திங்கள், ஜனவரி 23, 2006

SMS அன்பர் போட்டி

குறுமொழி & நெடுங்காதல் : காதல் பலவகைப்படும்.

சங்க காலத்துக் காதல் இலக்கணத்துக்குட்ப்பட்டது. வெண்பா, கழிநெடிலடி ஆசிரியப்பா, என்று அளவை போட்டு முறைப்பெயராக எழுதுவார்கள். இலக்கியத்தரமாய் வார்த்தைகள் கொண்டிருத்தல் தெரிநிலை வினை.

சீவகசிந்தாமணியில் இருந்து எடுத்துக்காட்டு:

ஆணை ஆணை அகலுமின் நீர் என
வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணையின்று எமதே என்று அணிநகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே


இறைவனை நோக்கிப் பெரும்பாலும் காதல்வயப்பட்டார்கள். பதினோராம் திருமுறையில் இருந்து:
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா


எதுகை மோனையும் மீட்டரும் தாளமும் துள்ளி விளையாடும். கம்பராமாயணத்தில் இருந்து:
நங்கை அங்கு ஒரு பொன், 'நயந்தார் உயத்
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகலா
வெம் கண் என்கண் விளைந்தது இவற்கு?' என்றாள்.



அடுத்த காதல் புதுக்கவிதை. நிறைய நிறுத்தற்குறிகள்........... சொல்லாத சொற்களை fill in the blanks போட்டுக் கொள்ளும்.

பா.விஜய் எழுதிய 'உடைந்த நிலாக்கள்' தொகுப்பில் இருந்து உதாரணத்தைப் பார்க்கலாம்:
"நள்ளிரவு... நிலா... பூந்தென்றல்...
யாழ் இசை... பிருத்விராஜன்... சம்யுக்தை...
பார்த்தல்... அழைத்தல்... தீண்டல்...
தடவல்... சுவைத்தல்... கலத்தல்..." (பக். 99)


'ஜூனூன்' தரமாய் வாயசைப்பிற்கு ஏற்ற முன்பின் வார்த்தைகள் கொண்டிருக்கும். அப்துல் ரகுமானை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்:
"ஞாபக முட்கள்
காயங்களைச் சுட்டி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக.
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை"


சாதாரண வார்த்தைக் கோர்ப்பு, தானியங்கி எழுத்தாக எழுச்சியடைந்து, வினோதச் சொற் சேர்க்கையில் உதிக்கும் படிமங்களாக உருவடைந்து காதலர்களுக்கு புதுக் குறியீடுகளைக் கொடுத்தது. விக்ரமாதித்யனில் இருந்து:
"கட்டில்
செய்யலாம்

கப்பல்
செய்யலாம்

கணக்கு
செய்யலாம்

கவிதை
செய்யமுடியுமா"



இலக்கிய வார்த்தைகள் மேல் பிரேமை கொண்டது. அபியில் இருந்து ஒரு உதாரணம்:
"பிரக்ஞையின்
அறாவிழிப்பு

இரவிலி நெடுயுகம்
இடந்தொலைத்த ஆழ்வெளி

சிறையிருப்பது
காலமும்தான்"


பொன்மொழிகள் கவிதைகளாகக் கருதப்பட்டது. அறிவுமதி கைகொடுக்கிறார்:
"காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று"



சமீப காலம் வரை C++ நிரல் எழுதுவது போல் பொருட்களின் குணாதிசயங்களை ஹைகூவாக்கி காதல் சொன்னார்கள். கணையாழியில் வெளிவந்த சந்திரலேகாவின் (மார்ச், 1991) ஹைக்கூ:
"என் வீட்டுக்கு வா
என்னிடம் பாயில்லை போட
என் கண்ணின் இமையில் உட்காரு."


ஆனால், ஹைக்கூவிற்கும் வில்லன்கள் வந்தார்கள். முதல் வரியில் இம்புட்டு ஓசை; மூன்றாம் வரியைத் தாண்டி நான்கு ரன்களுகு செல்லக் கூடாது என்று கட்டளைகள் வந்து கொண்டிருக்கிறது.

காதல் போன்ற கட்டுபாடுகளற்ற மகிழ்ச்சிக்கு ஏற்ற உருவம் எஸ்.எம்.எஸ்.(SMS). பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது தோன்றியதை உடனடியாக தோழிக்கு அனுப்பலாம். பின்னால் முடிச்சுப் போட்ட துப்பட்டாவுடன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக நிற்கும்போது மனதில் உதிப்பதை தோழருக்கு அஞ்சல் செய்யலாம். நண்பர்கள் அனுப்புவதை மேம்படுத்தி, ஃபார்வார்ட் செய்யலாம்.

நவீன காலத்துக்கு குறுமொழியே சிறந்ததாக விளங்குவதால், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழோவியமும் 'குறுமொழி & நெடுங்காதல்' போட்டிக்கு தங்களின் எஸ்.எம்.எஸ். காதல்மொழிகளை அனுப்புமாறு அழைக்கிறது.

எஸ்.எம்.எஸ்.ஸின் மூர்த்தி சிறிதாக இருந்தாலும், எளிதாக அனுப்புநரை சென்றடைவதால் கீர்த்தி பெரிது.

மேலும் விவரங்களுக்கு....


சொந்தமாக உல்டா செய்த சில எஸ்.எம்.எஸ்.கள்....

தீபாவளி லைட்ஃபுல்,
பொங்கல் ஸ்வீட்ஃபுல்,
ஹோலி கலர்ஃபுல்,
ஃபிரண்ட்ஷிப் பவர்ஃபுல்,
நீ இருந்தால் லைஃப் ஃபுல்!
------------------------------------

தேங்காய், பழம், ஊதுபத்தியோட
எல்லாரும்
கோயிலுக்குப் போவாங்க...
நான் மட்டும்
உன்னோடுதான்
போவேன்
------------------------------------

அறுத்து எடுத்தாத்தான் நெல்லு!
அடிக்கடி விளக்கினாத்தான் பல்லு!
அம்பு விட்டாத்தான் வில்லு!
அன்பே முத்தம் கொடுத்தாதான் காதலு!



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு