செவ்வாய், நவம்பர் 01, 2005

திருப்பூர் கிருஷ்ணன்

எனது குறிப்பேடு :: அமுதசுரபி - Sify.com

சீரும் சிறப்பும்

தினமணி கதிரில் நா.பா. ஆசிரியராக இருந்த காலம். திடீரென்று என்னை அழைத்தார் நா.பா. அன்று வந்த ஒரு தபாலைக் கையில் கொடுத்தார். "என்ன அழகாக இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் பாருங்கள்!" என்று அதில் எழுதப்பட்டிருந்த வெண்பாவைக் காண்பித்துக் கொண்டாடினார். (இப்போது அமுதசுரபியில் வெண்பாப் போட்டி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது கதிரில் வெண்பாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.)

மரபுக் கவிதையில் நா.பா.வைக் கவர்வது கடினம். அவரே ஒரு பண்டிதர். சுலபத்தில் எதையும் ஏற்கமாட்டார். நா.பா. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான சில முற்போக்குச் சிந்தனைகளை சுதேச மித்திரனில் 'பண்டித. நா. பார்த்தசாரதி' என்ற பெயரில் எழுதியதுண்டு. அப்போது அதை எதிர்த்தவர்கள் "பண்டிதனா பார்த்தசாரதி?" என்று கேட்டு எதிர்த்ததாக சுதேசமித்திரன் சீனிவாசன் என்னிடம் சொன்னதுண்டு.

நா.பா. ஒரு வெண்பாவின் அழகில் சொக்குவது என்பது சாமானியமல்ல. "ஒவ்வொரு சீரும் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்! இந்த வெண்பாவை இதை எழுதிய எழுத்தாளரின் புகைப்படத்துடன் வெளியிடுங்கள்!" என்று கூறினார் நா.பா. ஓவியர் தாமரை லேஅவுட் செய்ய நா.பா. விரும்பியபடியே அந்த வெண்பா அதை எழுதியவரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.

"வேண்டாம் வரதட்சிணை"' என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் - என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
'பாண்டு'வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!



"நூறு மலர்களின் பெயர்களைக் கடகடவென்று மேடையில் ஒப்பிப்பீர்களே? இப்போதும் அந்த நூறு மலர்களும் ஞாபகமிருக்கிறதா?" கலகலவென மகிழ்ச்சியோடு சிரித்த சிவகுமார், "மனசுக்குள்ளேயே நிரந்தரமாய் மணம் வீசும் மலர்கள். அவை மனத்தை விட்டு எப்படிப் போகும்!" என்றார். அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாத அதே இளமை, உற்சாகம், சுறுசுறுப்பு. நெறியோடு வாழ்வதால் விளைந்த தெளிவும் மலர்ச்சியும் அவர் முகத்திலும் பேச்சிலும்.


சில எழுத்தாளர்கள் இப்படித்தான்

கடுகடுவென்று இருக்கும் சில எழுத்தாளர்களைப் பார்க்கும்போது இரக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் அன்பு காட்டக்கூடத் தெரியாத இவர்கள் எழுதி என்ன செய்யப் போகிறார்கள் என்ற அலுப்பும் தோன்றுகிறது. சில எழுத்தாளர்களின் தற்பெருமையோ தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளரைச் சந்தித்தேன். கால்மணி நேரம் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நான் ஊம் கொட்டு வதைக் கூட நிறுத்திவிட்டேன். என் முகத்தில் அலுப்பின் ரேகைகளைப் படித்துவிட்ட அந்த எழுத்தாளர் என்ன சொன்னார் தெரியுமா? "கால்மணி நேரமாக என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அலுப்பாகத் தான் இருக்கும். சரி. இனி ஒரு கால்மணி நேரம் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!"

நன்றி: சிஃபி.காம்



| |

2 கருத்துகள்:

Good one, Have you read his ்க்கா "காசிக்குப் போனதும்" வெண்பா?

;-)

ஸ்ரீகாநத்

இல்லையே... எதில் வந்து இருந்தது?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு