புதன், செப்டம்பர் 28, 2005

Commander in Chief

கனவுகள் + கற்பனைகள்

எந்தப் பக்கமும் சாயாமல் எழுதினால் சவசவ என்றிருக்கும். ஏ.பி.சி.யின் புதியத் தொலைக்காட்சி தொடர் கமாண்டர் - இன் - சீஃப், பொலிடிகலி கரெக்டாக வழுக்குகிறது.

Commander in Chief by ABC TVஅமெரிக்க ஜனாதிபதிக்கு திடீர் மாரடைப்பு. உயிருக்குப் போராடி இறக்கிறார். குடியரசு கட்சி, சுதந்திரா கட்சி என்று இரண்டிலும் சார்பு நிலை இல்லாத துணை ஜனாதிபதி. மகளிருக்கும் நடுநிலைவாதிகளுக்கும் குறியீடான கொலு பொம்மை பதவி. ஜனாதிபதியின் திடீர் மரணத்துக்குப் பின், சபாநாயகர், அமைச்சரவை என பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே பதவியேற்கிறார்.

முன்னாள் முதல் மனைவியும் இந்நாள் நியு யார்க் செனேட்டரும் ஆன ஹில்லாரி கிளிண்டனும், புஷ்ஷின் அமைச்சரவையில் #1 ஆகா இருக்கும் கொண்டலீஸா ரைஸும் நிழலாடுகிறார்கள். கதாநாயகி பெண்ணாக இருப்பதைத் தவிர வேறு ஒற்றுமைகள் தென்படவில்லை.

வில்லன் எவ்வளவு வலுவாக இருக்கிறாரோ, ஹீரோவுக்கு மரியாதை அவ்வளவு எகிறும். சபாநாயகராக டொனால்ட் சூதர்லாண்ட். புதிய ஜனாதிபதியின் கன்னிப்பேச்சுக்கு நடுவே, டெலி-ப்ராம்ப்டரை அணைப்பதாகட்டும், அதிகாரத்தை அடையத் துடிக்காதவருக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தத் தெரியாது ("People who don't want power have no idea how to use it") என்று அறிவுரை சொல்வதிலாகட்டும், 'சபாஷ்... சரியான போட்டி!' சொல்ல வைக்கிறார்.

ஆறு வருடமாக 'வெஸ்ட் விங்' சக்கை போடுகிறது. வக்கீல்களைக் குறித்த தொலைக்காட்சித் தொடர், நிஜ நாடக நிகழ்வுகள், மருத்துவர்கள், என்று களம் சார்ந்த கதைகள், வெற்றியடைந்தால், உடனடியாக அலை அலையாக அனைத்துத் தொலைகாட்சிகளும் பிரதிபலிப்பார்கள். ஆனால், 'வெஸ்ட் விங்'கை யாருமே காப்பியடிக்கவில்லை.

சட்டசபையும், ஜனாதிபதியின் அலுவலகமும் எவ்வாறு இயங்குகிறது; மசோதாக்கள் எவ்வாறு சட்டமாகக் கையெழுத்தாகிறது; உள்கட்சி அரசியலில் எவ்வாறி நீந்துவது; செனேட்டர்களுடன் எப்படி பேரம் பேசுவது; அதிகார மையங்கள் எங்ஙனம் ஜனாதிபதியை அசைக்கிறது; தேர்தலில் ஜெயிப்பது எப்படி; என்று டெமோட்ரடிக் கட்சியின் ஆதர்ச தலைவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை கனவுகளோடு முன்வைத்தது. ஜார்ஜ் புஷ் போன்ற குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ், சுதந்திர கட்சி ஜனாதிபதி மட்டும் நம்மை ஆண்டு கொண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கனவுலகுக்கு கொண்டு செல்கிறது.

கமாண்டர் - இன் - சீஃப் எது செய்தாலும் வெஸ்ட் விங் இதே விஷயத்தை சிறப்பாக முன்பே செய்துவிட்டதே என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. அதனால், ஜனாதிபதியின் குடும்பம் முன்னிறுத்தப்படுகிறது. பெண் சகஜமாக செய்யும் வேலைகளை செய்வதற்கு ஆண் எவ்வாறு நெளிகிறான் என்று காட்டுகிறார்கள். நாலு வயதுக் குழந்தை, ஜனாதிபதி அம்மாவின் மேல் ஜூஸை சிந்துகிறது. The Contender படத்தில் வந்தது போல் சேற்றைத் தெளிக்கும் அரசியல் அரங்கேற்றங்கள் இருக்கின்றது.

பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதை மேலாண்மையின் முக்கியமான தலைமைப் பண்பாகக் கருதுவார்கள். அமைச்சரவை சகாக்காள் தங்களின் எதிர்ப்பை ராஜினாமாவாகத் தொடங்கும்போதே, உடனடியாக அனைவரையும் சந்தித்து, கண்ணோடு கண் நோக்கி ஒப்புதல் பெறுகிறார். எடுத்தெறிந்து பேசாமல் பட்டவர்த்தனமான கத்திகளை நெஞ்சுக்கு வீசுகிறார்.

Michigan Governorமணவாழ்வுக்கு அப்பாற்பட்ட உறவுகொண்டதாக நைஜீரியாவில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தடாலடியாகப் படைகளை அனுப்பி, அமெரிக்காவின் மனித உரிமையை பிரஸ்தாபித்து, இராணுவ மிடுக்கை பறைசாற்றி, புதிய தலைவரை நிலைநாட்ட இந்த உதிரி சம்பவம் உதவியிருக்கிறது. ஆனால், இந்த மாதிரி அதிரடிகளை நிகழ்த்துவது நிஜத்தில் தற்போதைய 'எடுத்தேன் கவிழ்த்தேன்' ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கூட சாத்தியமில்லை!

கமாண்டர் - இன் - சீஃப் குழப்பமாக ஆரம்பித்திருக்கிறது. அரசியல் செய்வதில் 'வெஸ்ட் விங்'காகவும், ஆண்களின் கஷ்டங்களை முன்வைப்பதில் 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸா'கவும், நல்லவரா கெட்டவரா வகை செய்வதில் 'நாயகன்' போன்ற கதாநாயகக் கும்பிடுகளையும் ஒருசேரக் கொடுக்கிறது.

அரசியல்வாதியும் மனுசந்தான் என்று சொன்ன 'வெஸ்ட் விங்'காகவும், பெண்ணின் வருத்தங்களுக்கெல்லாம் குடும்பத்தலைவன் மட்டுமே காரணமல்ல என்று அடித்தளத்தில் முன்வைத்த 'டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸா'கவும், நியாயமாகப் படுவதெல்லாம் நல்லமுறையில் அடைவதல்ல என்பதை 'நாயகன்' ஆகவும் முன்வைத்தால் கனவுகள் + கற்பனைகள் <> தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் ரியாலிடி டிவியாக உருமாறும்.

ஹில்லரியையும் கொண்டலீஸாவையும் விட Jennifer Granholm, மிச்சிகனின் கவர்னர் ஜனாதிபதியாகத் தகுதியானவர் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். கனடாவில் பிறந்தவர் என்பதைத் தவிர எல்லா விதத்திலும் கமாண்டர் இன் சீஃப் ஆகும் வாய்ப்பு நிறைந்தவர்.

|

3 கருத்துகள்:

ABC might grab some audience with this while NBC goes down and down.

CiC reminds the WW in all aspects sans the gender. Lets see how it goes.

BTW, Talkr doesn't quite work with Tamil. As it is it takes years to load this page :-)

Nice write up. Didn't get a chance to watch this(time constraint). May see how this goes and watch it in DVD :).

BTW went to india and brought some books. Will talk to you about that later.

Take care.

Regards,
Rajesh

---it is it takes years to load this page---

:) எடுத்துவிட்டேன்... ஏதோ நப்பாசைதான்

(ராஜ்... தனிமடலிட்டிருக்கிறேன்)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு