திங்கள், அக்டோபர் 03, 2005

My Name is Earl

tamiloviam ::

முன்னுமொரு காலத்தில் ஒரு வழிப்போக்கன் நியுயார்க்கில் இருந்து டிஸ்னி இருக்கும் ஃப்ளோரிடாவுக்கு சென்று கொண்டிருந்தான். உச்சிவெய்யில் மண்டையைப் பிளக்க கொஞ்சம் இளைப்பாற ரெஸ்ட்ரூம் ப்ரேக் எடுக்கிறான். அரைத் தூக்கத்தில், இந்த வெய்யிலைத் தணிக்க ஒரு மின்விசிறி கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தான். உடனே அங்கு மின்விசிறி தோன்றியது. ஓடினால் நன்றாக இருக்குமே என்று எண்ண, சுழலவும் ஆரம்பித்தது.

தொடர்ந்து 'சரவண பவன்' மீல்ஸ் கிடைத்தால் 'எப்படியிருக்கும்' என்று நாவு சப்புக் கொட்டியது. அவன் முன்பு மசாலா தோசை, காஞ்சிபுரம் இட்லி, மைசூர் போண்டா, புலவ், வெங்காய சாம்பார், பூண்டு ரசம், வெண்டைக் கறி, கத்தரி பிட்லை, பப்படாம், பாஸந்தி என்று தட்டுக்கள் விரிந்தது. இதையெல்லாம் பரிமாற 'ஹூடர்ஸ்' (hooters) மகளிர் வந்து பந்தி விசாரித்தால் பேஷாக இருக்குமே என்று கற்பனை ஒளிர, பிகினியாடை பமேலா ஆண்டர்சனை மிஞ்சும் வனப்புடன் அழகிகள் பரிமாறினர்.

மடிக்கணினியைத் திறந்து மின்னஞ்சல் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம் என்று வலைத்தமிழுடன் கொஞ்சிக் கொண்டே உணவருந்தும்போது, மனதுக்குள் மின்னல் வெட்டியது. இவற்றையெல்லாம் செய்து மாயலோகத்தில் விழவைப்பது ஹாக்கர் எனப்படும் கொந்தர்களோ என்று நினைக்க, அவன் கணினியை கிருமிகள் ஆட்கொண்டது. பெண்டிரும் சாப்பாட்டில் எம்.எஸ்.ஜி.யையும் கொழுப்பையும் கலந்து அவனின் ஐடெண்ட்டியத் திருடியதாகக் கதை முடியும்.

பாட்டி சொன்ன கதையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நல்லதை மட்டுமே நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும். நிகழ்பவை எல்லாம் தீயதற்கான அறிகுறியே என்று உருவகித்து வந்தால், கெடுவினையேத் தொடரும் என்னும் கருத்து.

மை நேம் இஸ் ஏர்ல் ('My Name is Earl' ) என்னும் தொலைக்காட்சித் தொடரும் 'கர்மா'வை பார்வையாளருக்கு நகைச்சுவையாக விளக்குகிறது.

'ராஜா சின்ன ரோஜா' திரைப்படப் பாடலில் மாயாஜாலத்துக்கு நடுவே ரஜினி பாடுவது போல்

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
நன்மை ஒன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
தீமை ஒன்று செய்தீர்கள்

தீமை விளைந்தது
தீமை செய்வதை
விட்டுவிட்டு
நன்மை செய்வதைத்
தொடருங்கள்'


என்று அமெரிக்காவின் புதிய டிவி சீரியலும் தொடர்கிறது.

"I forgive you for what you did to me, but how can I forgive you for what you did to yourself?" - Friedrich Nietzsche

'மை நேம் இஸ் ஏர்ல்' நாயகன் மனம்மாறி தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொரு நன்மை செய்து, மன்னிப்புக் கோருகிறான்.

ஏர்ல் (Earl) ஒரு அன்றாடங்காய்ச்சி. காலை எழுந்தவுடன் எவன் கிடைப்பான், எப்படி திருடலாம், இன்றைய தினத்தை எப்படி ஒப்பேற்றலாம் என்று வாழ்க்கையை ஒட்டுகிறான் ஏர்ல். லாட்டரியில் ஒரு லட்சம் டாலர் விழுகிறது. சந்தோஷக் களிப்பில் சீட்டுப் பறந்து தவற விட்டு விடுகிறான். கார் மோத, ஆஸ்பத்திரியில் கண்விழிக்கிறான். மயக்க மருந்து தெளியாத நிலையில் மனைவியின் விவாகரத்தில் கையெழுத்திட்டு, சூதாட்டத்தில் தோற்றுப் போன தருமர் ஆக நிலபுலங்களை இழக்கிறான்.

ஞானோதயம் பிறக்கிறது. நினைவு தெரிந்த நாள் முதல், மற்றவர்களுக்கு தீவினையே விளைவித்தது கண் முன்னே நிழலாடுகிறது. செய்த தவறுகளைப் பட்டியலிடுகிறான். பள்ளியில் சகாக்களை படுத்தியது, ரோட்டில் குப்பை போட்டது, தம் அடித்து மற்றவர்களுக்கு புற்றுநோய் கொடுத்தது என்று தொல்லைகளும் கொலைகளும் பஞ்சமா பாதகங்களும் நீளுகிறது. தன் செய்கைகளினால் மனம், குணம், நிறம் உடைந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் ஏதாவதொரு வகையில் நல்வினை பயக்கும் செயல் புரிந்தால், தன்னுடைய விதி மாறும் என்று உறுதி பூணுகிறான்.

நடு நடுவே கேமராவிற்கு தன்னுடைய வாழ்க்கையின் பழைய அத்தியாயங்களை ஏர்ல் விவரிப்பதால், சீரியலின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் பெறுகிறது. பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு விவரிக்க வேண்டிய நிகழ்வை ஒரு வரியில் சுருக்கி சொல்வதால், ஏர்லின் கடந்த காலம் முழுவதும் குறித்த ஏரோப்ளேன் பார்வை நமக்கு கிடைத்து, ஐந்தே நிமிடங்களில் upto the speed ஆகிவிடுகிறோம்.

மதுமயங்கிய வேளையில் ஐந்து நிமிட உறவில் அறிமுகமான பிள்ளைத்தாச்சிக்கு மோதிரம் மாற்றி மனைவியாக்கிக் கொள்வது; வெட்டிவேலை மட்டுமே வேலையாக சோபாவைத் தேய்த்துக் கொண்டிருக்கும் தம்பியை ஆதரிப்பது; வெள்ளை ஏர்லுக்கு கறுப்புக் குழந்தை பிறந்தாலும் குழப்பத்துடன் குழந்தையை வளர்ப்பது; திருடனாக இருந்தாலும் கூட்டாளிகளுடன் நியாயமாக சொல்லுக்கு மதிப்பு கொடுப்பது என்று பல கதாபத்திரங்களை நாயகன் சுருக்கமாக அறிமுகம் செய்கிறான்.

முதல் வாரத்தில் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்திய மாணவன். அவன் வீட்டுக்கு சென்று, அவனிடம் மன்னிப்பு கோரி, அவனுக்கு பிராயசித்தம் செய்வதை நகைச்சுவையாக சிந்தித்தது. நிறைய எதிர்பாரா திருப்பங்களுடன் சிரிக்கவும் வைத்தது.

இரண்டாவது வாரத்தில் புகை பிடித்து மற்றவர்களுக்கு செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் வழங்கி லொக்கு லொக்கு வழங்கியதற்கு பாவமன்னிப்பு கோர ஆரம்பிப்பதில் தொடங்கி, தான் செய்ய நினைத்த திருட்டுக்கு, சிறை தண்டனை வாங்கி கொடுத்த நண்பனிடம் மீட்சி அடைவதில் முடிகிறது. உறுத்தாத நகைச்சுவை, இயல்பான பயங்கள், நம்பக்கூடிய செய்கைகள், திரைக்கேயுரித்தான அளவான மிகைகள் என்று முதல் வாரத்தைப் போலவே அட்டகாசமாய் மனதில் உட்காரும் சீரியல்.

30 Days -இன் மார்கன் (Morgan Spurlock) நடந்து கொண்டதைப் போல் சீரியஸான பிரச்சினையை சேரியமாய் அணுகாமல், விளையாட்டாய் சொல்வது பார்வையாளர்கள் மனதில் பதியும். 'சூப்பர் சைஸ் மீ' (Super Size Me) மார்கனின் நிகழ்ச்சியை அமெரிக்காவின் மாற்று ஊடகங்களோடு ஒப்பிடலாம். தலையாய செய்திகளை அலறிக் கொண்டே அரற்றுவதால் பொதுமக்களிடம் ஸ்டீரியோடைப்பையும் கவனிப்பையும் இழந்தவர்கள்.

வெகுஜன டிவியும் பத்திரிகைகளும் பொலிடிகலி கரெக்டாக செய்திகைளை முன்வைத்து ஞானோதயத்துக்கு முந்தைய My Name Is Earl -ஆக இருக்கிறார்கள். உழுகிற காலத்தில் ஊர் மேல போயிட்டு, அறுவடைக் காலத்தில் திரும்பி வருவது போல் அன்றாட போர் இழப்புகள், ஆப்பிரிக்க கண்மறைப்புகள், நிறபேதங்களை கார்பெட்டுக்கு அடியில் ஒதுக்கிவிட்டு விட்டு, வீட்டை விளக்கேற்றி வெளிச்சமாக்கிக் கொள்கிறார்கள்.

Earl-க்கு லாட்டரி சீட்டு கைவிட்டு ஓடியவுடன், ஆஸ்பத்திரி படுக்கையறையில், போதையேறிய மயக்கத்தில், கார்ஸன் மூலம் epiphany கிடைத்தது. ஜே லீனோ, ஜான் ஸ்டூவர்ட் போன்றவர்களின் நகைச்சுவைக்கு கையில் பியருடன் சிரித்துவிட்டு தூக்கம் தாலாட்டும் வெகுஜன ஊடகங்களுக்கு சீக்கிரமே epiphany வருவது அமெரிக்காவுக்கும் என்னுடைய பேரப் பிள்ளைகளுக்கும் நல்லது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு