வியாழன், ஜனவரி 26, 2006

பிசாசு மொழி

பிசாசு (பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்)

மின்மடல் அனுப்புவது ஒரு கலை. இரண்டு வரி எழுதினவுடன், பலுக்கப் பிழைகளுக்கு கவலைப்படாமல், தங்கிலீஷில் தட்டச்சி, எலிக்குட்டியை 'Send' மேல் வைத்து அழுத்த வேண்டியதுதான்.

ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காத இணைய உலகத்தில், முகந்தெரியாத ஒருவரின் கவன ஈர்ப்பைக் கோருவது, வேறு விதிகளை ஆட்டத்திற்கு அழைக்கிறது.

நான் பின்னூட்ட சாதனையாளன் என்று எல்லாரும் அறிவார்கள். மன்ற மைய காலத்தில் ஆரம்பித்து வலைப்பதிவு காலம் வரை மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.

தன்முனைப்பை விட, எழுத்தார்வத்தை விட, இலக்கிய சேவையை விட, வேலையில்லா அலுவலை விட, இதற்கு பல சுபாவங்கள் தேவை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.


1. முடிந்தவரை கடுமையான மொழியைப் பயன்படுத்தவும். அடைமொழிகளில் விளித்தல் நலம். ஆங்கிலத்தில் நான்கெழுத்து சுடுசொற்களை ஆங்காங்கே தெளிக்கவும். (மறந்தும் தமிழில் திட்டக் கூடாது).


2. வன்கருத்தை முன்வைக்கும்போது அந்த நிலைப்பாட்டை நீங்கள் கடைபிடிப்பதற்கான அவசியம் கிடையாது. தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகும் படங்களையும் ஜெயமோகன் எழுதும் காவியங்களையும் அனைவரும் பார்க்கவும் படிக்கவுமா போகிறோம்? எனினும் விமர்சிக்கலாம்.


3. ஒரு விஷயத்தை ஒருவர் வரவேற்பது பிடிக்கவில்லையென்றால் 'ரசிகர் மன்றக் கூட்டம்' என்று கூப்பிடவும். பாராட்டி எழுதுபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்.


4. எதிர்மறையான் விமர்சனம் என்றால், எழுதியவரை உளவியல் நோய் உள்ளவராக சொல்லுங்கள். நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்து பெயர் வாங்கிக் கொள்ளும் கூட்டம் என்று அழையுங்கள்.


5. ஆங்காங்கே பாராட்டுக்களும், சிற்சில இடங்களில் பிழைசுட்டுதலுமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களின் தேவைக்கேற்ப நல்லதையோ கெட்டதையோ மறைத்துக் கொண்டு, செலக்டிவ் அம்னீஷியாவாக மறந்துவிட்டு, #3 அல்லது #4-ஐக் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.


6. முழு கட்டுரையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. தொடக்கத்தில் ஒரு வரி ஆட்சேபகரமாக இருந்தாலோ அல்லது மறுமொழிந்தவர்களில் உங்கள் நண்பரின் பதிலை அடியொற்றியோ உங்கள் பின்னூட்டம் அமையலாம். அரைகுறையாக அலசியவுடன் எழும் உணர்ச்சியை உடனடியாக எழுதவேண்டும். யோசித்து எழுதினால் மறந்து போகும் அபாயம் இருக்கிறது.


7. உங்களின் வாதம் எடுபடாத மாதிரி தோன்றினால் 'எனக்கு தற்போது வேலை அதிகம்' என்று கூறிவிடுங்கள். கண்ணில் சிக்காமல் பதில் போடாமல் தப்பித்து விடுங்கள். ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தால் புதுப்பெயரில் உலாவரத் தொடங்குங்கள்.


8. புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்புங்கள். மதம், மொழி, இனம், கட்சி, நாடு போன்றவை எடுபடும். திரியைக் கொளுத்திய பிறகு இருபக்கமும் அடித்துக் கொள்வதை ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும். மறந்துபோய் கூட வாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது.


9. எளிமைப்படுத்தலை சகித்துக் கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக 'வோர்ட்ப்ரெஸ்.காம் இலவசமாக செயல்படுகிறது' என்றால் அதற்கு முன்னரே நியூக்ளியஸ் இலவசமாகக் கொடுத்தார்களே என்று நுட்பமான ஆதாரங்களுடன் தவிடு பொடியாக்குங்கள்.


வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் பதிவிற்கு உதவியவர்: Pills of the American Internet Neighborhood Society (PAINS)


பிசாசு முறைகள் வெற்றியடையாவிட்டால்: Rules for Making Oneself a Disagreeable Companion| |

7 கருத்துகள்:

>>>>மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.

:)

>>>> 'எனக்கு தற்போது வேலை அதிகம்'

:))))

-x-

மறுபடியும் 9 கட்டளைகளா?

.:dYNo:.

:-)

பாலா,ஆப் பீ ஹை நா...

:-)

hi hi (Tamil)

- Suresh Kannan

:)

நீர் என்னத்தான் இங்கீலீசுக்காரனோட லிங்க் கொடுத்தாலும் அத்தனையும் "எங்கேயோ கேட்ட குரல்" தான் :-))))

டைனோ... சேரியமாய் நான் எடுத்துரைத்தால் நகைக்குறியில் மூழ்கிட்டீரே ;-))

மற்ற நகைக்கடைகாரர்களுக்கும் நன்றிக்குறிகள் __/\__

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு