வெள்ளி, பிப்ரவரி 10, 2006

பெருமாள்முருகன்

நிராகரிப்பின் உந்துதல் - பெருமாள் முருகன்

விமர்சனத்திலோ ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலோ ஈடுபடுவது என் மனத்துக்கு உகந்த காரியமல்ல. தமிழ்ச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகவும் என் தொழில் நிமித்தம் கல்விப்புலம் சார்ந்தவனாக இருப்பதாலும் விமர்சனம், ஆய்வு ஆகியவற்றில் சிலவேளைகளில் ஈடுபடுகிறேன். வாசிப்பினால் உருவாகும் கருத்தொன்றை நிறுவுவதற்குத் தர்க்கங்களை உருவாக்குவது, அதற்கு ஆதாரமான சான்றுகளைப் பலவிதமாகத் தேடித் தொகுப்பது முதலிய செயல்கள் எனக்கு எரிச்சலையும் சலிப்பையும் உண்டாக்குகின்றன. நிறுவ வேண்டியிராமல் கருத்தொன்றை மனவெளியில் உலவவிட்டுத் திரிவதில் கிடைக்கும் சந்தோசம், நிறுவுவதில் இல்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சனங்கள், ஈடுபடுபவரின் புலமையை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றனவே தவிர, வாசகருக்கு என்ன விதத்தில் பயன்படுகின்றன என்னும் கேள்வி எனக்குள் தொடர்ந்து இருந்து வருகின்றது. படைப்பை நோக்கி ஈர்ப்பது, படைப்பு குறித்த பார்வை உருவாகத் தூண்டுவது, படைப்புக்குள் பொதிந்துள்ள நுட்பமான அரசியலை வெளிப்படுத்துவது ஆகியவை விமர்சனத்தின் நோக்கமாக இருக்கும்பட்சத்தில் வாசகருக்கு அவை பயன்படக்கூடும். ஆனால் இங்குப் படைப்பு இரண்டாம்பட்சமானதாகவும் படைப்பாளியின் சார்புகள் முதல் நிலையினவாகவும் கொள்ளப்பட்டு விமர்சனச் செயல்பாடுகள் நிகழ்கின்றன.

படைப்பாளியை ஏதாவது ஒரு குழுவுக்குள் வலுக்கட்டாயமாக நிறுத்தும் வேலையை விமர்சனங்கள் செய்கின்றன. படைப்பாளி, விமர்சகர்களைச் சார்ந்தோ இதழ்க் குழுவைச் சார்ந்தோ இயங்க வேண்டியவர் என்னும் பார்வை வலுவாக இங்கே இருக்கிறது. தம்மை அதிகார பீடமாகக் கட்டமைத்துக் கொள்ள முயல்பவர்கள் எல்லாவற்றையும் இரண்டாக பிரித்துவிட முயல்கிறார்கள்.

ஒன்று தம்மைச் சார்ந்தது; மற்றொன்று, தமக்கு எதிரானது. எதிரான ஒன்று பருண்மையாக இல்லாவிடினும் ஒன்றைக் கற்பிதம் செய்துகொள்வதன் மூலமாகத்தான் தாம் இயங்க முடியும் என்னும் பரிதாப நிலை பரவலாகக் காணப்படுகிறது. படைப்பாளிக்குச் சுயமான பார்வை உண்டு அல்லது சுயமான பார்வையை நோக்கிய செயல்பாடுகளே படைப்புகள் என்னும் நோக்கு, விமர்சனத்தின் அடிப்படையாக அமையவேயில்லை. படைப்பை மையமாக வைத்து படைப்பாளியைச் சுயசிந்தனை கொண்டவராகக் காணும் போக்கு நிச்சயமாக இங்கு இல்லை. ஆகவே படைப்பாளி தன்னை நிலைநிறுத்தப் படைப்பல்லாத செயல்களிலும் ஈடுபட நேர்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கிருக்கிறது.

விவாதங்களை உருவாக்கும் முயற்சிகளே எதிரான செயல்பாடுகளாக அறியப்படுவதை எப்படி விளங்கிக் கொள்வது?

இந்தச் சூழல்கள் பூதாகாரமாகப் பெருகி என் மனத்தைத் தாக்கும் போது எரிச்சலுற்று, இனிமேல் கட்டுரைகளே எழுதுவதில்லை என்னும் முடிவுக்குச் செல்கிறேன். செயல்படாமல் இருக்கவேண்டும் என்பதே நம் சூழலின் எதிர்பார்ப்பு. செயல்பாடுகளை முடக்கும் ஏராளமான வழிகளை நம் சமூகம் வைத்திருக்கிறது. முன் அனுமானங்கள் பலவற்றை உருவாக்கிக் கொள்கிறது. உள்நோக்கங்களைக் கற்பிக்கிறது. மிகச் சாதாரண விமர்சன வரி ஒன்றைச் சதியாகப் பெருக்கிக் காட்டிப் பதற்றம் உருவாகச் செய்கிறது. வரிகளைப் பிடித்துத் தொங்கும் மனோபாவம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எதையும் சொல்லாமலே நழுவிச் செல்லும் பாவனைகளே பலருக்கும் பிடித்திருக்கின்றன. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடில்லை.

ஏன் நம் சமூகம், பெரும் சதிகளை உணராமல் அவற்றை ஆதரவாகக் கண்டு ஆர்ப்பரிக்கின்றது? அவசியமான செயல்பாடுகளைச் சதியாகக் கருதிச் சதேகம் கொள்கின்றது? இந்தச் சமூகத்திற்குப் பிம்பங்கள் மீது அப்படி என்ன மாறாத பிரியம்? பிம்பங்களை உருவாக்குவதிலும் உருவாகிய பிம்பங்களைக் கவனமாகக் காப்பாற்றுவதிலும் எதற்காக இத்தனை அக்கறை? சின்ன விமர்சனத்தினால் தகர்ந்துவிடக்கூடியது ஒரு பிம்பம் எனில், அதனை எதற்காகப் பற்றியணைத்து வைத்திருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை.

என் செயல்பாடுகள் மீது தொட்ர்ந்து அவநம்பிக்கையை உருவக்கிக் கொண்டே இருக்கிறது என் மனம். அது, போதாமையினால் தோன்றுகிறதா எதிர்பார்ப்பினால் உருவாகிறதா என்பதை என்ன்னால் கண்டுணர முடியவில்லை. ஆகவே நிராகரிப்பின் உந்துதல் என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாமா? தெரியவில்லை.

துயரம் துயர நிமித்தமும் - பெருமாள்முருகன்
காலச்சுவடு - ரூ. 75.

அனேக தமிழ் நூல்களில் காணக் கிடைக்காத பொருளடைவு (Index), பயன்பட்ட நூல்கள், குறிப்புகள் (Reference) மற்றும் வெளியீட்டு விவரங்கள் பயன்மிக்கவை. சுவாரசியத்தையும் கூட்டுகிறது.

பெருமாள் முருகன் 1966-இல் பிறந்தார். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர்.

இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார். அரசு கலைக்கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவருடைய இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல் முற்றம் (Current Show, 2004); கூளமாதாரி (Seasons of the Palm, 2004).


மனைவி - பி எழிலரசி
மகள் - இளம்பிறை
மகன் இளம்பரிதி

பெருமாள்முருகனின் 'நீர் விளையாட்டு' என்னும் சிறுகதை 2000ஆம் ஆண்டு கதா பரிசு பெற்றது.

நஞ்சுண்டன்: தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின் வீச்சோடு பெருமாள்முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டுச் சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த அக்கறையுடன் தன் கருத்துக்களை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார். பெண் படைப்பாளிகள் மீது முருகனுக்குள்ள கரிசனையோடு அக்ராதியியலில் இவரது புலமையும் துல்லியமாக இத்தொகுப்பில் வெளிப்படுகிறது. தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முன் தீர்மானங்களின்றிப் பிறர் படைப்புகளை அணுகியுள்ள முருகன், பதற்றப்படாமல் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


ஆசிரியரின் பிற நூல்கள்

  • ஏறுவெயில் - நாவல் : 1991

  • நிகழ் உறவு - கவிதை : 1992

  • நிழல் முற்றம் - நாவல் : 1993

  • திருசெங்கோடு - சிறுகதை : 1994

  • கூளமாதாரி - நாவல் : 2000

  • நீர் விளையாட்டு - சிறுகதை : 2000

  • கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் - கவிதை : 2000

  • ஆர் சண்முகசுந்தரத்தின் படைப்பளுமை - விமர்சனம் : 2000

  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி : 2000

  • கொங்குச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர் : 2001

  • தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர் : 2002




    | |

  • 2 கருத்துகள்:

    படைப்பாளியை ஏதாவது ஒரு குழுவுக்குள் வலுக்கட்டாயமாக நிறுத்தும் வேலையை விமர்சனங்கள் செய்கின்றன. படைப்பாளி, விமர்சகர்களைச் சார்ந்தோ இதழ்க் குழுவைச் சார்ந்தோ இயங்க வேண்டியவர் என்னும் பார்வை வலுவாக இங்கே இருக்கிறது. தம்மை அதிகார பீடமாகக் கட்டமைத்துக் கொள்ள முயல்பவர்கள் எல்லாவற்றையும் இரண்டாக பிரித்துவிட முயல்கிறார்கள்

    Does this not apply to Kalachuvadu.

    Bala,

    Thanx for this post.

    - Suresh Kannan

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு