திங்கள், பிப்ரவரி 06, 2006

கருத்துக் காவலர்கள்

Political correctness - George Orwell

பிறந்ததில் இருந்து சாகும் வரை கருத்துக் காவலர்களின் கண்காணிப்பில்தான் கட்சி உறுப்பினர்கள் வாழவேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும்போதும் கூட தனியாக இருக்கிறானா என்பது நிச்சயமில்லை.

அவன் எங்கிருந்தாலும், நித்திரையில் ஆழ்ந்திருந்தாலும், முழித்திருந்தாலும், வேலையில் மூழ்கியிருந்தாலும், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், படுக்கையில் சயனித்திருந்தாலும், அவனை சோதனை போட முடியும். சோதனைக்குள்ளாகிறோம் என்பதை உணராமலேயே, பரீட்சிக்கப் படுகிறோம் என்று அறிவிப்புகள் வராமலேயே நடத்தப்படும்.

அவன் எதையும் வித்தியாசமாக செய்வதில்லை. அவனுடைய நட்பு, கேளிக்கை, பாவனை, குடும்பத்துடன் பழகும் விதம், தனிமையில் தோன்றும் முகச்சலனம், தூக்கத்தில் புலம்பும் வார்த்தை என்று எல்லாமுமே, இயல்பான உடலின் அசைவு உட்பட துல்லியமாக அலசப்படுகிறது. மிகச்சிறியதாகக் கூட பிழற வேண்டாம். படபடத்திருக்க வேண்டாம். பழக்கவழக்கத்தில் நிகழும் நுட்பமான மாறுதல்கள் மட்டுமே போதும். அவனைக் காட்டிக் கொடுத்துவிடும்.

அடுத்த டேபிளில் அமர்ந்திருப்பவன் கருத்துக் காவல்படை (Thought Police)யை சேர்ந்தவனாக இருக்கலாம்.

மற்றவர்களால் கவனிக்கப் படுகிறோம் என்பதை எப்பாடுபட்டாலும் அனுமானிக்க முடியாது. ஒவ்வொருவரையும் இருபத்தி நாலு மணி நேரமும் கருத்துக் காவலர்கள் பார்த்துக் கொண்டிருப்பதும் சாத்தியமே. எப்படியாக இருந்தாலும் உங்கள் மேல் ஒற்றுக்கருவியை எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் பொருத்திக் கொள்ளலாம். நீங்கள் வேவு பார்க்கப்படுகிறீர்கள் என்ற நினைப்பில்தான் வாழவேண்டும். தூக்கத்தில் பேசுவது பேராபத்து. உளறல் என்றாலும் உங்கள் கருத்தாகக் கொள்ளப்படும்.

கருத்துக் குற்றம் (Thoughtcrime) என்பதை எப்போதுமே வெளிக்காட்டாமல் இருக்க முடியாது. பல காலமாக சிந்தனையை மறைத்து ஒதுக்கியிருக்கலாம். என்றாவது ஒரு நாள், அவர்களால் நிச்சயம் பிடிபட்டுவிடுவீர்கள்.

அண்மைய காலகட்டத்திய சிறுவர்கள் எல்லாருமே பாவப்பட்டவர்கள். குப்பையை சொல்லித்தரும் பள்ளி; சார்ந்திருக்கும் அமைப்பின் முழக்கங்கள்; காலை வணக்க கானங்கள்; எல்லாமே அவர்களின் சுவாதீனமான உணர்வுகளை தூரத் தள்ளிவிட்டது. கட்டுக்குள் அடங்காதவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால், அவர்களின் கோபம் கட்சியின் எஃகு சட்டங்களை உடைப்பதற்கு எதிராக அல்லாமல், கருத்துக் கிரிமினல்களை நோக்கிப் பாய்கிறது.

தங்கள் பெற்றோருக்கு எதிராக செயல்பட வைக்கப்படுகிறார்கள். கருத்துக் காவலரின் பிரதிநிதியாக குடும்பத்தை வேவு பார்க்கிறார்கள். நம்பகம் வாய்ந்த உற்றவர்களே ஐந்தாம்படையாக துப்பு கொடுத்து சூழ்ந்திருக்கிறார்கள்.

முப்பதைத் தாண்டியவர்கள் சொந்தக் குழந்தைகளைக் கண்டு அஞ்சுவது சாதாரணமானது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு வாரமும் செய்தித்தாளில் பெற்றோரின் சம்பாஷணையைத் துப்புக் கொடுத்து, கருத்துக் காவலரிடம் அனுப்பிய 'குழந்தை நட்சத்திரம்' குறித்த செய்திகள் வெளியாகிறது.

அது இரவில் மட்டும்தான் நடந்தது. எப்பொழுதுமே இரவுகளில்தான் கைதுகள் அரங்கேறியது. அனேக கைதுகள் வெளியில் தெரிவதில்லை. கோர்ட்டுக்கு செல்வதும் கிடையாது. நள்ளிரவில் மக்கள் காணாமல் போய்விடுவார்கள். உங்களின் பெயர் தஸ்தாவேஜுகளில் இருந்து எடுக்கப்பட்டுவிடும். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலின் தடயங்களும் அழிக்கப்படும். தங்களின் வாழ்வு மறுக்கப்படும். உங்களின் இருப்பு மறக்கப்படும். உங்களைக் கொன்று, அழித்துவிடுவார்கள். காற்றோடு கலந்து மறைவீர்கள்.

அசாதரணமாக, சில சமயம் இறந்தவராக நினைக்கப்பட்டவர் பொதுவில் தோன்றுவார். மக்கள் மன்றத்தில் விசாரணை நடக்கும். நூற்றுக்கணக்கானவரை வாக்குமூலமாகக் குற்றஞ்சாட்டுவார். அதன்பிறகு அவரும் காணாமல் போய்விடுவார். இந்த முறை மீளமாட்டார்.

சரியான முடிவென்பது அவர்கள் உங்களை அடைவதற்கு முன், நீங்களே உங்களைக் கொன்று கொல்வதுதான். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். ஆனால், விஷம், துப்பாக்கி, குண்டுகள் போன்ற கருவிகள் இல்லாத உலகத்தில் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு பெருவீரம் தேவைப்படுகிறது.

- 1984 :: ஜார்ஜ் ஆர்வெல்


Political correctness என்னும் உபதலைப்பும் மொழியாக்கமும் நான் கொடுத்தவை. இந்தப் பகுதி பிடித்திருந்தால், நீங்கள் படித்து புரட்ட வேண்டிய ஆசிரியர்களும், புத்தகங்களும்:
The New Thought Police : Inside the Left's Assault on Free Speech and Free Minds ::

Hannah Arendt: The origins of Totalitarianism | The Human Condition
Daniel J Boorstin: Cleopatra's Nose: Essays on the Unexpected | The Discoverers | The Creators | The Seekers
Ray Bradbury: Fahrenheit 451
Andrea Dworkin: Scapegoat: The Jews, Israel, and Women's Liberation | Intercourse | Heartbreak: The Political Memoir of a Feminist Militant
Brenda Feigen: Not One of the Boys: Living as a Feminist
David Horowitz: Radical Son: A Generational Odyssey | Hating Whitey and Other Progressive Causes
Aldous Huxley: Brave New World
Ayn Rand: For the new Intellectual | Atlas Shrugged | The Fountainhead
Michael Walzer: On Toleration




| |

4 கருத்துகள்:

உங்கள் மொழிபெயர்ப்பா?

//ஆனால், விஷம், துப்பாக்கி, குண்டுகள் போன்ற கருவிகள் இல்லாத உலகத்தில் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு பெருவீரம் தேவைப்படுகிறது.//

அருமை.

//பிறந்ததில் இருந்து சாகும் வரை கருத்துக் காவலர்களின் கண்காணிப்பில்தான் கட்சி உறுப்பினர்கள் வாழவேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும்போதும் கூட தனியாக இருக்கிறானா என்பது நிச்சயமில்லை.//

சிலநேரங்களில் இந்தியனாய், தமிழனாய், இதைத்தான் பார்க்க, படிக்க, பேச, சிந்திக்கவேண்டுமென நாமும் (மறைமுகமாகக்) கட்டாயப் படுத்தப்படுகிறோம்.

'அமெரிக்காவின் இடதுசாரிகளைப் பற்றிய புத்த்கமென்ற' முன்னுரை அளித்திருந்தால் தளத்தை மேலும் புரிந்துகொண்டிருக்கலாம்.

பச்சோந்தி ரசித்த வரிகள் எனக்கும் பிடித்திருந்தன.

---உங்கள் மொழிபெயர்ப்பா---
Yes... More like an adaptation of his work.

Cyril, Chameleon __/\__

Baba,

This translation (or transcreation) is smooth, easy, and good. Pidiyum oru paaraatai.

Thanks and regards, PK Sivakumar

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு