிந்திக்கிறேன்" என்று சொல்லலாமே தவிர வேறு சொல்வதற்கில்லை.

இன்னும் ஒரு விஷயம் தெளிவாகவே சொல்லுகிறேன். சிறுகதையோ, நாவலோ, கவிதையோ எழுதும் போது வாசகர்களைப் பற்றிய நினைவைப் படைப்பாளன் அறவே ஒழித்துவிடவேண்டும் என்கிற நினைப்புள்ளவன் நான். ஆனால் இலக்கிய விமரிசனம் செய்யும்போது வாசகனுடைய நினைவும் கூடவே வரத்தான் செய்யும். என் இலக்கிய அனுபவத்தைத்தான் நான் எடுத்துச் சொல்ல முயலுகிறேன் என்றாலும் வாசகனுக்காகச் சொல்லுகிறேன் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என் இலக்கிய அனுபவத்தை எடுத்துச் சொல்லி, கூடியவரையில் ஒரு இலக்கிய சிருஷ்டி வரையில் அந்த அனுபவத்தை அலசியும் பார்க்க முயலுவதுதான் என் இலக்கிய விமரிசனத்தின் அடிப்படைக் காரியம். இதிலே பிறருக்கு உகந்ததாகச் சொன்னோமா என்பதோ, முன்கூட்டியே முடிவான ஒரு தீர்மானத்துக்கு வந்தோமா என்பதோ என் கவலையில்லை. என் அனுபவ உண்மையைப் பூரணமாகச் சொல்லியாகி விட்டதா என்பதுதான் எனக்குக் கவலை. பூரணமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறபோது உட்கார்ந்து மறுபடி முயன்று எழுதிப் பார்க்க வேண்டியதுதான்.

விமரிசனத்தில் அனுபவத்தை அலசிப் பார்க்கிற காரியம் இருக்கிறதே - அது எப்போதுமே சரியாக வராது. அதுவும் ஆரம்ப தசையில் விமரிசனம் எழுதப்படும் தோரணையில் (ஆமாம், எழுதப் பழகும் தோரணைதான் இன்னமும், இருபது வருஷ இலக்கிய விமரிசன அனுபவத்துக்குப் பிறகும் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.) அலசிப் பார்க்கிற காரியத்தைத் தற்காலிகமாகத் (tentative)தான், பூனைக்குட்டி தனது காலை நீட்டி எதிரில் உள்ளது என்ன என்று பார்க்கிற தோரணையில்தான் செய்ய முடியும் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் உள்ள மற்ற துறைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்தையும் ஒரு அளவுக்குக் கலையாகவும், ஒரு அளவுக்கு சாஸ்திரமாகவும் எண்ணுகிறேன் நான். இலக்கிய விமரிசனத்தை விஞ்ஞானமாக, ஒரு சாஸ்திரமாகப் பயிலுவது சுலபமாகவே எல்லோருக்கும் கை வந்துவிடும். ஆனால் இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுவது சுலபத்தில் கைகூடி வந்து விடுகிற காரியம் அல்ல. இலக்கிய விமரிசனத்தைக் கலையாகப் பயிலுகிற காரியத்தை இப்போதுதான் தமிழ் ஆசிரியர்களில் சிலர் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படுவது என்பது இந்த இலக்கிய விமரிசனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் இன்னும் சோதனைகளும் முயற்சிகளும் "மேலே மேலே" என்று செய்துகொண்டே போவதற்கு இலக்கிய விமரிசனம்தான் சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பிட்ட ஓரிரண்டு துறைகளில் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் வளம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வளம் உரம் பெறவும், மேலும் வளர்ச்சி சாத்தியமாகவும், இலக்கிய விமரிசனம் உடனடியாகத் தேவை. 1948-க்குப் பிறகு இலக்கியம் (தமிழைப் பற்றிய வரையில்) தேங்கிப் போனதற்குக் காரணம், வளத்தை அளவிடக்கூடிய தெம்பு படைத்த இலக்கிய விமரிசனம் தோன்றாமைதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

இலக்கிய விமரிசனம் தோன்றிவிட்டால் தானே இலக்கிய வளர்ச்சி தோன்றிவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிற சந்தேகப்பட்டவர்களுக்கு ஒரு பதில் சொல்லலாம். இலக்கிய விமரிசனம் தோன்றினால், இலக்கிய வளத்துக்கான சூழ்நிலையையும், இலக்கிய சோதனைகள் நடத்துவதற்கான தெம்பையும் சிருஷ்டித்துத் தந்துவிடும். அந்தத் தெம்பும் சூழ்நிலையும் காரணமாகச் சிலர் புது இலக்கியம் சிருஷ்டிக்கலாம். பலர் எழுதியும் உயர் இலக்கியம் சிருஷ்டியாகாமல் போனால், அதுபற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இலக்கியம் என்கிற அளவில் ஒவ்வொரு ஆசிரியனும் தன்னில் உள்ளதில் சிறந்ததைப் பூரணமாகத் தருகிறான். சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது. அந்தப் பூரணமும் இலக்கிய சிருஷ்டிக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன பண்ணுவது? எதுவும் செய்வதற்கில்லை - காத்திருப்பதைத் தவிர என்றுதான் சொல்லவேண்டும்.

  • இலக்கியத்திலுள்ள பல துறைகளில், சிறுகதைபோல, நாவல் போல, கவிதைபோல, இலக்கிய விமரிசனமும் ஒன்று என்பதனால், இலக்கிய விமரிசனத் துறை வளருவதால் இலக்கியமும் வளருகிறது என்பது ஏற்படுகிறது. இது இலக்கிய விமரிசனத்தின் தேவை அடிப்படையை வற்புறுத்துகிறது.

  • இரண்டாவதாக, இலக்கிய விமரிசனம் நல்லது என்று தோன்றுவதை அழுத்தமாக எடுத்துச் சொல்லி, நல்லதல்லாததைக் கண்டித்து இலக்கிய உழு நிலத்தில் களை பிடுங்கி நிலம் திருத்தித் தருகிறது.

  • மூன்றாவதாக, இலக்கிய சிருஷ்டிகளிலே ஒரு கோணத்தை, ஒரு நோக்கத்தை மட்டும் கண்டு திருப்தி யடைந்துவிடுவதுடன் நின்றுவிடாமல், வாசகன் பல கோணங்களையும், பல நோக்கங்களையும் இனங்கண்டு அனுபவிக்க இலக்கிய விமரிசனம்தான் வழி வகுத்துத் தரவேண்டும்.

  • நாலாவதாக, சோதனை அம்சங்களுக்கு இலக்கியத்தில் அழுத்தம் தந்து சோதனைகளை மேலே மேலே செய்துகொண்டு போவதையும் இலக்கிய விமரிசனம் தான் சாத்தியமாக்க முடியும். ஐந்தாவதாக, ஆறாவதாக, என்றும் சொல்லிக்கொண்டு போகலாம். அவசியம் இல்லை என்றே நம்புகிறேன்.

    புதுசாக எழுதத் தொடங்குகிறவர்களை அநுதாபத்துடன் அணுகிப் பரிவுடன் விமரிசனம் செய்யவேண்டும் என்று நமக்குள்ளே ஒரு சித்தாந்தம் தோன்றி உள்ளது. இது அசட்டுச் சித்தாந்தம். எந்த இலக்கியாசிரியனுக்கும், இலக்கிய சிருஷ்டி சம்பந்தமாகப் பரிவோ, யாருடைய அநுதாபமோ தேவையில்லை. பரிவும் அநுதாபமும் தேவையாகி, "ஐயோ பாவம்!" என்று எண்ணவேண்டிய எழுத்து எழுத்தாகவே பலமுள்ளதாக இராது என்பது ஒரு அடிப்படைக் கருத்து. அது இலக்கியம் ஆகவே முடியாது. நான் எழுதியது இலக்கியமானால் ஆயிரம் பேர் பரிவு காட்டாவிட்டாலும் இலக்கியந்தான்; இலக்கியமல்லவானால் ஆயிரம் பேர் வோட்டு எடுத்துச் சொன்னாலும், பரிவு காட்டி புகழ்ந்தாலும் இலக்கியமாகிவிடாது. காலதேவனைப் போல பரிவு இல்லாத ஒரு புருஷனைக் காண இயலாது. காலதேவனின் பரிவில்லாமை இலக்கிய விமரிசகனுக்கும் தேவை. இன்றைய இலக்கியத்தை மதிப்பிடுகிற இலக்கிய விமரிசகன் ஓரளவுக்குக் காலதேவனின் காரியத்தைத்தான் செய்ய முற்படுகிறான். அதைப் பரிவு என்பதே காட்டாமல் செய்துதான் தீரவேண்டும்.

    எழுதப்படுவதெல்லாமே எழுத்து என்றும், பத்திரிகைகளில் வந்துவிட்டதெல்லாம் இலக்கியம் என்றும் ஒரு எண்ணம் தமிழிலே இரண்டு தலைமுறைகளாக நமக்குள் நமக்கே வளர்த்துவிட்ட ஒரு சித்தாந்தம். இந்த நிலை மாற இலக்கிய விமரிசனம்தான் உதவ முடியும். சர்க்கார் சார்பு பெற்ற ஸ்தாபனங்களும், சர்க்கார் சார்பு அவ்வளவு இல்லாத ஸ்தாபனங்களும் இலக்கிய ஸ்தாபனங்கள் என்று எண்ணி நாம் ஏமாறுகிறோம். அவை வேறு என்னவோ, எப்படியோ-நமக்கு மட்டும் என்ன, வேறு யாருக்குமே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவற்றிற்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப் பிராப்திகூடக் கிடையாது என்பதை உணர இலக்கிய விமரிசகன்தான் இன்று வழி செய்து தரவேண்டியதாக இருக்கிறது. அவற்றின் காரியங்கள் இன்று நம் எழுத்தைப் பெரிதும் பாதிக்கின்றன--அப்படிப் பாதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொல்லியே தீரவேண்டும். இன்றைய இலக்கியத்தில் பத்திரிகை ஆதிக்கம், பண்டிதர் ஆதிக்கம், இரண்டுக்கும் இலக்கிய ரீதியில் ஒருவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க நம்மிடையே இலக்கியத்தின் தனித் தன்மையின் காவலாளனாக இலக்கிய விமரிசகன் பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது

    இத்தனையும் சொன்ன பிறகு, வாசகர்களுக்கும் நல்ல எழுத்துக்கும் உள்ள உறவுமுறைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் இலக்கிய விமரிசனம் ஆராயப் பயன்படவேண்டும். உண்மையான இலக்கிய சிருஷ்டி காரியத்தில் இலக்கியம் சுய அனுபவமாக, ஆத்ம திருப்தி ஒன்றையே தான் லட்சியமாகக் கொண்டு தோன்றுகிறது என்பதையும், அதிர்ஷ்டவசத்தால் வாசகன் என்று சொல்லப்பட்டவன் அந்த இலக்கியத்தை ஒட்டுக் கேட்டு ஆனந்திக்கும் பேற்றைப் பெறுகிறான் என்பதையும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இன்று இலக்கிய விமரிசகனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இலக்கிய கர்த்தாக்களான, வால்மீகியும், வியாசரும், ஹோமரும், டாண்டேயும் அதிர்ஷ்டசாலிகள்.

    மறைவில், தனிமையில், ரகசியத்தில், ஒதுங்கி நின்று இலக்கிய சிருஷ்டி செய்வது, யார் கண்ணிலும் படாது நூல் இயற்றுவது அவர்களுக்குச் சாத்தியமாக இருந்தது. இன்று தான் எனும் தனிமை நிலைகூட இல்லாமல், பத்திரிகை எழுத்தாக, முற்போக்கு எழுத்தாகத்தான் இலக்கிய சிருஷ்டி நடைபெறுகிறது. இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல -- அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப் பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமரிசனம் உபயோகப்படவேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ ஒரு லட்சிய வாசகனையோ எண்ணிக்கொண்டு எழுதுவதில்லை.

    வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில் 'நமக்குகந்த ஆசிரியன் இவன்' என்று தேடிக்கொண்டு இடைவிடாமல் ஓடவேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமரிசனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்லவேண்டும்.
    ஷேக்ஸ்பியரைப் படித்தனுபவிக்க முடியாதவன் துரதிர்ஷ்டசாலி. கிரேக்க சோக நாடகாசிரியர்களை அனுபவிக்க முடியாதவர்களும் துரதிர்ஷ்டசாலிகள்தான். கம்பனைப் படித்தனுபவிக்க அறியாதவன் துரதிர்ஷ்டசாலிதான். வேறு என்ன? ஆனால் இதை இன்றைய இலக்கியக் கர்த்தாக்கள் வரையில் கொணர்ந்து புதுமைப்பித்தனையும், மௌனியையும் லா.ச.ராமாமிருதத்தையும், கு.அழகிரிசாமியையும் (சிறுகதைகளில் மட்டும் சொல்லுகிறேன்)
    அனுபவிக்கத் தெரியாதவர்களைத் துரதிர்ஷ்டசாலிகள் என்று கூற இன்றைய இலக்கிய விமரிசகன் தயங்கக்கூடாது.

    காலதேவனின் நிர்த்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாகவேண்டும். இன்று எண்ணாயிரம் பேர்வழிகள் சிறுகதைகள் என்று எழுதுகிறார்கள் என்றால், எண்ணாயிரம் பேர்வழிகளும் இலக்கியக் கர்த்தாக்கள்தான் என்கிற எண்ணம் நம்மிடையே பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணாயிரம் பேர்வழிகளில் அதிகம் சொல்லப்போனால் ஒரு எண்பது பேர்வழிகள் நன்றாகவே எழுதலாம். மொழிவளத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்கக்கூடிய கதைகள் எழுதலாம். ஆனால் காலம் என்கிற சல்லடை இதில் ஒரு எட்டுப் பேரையாவது சலித்தெடுத்து அடுத்த தலைமுறைக்குத் தருமா என்பது சந்தேகமே! எட்டு என்று நான் இலக்கிய விமரிசகனாக எண்ணிச் சொல்கிற கருத்து காலதேவனின் பரிவு - அல்லது பரிவில்லாமை என்பதனால், மூன்று, இரண்டு, ஒன்று என்றுகூடத் தேய்ந்துவிடலாம்தான். இந்த எட்டுப் பேரிடம் இலக்கியத் தரம் இருக்கிறது என்று சொல்லுகிற மூச்சிலேயே எனக்கு எட்டுகிற வரையில் என்றும் சேர்த்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்த எட்டுப் பேரைப் பற்றியும் காலம்தான் முடிவாகச் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும்.

    அப்படியானால் வாசகனை அடியோடு மறந்துவிட்டு எழுதுகிறவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்களா என்று ஆணித்தரமாக கேட்டு, அதற்குப் பிறகு வெற்றிகரமாகவே, அப்படியானால் எழுதியதைப் பிரசுரிப்பானேன்? ஆத்ம திருப்தியுடன் முடிந்துவிட்டது என்று கிழித்துப் போட்டு விடக்கூடாதா? என்று பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்பார்கள் சிலர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மை இதுதான். இலக்கியம் சிருஷ்டியாகிற சமயத்தில் ஆசிரியனுக்கு மட்டுமே அது சொந்தமான விஷயம்.

  • சமூகம்,
  • தனி மனிதனின் வளர்ப்பு,
  • பயிற்சி,
  • சூழ்நிலை,
  • குடும்பம்,
  • அவன் மதம்,
  • கொள்கைகள்,
  • அவன் இனத்தவரின் ரத்த அருவியோட்டம்,
  • வாசனை
    எல்லாமாகச் சேர்ந்துதான் அவனுடைய சிருஷ்டியை ஓரளவுக்கு உருவாக்குகின்றன என்பது உண்மையே. ஆனால் இதெல்லாம் சேர்ந்துவிட்டதனால் மட்டும் இலக்கியம் உற்பத்தியாகிவிடுவதில்லை. இந்த விஷயங்களையெல்லாம் வைத்து எத்தனைதான் அலசிப் பார்த்தாலும், இதெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று எல்லா இலக்கிய சிருஷ்டியிலேயும் காணக் கிடக்கிறது. அந்த ஒன்றைத்தான் இலக்கியாசிரியனுக்கே சொந்தமான தனி விஷயம் என்று நான் சொல்வேன். இந்த தனித்வம் என்கிற தத்துவம் இருக்கிறதே, அது, பரம்பொருள் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களே அதைப் போன்றது. வார்த்தைகளில் அகப்படாதது. பக்திமான்கள் வார்த்தைகளுக்கு அகப்படாத அக்கடவுளைத் தேவாரமாகவும், நாலாயிரமாகவும் பாடிக் காண முயன்றார்கள்.

    அதையேதான் இலக்கிய அளவில் இலக்கிய விமரிசனம் செய்து பார்க்க முயலுகிறது. முடியாது என்று தெரிந்திருந்தும் செய்து பார்க்கிற அளவில் கைநீட்டி வானைத் தொடச் செய்யப்படும் முயற்சி சிறப்பானது, உற்சாகம் தருவதுமாகும். எப்படித் தனிமையில், தனித்வத்தின் வார்த்தை உறவாக இலக்கிய நூல் உண்டாகிறது என்பதை இலக்கிய விமரிசனம் எடுத்துச் சொல்வதுடன், அடுத்த படியில் அது இலக்கியமாக ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அம்சமாகக் காட்சி தருவது எப்படி என்பதையும் இலக்கிய விமரிசகன் எடுத்துச் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் வருஷ விமரிசன வளத்தில் மேலைநாடுகளில்கூட இம்முயற்சி அதிகமாக நடைபெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதற்கு அவசியம் இன்று இல்லை என்று சொல்ல முடியாது.

    ஒரு நூல் சிருஷ்டியாகிற விதத்தை நாம் அறிந்து கொள்வதால் அதைப் பற்றிய அளவில் அதை அதிகமாக அனுபவிப்பது சாத்தியப்படுமா என்பது அடுத்த கேள்வி. ரசத்தையும், கடிகாரத்தையும் உதாரணம் சொல்லிப் பயனில்லை. இலக்கியத்தைப் பற்றிய வரையில் நம் அறிவு பூராவுமே எந்த நல்ல சிருஷ்டியையுமே அனுபவிக்க நமக்கு உதவும் என்றுதான் சொல்லவேண்டும். வார்த்தைகள், வாக்கியங்கள், கருத்துக்கள், உருவங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்வத்தையும் கணிக்க இலக்கிய விமரிசனமும் வார்த்தைகளின் உதவியைத்தான் நாடுகிறது. அந்த வார்த்தைகளுக்கான பலமும் பலவீனமும் இலக்கியத்தைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டு. இலக்கிய விமரிசனத்தின் அளவைகளும் எல்லைகளும் வார்த்தை அளவைகளையும் எல்லைகளையும் பொறுத்தவை. முடிவில்லாத ஒரு முயற்சி இது என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை சொன்னாலும், சொல்லவேண்டியது பாக்கியிருப்பது புலனாகிக் கொண்டே தான் இருக்கும். மேலே மேலே என்கிற ஏக்கம், மற்ற கலைகளைப் போலவே இலக்கிய விமரிசனத்துக்கும் உண்டுதான். அதன் கலைநயமே அதில்தான் அடங்கியுள்ளது.

    நல்ல நாவல் என்றால் என்ன? நல்ல சிறுகதை என்றால் என்ன? நல்ல கவிதை, காவியம் என்றால் என்ன? என்று சொல்லி இலக்கணம் வகுக்கச் செய்யப்படுகிற முயற்சிகள் எல்லாமே இலக்கிய அளவில் தோல்விகள் தான். ஏனென்றால் இலக்கணம் சொல்லி முடித்தவுடனேயே அவ்விலக்கணத்தை மீறி நாவலோ, சிறுகதையோ, கவிதையோ எழுதுகிற ஒரு இலக்கிய மேதைத் தோன்றிப் புது இலக்கணத்துக்கு அவசியம் ஏற்படுத்தி விடுகிறான். இந்த நிலையை இலக்கிய விமரிசகன் (பண்டிதர், புலவருக்கு எதிர்மாறாக) ஏற்றுக்கொண்டே தொடர்ந்து விடாப்பிடியாக இலக்கிய விமரிசனம் செய்கிறான்.

    பூரணத்வம், லட்சியம் என்பதை இலக்கியத்தில் தொடர்பு அளவிலே இருக்கிறது என்று reliative உறவு சம்பந்தமாகத் தான் கூறமுடியும். டாஸ்டாவ்ஸ்கியைப் போன்ற நாவலாசிரியன் வேறு கிடையாது உலகிலே என்று சொல்கிற அதே மூச்சிலே, இலக்கிய விமரிசகன் டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களிலும் ஷொட்டுக்கள் குறைபாடுகள் காணாமல் இல்லை என்று சொல்லவேண்டும். அதற்காக டாஸ்டாவ்ஸ்கிக்குப் பின்னர், இன்று டாஸ்டாவ்ஸ்கியைப் போலவே எழுதியவனைப் பெரிய நாவலாசிரியனாகவும் நாம் கருதுவதில்லை. அவனைப் படிக்க வேண்டிய அவசியமேயில்லை என்று முடிவு கூறினாலும் கூறிவிட முடியும். இத்தனைக்கும் அப்பால் டாஸ்டாவ்ஸ்கி உயர்ந்து நிற்கிற விஷயத்தை ஆணித்தரமாகவே இலக்கிய விமரிசகன் எடுத்துக் காட்டிவிடுகிறான். எப்படிச் செய்கிறான் என்பது விமரிசகனின் தனித்தன்மை, சாமர்த்தியம்.

    குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமரிசனம் மூலம் எடுத்துச் சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால்தான் ஷேக்ஸ்பியரையும், டாண்டேயையும் பற்றி இத்தனை விமரிசன நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையோ கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடை போட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால் இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படி இப்படியாக ஏற்பட்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்ட முடியும்.

  • இலக்கிய உருவத்தையும்,
  • அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளையும்,
  • ஆசிரியரின் கருத்துக்களையும்,
  • சூழ்நிலையையும்,
  • அதனால் எழுந்த கோயிலையும்,
  • குச்சையும்,
    இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே, வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது. இதிலே பல கோணங்களும் திருப்பங்களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர் நுகரலாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் எண்ணுகிறேன். இலக்கியப் பாதையிலே வழிநெடுக நடப்பது விமரிசகனின் கடமையல்ல.

    கதாகாலஅக்ஷபக்கார்கள் ஒரு வரிக்கவிதைக்கு எட்டுப் பக்கம் பிரசங்கம் செய்பவர்கள் செய்கிற காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்ய வேண்டிய காரியம். நல்ல கவிதையை (சிறுகதையையோ, நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக்கூடாது இலக்கிய விமரிசகன் என்பது வெளிப்படை.

    கம்பனுடைய காவியத்தைப் பற்றிய விமரிசனம் செய்ய முன்வருபவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர, என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லிக் கதாகாலஅக்ஷபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத்தில் நிற்கிறான் என்பதல்ல, அவன் அறிவெல்லாம், அவன் திறனெல்லாம், அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்கு அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாக்ஷண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமரிசனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்.

    இலக்கிய விமரிசகன் இலக்கியம் என்கிற அளவில் பேராசைக்காரனாக இருந்துதான் ஆகவேண்டும். காவலில் ஜாக்கிரதையுள்ளவனாக போலி எதையும் இலக்கியச் சோலைக்குள்ளே அனுமதிக்காதவனாகவும் இருக்கவேண்டும்.

    இத்தனையும் பொதுவாகக் கூறிய பிறகு தமிழைப் பற்றிய வரையில் இன்னொன்றும் சிறப்பாகக் கூற வேண்டும். தமிழில் இன்று இலக்கிய விமரிசனம் செய்ய முன்வருபவன் மற்ற உலக மொழி இலக்கிய இயக்கங்களிலும் ஆழ்ந்த அறிவுள்ளவனாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. மற்ற மொழி இலக்கியங்களில் இன்று நிர்மாணமாகியுள்ளது போலத் தமிழிலும் நல்ல நூல்கள் வரிசை, classics, ஒன்றைத் தமிழுக்கும் ஏற்படுத்தித் தருவதில் அவன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். பழசு புதுசு இரண்டிலும் நல்ல நூல் வரிசை நிர்த்தாரணம் செய்யும் சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும். இன்றைய மொழி இலக்கியம் எதுவும் தனித்தியங்காது. உலகமொழி இலக்கியத்துக்கெல்லாம் வாரிசுதான் இன்றையத் தமிழ் இலக்கியமும் என்கிற உண்மையை எப்போதும் மறக்காதவனாக இருக்கவேண்டும்.

    தமிழில் இலக்கிய விமரிசனம் வளரட்டும். ஏனென்றால் தமிழ் இலக்கியம் வளம் பெற அதுவே இன்றும் சிறந்த வழி.

    | | |

    நன்றி: விமரிசனக்கலை :: நர்மதா பதிப்பகம் & மதி கந்தசாமி

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு