ஞாயிறு, ஜனவரி 15, 2006

ஜெயமோகன்

Jeyamohanஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: எஸ். பாகுலேயன் பிள்ளை - பி. விசாலாட்சி அம்மா.

வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந்தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலைபேசித் துறையில் உதவியாளராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத் தொடங்கினார்.

மனைவி: அருண்மொழி நங்கை
குழந்தைகள்: அஜிதன், சைதன்யா

1997 முதல் நகர்கோவில் வாசி.

ஜெயமோகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு

  • 'திசைகளின் நடுவே' 1991-இல் வெளிவந்தது.

  • 'மண்' (1995),

  • 'ஆயிரங்கால் மண்டபம்' (1998),

  • 'கூந்தல்' (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்

  • 'விஷ்ணுபுரம்' (1997),

  • 'பின்தொடரும் நிழலின் குரல்' (1999),

  • 'கன்னியாகுமரி' (2000),

  • 'காடு' (2003),

  • 'ஏழாம் உல்கம்' (2004)

  • 'கொற்றவை' (2005) ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.


    Jayamohan Books by Thamizhiniபத்து திறனாய்வு நூல்களையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

  • 'இலக்கிய முன்னோடிகள் வரிசை'யில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்தன.

  • 'நாவல்' (1991),

  • 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' (1998),

  • 'நவீனத் தத்துவத்துக்குப்பின் தமிழ்க் கவிதை - தேவதேவனை முன்வைத்து' (2001),

  • 'பனிமனிதன்' (2002),

  • 'சங்கச் சித்திரங்கள்' (2003),

  • 'இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்' (2003),

  • 'வாழ்விலே ஒரு முறை' (2004),

  • 'ஜெயமோகன் குறுநாவல்கள்' (2004),

  • 'உள்ளுணர்வின் தடத்தில்' (2004),

  • 'எதிர்முகம்' (2004)

  • 'நினைவின் நதியில்' (2005) ஆகியவையும் அவரது படைப்புகளில் அடங்கும்.


    மலையாளத்திலும் எழுதிவருகிறார்.


    விருதுகள்
  • 'ரப்பர்' நாவலுக்காக ஜெயமோகன் 1989-இல் அகிலன் நினைவுப் பரிசும்

  • 'ஜகன்மித்யை' கதைக்காக 1991-இல் 'கதா' விருதும் பெற்றார்.

  • 1992-இல் இலக்கியத்துக்கான தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்' அவருக்கு வழங்கப்பட்டது.


    தகவல்கள்: 'ஜெயமோகன் சிறுகதைகள்' - உயிர்மை



    | |

  • 23 கருத்துகள்:

    //ஜெயமோகன் 1969-இல் அகிலன் நினைவுப் பரிசும்

    வருடம் தப்போ ?

    should be 89... corrected.

    1992-இல் இலக்கியத்துக்கான தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்' அவருக்கு வழங்கப்பட்டது

    IMHO this is misleading and wrong.Sanskirit Sanman is an
    award instituted by a delhi based
    foundation and is awarded for persons in diverse fields including
    literature.Manushya Puthiran has been awarded the same.
    http://www.sanskritifoundation.org/sanskriti_awards.htm
    At this rate he may beat Rajesh Kumar in terms of
    number of books written :).

    வடிவேலு "accent"-ல் படிக்கவும்...

    வந்துட்டான்யா...வந்துட்டான்யா...
    ஜெயமோகன் கிட்டயே வர்றானே..

    சீனிவாஸ் அண்ணே,
    பொழப்பப் பாருங்கண்ணே...இங்லீஸ் blog என்னாச்சுண்ணே???!!

    திடீர்னு செயமோகன் இண்ட்ரோவுக்கு பெசல் காரணம் ஏதும் உண்டா?

    'பனிமனிதன்' (2002)' திறனாய்வு கட்டுரை அல்ல, குழந்தைகளுக்கான நாவல் என்று நினைக்கிறேன்.

    நன்றி ரவி ஸ்ரீனிவாஸ் & ரோஸா வசந்த்.

    ---வலைப்பதிவு ஆரம்பிக்கப் போவதாக ---

    சென்ற வருடத்திலேயே இருந்ததா!? ஹ்ம்ம்... ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும். எல்லாரும் சினிமாவில் பிஸியாகிட்டாங்களே ;-)

    ---திடீர்னு செயமோகன் இண்ட்ரோவுக்கு ---

    நமக்குப் பிடித்த எழுத்தாளராக இருந்தால் (பாவண்ணன், பாரா... என்று) அவ்வப்போது முக்கிய குறிப்புகளை பதிந்து வைத்துக் கொள்கிறேன்.

    'கொற்றவை' சூப்பர் ஹிட் என்று ரஷ் காப்பி போல் சுடச்சுட படித்தவர்கள் சொல்கிறார்களே... அது போதாதா? ஜெமோ ஸ்பெசல் இடுவதற்கு :-)

    விடுங்க கணேசன்...
    இவ்வளவு கூப்பாடுக்கும் காரணம் எங்கே அவர் சினிமாவில் சுஜாதா போல "successful"-ஆக வந்துவிடுவாரோ என்ற சக எழுத்தாளர்களின் பொறாமைதான்.

    இதெல்லாம் ராமகிருஷ்ணனுக்கு ஒருவகையில நல்லதுதான்...அவர தெரியாதவனெல்லாம் "யார்யா ராமகிருஷ்ணன்?" அப்டின்னு தேடிப் பாத்து தெரிஞ்சிக்குவான்..

    ஜெமோவை பற்றி எழுதியதற்கு நன்றி பாலா.

    //'பனிமனிதன்' (2002)' திறனாய்வு கட்டுரை அல்ல, குழந்தைகளுக்கான நாவல் என்று நினைக்கிறேன்.//

    ஆமாம். பனிமனிதன் குழந்தைகள் நாவல் தான். இமாலயத்தில் பனி மனிதனை (yeti) தேடிச்செல்வதை பற்றிய நாவல்.

    கொற்றவை இப்போது தான் ஆரம்பித்துள்ளேன். நன்றாக போகிறது. மொழி மிக அருமையாக வந்துள்ளது.

    பனி மனிதன் குழந்தைகளுக்கான நாவல்.ஜெயமோகனின் குழப்பங்களை குழந்தைகளுக்கு சொல்லும்
    நாவல் என்று கூட சொல்லலாம்.குழந்தைகளுக்கு எழுதுகிறேன் என்ற பெயரில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் ஒருவர் எழுத ஆரம்பித்தால் என்ன ஆகும், அந்த நாவலும் அப்படிப்பட்ட ஒன்று.
    மிக அபத்தமான முடிவு வேறு.அறிவியல் , சுற்றுச்சூழல்,பரிணாமம் குறித்து மிகவும் தவறான புரிதலை
    தரக்கூடிய நாவல் அது.அதை நான் விமர்சித்து எழுதினால் அதை ஜெமோ,அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.எனக்குத் தெரிந்த எந்த குழந்தைக்கும் பனி மனிதனை படிக்குமாறு சிபாரிசு செய்ய மாட்டேன். அதை விட தமிழ் மசாலா படங்களைப் பார்பது நல்லது என்றுதான் சொல்வேன்.

    தாய்வழி சமூகம் குறித்து ஏங்கெல்ஸ் சொன்னதை மானுடவியலாளர்கள் நிராகரித்து சில பத்தாண்டுகள் கழித்தும் அதை அவர் முன் வைத்த போது நான் கொடுத்த பதில்களுக்கு அவரது ஆதரவாளர்கள் கொடுத்த எதிர்வினைகளை படித்தால் அவர்கள் ஏதோ ஒரு காலத்தில் இருப்பது தெரியும்.திண்ணையில் இது தொடர்பான கட்டுரைகளைக் காணலாம்.

    பாபா, ஜெயமோகன் எப்போது உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ஆனார்? :-)) எனக்குத் தெரிந்து மரத்தடியிலிருந்து பல இடங்களில் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைப் படிக்க முடியவில்லை என்றும் (அவரிடமே கூட நீங்கள் கேட்ட ஞாபகம்), அளவில் பெரிய கட்டுரைகளாக எழுதுகிறார் என்றும், இப்படிப் பல விமர்சனங்களையும் கிண்டல்களையுமே நான் உங்களிடமிருந்து எழுத்திலும் நேரிலும் கேட்டிருக்கிறேன். இப்போது திடீரென்று உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் வரிசையில் ஜெயமோகன் வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், இதற்கு முன் ஜெயமோகன் பற்றி நீங்கள் சொன்ன கருத்துகளையும் விமர்சனங்களையும் மாற்றிக் கொண்டு விட்டீர்களா? ஒரு கருத்தையும் விமர்சனத்தையும் மாற்றிக் கொள்வதில் தவறில்லை. வளரும்போது மாற்றிக் கொள்வது வழக்கம்தான். ஆனால், அதே கருத்து இப்போதும் இருந்து, ஜெயமோகனும் பிடித்த எழுத்தாளர் என்றால், எங்கோ உதைக்கிறது.

    நீங்கள் ஜெயமோகனைப் பற்றி எழுதப்போக, ரவி ஸ்ரீனிவாஸ் பொங்கலைக் கூட கொண்டாடாமல், இங்கேயே கமெண்ட் எழுத உட்கார்ந்து விட்டார் போலிருக்கிறதே. :-) (இறுதியில் ஸ்மைலியைக் கவனிக்கவும்.)

    மற்றபடி, ஜெயமோகனைப் பற்றிய அறிமுகத்தை எடுத்துப் போட்டதற்கு நன்றி. எடுத்துப் போட்டதுடன் நின்றுவிடாமல், அதுபற்றிய தங்கள் கருத்துகளையும் செப்பியிருக்கலாம்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    பனிமனிதன் குறித்து ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னது பெரும்பாலும் சரியென்பதுதான் என் அபிப்ராயமும்கூட. குழந்தைகளுக்காக எழுதப்படுவதென்ற முத்திரையுடன் வந்தபோது நல்ல முயற்சியென்றுதான் தோன்றியது - தொடரைப் படிக்கையில் மிஞ்சியதென்னவோ ஏமாற்றமே.

    ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களிலும் அவரது சிறுகதைகளே என்னளவில் வசீகரமானவை. ஒருகாலத்தில் வசீகரித்த 'ஜகன்மித்யை' போன்ற கதைகளெல்லாம் இப்போது சாதாரணமாகப் பட்டாலும், மாடன் மோட்சம், நாகம், நைனிடால், படுகை இன்னும் பல கதைகள் எத்தனை முறை வாசித்தாலும் இன்னும் அலுப்பதில்லை. தனிப்பட்ட தேர்வெனில் 'லங்கா தகனம்', 'டார்த்தீனியம்' இரண்டையும் சொல்லலாம் - அவை இரண்டும் குறுநாவல் 'தொகைகளில்' (இதுமாதிரி விஷயங்கள்தான் பல்லில் அரைபடும் கல் மாதிரி ;-)) உள்ளதென்று நினைக்கிறேன். முன்னுரையில் அவரே குறிப்பிட்டிருப்பதுபோல, மாடன் மோட்சம் மிகக் குறைந்த பிரதிகளே அச்சடிக்கப்பட்ட ஒரு சிறுபத்திரிகையில் வந்ததெனினும், அது அடைந்த பிரபலத்துக்கான முழுத் தகுதியையும் கொண்ட கதை அது. 'மண்' தொகுதியில் இருந்த டார்த்தீனியம், இன்னும் வசீகரமான ஒரு கதை - நேரடிப் பிரச்சார நோக்கமற்ற கதைகளில் குரூர விவரிப்பை அதன் முழு வீச்சுடன் உபயோகப்படுத்தியதாக நான் உணர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று (இதே ரீதியிலான ஒரு வீச்சை சார்வாகன் என்னும் ஒரு பழைய எழுத்தாளரின் சில கதைகளில் கண்டதுண்டு - ஒரே ஒரு சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறதோ என்னமோ நினைவு). லங்கா தகனமும் மற்றொரு அற்புதமான கதை; படிமங்கள் மூலமாக மட்டுமே நானும் எழுதமுடியும் பார் என்று சூரியக் கோவிலை மையமாக வைத்து எழுதப்பட்ட 'ரதம்' போன்ற மிகப் பலவீனமான முயற்சிகளுக்கும் தேவை இருந்திருக்கிறது. ஆனால், தன்னைப்பற்றி genre-bender என்று ஜெயமோகன் கூறிக்கொள்வது அவரது சுயபிரஸ்தாபத்தால் ஓரளவு இடறுவதாகப் பட்டாலும், அதில் குறைந்தபட்சமாவது சிறிது உண்மையும் இல்லாமலில்லை. Bend செய்ததாகக் கூறும் அனைத்துமே நிஜ benderகள்தானென்று, அவை எப்படி வளைத்தன என்று அடுத்து அவரே கூறமுயலும்போதுதான் பிரச்னை ;-)

    சித்தார்த், உங்களின் 'கொற்றவை' வாசக அனுபவத்திற்கு காத்திருக்கிறேன்.

    ---அதே கருத்து இப்போதும் இருந்து, ஜெயமோகனும் பிடித்த எழுத்தாளர் என்றால், எங்கோ உதைக்கிறது---

    நான் ரசிக்கும் எழுத்தாளர்கள், சில சமயம் நான் விரும்பாத, மகிழ முடியாத (அல்லது) உள் செல்ல முடியாத படைப்புகளையும் எழுதுவார்கள். என்னுடைய அம்மாவுடன் பேசும்போது சில சமயம் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பேன்; அதுவே, முன்பின் அறிமுகமில்லாத நபர் என்றால் புன்சிரிப்போடு நகர்ந்து விடுவேன். எனக்குப் பிடித்தவருடன் தான் வாக்குவாதம், வேறுபாடுகளை பகிர்ந்து தெளிவு பெறுதல் எல்லாம்.

    அதே மாதிரிதான் ஜெமோ-வின் சிறுகதைகள் தொகுப்பு படிக்க ஆரம்பித்தவுடன் அமைதியாக வித்தியாசமாக திளைக்க வைத்தது. பிடித்த படைப்பாளியின் எல்லாப் படைப்பும் எப்பொழுதும் பிடித்தேயிருப்பதில்லை.

    சன்னாசி... நன்றி!

    ஜெயமோகன் முன்னுரைகளில் இருந்து சில பகுதிகள்:

    'மாடன் மோட்சம்' இருநூறு பிரதிகளே அச்சிடப்பட்ட 'புதிய நம்பிக்கை' இதழில் வெளிவந்தது.

    நான் எழுத வந்தபோது இருந்த சிறுகதை வடிவம் மௌனி, கு.ப. ராஜகோபாலனில் இருந்து தொடங்கியதும் அசோகமித்திரன் மற்றும் சுந்தர ராமசாமியால் வலுவாக நிலைநாட்டப் பெற்றதுமான நவீனத்துவச் சிறுகதை வடிவம். அடர்த்தியான மொழி, கூர்மையான கூறுமுறை, மௌனம்மிக்க வெளிப்பாடுகள், திட்டவட்டமான உச்சமுடிச்சு அல்லது கவித்துவ எழுச்சிப்புள்ளி உடைய கதைகள் அவை. வண்ணதாசன் அவ்வகைக் கதைகளில் ஓர் இனிய மென்மையைச் சேர்த்து இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்றிருந்தார்.

    தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். சிறந்த உதாரணம் வண்ணதாசன். இவ்வியல்பை ஒரு குறைபாடாக நான் கருதவில்லை. ஒரே வகை எழுத்து அல்லது ஒரே சூழல் சித்தரிப்பு அன்பது அப்படைப்பாளியின் உளையல்பின் தனித்தன்மை. அவன் உருவாக்கும் அழகியல் மாறுபாடுகள் அந்த ஒரே தன்மையின் உள்ளே நுட்பமாக நிகழ்ந்திருக்கலாம். அதற்கும் வண்ணதாசன் கதைகளே உதாரணம்

    மாறாக புதுமைப்பித்தன் போன்ற படைப்பளிகளின் வடிவத்தை, மொழிநடையை, கருப்பொருளை மாற்றியபடி தாவியபடியே இருப்பதைப் பார்க்கிறோம். இவ்வியல்பு என் கதைகளிலும் இருப்பதைக் காண்கிறேன். 'தேவகி சித்தியின் டைரி' போன்ற துல்லியமான யதார்த்தச் சித்தரிப்புகளும் 'நாகம்' போன்ற முழுமையான மிகை புனைவும் உள்ளது. 'விரித்த கரங்களில்' போன்ற புராணப்புனைவும் 'என் பெயர்' போன்ற சமூகச் சித்தரிப்பும் உள்ளது. கட்டுரையின் தன்மை கொண்ட 'தேவதை' போன்ற கதைகளை ஒரு கட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

    இவ்வாறு தொடர்ந்து தாவுவதற்கான காரணம் வாசக ஆர்வத்தை தக்கவைப்பது அல்ல என்பதை இங்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

    தொடர்ச்சி:

    குறுநாவல் என்பதற்கு 'நாவலுக்கிரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூரிமையையும் அடைந்த இலக்கிய வடிவம்' என்று வரையறை செய்திருந்தேன். சிறுகதை போலவே அது ஒரு சாலை ஓட்டத்தில் விரைய வேண்டியிருக்கிறது. குறுநாவல் ஒரு வகையில் சிறுகதையாசிரியனின் ஊடகமாகும். நாவலுக்கு சீரான முன்வேகம் ஒரு நிபந்தனை அல்ல.

    மூன்று குறுநாவல்கள் தமிழ் வாசகர் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

    ஒன்று 'டார்த்தீனியம்'. அது குறித்து இந்தப் பத்து வருடங்களில் ஐநூறு வாசகர்களாவது குறிப்பிட்டிருப்பார்கள். அதன் செல்வாக்கு எனக்கே வியப்பூட்டுவதாக உள்ளது.

    'லங்கா தகனம்' சில முக்கிய வாசகர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.

    'பத்ம வியூகம்' கதை இலங்கை வாசகர்க்ளிடையே தனியான ஒரு கவனத்தைப் பெற்றிருக்கிறது.

    //ஒன்று 'டார்த்தீனியம்'. அது குறித்து இந்தப் பத்து வருடங்களில் ஐநூறு வாசகர்களாவது குறிப்பிட்டிருப்பார்கள். அதன் செல்வாக்கு எனக்கே வியப்பூட்டுவதாக உள்ளது.//

    லக்ஷ்மி, சிவசங்கரி, கோதா பார்த்தசாரதி, பி.வி.ஆர், அனுராதா ரமணன் என்ற ரீதியில் விகடன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த அந்தக்காலக் 'குடும்பக் கதைச் சிக்கல்கள்' அனைத்தையும் கடைவாயில் போட்டு போட்டு இரக்கமில்லாமல் ஒரே அரையாக அரைப்பதாக முதன்முதலில் இந்தக் கதையைப் படிக்கையில் உணர்ந்தேன். ஜெயமோகனின் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் படித்தது இக்கதையைப் படிக்கையில் நினைவுக்கு வந்து, ஒரு semi-autobiographical twist இருந்ததாக உணர்ந்ததைத் தவிர்க்க இயலவில்லை - ஒருவேளை இது தவறாயும் இருக்கலாம்.

    //'லங்கா தகனம்' சில முக்கிய வாசகர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.//
    ஒரு குறும்படமாக எடுக்கப்பட வாய்ப்பிருப்பின் அபாரமாகப் பொருந்தும் இந்தக் கதை. கதகளி போன்ற mimetic traditions குறித்துப் புனைவில் அதிகமாகப் படித்திராததால் இது ஒரு அதிகபட்சப் பாராட்டாகத் தோன்றலாம் - ஆனால் கடைசிப் பத்தியில் ஆசான் முழு அலங்காரத்துடன் குரங்கு மாதிரி புதர்களைத் தாண்டி தாவிக் குதித்தவாறு வருவதைப் படிக்கையில், ஜெயமோகன் இப்போது தேய்பதமாக்கிவிட்ட 'மனோ எழுச்சி' நிஜத்தில் எழுந்ததென்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    இங்கு குறிப்பிடப்பட்ட மாடன் மோட்சம், லங்கா தகனம், ஜகன் மித்ஹ்யை, டார்த்தீணியம் ஆகிய கதைகளோடு கட்டாயத் திருமணம் போன்றதொரு 'பெரியவர்கள்' பிரச்சனையை ஒரு மூன்று வயது சிறுமியின் கண்களால் பார்க்கும் "ஆயிரம் கால் மண்டபம்",மகளின் வளர்ச்சியை அருகே நின்று கவனிக்கும் ஒரு தந்தையின் நெகிழ்ச்சியை காட்டும் "விரல்" ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

    கொற்றவை நானும் படிக்கத் துவங்கியுள்ளேன். வரிக்கு வரி கற்பனையைத் தூண்டுவதாக இருக்கிறது.

    நான் ஒரு தனி பதிவு ஜெயமோகனைப் பற்றிப் போட நினைத்திருக்கும் போது உங்கள் பதிவு வந்துவிட்டது.
    நான் விடப்போவதில்லை.
    :)
    நானும் என் பங்குக்கு ஜெயமோகனைப் பற்றி எழுதப் போகிறேன் - ஒரு தனி வலைப்பூவாக.
    அப்போது இந்த வலைப்பதிவை இணைப்பாகப் பயன்படுத்த அனுமதித்தால் மகிழ்வேன்.

    ---ஒரு தனி பதிவு ஜெயமோகனைப் பற்றிப் ---

    உங்களின் அலசலில் பார்க்க கிடைப்பது அன்றாட கூறுகளுடனும் எளிமையாகவும் அமையும். அவசியம் கொடுங்கள்.

    இணைப்புக்கு அனுமதி கேட்க அவசியம் இல்லை :-)

    ----
    "ஆயிரம் கால் மண்டபம்" இனிமேல்தான் படிக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து வருகிறேன். 1995 இந்தியா டுடேவில் வெளிவந்தது.

    //இதே ரீதியிலான ஒரு வீச்சை சார்வாகன் என்னும் ஒரு பழைய எழுத்தாளரின் சில கதைகளில் கண்டதுண்டு - ஒரே ஒரு சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறதோ என்னமோ நினைவு//

    'எதுக்கு சொல்றேன்னா!'

    மாடன் மோட்சம் நான் வெகுவாக விரும்பிய கதை .திண்ணையில் வெளிவந்துள்ளது.

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=10304062&format=print

    Thinnai - ஜெயமோகன்

    ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் ' புதினத்திலிருந்து. ஜெயமோகன் கவிதைகள்

    தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு

    ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள் :: மொழிபெயர்ப்பு ஜெயமோகன்

    ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ] - ஜெயமோகன்

    கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ?

    நாராயண குரு எனும் இயக்கம்

    ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல்

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு