சனி, மார்ச் 11, 2006

1984 - George Orwell

From Tamiloviam.Com: திரைப்பார்வை

ஜார்ஜ் ஆர்வெல் 1948-இன் உலகை நினைத்து 1984 (48-ஐ உல்டா செய்து 84) எழுதினார். எழுத்தைத் திரைப்படமாக்குவது கடினம்; அதுவும் அறிவியல் புனைகதை; மேலும் எழுத்தால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய தாக்கங்கள் நிறைந்த நாவல். கூடிய மட்டும் சிதைக்காமல், திரைப்படமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வின்ஸ்டன் ஸ்மித் தன்னுடைய வீட்டுக்குள் நுழையும் போது பெரிய திரை வேவு பார்த்துக் கொண்டே இருக்கிறது: 'பெரிய அண்ணன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்'. டிவி போல் இருக்கும் 70 எம்.எம் திரை வீட்டையை நிரப்பி கண்காணிக்கிறது. திரையில் 'என் இனிய இயந்திரா'வில் வரும் தலைவன் போன்ற அரூபமானக் கண்கள் அவனையே நோக்கியிருக்கிறது. அந்த தொலைக்காட்சியை அணைக்க இயலாது.

'கருத்துக் காவலர்'களின் கண்களாகவும் காதுகளாகவும் அது செயல்பட்டது. அரசாங்கத்தின் பிரச்சார பீரங்கியாக முழங்கியது. வின்ஸ்டனின் இருப்பிடத்தில் துளியூண்டு இடம் மட்டும் அந்த தொலைக்கண்காணிப்பின் கண்களில் சிக்காமல் இருந்தது. அங்குதான் அவன் தன்னுடைய நாட்குறிப்பை எழுதி வந்தான். அதிகாரபூர்வமாக, தண்டனைக்குரிய குற்றமாக அது கருதப்படவில்லை. ஆனால், கண்டுபிடித்தால் தேசத்துரோகியாகி விடுவான். சிரச்சேதம்தான்.

'இரண்டு நிமிட வெறுப்பு' என்பது அனைத்து அரசு ஊழியர்களும் பங்குபெறவேண்டிய பொது நிகழ்வு. பெரிய வெள்ளித் திரையில் எதிராளியின் முகம் தோன்றும். கோல்ஸ்டெயின் செய்யும் குண்டுவெடிப்புகளும் அராஜகமும் காட்டப்படும். 'கோல்ஸ்டெயின் ஒழிக', 'செத்தொழிக', என்று வாயில் வந்தவாறு கண்டபடித் திட்டி உமிழவேண்டும்.

வின்ஸ்டன் வசிக்கும் நாட்டின் பெயர் ஓசியானா. அவர்களுக்கும் வேறொரு நாட்டிற்கும் எப்போதும் சண்டைதான்; போர் முழக்கம்தான். சில சமயம் அந்த எதிரியின் பெயர் 'யுரேஷியா'; சில சமயம் 'ஈஸ்ட் ஏஷியா'. எவருடன் எதற்காக மோதுகிறார்கள் என்பது அவசியமற்ற தகவல். ஒரு போரில் வெற்றியடைந்தால், அடுத்த போர் துவங்கி விடும். கேள்வி எழக் கூடாது என்பதற்காக ஓசியானா-வில் அவ்வப்போது குண்டுவீச்சுகள் நிகழ்ந்தேறும்.

வின்ஸ்டனுக்கு திருட்டுத்தனமாக டைரியை விற்றவர் மிஸ்டர். சாரிங்டன். கோட் சூட்டுடன் டிப் டாப்பாக இருப்பவர். ஆனால், வாழ்ந்து கெட்டவர். பழைய தட்டு முட்டு சாமான்களை விற்று வாழ்க்கையைத் தள்ளுகிறார். உழைக்கும் மக்கள் வசிக்கும் இரண்டாம் தர குடியிருப்புப் பகுதிக்கு அனுப்பப்பட்டவர். அங்கு 'தொலைக்கண்காணிப்பு' திரைகள் கிடையாது என்பதுதான் வின்ஸ்டனுக்குப் பிடித்த விஷயம்.

ஓசியானா-வில் காதல் கிடையாது. கணவன் மனைவிக்குள் உறவு வைத்துக் கொள்ளுவது கூட கூச்சத்துடன் பாவச்செயல் போலக் கருதப்படுகிறது. அனைத்துப் பெண்களும் சகோதரிகள்; அனைத்து ஆண்களும் சகோதரன்கள்.

செய்திகளைத் திரித்து, மக்களுக்கு ஏற்றவாறு, மாற்றிப் போடுவதுதான் வின்ஸ்டனின் வேலை. ரேஷனில் சாக்லேட்டின் அளவு 30 கிராம்களாக உயர்வதாக செய்தி வந்தால், அதை 25 கிராமாகக் குறைத்துவிட்டு '10% அதிக சாக்லேட்' என்று கவர்ச்சியான தலைப்புச் செய்திகளாகக் கொடுக்கிறான். போரில் இறந்தவர்களை மறக்கடித்து, அவர்களின் பெயர்களை சிறைச்சாலையில் சாகடிக்கப்பட்டவர்களுடன் உல்டா செய்வதுதான் கடமை.

'இரண்டு நிமிட வெறுப்பு' கூட்டத்தில் புதிதாக புனைகதை எழுதும் பிரிவில் சேர்ந்திருப்பவளின் ஆக்ரோஷமான வெறுப்பைப் பார்த்து கவரப்படுகிறான் வின்ஸ்டன். பாத்ரூம் போய் திரும்பும் வழியில் அவள் தடுக்கி விழுகிறாள். கை கொடுத்துத் தூக்கிவிடுபவனிடம் துண்டு சீட்டுத் திணிக்கப்பட்டு, சிட்டாய்ப் பறந்து வேலைக்குத் திரும்பி விடுகிறாள்.

சீட்டுக்குத் திரும்பி, சீட்டைப் பிரித்தால் 'ஐ லவ் யூ'. கட்சி உறுப்பினர்களுக்குள் காதல் மலர்ந்தால் கழுத்தில் கத்தியேறும். சுவாரசியமான இரகசியக் காதல் வின்ஸ்டனின் மனதுக்குள் அரும்பினாலும், மரணபயம் மட்டுமே மேலோங்குகிறது.

திட்டமிட்டு, லண்டனை விட்டு இருவுள் வாயில் (ட்ரெயின்) பிடித்து கிராமப்புறமாக ஒதுங்கி உறவில் திளைக்கிறார்கள். ஆத்மார்த்தமான காதல் என்பதோ, உண்மையான காமம் என்பதோ இந்தக் காலத்தில் கிடையாது. எல்லா உணர்ச்சிகளிலுமே பயமும் வெறுப்பும் கலந்தே இருக்கிறது. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான செய்கையாகவே அவர்களின் இன்பம் அமைகிறது. உடற் கிளர்ச்சியை விட கலகத்தன்மையே அங்கு விஞ்சி நிற்கிறது.

உறவுக்குப் பின்புதான் அந்தப் பெண்ணின் பெயர் ஜூலியா என்று தெரியவருகிறது. ஆளுங்கட்சியில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிகளை சொல்கிறாள்.

'கூட்டங்களில் கட்சிக் கொடியின் ஒரு முனையை நான் எப்போதுமே தாங்கி வருவேன். கூட்டத்தோடு எப்போதுமே கோவிந்தா போடுவேன். திட்டுகிறார்களா... நானும் வன்மையாகக் கடிந்து முழங்குவேன். வாழ்க என்கிறார்களா... முகமலர்ச்சியுடன் கோஷம் எழுப்புவேன். தப்பித்து விடலாம்'
என்கிறாள்.

ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஓப்ரையனுடன் வின்ஸ்டனுக்கு நட்பு கிட்டுகிறது. அவருக்கும் கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. 'நியுஸ்பீக்' எனப்படும் புத்தம்புதிய (தடை செய்யப்பட்ட) அகரமுதலியை ஓப்ரையன், வின்ஸ்டனுக்கு வழங்குகிறார். வின்ஸ்டனின் நம்பிக்கைக்குரியவராக ஓப்ரையன் காட்டிக் கொள்கிறார். ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டத்தை தீட்டும் ரகசிய அமைப்பில் ஓப்ரையன் உறுப்பினராக இருப்பதாக சொல்கிறார். இருவரும் கையில் கோப்பையுடன், ஓசியானாவின் எதிரியான 'கோல்ஸ்டெயின் வாழ்க' என்று சொல்லி திராட்சை ரசம் பருகுகிறார்கள்.

ஓப்ரையன் மூலமாக, கோல்ஸ்டெயினின் பிரச்சார புத்தகம் கூட வின்ஸ்டனின் கைகளுக்கு வருகிறது.

ஜூலியாவுனான ரகசிய சந்திப்புகளுக்கு சாரிங்டனின் மேல்மாடியை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். ஜூலியாவின் மேலிட நட்புகளின் மூலம் கறுப்பு சந்தையில் கூட கிடைக்காத சுவைமிக்க ·பில்டர் காபிப் பொடி, பசும்பால், தூய சர்க்கரை, சாக்லேட் எல்லாமே எளிதில் கைவசப்படுகிறது.

வாழ்க்கையே - சிந்தனைக்குரிய புத்தகத்துடன், ரசமான உறவுடன், நாவுக்கினிய காபியுடன் இருக்கும்போது 'சாரிங்டனும் ஆளுங்கட்சியின் உளவாளி' என்னும் குரலுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னுடைய முறைக்குக் காத்திருக்கும்போது, சிறைக்கைதிகள் அனைவரும் அறை எண் 101-ஐக் கண்டு பயப்படுவதை வின்ஸ்டன் பார்த்து வருகிறான். அங்கு என்ன நடக்கிறது, எப்படி கொடூரம் என்று அறிய இயலவில்லை.

வின்ஸ்டனை விசாரிக்க ஓப்ரையன் வருகிறார். அவரும் 'பெரியண்ணனின்' கைக்கூலிதான். அல்லது அவர்தான் பெரியண்ணனா? அல்லது பெரியண்ணன் என்பதே மாயையா?

நாவலுக்கு இணையாக துன்புறுத்தல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஜான் ஹர்ட்டின் ஒடிசலான தேகம் இங்கு கைகொடுக்கிறது.

திரைப்படத்தில் அறிவியல் புனைவுகளுக்கே உரித்தான விநோத பறக்கும் கார்கள்; நவநாகரிக ·பேஷன் உறுத்தல்கள் இல்லாதது வெகு இயல்பு. என்றும் பொருந்தும் நிகழ்வுகளை மட்டுமே மையமாக்கி உறைய வைக்கிறது. கொஞ்சம் மசாலா வாசனையுடன் 1984-ஐ அணுக விரும்புபவர்கள் Terry Gilliam's "Brazil"-ஐ டிவிடி எடுக்கலாம்.

(படத்தின்/நாவலின் இறுதியை அறிய விரும்பாதவர்கள் இதற்கு மேல் தவிர்க்கலாம்.)

வின்ஸ்டனிடம் 'பெரியண்ணன்' மேல் மாறா அன்பு பூண வைப்பதுதான் ஓபிரையனின் நோக்கம்.

நான்கு விரல்களை மட்டும் நீட்டி எவ்வளவு என்று வினவுகிறார் ஓபிரையன். நான்கு விரல் தெரியவே 'நான்கு' என்கிறான் வின்ஸ்டன்.

சித்திரவதையின் உக்கிரம் எல்லை மீளுகிறது. குற்றுயிராகக் கண்ணுக்குத் தெரியும் நான்கு விரல்களை 'ஐந்து' என்கிறான் வின்ஸ்டன். பொய்யாக உரைப்பதை உணரும் ஓபிரையன் ஷாக் ட்ரீட்மெண்ட்டின் உச்சிக்கே கொண்டு போகிறார்.

'இரண்டும் இரண்டும் நான்குதானே... கண்ணால் பார்ப்பதை புத்தி எப்படி மறுதலிக்கும்?'

'வின்ஸ்டன்... சில சமயம் அது ஐந்து. சில சமயம் மூன்று. நான் சொன்னால், மூன்றும் ஐந்தும் ஒரே சமயத்தில் கூட அர்த்தமாகும். கொஞ்சம் சிரமம் எடுத்து என் கையைப் பார்... புத்திசாலியாக மாறு! நீ பெரியண்ணனுக்கு அடிமையாக இருந்தால் மட்டும் போதாது. அவனுடன் மையலுற வேண்டும்'

நடுவில் கொஞ்சம் ·ப்ளாஷ்பேக். சின்ன வயதில் வறுமையில் வாடிய வின்ஸ்டன். எலிகள் நிறைந்த வீடு. அம்மாவின் சொல் கேளாமல் அக்காவின் உணவைத் திருடிக் கொண்டு ஓடிப் போனது. அதன் பின் வீடு திரும்பியதில் அம்மாவையும் அக்காவையும் காணாமல் குற்றவுணர்ச்சியில் வாடியது. எங்கும் எலிகள். ஏழ்மையின் அடையாளமான 'உழைக்கும் மக்கள்' வாழும் இடங்களில் எலிகள். விலைமாதுடன் உறவு கொண்ட இடத்தில் எலிகள். எலிகள் என்றாலே குழந்தையாகத் தான் செய்த அடாவடி செய்கையும் அதனால் குடும்பம் நிலைகுலைந்ததும் வின்ஸ்டனின் நெஞ்சை வாட்டுகிறது.

கடைசியாக ரூம் #101-க்கு வின்ஸ்டன் கொண்டுசெல்லப்படுகிறான்.

அவனுடைய முகத்துடன் எலிக்கூடு அடைக்கப்படுகிறது. கதவைத் திறந்தால் பசியில் இருக்கும் கரு எலிகள் அவனைப் பதம் பார்த்துவிடும். கழிவிறக்கம், வலியின் பயம் எல்லாம் அவனைக் கூழாக்க, 'ஜூலியாவுக்கு இதை செய்யுங்களேன்! என்னை விட்டு விடுங்கள்!!' என்று கதறும்போது, அவனின் காருண்யம், காதல், சிந்தனா சக்தி எல்லாம் பறந்தோடுகிறது.

பெரியண்ணனை அவன் காதலிக்க ஆரம்பித்துவிட்டான்.

"போர் என்பதுதான் அமைதி!
அடிமைத்தனம்தான் விடுதலை!!
அறியாமைதான் பலம்!!! "



முந்தைய பதிவு: கருத்துக் காவலர்கள் மொழியாக்கம் - George Orwell




| |

2 கருத்துகள்:

Bala,
Amazing.. Normally people get lost in words and dilute the core. You seem to add more density with your sentences to the theme. I liked the way you have presented the depth. Thanks for this post.
regards
K.Sudhakar

Thank you Sudhakar.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு