வியாழன், ஏப்ரல் 20, 2006

Elfriede Jelinek

எல்·ப்ரீத் யெலினெக் (Elfriede Jelinek) ஆஸ்திரியாவில் பிறந்திருந்தாலும் ஜெர்மனியிலும் கொண்டாடப்படுபவர். பத்து நாவல்களையும் பதினைந்து நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இசை நாடகமான ஓபெரா (Opera)வையும் விட்டுவைக்கவில்லை. ஆணாதிக்கத்தை சாடியும், பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தியும் படைப்புகளை எழுதுபவர்.

2004ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் விருது பெறுவதற்கான காரணமாக 'அசாத்தியமான மொழியாளுமையுடன் எதிரும் புதிருமான குரல்களை தன்னுடைய நாவல்களிலும் நாடகங்களிலும் இசைக்கவிடுபவர். சமூகத்தில் ஊறிப்போன அவலங்களையும், அதிகார சக்திகளையும், பேரார்வத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்' என்று நோபல் கமிட்டி அறிவித்தது.

இலக்கியத்துக்கான நோபலைக் கடைசியாக 1996-இல் பெண்ணுக்கு வழங்கியிருந்தார்கள். இந்த விருதைப் பெறும் பத்தாவது பெண்மணியாக எல்·ப்ரீட் இருந்தார். விருதை நேரில் வாங்கிக் கொள்ள எல்·ப்ரீதால் செல்லமுடியவில்லை. தன்னுடைய கலை தொடர்பான மேற்படிப்பைக் கூட ஆளுமைக் குறைவினால் பாதியிலேயே கைவிட்டிருந்தார். அவருக்கு பெருந்திரளான மக்கள் முன் பேசுவது குறித்து பயமாக இருப்பதால் பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பினார்கள். இந்தப் பிரச்சினையை பின்னணியாக அமைத்து மற்றொரு நோபல் பரிசு எழுத்தாளரான கோட்ஸீ, 'எலிசபெத் காஸ்டெல்லோ' என்னும் நாவலை எழுதியுள்ளார்.

தன்னடக்கமா, சுய பச்சாதாபமா, எள்ளலா, என்று அறியமுடியாத பேச்சாக அவரின் நோபல் பரிசு ஒலிபரப்பு இருந்தது. 'பெண் என்பதால்தான் தனக்கு பரிசு கிடைக்கிறதோ' என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பி, ஜெர்மனில் எழுதும் வேறு சில நட்சத்திர எழுத்தாளர்கள் தன்னை விட தகுதி வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இதன் எதிரொலியாக அடுத்த ஆண்டுக்கான, 2005 நோபல் பரிசு அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன், கமிட்டி அங்கத்தினர் ஒருவர் தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கூட்டம் சேர்ப்பதை விரும்பாவிட்டாலும், அவரின் படைப்புகள் ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் பெருவாரியானவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பொது வாழ்விலும் ஓரளவு பிரபலமானவரே எல்·ப்ரீத். ஆஸ்திரியாவின் வடது சாரி கட்சியை மிகக் கடுமையாக தனது படைப்புகளில் விமரிசித்து வந்தவர், அந்தக் கட்சி 2000-த்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் தன்னுடைய நாடகங்களை ஆஸ்திரியாவில் போடுவதை முற்றிலுமாக விலக்கி தடுத்துவிட்டார்.

எதிர்மறையான சிந்தனைகளால் வாழ்க்கையை துயரம் மிக்கதாகவும், மனிதர்களின் கவலைகளை மட்டுமே முன்னிறுத்தி தன்னுடையப் படைப்புகளை எழுதிவந்தார் எல்·ப்ரீத். பெண்ணியத்தை முன்னிறுத்துபவர்களில் முக்கியமானவராக எல்·ப்ரீத் கருதப்படுகிறார். தானே ஒரு நாடகாசிரியராகவும், கவிஞராகவும் இருப்பதால் நாவல் வடிவில் பல மாறுதல்களை முயற்சித்துப் பார்த்து வந்தார். உதாரணமாக, அரங்க நாடகங்களில் வழமையான உரையாடல்களுக்கு பதிலாக, இசையால் வித்தியாசம் காட்டி ஒருவரின் பல்வேறு குணாதிசயங்களின் கூறுகளை முன்வைப்பதை சொல்லலாம்.

கவிதை நடையில் இருந்து உரைநடைக்குத் தாவுவது, நாடகத்தன்மை உடைய காட்சியமைப்பில் இருந்து எதார்த்தத்தின் உச்சங்களைத் தொடுவது, சுலோகம் போன்ற பாடல்களில் இருந்து கதாபத்திரங்களின் உள்முரண்களை வெளிப்படுத்துவது என்று ஸ்டீரியோடைப்களில் துளிக்கூட சிக்காத நடையை எழுத்தில் கொண்டு வருபவர் எல்·ப்ரீத்.

ஆஸ்திரிய அன்னைக்கும் செக் நாட்டை சேர்ந்த யூத அப்பாவிற்கும் பிறந்தவர் எல்·ப்ரீத். அக்டோபர் 20, 1946-இல் எல்·ப்ரீத் ஆஸ்திரியாவின் முர்ஸ¤ச்லாக் (Murzzuschlag)-இல் பிறந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பு குறித்த மேற்படிப்புப் படிக்கும்போதே, அரங்க நாடகம் மற்றும் கலையின் சரித்திரம் குறித்து பயின்றார்.

எல்·ப்ரீதின் தந்தை வேதியியல் நிபுணராக வேலை பார்த்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரியாவின் ஆயுதத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். இதனால் அவர் தப்பித்துவிட்டாலும், எல்·ப்ரீதின் குடும்பத்தை சேர்ந்த பலரும் நாஜி கொடுமைக்கு பலியானார்கள். அம்மாவின் பிடியில் வாடும்போதே கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளும் சேர்ந்து கொண்டது. மிகச் சிறிய வயதிலேயே பியானோ, கிடார், வயலின் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1967-இல் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை வெளிக்கொணர்ந்தார். ஆஸ்திரியாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 1974-இல் இணைந்தவர், 1991-ஆம் ஆண்டு வரை இடது சாரி உறுப்பினராகத் தொடர்ந்தார்.

காதலர்களாக பெண்கள் (Women as Lovers) என்னும் நாவலின் மூலம் பரவலான கவனிப்பை அடைந்தார். தொடர்ந்து நாஜி அடக்குமுறையை ஒத்துக் கொள்ளாமல் புறங்கையால் ஒதுக்கி, மூடி மறைத்துக் கொள்ளும் ஆஸ்திரிய வலது சாரிகளின் போக்கை தனது எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து வந்தார்.

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சுய விடுதலை, கொஞ்சம் பிரச்சார தொனி, என்று கலந்து கா·ப்காத்தனமான நகைச்சுவையுடன் கொடுத்து வந்தது, ஆஸ்திரிய நாட்டுப் பற்றை கண்மூடித்தனமாக பின்பற்றியவர்களுக்கு கோபத்தை வரவழைத்தது.

வெளிப்படையான விமர்சனங்களினாலேயே தன்னுடைய தந்தையின் நாடான ஜெர்மனியில் பல பரிசுகளை வென்று வந்தாலும் தாய்நாடான ஆஸ்திரியாவுக்கு விமர்சனங்களை மட்டும் கொடுத்து வருவதாக எண்ணப்படுகிறார். ஆஸ்திரிய தேசியவாதத்திற்கு எதிரி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வருகிறார்.

2004 நேர்காணலொன்றில் அவரே சொன்னது போல் 'கருத்தியல் ரீதியாக சமூகத்தின் அவலங்களை பன்முனைப் பார்வையில் அலசுவது மட்டுமே, எனக்குப் போதும். நிஜ வாழ்வின் கோரங்களை உங்களுக்கு நான் தருவேன். பாவ மன்னிப்பு தந்து மீட்சிப்பது மற்றவர்களின் வேலை'.



முக்கியமான ஆக்கங்கள்:
1. பெண்களாகக் காதலர்கள் (Die Liebhaberinnen): கோடை வாசஸ்தலத்திற்கு இரு பெண்கள் பயணிப்பதுதான் கதை. 1975-இல் வெளிவந்தது.

2. இறந்தவர்களின் குழந்தைகள் (Die Kinder der Toten): 1975-இல் வெளிவந்தது.

3. அதிசய அற்புத தருணங்கள் (Die Ausgesperrten): 1980-இல் வெளிவந்தது.

4. பியானோ டீச்சர் (Die Klavierspielerin): அம்மாவின் கட்டுப்பாடிற்குள் அடங்கிக் கிடக்கும் இசை ஆசிரியையின் கதை. ஓடுக்கங்களில் இருந்து பாலியல் ரீதியில் விடுதலை காண முயல்கிறாள். பாலியல் வன்முறை அளவுக்கதிமாக விரவிக் கிடப்பதாக விமரிசனத்துக்கு உள்ளானது. எல்·ப்ரீதின் சுயசரிதையாகக் கருதப்படுகிறது. 1983-இல் வெளிவந்தது.

5. காமம் (Lust): 1989-இல் வெளிவந்தது. ஆளுமையும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்துவதுமே உறவுகளை தீர்மானிக்கிறது என்கிறார். பெண்களின் மேல் ஏவப்படும் பாலியல் வன்முறையை நமது சமுதாயத்தின் அடிப்படைக் கூறாக காண்கிறார்.


முக்கியமான பிற பரிசுகள்:
ஜார்ஜ் புக்னர் பரிசு (Georg Buchner) - 1998
முல்ஹெம் (Mullheim) நாடகப் பரிசு - இருமுறை : 2002 மற்றும் 2004)
·ப்ரான்ஸ் கா·ப்கா (Franz Kafka) பரிசு - 2004



தமிழோவியத்துக்கு நன்றி.

| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு