செவ்வாய், ஜனவரி 03, 2006

Sideways

சைட்வேஸ் ::

ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைத்திருந்தார்கள். எனவே, குறைவான எதிர்பார்ப்புகளுடன் பார்க்க ஆரம்பித்தேன்.

நாயகனுடன் ஒன்ற முடிகிறது.

'கவலை யாருக்கு இல்ல?
அதக் கடந்து போவணும் மெல்ல!'
என்று வரும் 'ஆதி'யின் லேலாக்குப் பாடல் போல, தத்துவத்தை போட்டு உடைக்காமல், உள்ளர்த்தமாக சொல்கிறார்கள்.

நானும் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். வேலை பார்க்கும் ஒவ்வொரு நாளும் ஏதாவது எழுதுகிறேன். எழுதியது பிரமாதமாக இருக்கும் என்னும் மிதப்புடன் தமிழ்மணம், திண்ணை-களில் சமர்ப்பிக்கிறேன். நண்பர்களும் படித்துவிட்டு தோளில் தட்டிக் கொடுக்கிறார்கள். 'நகுதற் பொருட்டன்று' என்று நினைப்பவர்கள் புத்தகம் போடுமாறும், பத்திரிகைகளில் எழுதுமாறும், சி# 2005 படிக்குமாறும் எடுத்துரைக்கிறார்கள்.

சைட்வேஸ் நாயகன் மைல்ஸ், ஓர் எழுத்தாளன். எழுத்தில் சோபிக்காததில், திராட்சை ரசத்தில் குளித்தெழுகிறான். தன்னைவிட சிறந்த, மது விமர்சகன் கிடையாது என்பது போல் குடிக்கிறான்.

மூழ்காத ஷிப்பான ஃப்ரெண்ட்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக ஜாக் வருகிறான். மைல்ஸுக்கு உற்சாகமுண்டாக்க முயற்சிக்கிறான். அடுத்த வாரம் நடக்கப் போகும் ஜாக்-கின் திருமணத்தை முன்னிட்டு கல்லூரி தோழர்கள் இருவரும் சிற்றுலா சென்று திரும்புவதுதான் திரைப்படம்.

எழுத்தாளன் மைல்ஸ் wine connoisseur-ஆக நினைப்பது போல், துணை நடிகன் ஜாக்-கிற்கு ஸ்திரீ என்றால் 'ரெடி' என்று அலைகிறான். தங்களின் கவலைகளை மறக்க, தேர்ந்தெடுத்த தொழிலில் சோபிக்காததை கண்டுகொள்ளாமல், ஸைடு வாங்குகிறார்கள்.

மைல்ஸ் சொல்லும் படத்தின் உயிர்நாடி வசனத்தைக் கொண்டு, 'சைட்வேஸ்' தலைப்பின் குறியீடாக 'pinot noir' என்னும் வைன் வகையை சொல்லலாம்:

'அந்த விதமான திராட்சையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். சரியான நேரத்தில் பறிச்சுடணும். தோல் பதம் சரியா இருக்கணும். கொஞ்சம் பிசகினாலும் சுவை குன்றிப் போயிடும். எதைப் போட்டாலும் ஒப்பேத்துற Cabernet போல் இல்ல pinot noir. எப்பவுமே கவனிச்சுப் பார்த்துகணும். அது விளையறதுக்குன்னு இடம் இருக்கு. எல்லாராலேயும் வளர்க்க முடியாது. எவனுக்கு Pinot-வின் முழு வீச்சும் உணர முடியுதோ, அவனால்தான் கலக்கலா கொண்டுவர முடியும். அப்படி வந்த திராட்சையின் சுவையும் மணமும் - காலாகாலத்துக்கும் மனசுக்குள்ள புதைஞ்சு போயி, மீண்டும் மீண்டும் ஏங்க வைக்கும்!'


உப்பு பெயராத விஷயம் கூட கற்பனையாளன் கையில் எவ்வாறு சிக்குண்டு கிங்காங் விஸ்வரூபமாகிறது என்பதற்கு காட்டாக 'மாயா' வர்ஜீனியா சொல்லும் இடம்:

'Wine என்பதற்கு உயிர் இருக்கே! இந்த திராட்சைகள் எப்படி வளர்க்கப்பட்டது? மழை பெஞ்சுதா? வெயில் அதிகமா? அந்த வருஷம் வெள்ளம் வந்ததா? இந்த திராட்சையை யார் அறுத்தார்கள்? எப்படி பாதுகாத்தார்கள்? நாள்பட்ட சரக்கு என்றால், அவர்களில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள்? நீங்க வைத்திருக்கும் 61' செவால் வைன் இப்பொழுது முதிர்ந்து, இன்னும் கொஞ்சம் நாளில் தன்னுடைய உன்னதத்தை இழக்கும் என்கிறார்கள். நாம என்னிக்கு இந்த பாட்டிலை திறக்கிறோமோ, அதற்கு ஏற்றபடி, இதன் சுவை மாறுகிறதே! நமது அனுபவங்களைக் கொண்டு வெளிப்பாடுகள் மாறுவது போல், வைனுக்கும் உயிர் இருக்கிறதோ!'


நாயகர்கள் இருவருக்கும் தங்களின் பாதை பக்கவாட்டில் செல்வதை உணர்வதில்லை. தாங்கள் இருக்கும் ஃபேண்டஸி உலகம் உறைக்கவில்லை. தங்களின் நண்பன் இடித்துரைத்தாலும் கோபம் மட்டுமே வருகிறது.

புத்தாண்டு பிறப்பதைக் கொண்டாடப் பிடிக்கிறது. கடந்த வருடம் நடந்ததையெல்லாம் பழைய ஏட்டிலே ஒதுக்கிவிட்டு விடலாம். புதிய கோப்பையிலே, புதிய அனுபவங்களிலே பழசை புறந்தள்ளி, புதுசாக வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறார்கள்.

மாற்றுப்பாதையில் செல்வதே அனுதினம் நடக்கும் பாதையாக முடியாது?!

தொடர்புடைய சுட்டி: கீற்றுக்கொட்டாய்




| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு