புதன், பிப்ரவரி 01, 2006

காஸ்ட்ரோ கவுண்ட்-அப்

ஃபிடல் காஸ்ட்ரோவின் நரபலிகள் ::

"க்யூபாவில் 'வேட்டைப்படை' எதுவும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக ஒருவரைக் கூட காணாமல் போக்கியது கிடையாது. எவரையும் நாங்கள் துன்புறுத்தியது இல்லை. நாடு முழுக்க பயணம் செய்து, குடிமக்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு துப்பு கூட உங்களுக்குத் துலங்காது. எங்காவது ஓரிடத்திலாவது, ஒரு நபராவது அவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தால், இனிமேல் பொதுவில் வாயைத் திறக்கவே மாட்டேன்" - ·பிடல் காஸ்ட்ரோ, ஏப்., 2001

("There have never been death squads in our country, nor a single missing person, nor a single political assassination, nor a single victim of torture... You may travel around the country, ask the people, look for a single piece of evidence, try to find a single case where the Revolutionary government has ordered or tolerated such an action. And if you find them, then I will never speak in public again.")



ஜனவரி 1, 1959 முதல் மார்ச் 15, 2005 வரை காஸ்ட்ரோ அரசினால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்
படை வீரர்களினால் சாகடிக்கப்பட்டவர்கள் (Firing squad executions) : 5,640
சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டவர்கள்: 1,203
சிறைச்சாலை மரணங்கள்: 2,199
காணாமல் போனவர்கள்: 198
மொத்தம்: 9,240

"Balseros" (கடல் வழியாக தப்பிக்கும் பொழுது உயிரிழந்தவர்கள்) 77,833
மொத்தம்: 87,073

ஆதாரம்: The Cuba Archive | Free Society Project



உலகெங்கும் 'டெத் ஸ்காவ்ட்'கள் பிரபலம். கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்காக ஸ்டாலின் பிரபலப்படுத்திய 'வேட்டைப்படை' வீரர்களை சமீபத்திய ஈராக் வரை கூட பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் வழி வந்த ·பிடல் காஸ்ட்ரோ இன்றளவிலும் மிரட்சியை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

'Fog Facts' என்னும் புத்தகத்தில் லாரி பென்ஹார்ட் (Larry Beinhart) அமெரிக்காவில் மூன்று விதமான மனிதர்கள் இருப்பதாக எழுதுகிறார். உலகெங்கும் பொருத்தமான பாகுபாடு அது.

முதலாம் பிரிவில் பொதுஜனம். நீதி, நியாயத்துக்கு அடிபணிந்து செல்பவர்கள்.

இரண்டாவது பிரிவில் பலிகடாக்கள். ஒரு வார்த்தை அதிகமாகப் பேசினாலோ, மறதியாக சாலையில் எச்சில் துப்பினாலோ கூட தீவிரவாதியாகக் கருதப்படுபவர்.

மூன்றாவது பிரிவில் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக, சட்டத்துக்குப் புறம்பானவர்கள். உங்களின் தொலைபேசியை இவர்கள் ஒட்டுக் கேட்கலாம்; தவறில்லை. அந்தரங்கங்களை ஆராய்வதுடன் நிற்காமல் அவதூறு கிளப்பலாம்; அதுதான் அவர்களின் வேலை.

க்யூபாவில் முதலாம் பிரிவு கிடையாது என்பதுதான் வருத்தமான உண்மை. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நார்மன் மெயிலர் (Norman Mailer), ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சக்திவாய்ந்த தலைவர் ஜெஸி ஜாக்ஸன் (Jesse Jackson), சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·பிடல் காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம்.

மே 27, 1966-இல் நூற்றி அறுபத்தியாறு க்யூபாவினரை, சொந்த நாட்டினரை, போராடும் பொதுமக்களை மட்டும் தனியே நிற்கவிட்டு, சுற்றியிருக்கும் க்யூபாவின் படை வீரர்கள் சராமாரியாக குண்டு மழை பொழிந்தார்கள். அதன்பின், ஒவ்வொருவரிடம் இருந்து மூன்றரை லிட்டர் இரத்தத்தை உறிஞ்சினார்கள். அதற்குப் பின், இந்த இரத்தங்கள் போரில் சிக்கியிருந்த வியட்னாமுக்கு, ஐம்பது அமெரிக்க வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. வியட்னாமும் க்யூபாவும் கம்யூனிஸ்ட் நாடுகளாக இருந்தபோதும், கறுப்புச்சந்தை மதிப்பீட்டுக்கே க்யூபா போராளிகளின் இரத்தம் ஏற்றுமதியானது.

யாஸர் அரா·பத் இறந்தபிறகுதான் பாலஸ்தீனத்தில் மாற்றம் ஏற்பட்டது. சுதந்திரமாகத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் ஆட்சிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், க்யூபாவில் ·பிடலின் தம்பி ரவுலின் (Raul) பராக்கிரமம் இரும்புப்பிடியாக இருக்கும். அண்ணனைப் போன்ற கம்யூனிஸக் கொள்கைப் பற்று எதுவும் கொண்டிராமல் இருப்பது, ரவுல் காஸ்ட்ரோவின் தனித்தன்மை.

அண்ணன் - தம்பி ஆட்சியில் இருந்து தப்பித்துச் செல்லும் வழியில் கிட்டத்தட்ட 78,000 'பால்செரோஸ்'கள் இறந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்பில் அமெரிக்காவுக்கும் பெரும்பங்கு உண்டு. அமெரிக்க மண்ணைத் தொடும்வரை அஞ்சி, பாதிக் கடலில் பிடிபட்டால், க்யூபாவுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அமெரிக்கக் கரை கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரியும்போது, ஜனவரியின் குளிர்நீரில் நீஞ்சி வருபவர்களும் பத்திரமாக க்யூபாவுக்கே தூக்கியடிக்கப்பட்டு, காஸ்ட்ரோ நிர்வாகத்தினால் சாகடிக்கப்படுகிறார்கள்.

காஸ்ட்ரோவைப் போல் sweeping statements விடாமல், 'க்யூபன் ஆர்கைவ் திட்டம்', ஒவ்வொரு கொலையையும் சரிபார்க்க பெரிதும் மெனக்கிடுகிறது. இந்த முறைப்படி ஒவ்வொரு மரணத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்க வேண்டும். புகைப்படங்களின் மூலமாகவோ, நேரடியாக நிகழ்வைப் பார்த்தவர்களாலோ, உடன் இருந்தவர்களாலோ உறுதி செய்யப்பட வேண்டும்.

இறக்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு செயல்படவில்லை. 'லா கபானா' கோட்டையில் 1959-இல் சே குவேராவினால் கொல்லப்பட்ட 151 நபர்கள் ஆகட்டும்; 94 சிறுவர்களின் கொலைகள் ஆகட்டும். ஒவ்வொரு மரணத்தையும் மனிதராகப் பார்த்து, அவர்களின் ஊர், பெயர், வாழ்க்கை அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.

தடாலடியாக வெற்று சவடால் பேசும் காஸ்ட்ரோவின் கூற்றை மறுப்பதற்காக, சத்தமேயில்லாமல், அவர்களினால் கொல்லப்பட்ட 9,240 பேர்களின் கதைகளையும் நம் முன் வைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.

  • க்யூபாவின் கடற்படையினரால் 'ஆல்பர்ட்டோ லாசோ பாஸ்ட்ரானா'வின் படகு மூழ்கடிக்கப்படுகிறது. அம்மாவை சுறாமீன்கள் உணவாக்கிக் கொள்கிறது. மூன்று மகன்களின் பிரேதம் கூட கிடைக்கவில்லை.

  • 'எஸ்தானிஸ்லௌ கொன்சாலஸ்' போன்று சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டு சித்திரவதையில் உயிரிழந்தவர்களின் குறிப்புகள் ஏராளம்.

  • 'கார்லோஸ் ஆல்பெர்ட் கோஸ்டா' போன்று வழிதவறி பயணிகள் விமானம் ஓட்டி வந்த பலர், எந்த முன்னறிவிப்புமின்றி, எச்சரிக்கையுமின்றி, எதிரிகளின் ஆயுதம் தாங்கிய விமானம் போல் கருதப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

  • ஈக்வடாரில் (Ecuador) தஞ்சம் புகுந்த பதினைந்து வயதே ஆன 'ஓவன் டெல்காடோ டெம்ப்ரானா', தூதரகத்திலேயே குற்றுயிராக அடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான்.

  • பதினேழு வயதான '·ப்ளோரஸ் டயஸ¤'க்கு சிறையில் மருத்துவ வசதி மறுக்கப் பட்டிருக்கிறது. அவனைப் போன்று 2,199 சிறைக்கைதிகளின் இறப்புகளில் பலருக்கு அதிகாரபூர்வ காரணமாக, 'ஹார்ட் அட்டாக்' சொல்லப்படுகிறது.

  • எட்டு மாத கர்ப்பிணியான 'லிடியா பெரஸ் லோபஸி'ன் வயிற்றில் எட்டியுதைத்து, கால்பந்து விளையாடி, தாயையும் சேயையும் கொன்றதன் மூலம், ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல், இருபாலாரையும் சமமாக பாவித்திருக்கின்றனர் க்யூபாவின் அரசு.

  • வயது வித்தியாசமும் பார்க்காமல் எழுபது வயது 'எட்முண்டா செர்ரட் பாரியோஸை' சிறைச்சாலையில் அடித்தேக் கொன்றிருக்கிறார்கள்.

    தீவிரவாத அமைப்பின் வெற்றி அது உண்டாக்கும் பயத்தில் இருக்கிறது. புரட்சியாளர்களை நசுக்கும் ஆதிக்க அரசுகளின் வெற்றி, சொந்த சகோதரர்களின் இழப்பை பார்த்து மனம் வெதும்புவதில் இருக்கிறது.

    காஸ்ட்ரோவுக்கு எதிராக குரல் எழுப்பிய சாண்டாமாரியா (Haydee Santamaria), மரியல் துறைமுக (Port of Mariel) வெளியேற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் பார்த்தபின், மனம் பாதிப்படைந்து தற்கொலை செய்து கொண்டதில், க்யூபாவின் அராஜக வெற்றி மிளிர்கிறது.

    இவ்வளவு நிகழ்வுகள் வெளிப்படையாக இருந்தபோதிலும், உலக மத்தியில் புரட்சியாளர் பிம்பத்தை காஸ்ட்ரோ தக்கவைத்துள்ளார். நாற்பத்தியேழு ஆண்டுகளாக அரியணை சுகம் அனுபவித்தாலும் அரசியல் அரங்கில் அர்ஜெண்டைனாவின் ஜனாதிபதி போன்றோரிடையே 'மனித உரிமைக் காவல'ராக கொண்டாடப்படுவதின் ரகசியம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    இந்தக் கட்டுரைக்கு பாஸ்டன் க்ளோபும் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த பத்திகளும் உதவியது.

    தொடர்புள்ள வலையகம்: பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கதை




    | |

  • 4 கருத்துகள்:

    பாத்து பாலா... நம்ம இடதுச்சாரீங்க கோச்சுகப் பொறாங்க.

    நல்ல தகவல்கள். இவர் செய்வதைத்தான் போர் என்ற பெயரில் புஷ் செய்ராரே

    ஓ! இவ்வளவு நடந்திருக்கிறதா?
    அமெரிக்காவிற்கு தண்ணி காட்டுவது ஒன்று போதுமே அவருக்கு புரட்சியாளர் என்ற பெயரை கொடுக்க!

    முக்கியமான தகவல்கள், கட்டுரை; நன்றி.

    அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றைப்பார்வை கொண்டவர்களாலேயே காஸ்ட்ரோ பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் - எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாப்படி (தற்போது ஹிந்து பத்திரிக்கை ஈரானைக் கொண்டாடுவதும் இவ்வகையில் சேர்த்தி தான்). நம்ம முற்போக்கு சிந்தனைவாதிகளின் கட்டுடைப்புகளெல்லாம் அவர்களின் வசதிப்படி தான். காஸ்ட்ரோ, சே குவெரா (இவரைப் பற்றிய ஸ்லேட் கட்டுரை நினைவிருக்கிறதா?) இவர்களெல்லாம் (I hate using this pilfered metaphor) புனிதப்பசுக்கள் தாம்.

    Muthu Tamil Weblogs ... !

    போலந்து நாட்டில் கம்யூனிஸம் வித்தியாசமாக நடைமுறையில் இயங்கியதாகப் படித்திருக்கிறேன். இ.பா.வின் 'யேசுவின் தோழர்கள்' படிக்கலாம்.

    நேரடி அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள். டாக்டர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுத்துவிட்டு, எண்ணெய்க்காக அவர்களை வெனிசுவேலாவிற்கு ஏற்றுமதி செய்வது என்று பல முரண்களை அடுக்கலாம். இவ்வளவு நாள் கம்யூனிஸம் இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் ஜனநாயகத்துக்கு மாறுவதும் க்யூபாவினருக்கு பெரும் சிரமத்தைத் தரும்.

    காலைப் பிடித்து க்யூபா மன்றாடவேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆசை; ருஷியா போல் ஆக்கிக் கொண்டு மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்று ஆட்சியாளருக்கு ஆசை...

    விடாக்கண்டன் & கொடாக்கண்டன்

    (பின்னூட்டக்காரர்களுக்கு __/\__ :-)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு