சண்டக்கோழி அமெரிக்கா
Why We Fight - திரைவிமர்சனம்
மக்கள் நலனை பாதுகாப்பது போல் கொடுங்கோலன் பேசுவான்; ஆனால் அவன் செய்கைகளினால் நன்மை கிடைக்காது.
- Ramman Kenoun
அமெரிக்காவிற்கு இது பயம் தலைக்கேறிய காலங்கள்.
ஏழாவது படிக்கும் மாணவன் தன்னுடைய பள்ளிக் கட்டுரையில் எழுதிய விஷயத்துக்காக பள்ளியை விட்டே நீக்கப் படுகிறான். கிட்டத்தட்ட கைது ஆகி பாலர் சிறையில் கூட தள்ளியிருப்பார்கள்.
'உன்னுடைய உகந்த நாளில் என்ன நடக்கும்' என்னும் கேள்விக்கு பதிலாக எழுதிய கட்டுரையினால்தான், அவனுக்கு பைத்தியம் பட்டம் கிடைத்திருக்கிறது.
'கோகோ-கோலாவின் தலைவர், வால்-மார்ட்டின் மேலாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆகியோர் கொல்லப்படுவார்கள்'என்று பொலிடிகலி இன்கரெக்ட் ஆக எழுதி வைத்தான். வயதுக்கு மீறிய சிந்தனை பள்ளியை விட்டே நீக்க செய்து, அமெரிக்க உளவுப் படையால் கண்காணிக்கப்பட்டு என்று அமெரிக்காவின் மொத்த பாதுகாப்பு அமைச்சகமே அந்த மாணவனை ஆராயத் தொடங்கி விட்டது.
அமெரிக்காவிற்கு ஏன் இந்த பயம்? வியட்னாமில் கம்யூனிஸ்ட்கள் ஆண்டால், தெற்காசியா முழுவதும் கம்யூனிஸம் பரவி விடுமோ என்று அஞ்சுகிறார்கள். பின் லேடனுக்கு பயந்துகொண்டு மொத்த வளைகுடாப் பகுதியிலும் அமெரிக்க இராணுவத்தை கோலோச்ச விடுகிறார்கள். உலகப் போர் முடிந்து சரித்திரமாகிய பின்பும், நட்பான ஜெர்மனியிலும் இன்ன பிற ஐரோப்பாவிலும் கூட ஐம்பது வருடங்களுக்கு மேலாக அமெரிக்கத் தளவாடங்கள் ஊடுருவி நிற்கிறது. ருஷியா சிதறுண்ட பின்பும் அதன் மிச்ச மீதிகள் அனைத்திலும் பராக்கிரமத்தை ஊடுருவி omnipresent-ஆக உலகத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் அமெரிக்க வீரன் நிற்கவைக்கப் பாடுபடுகிறார்கள்.
கிரேக்க, ரோமானிய சாம்ராஜ்யங்கள் இருந்தது. ·ப்ரென்சு, ஆங்கிலேயே, ஸ்பானிஷ் என்று பின்பு மாறியது. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டனும், மற்ற ஐரோப்பாவும் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஜப்பானில் அணுகுண்டு நாசம். ருஷியாவில் ஏராளமான சேதங்கள். சீனாவும் சுருண்டிருந்த காலம். திடீரென்று சுயராஜ்யத்துக்கு மாறிய தெற்காசிய, வளைகுடா ஆசியாவின் காலனி அரசுகள். ஆனால், அமெரிக்காவுக்கு மட்டும் இவ்வித பாதிப்புகள் ஏதும் இல்லாமல், பெரிய அளவில் வீரர் இழப்பு இல்லாமல் வெற்றி. வெளிப்படையாக புதிய சாம்ராஜ்யம் உருவாக்கா விட்டாலும் அதைத்தான் அமெரிக்கா கடந்த ஐம்பது வருடங்களாக விஸ்தரித்து வந்திருக்கிறது என்கிறார் யூஜீன் (Eugene Jarecki).
'·பாரென்ஹீட் 911' எடுத்த மைக்கேல் மூரினால் பிரபலப்படுத்தப்பட்ட விவரணப் பட முறையில் எடுக்கப் பட்ட திரைப்படம் - 'நாம் ஏன் சண்டை போடுகிறோம்?'
ஆனால், மைக்கேல் மூர் போல் இல்லாமல் எழுவரல் (liberal) மற்றும் பழமைவாத (conservative) சிந்தனைகள் இரண்டுக்குமே போதிய அளவு சமபங்கு கொடுக்கும் படம். நடுநிலையான அதே சமயம் விறுவிறுப்பான, தலையங்கப் பக்க கட்டுரையைப் படிப்பது போன்ற வடிவம். கருத்து சுதந்திரத்துடன் இயங்கும் விவாதக் குழுகளில் நடைபெறுவது போன்ற, எதிரும் புதிருமான தர்க்கங்கள். விவரங்கள் நிறைந்த தகவல்களை மட்டும் காட்டி மயக்காமல், சரித்திரத்தை சுவாரசியமான நிகழ்வுகளுடன் பதிந்து முடிவை நம்மையே எடுக்கச் சொல்லும் ஆவணப்படம்.
அமெரிக்கப்படைக்கு வீரர்களை ஈர்ப்பதற்காக ·ப்ரான்க் காப்ரா (Frank Capra)வின் படத்தின் தலைப்பான 'Why We Fight'-ஐ மீண்டும் இந்தப் படத்துக்கும் இட்டிருக்கிறார். அன்று நாஜி ஜெர்மனியையும் ஆதிக்க சக்திகளையும் எதிர்ப்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அணிதிரட்டுவதற்கு உபயோகப்பட்ட 'தலைப்பு', இன்று ஆதிக்க சக்திகளை அடையாளம் காட்டுவதற்காகப் பயன்பட்டிருக்கிறது.
MIC ("military-industrial complex") என்னும் பதம் குடியரசுக் (Republican) கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் (Dwight Eisenhower)-இனால் பயன்படுத்தப்பட்டு, இன்று அமெரிக்க ஆட்சியை ஆட்டிப் படைப்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். அரசியல்வாதிகள், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்கு வங்கி, கட்சி செலவுக்கு பணத்தைக் கொட்டும் செல்வாக்கு அமைப்புகள் (lobbyists), மற்றும் இராணுவத்திற்கு ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் என்று கூட்டு சேர்ந்து தொடர்ச்சியாகப் போர்களைத் தொடுப்பதன் பொருளாதார காரணங்கள் நம் முன் விரிகிறது.
அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவொரு வகையில் இராணுவத்திற்குத் தேவையானவை உற்பத்தியாகிறது. இராணுவத்திற்கான செலவைக் குறைக்க மசோதா கொண்டு வந்தால், அந்தத் தொகுதிகளை சேர்ந்தவர்கள், மசோதாவைத் தோற்கடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்கிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், அன்பளிப்பாக, தேர்தல் நிதியை உரியவர்களிடம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து இராணுவ காண்டிராக்ட் அவர்களுக்கு செல்கிறது. இராணுவத்திற்கான பட்ஜெட் அதிகரிக்கிறது. அதிக நிதி ஒதுக்கீடை நியாயப்படுத்த மேலும் போர்கள் தொடங்குகிறது.
இந்த சக்கரம் எப்படி முடியும்?
சால்மர்ஸ் ஜான்சனின் (Chalmers Johnson) Sorrows of Empire எழுதிய விஷயங்களைத் திரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்க வல்லரசையும், ஜான்ஸன் சொல்லும் Blowback எனப்படும் பூமராங் ஆகும் அயலுறவுக் கொள்கையும் ரோமானிய சாம்ராஜ்யம் போன்ற வீழ்ச்சியும் எவ்வாறு நெருங்குகிறது என்பதை புரிய வைக்கிறார்கள்.
சரி... அமெரிக்காவின், அமெரிக்க கொள்கைகளின் வில்லன் யார்? பிரச்சினை எப்படித் தீர்ப்பது? படத்தின் முடிவில் ஒரேயரு குற்றவாளி கிடையாது.
'ஹாலிபர்டன்' அமைப்பின் மூலம் கோடி கோடியாக சம்பளம் வாங்கிய இந்நாள் துணை ஜனாதிபதி டிக் சேனியை நோக்கி ஒரு விரல் சுட்டுகிறது. இன்னொரு விரல் இராணுவ ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக கட்சி வித்தியாசம் பாராமல், பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் மந்திரிகளையும் தன்வசமாக்கியுள்ள, பங்குச்சந்தைப் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் சுட்டுகிறது. அடுத்த விரல், 'தற்காப்புக்காக பிறரை துவம்சம் செய்வது தவறல்ல' என்னும் பிரச்சாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஜனாதிபதியையும் அவரின் சிந்தனையை தன்வசப்படுத்திய அமைப்புகளையும் சுட்டுகிறது. கடைசியாக, 'எதற்காக போர்' என்று கவலை கொள்ளாமல், பின் விளைவுகளை அலட்சியப் படுத்தும் அளவு சொந்தக் கவலைகளில் மூழ்கிப் போன அமெரிக்க சமுதாயத்தையும், குடிமகன்களையும் காட்டுகிறது.
படம் நெடுக பலரின் பேட்டிகள், குரல்கள் ஒலிக்கிறது. 9/11 தாக்குதலில் தன் மகனை இழந்த ஒருவரின் கதை தொடர்ச்சியாக வருகிறது. உலக வர்த்தக மையம் வீழ்ந்ததற்கு ஈராக்தான் காரணம் என்று அவரை ஊடகங்கள் நம்பவைக்கிறது. பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார். முதன் முதலாக ஈராக்கின் தலைமையைத் தகர்க்க விரையும் இரு போர் விமானங்கள் காட்டப்படுகிறது. அவருக்கு தன் மகனின் இழப்பிற்கு, ஈடு கிடைத்த திருப்தி. பல மாதம் கழித்து முதல் அதிர்ச்சி; அவருக்கும் நமக்கும் கிடைக்கிறது. ஈராக்கில் 'இராஜ்ஜிய மாளிகை', 'அரசின் முக்கிய புள்ளிகள்' என்று கருதப்பட்டுத் தாக்கிய இடங்கள் எல்லாம் தங்கள் இலக்கை தவறவிட்டிருக்கிறது. ஒன்றல்ல; இரண்டல்ல... அனைத்து குறிகளுமே ராஜாக்களை விட்டு விட்டு பொதுஜனங்களை காவு வாங்கியிருக்கிறது.
இதற்கு சமாதானமாக 'அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டேயிருக்கிறது' என்று புதிய தளவாடங்களை விற்க நிறுவனங்கள் போட்டி போடுகிறது. கணினிக்கு நிரலி எழுதுவதால் இந்த மாதிரி பிழைகள் சகஜம் என்றும், அடுத்த வெர்ஷன் சரியாக வேலை செய்யும் என்னும் சப்பைக்கட்டு முன்வைக்கப்படுகிறது.
மேலும், குண்டு வீசும் விமானிகளுக்கு தாங்கள்தான் முதன் முதலாக எதிரியின் கோட்டைக்குள் நுழைகிறோம் என்னும் நடுக்கம் கலந்த மயக்கம். மேக மூட்டம் நிறைந்த இருட்டில் இலக்கை சரி பார்க்கும்போது, ஈராக்கிய போர் விமானத்தால் வீழ்த்தப்படுவிடுவோமோ என்னும் எண்ணம் பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கிறது. எதிரியால் கொல்லப்பட்டுவிட்டால், வீட்டில் இருக்கும் குழந்தைகளின் நிலை என்ன என்னும் கழிவிறக்கங்கள் போன்றவற்றை உணர்த்தும் பேட்டிகள் நடு நடுவே நமக்குக் காட்டப்பட்டு, 'உணர்ச்சியின்றி அடிக்க, குறிதவறாது தாக்க, இராணுவம் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல!' என எண்ண வைக்கிறது.
மகனை இழந்தவருக்கு பேரதிர்ச்சியாக ஜார்ஜ் புஷ்ஷின் வாக்குமூலம் அமைகிறது. 'ஈராக்கை நாம் போர் தொடுக்க காரணம் 9/11 அல்ல.' என்கிறார். எய்தவனையும் பிடிக்காமல், அம்புகளையும் தப்பிக்க செய்துவிட்டு மான்கள் என்றாவது புலியாக மாறலாம் என்னும் வாதத்தில் போர் தொடுக்கிறாரா என்று வருந்துகிறார்.
அமெரிக்கா என்றுமே சண்டைக் கோழிதான். கம்யூனிஸத்தைக் கட்டுப்படுத்துவோம் என்னும் கோஷம் இருக்கலாம். க்யூபாவிற்கு சுதந்திரம் என்று மொழியலாம். பேரழிவு ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், எண்ணெய், 'அவர்கள்தான் உதவி கேட்டார்கள்', அகிலமெங்கும் ஜனநாயகம், சமத்துவம், சமாதானம் என்று பல காரணங்களை முன் வைக்கலாம். அமெரிக்கத் தலைவர்கள் கென்னடியாகட்டும்; ரேகன் ஆகட்டும்; க்ளிண்டன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி, குடியரசு கட்சி என்று வித்தியாசம் பாராமல் எல்லாருமே போர் ஆர்வம் கொண்டவர்கள்.
அமெரிக்காவின் போக்கற்ற ஏழை குடிமக்களுக்கு இராணுவம் மட்டுமே குட்டிச்சுவராக அமைகிறது; ஆபத்பாந்தவனாக கை கொடுக்கிறது. இராணுவ விமானம் ஓட்டுவதற்கு ஆசைப்பட்டு, ஹெலிகாப்டர் மெக்கானிக் ஆக சேர்ந்தவனின் கதையை சொல்கிறார்கள். தாய் சமீபத்தில்தான் இறந்திருக்கிறாள். கல்லூரிக்கு செல்வதற்கு பணம் கிடையாது. பள்ளியை மட்டும் முடித்துவிட்டு என்ன செய்வதென்று தவிக்கிறான். அம்மா இருந்தவரை இராணுவத்துக்கு செல்லக் கூடாது என்னும் கட்டளை. அவளும் இல்லாத உலகத்தில், அடுத்த வேளை சோற்றுக்குத் திண்டாடும் நிலையில் இராணுவ விமானியாக வாய்ப்பு இருக்கிறது என்னும் வார்த்தைக்கு மயங்கி சேர்கிறான்.
இராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பவர்களைக் காட்டுகிறார். வியட்நாமில் நேரடியாக குண்டு வீச்சைப் பார்த்தவள். தெருவையே சுடுகாட்டாக்கும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கிறாள். அவளுக்கு அது ஒரு அன்றாட வேலை. அதன் மூலம் நேரும் இழப்புகளை நேரிலேயே அனுபவித்திருந்தால் கூட, தத்தெடுத்துக் கொண்ட நாட்டிற்கு செய்யும் சேவை.
தீவிர இடதுசாரியான கோர் விடால் (Gore Vidal) வருகிறார். 'ஜப்பானில் குண்டு போட்டதே, நிக்ஸனை பயமுறுத்தத்தான்' என்கிறார். ஏற்கனவே சரணடைந்துவிட்ட, போர் முடிந்துவிட்ட தருணத்தில் நாகஸாகி, ஹிரோஷிமாவை ட்ரூமன் தாக்கியதன் ஒரே காரணம் 'நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல' என்று ருஷியாவை மிரட்டிவைக்கத்தான் என்கிறார். ஈராக்கில் நிரந்தரமாக பதினான்கு இராணுவத்தளங்கள் அமைந்துவிடும் என முடிக்கிறார்.
இந்த மாதிரி சில காட்சிகளில், ஆங்காங்கே அராஜகமாய் கருத்துத் திணிப்பு நடைபெறுகிறது. ஈராக் போரை ஆதரித்த ஜான் மெக்கெயின் (John McCain) மகா உத்தமராக சித்தரிக்கப் படுகிறார். ஒரு நிமிடத்தில் ஐநூறு பக்க புத்தகங்களை சுருக்குவதன் விளைவு என benefit of doubt-ஐ இயக்குநருக்குத் தந்துவிடலாம்.
இராணுவத்திற்கான அமெரிக்காவின் நிதி ஒதுக்கீடு நானூறு பில்லியன் வெள்ளிகளை மிஞ்சுகிறது. நாட்டின் மொத்த செலவில் 52 சதவீதம் மிலிட்டரிக்கு செல்கிறது. கல்விக்கு செலவிடப்படும் ஏழு சதவீதத்தையும், உடல்நலத்திற்கு ஒதுக்கப்படும் ஆறு சதவீதமும், ஏம்போக்கியாக ஓரமாக பிச்சை போடப்பட்டிருக்கிறது. அயலுறவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 93 சதவீதம் பாதுகாப்புத் துறைக்குத் தரப்பட்டுவிடுகிறது. எஞ்சியிருக்கும் ஏழே சதவிகிதம்தான் உள்நாட்டு மற்றும் தற்காப்புகளுக்காக ஒதுங்குகிறது.
இவ்வளவு பணமும் எப்படித் தேவைப்படுகிறது?
இராணுவ காண்டிராக்ட்களை ஏலத்தில் பிடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள். ஒப்பந்தங்களைப் பெறுவதற்குக் கொடுக்கும் லஞ்சங்கள். போர்க்கருவிகளை மேம்படுத்த வலியுறுத்தும் லாபியிஸ்ட் அமைப்புகள். தேர்தல் நிதியைக் கேட்டுப் பெறும் அரசியல்வாதிகள்.
சமீபத்தில் பிபிசியில் The Power of Nightmares நிகழ்ச்சியில் அமெரிக்க நியோகான்களையும் (neo-conservatives) அடிப்படைவாத இஸ்லாமியர்களையும் ஒப்பீடு செய்யும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இருவருக்குமே புதியதோர் உலகத்தை இனிய முறையில் அமைப்பதே குறிக்கோள். ஆனால், தாங்கள் நினைத்ததற்கு மாறான பலன்களை இவர்களின் செய்கைகள் உருவாக்கியிருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதார அடிப்படையே போர்களினால்தான் அமைகிறது. குட்டி நாடுகளான கிரெனாடா, பனாமா, ஹைதி, சோமாலியாவில் தலையிடுவதில் ஆரம்பித்து கொள்கைப் போர் என்று சொல்லப்படும் பெரிய யுத்தங்களான வியட்நாம், ஈராக் வரை பொருளியல் கொள்கைக்களுக்காகவே நடாத்தப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் சொல்லும் விவரணப் படம்.
அமெரிக்கவாசிகள் இன்னும் ஏன் ஈராக் ஆக்கிரமிப்பை நம்புகிறார்கள். நாளையே ஈரான் மீது போர் தொடுத்தாலும் ஏன் பொங்கியெழ மாட்டார்கள். பிறன்மனை நோக்கிய ஜனாதிபதி க்ளிண்டனை impeach செய்தவர்கள், பொய் சொன்ன அமெரிக்க ஜனாதிபதியை ஏன் குற்றஞ்சாட்டி அவமானப்படுத்தவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் திரைப்படம் தேவையா, என்பதை 2008 அமெரிக்கத் தேர்தல் அறிய வைக்கலாம்.
திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள்: Why We Fight - A Film By Eugene Jarecki
அமெரிக்க பட்ஜெட்டை தூசு தட்டி புது இரத்தம் பாய்ச்சும் முறை:
மொத்தம் $60 பில்லியன் சேமிக்கலாம்
Tamiloviam.com
அமெரிக்கா | ஈராக் | தமிழ்ப்பதிவுகள்
I saw its trailer and should see the movie.
சொன்னது… 2/07/2006 02:16:00 PM
Excellent review, I will watch the docu/movie...
thanks,
Srikanth
சொன்னது… 2/07/2006 02:35:00 PM
Thanks for the review. I will try to see the movie.
சொன்னது… 2/07/2006 05:49:00 PM
கிரேக்க, ரோமானிய சாம்ராஜ்யங்கள் "இருந்தது"
There "was" Greek and Roma empires
கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்கள் "இருந்தன"
There "were" Greek and Roma empires
--
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டனும், மற்ற ஐரோப்பாவும் மிகக் கடுமையாக பாதிக்கப் "பட்டிருந்தது."
After World war II, Britain and rest of the Europe "was" severly damaged/affected
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டனும், மற்ற ஐரோப்பாவும் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தன.
After World war II, Britain and rest of the Europe "were" severly damaged/affected
--
அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவொரு வகையில் இராணுவத்திற்குத் தேவையான*வை* *உற்பத்தியாகிறது.*
Military needs *is* produced in every county in all 50 states in the US, one way or the other.
அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவொரு வகையில் இராணுவத்திற்குத் தேவையான*து* *உற்பத்தியாகிறது.*
அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவொரு வகையில் இராணுவத்திற்குத் தேவையான*வை* *உற்பத்தியாகின்றன.*
--
அதிக நிதி ஒதுக்கீடை நியாயப்படுத்த மேலும் போர்கள் *தொடங்குகிறது.*
More wars *is* started to justify the extra funding
அதிக நிதி ஒதுக்கீடை நியாயப்படுத்த மேலும் போர்கள் *தொடங்குகின்றன.*
More wars *are* started to justify the extra funding
--
Basically, starting with singular and ending with plural, or vice versa is irritating to read.
A simple translation to English like the *sample* above will show how bad it will look like, should it be translated to English.
I am writing this in English to show the importance of taking grammar seriously.
This is not just your problem alone, even the "elites" do it. I guess they are at liberty to butcher grammar in the name of "literature" or their own "style" :)
This comment need not be published, should it be deemed inappropriate :)
சொன்னது… 2/08/2006 07:33:00 AM
மறுமொழிகளுக்கு __/\__
பரி... பிழைகள் இருக்கிறது. மன்னிக்க... பிழைகள் இருக்க்கின்றன.
பன்மை மயக்கங்களைப் பொறுமையாக சுட்டியதற்கு நன்றி. (ஒற்று மயக்கங்களை இனொரு நாள் கவனிக்கவும்).
சொன்னது… 2/08/2006 08:24:00 AM
Statistical mistakes can be avoided by Google. Factual errors can be termed as opinion. Grammatical mistakes can be avoided only by Not writing.
பெயரில்லா சொன்னது… 2/08/2006 12:56:00 PM
கருத்துரையிடுக