வெள்ளி, செப்டம்பர் 09, 2005

H1BEES

கே டிவி போட்டதன் பயனாய் நான் விரும்பும் நிகழ்ச்சிகளில் 'கல்லூரி கலாட்டா' குறிப்பிடத்தக்கது.

சிலகாலம் முன்பு வரை 'தில்லானா தில்லானா'வில் மேஜர் சுந்தர்ராஜனின் மகனால் அடக்கியாளப்பட்டு குழப்பமாய் தொக்குத்தவர், இந்த நிகழ்ச்சியில் இயல்பாக compere செய்கிறார். இழந்த கல்லூரி நாள்களுக்கு மீண்டும் ஃப்ளாஷ்பேக் போடவும் உதவுகிறது. புதிய திறமைகளைக் கண்டு வியக்கவும் முடிகிறது.

நேற்று சாய்ராம் கல்லூரிக்கு சென்றிருந்தார். கணினி மாணவர்கள் கிண்டலடித்தார்கள். விசில் மூலமாகவே ஏ.ஆர் ரெஹ்மானையும் எம்.எஸ்.வி.யையும் கொண்டு வந்தார். கவிதை சொன்னார். இனிமையான குரலில் சினிமா மெலடிகள் பாடினார். பிளேடு இல்லாமல் பிளேடை வைத்து பிளேடு போட்டார். கூத்து கட்டினார். பேட்டி கொடுத்தார். மனம் திறந்தார்.

வழக்கம் போல் சுவாரசியமாகச் சென்றது.

கடைசியாக டிரம்ஸ், கிடார், புல்லாங்குழல் என்று மெல்லிசையாக ஒலித்தார்கள். இது போன்ற கூட்டமைப்பு கல்லூரிக்குப் பின் அமைவதில்லை. வேலை, பணம், குடும்பம் என்று உழல்வதும், உழல்வதில் இருந்து மாற்றுக்கு இலக்கியம், நட்பு, கேளிக்கை, தொண்டு என்று இருப்பதும் பழக்கமாகிப் போகிறது.

விசில் அடித்து மெட்டு காட்டுபவர், பாடல் எழுதுபவர், அறுவை ஜோக் கடிப்பவர், பல்குரல் மன்னர், எழுத்தாளர் என கல்லூரி ஓய்வுகளில் விரும்பியதைத் தொடர நினைத்தால் தொடரலாம். ஆனால், வாஷிங்டனில் கிடார், பெங்களூரில் பாடகி, சியாட்டிலில் டிரம்ஸ், துபாயில் பாடகர் என்று உலகமயமாக்கப்பட்ட பிறகு இசை ஆர்வம் மங்கிப் போகும்.

பொழுதுபோக்கை சிரத்தையாகத் ஈடுபாட்டுடன் தொடர்வதில் ஸ்ரீகாந்த் மின்னுகிறார். தொடர்ச்சியாக தனிப்பாடல்கள், பாப், பாரதி, ஆன்மிகம் என்று கலந்துகட்டி தந்து வந்தவர் இப்பொழுது முழுத் தொகுப்பாக முதல் ஆல்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

இலவசமாகக் கொடுத்திருக்கும் எம்.பி3யைக் கேட்டால் ஆறு பாடல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

1. ஸ்ட்ரெயிட் அவுட் ஆஃப் காலேஜ்
2. தேடித் தேடி தென்றல் வீசும்
3. வரவு எட்டணா
4. திக்குத் தெரியாத காட்டில்
5. கண்ணாலே அம்பு விட்டு
6. எஞ்சினியரிங் மார்க்கு

ஒரிரண்டு தடவை கேட்டதில் ரீமிக்ஸ் கொஞ்சம்; புரிகிற வரிகள் கொண்ட ஆங்கிலப்பாடல்; தேஸி இந்தி கொஞ்சம்; தமிழ்ப்பட பாடல்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைந்த குத்துப் பாட்டும் இருக்கிறது.

திருவாசகம், எனி இந்தியன், காமதேனு, காந்தளகம் என்று இணைய முயற்சிகள் மின்னும் காலம் இது. சினிமாவின் பின் மட்டுமே போகிற பாடல் உலகத்திற்குக் குறிப்பிடத்தக்க வரவு. வாழ்த்துக்கள்!!!

இணையத்தில் வாங்க விரும்புவோர் தமிழோவியத்தில் வாங்கலாம்


மறுப்புக்கூற்று: இந்த ஆல்பத்தின் தயாரிப்பிலோ, விற்பனையிலோ எனக்கு தொடர்போ லாபமோ கிடையாது :-)

4 கருத்துகள்:

//இது போன்ற கூட்டமைப்பு கல்லூரிக்குப் பின் அமைவதில்லை//
வலைத்தளத்தில் வரிந்து வரிந்து எழுதுவதும் புது நட்பு தேடி அலைவதும் அதனால்தானோ?

சே...சே... பொழுது பொகாமல்தான்

//கே டிவி போட்டதன் பயனாய் நான் விரும்பும் நிகழ்ச்சிகளில் 'கல்லூரி கலாட்டா' குறிப்பிடத்தக்கது.//
அதுதான் கல்லூரி மாணவர்கள் போடும் அண்ட்ராயர் கலரைக்கூட பல்லுடைக்கழக துணைவேந்தர்தான் நிர்ணயம் செய்வது என்று ஆகிப்போய்விட்டதே, பிறகு கலாட்டா இருந்தென்ன போயென்ன, போங்க சார்.

நண்பரொருவரின் மகன் முதலாமாண்டு சேர்ந்திருக்கிறார். அண்ணா பல்கலை.யுடன் தொடர்புடைய அனைத்துக் கல்லூரிகளிலும் டிரெஸ் கோட் இருக்கிறது :-(

அரைக்கை சட்டை போடலாம்; காலர் வைத்த டி-ஷர்ட் போடக் கூடாது. தாவணி ஒகே; ஜீன்ஸ் தவிர்க்கவேண்டும். ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வேண்டும். இருபாலார் கலந்து பேசினால் கூட ஒற்றர்கள் மூலம் விசாரிப்பு என பயத்துடன் விவரித்தான்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு