புதன், ஏப்ரல் 05, 2006

Tamil Nadu Elections 2006

கூட்டாஞ்சோறு தேர்தல்; கூட்டாட்சி 2006


அமெரிக்காவின் ஆதிகால ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தன்னுடைய பதவிக்காலம் முடியும்போது அரசியல் கட்சிகளைக் குறித்து அமெரிக்க மக்களுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கிறார்:

"காலப்போக்கில் இவை (அரசியல் கட்சிகள்) சக்திவாய்ந்த பொறிகளாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. கொள்கையற்றவர்களும், சாமர்த்தியசாலிகளும், பேராசைமிக்கவர்களும் மக்கள் சக்தியை வீணாக்கி, அரசாங்கத்தைத் தங்களின் கைவசப்படுத்திவிடலாம்."

மாநிலத்துக்கு நன்மை தரும் திட்டங்களை மத்திய ஆட்சி தந்தால், அதிமுக அரசு தட்டிக் கழிக்கிறது. மாநில அரசின் கோரிக்கைகளை மோதல் போக்குடன் மத்திய அமைச்சகம் நிராகரிக்கிறது. ஒத்துப்போக வேண்டாம். சுமுகமாக காரியத்தை சாதிக்கும் போக்கு இல்லாததால் பல திட்டங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.

  • புதிய தலைமைச் செயலகத் திட்டம்,
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம்,
  • சேது சமுத்திர திட்டம்,
  • பைக்காரா நீர் மின் திட்டம்,
  • தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத் திட்டம்,
  • கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

    அடுக்கிக் கொண்டே போகுமளவு நேருக்கு நேர் அக்னி நட்சத்திரமாக பங்காளிக் கழகங்கள் மோதிக் கொள்கிறது.

    இருந்தாலும் தமிழகத்தைக் குறிப்பிடத்தக்க மாநிலமாக கடந்த நான்காண்டுகளும் தக்கவைத்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா. அதிரடி முடிவுகள்; கவர்ச்சிகரமானத் திட்டங்கள்; நிதிநிலை நிர்வாகம் என்று கட்டுக்கோப்புடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தொடர வைத்திருப்பதில் அதிமுக-வுக்கு பெரும்பங்கு இருக்கிறது. அதே போல் குறைந்த காலத்தில் திறமைசாலியாக முன்னிறுத்திக் கொண்ட தயாநிதி மாறனுக்கும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் இன்ன பிற தமிழக அமைச்சர்களின் பங்கும் சம அளவில் கணக்கிடப்பட வேண்டும்.

    உள்கட்டமைப்பு, தொழில்துறை, சேவைத்துறை, உற்பத்தித்துறை என்று ஒவ்வொன்றிலும் தமிழகத்தை தலைநிமிரச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை சாதனைகளை மட்டுமே தயாநிதி மாறன் தன்னுடையதாக சொல்லலாம். நோக்கியா, பி.எம்.டபிள்யூ, செயிண்ட் கோபைன், ·போர்ட், ஹூண்டாய், உலகவங்கி, இண்டெல், ஸ்டாண்டர்ட் சார்டர்ட், ஏ.பி.என் ஆம்ரோ வங்கி என்று டஜன் கணக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் தமிழகத்தில் முதலீடு செய்ததில் முந்தைய திமுக ஆட்சியுடன் சரியான போட்டி போட்டிருக்கிறார் ஜெயலலிதா.

    2001 தேர்தலை நேர்மறையாக அணுக நினைத்து திமுக தோற்றுப்போனது.

    இந்தியா டுடே மாநிலங்களின் தரப்பட்டியல் கணிப்புகளின் படி இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. (தமிழகத்துக்கு முன்பாக பஞ்சாப், கேரளா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளது.)

  • சட்டம் ஒழுங்கில் #2
  • ஆரம்ப சுகாதாரத்தில் #3
  • ஆரம்ப கல்வியில் #4
  • உள்கட்டமைப்பில் #9 (தென்னிந்திய மாநிலங்களில் #2; கேரளா மட்டுமே முன்னே உள்ளது.)
  • விவசாயத்தில் #3

    இதற்கெல்லாம் முதலமைச்சர் மட்டுமேதான் காரணம் என்பது போல் அதிமுகவினரும் புரட்சித் தாய், கழகத்தின் காவல் தெய்வம், வாழும் வள்ளலே, தங்கத் தாரகை, வெற்றிச் செல்வி, சிங்கநிகர் தலைவி, இதய தெய்வம், வீரத்தாய், ஒளிவிளக்கு, காவிரி தந்த கலைச்செல்வி, நிரந்தர முதல்வர் என்று புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர்.

    இவற்றில் சில உயர்வு நவிற்சிக்காகவே சொல்லப்படுவதால் கேளிக்கையாக ரசித்துவிட்டுப் போய்விடலாம். நிரந்தர முதல்வர் என்பது முதல் சறுக்கல். தேசிய அளவில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சிக்கான தேர்தலாக 2006-ஐ எடுத்துக் கொள்ளலாம். திமுக கூட்டணி ஜெயித்தால் கவலையில்லை. மத்தியில் காங்கிரஸின் உயிர் திமுகவின் எம்பிக்கள் வாக்கில் இருக்கும். சென்னை கோட்டையில் திமுகவின் நாற்காலி காங்கிரஸின் கோஷ்டி கானங்களில் அபஸ்வரமாக ஒலித்தாலும் டெல்லி மேலிட மேடம் குரல் கொடுத்தால் அடங்கிப் போகும்.

    பெரியாரின் பேரனும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மத்திய இணை அமைச்சராக 'அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி வேண்டும்' என்று கோரினார். மேலும் பல விமர்சனங்களை திமுக தலைவர் கருணாநிதி மேல் வைத்தார். சோனியா காந்தியும் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் தொலைபேசியில் மன்னிப்பு கேட்ட பிறகே இளங்கோவனார் சொன்ன கெட்ட வார்த்தையான 'கூட்டணி ஆட்சி' வாபஸ் வாங்கிய பிறகே திமுக அமைச்சரவையில் தொடர்ந்தது.

    ஆனால், இன்றைய சூழலில் திமுகவே ஆட்சிக்கட்டிலைப் பகிர தயாராகவே உள்ளது. கூட துணைக்கு காங்கிரஸ் போன்ற கட்சி இருந்தால் சௌகரியம் என்று கருணாநிதி நினைக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி போன்ற பச்சோந்தி கட்சியை ஆட்சியில் சேர்த்துக் கொள்வதால் ஸ்திரத்தன்மை கிடைக்காது. மேலும் அதிமுக போதிய இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை அடையாவிட்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் இராமதாஸ் அணி மாறி விடுவார்.

    மத்தியில் தன்னுடைய கட்சி காங்கிரஸையும் மாநிலத்தில் அதிமுகவையும் ஆதரிக்கும் என்று அறிக்கை விட்டு மத்தியில் மகன், மாநிலத்தில் மகள் என்று அமர்க்களமாக பாலிடிக்ஸ் நடத்தும் கட்சி - பாட்டாளி மக்கள் கட்சி. பா.ம.க.வை நம்பி ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் உட்கட்சிப் பூசலை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், ஆட்சியைக் குலைக்கப் பெரிதாக திட்டம் தீட்ட மாட்டார்கள். மேலும் துணை முதல்வர் கோரினால் கூட, ஸ்டாலினை முதல்வராக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்கும். சோனியாவைப் போல் கூட்டணித் தலைவராக கருணாநிதியும் முதலமைச்சராக ஸ்டாலினும் இருப்பார்கள்.

    கருணாநிதிக்கும் திமுகவுக்கும் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

    கடந்த மே மாதம் நடந்த காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் கருணாநிதி இரு கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். தேர்தல் ஆணையர் கண்டிப்போடு செயல்பட்டாலும், ஆளுங்கட்சியும் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வெற்றியடைந்தார்கள். இப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் பம்பரமாக செயல்படும். ஆனால், 234 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியாக வலம் வராமல், சாதாரண கட்சியாக வாக்கு கோருகிறது அதிமுக.

    பெரியார் 'ஐந்து நோய், மூன்று பேய்' என்று கூறுவார். அந்த ஐந்து நோய்களில் ஒன்று 'அரசியல்'.

    'ஆட்சியைப் பிடித்தே தீருவோம்' என்று சென்ற வருட இறுதியில் தாமிரபரணி ஆறு மீது சத்தியம் செய்தார் வைகோ. இன்று, அதிமுகவின் 184 தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, தன்னைவிட விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு இட ஒதுக்கீடு அதிகம் கிடைத்துவிடுமோ என்று கவலைப்படும் நிலை. ஊடகங்களின் மிகப்பெரிய காமெடியனாக வைகோ திகழ்கிறார். கொள்கைப்பிடிப்புள்ளவர், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற ஒளிவட்டங்கள் தொலைந்து, சாதாரண வாக்காளனின் நம்பிக்கையை இழந்திருக்கிறார். பெரியார் சொன்ன அரசியல் நோய் பெருமளவு பீடிக்கப்பட்டவர்கள் வைகோவும் மதிமுகவும்.

    விஜய்காந்த் செல்லும் இடமெல்லாம் பெருங்கூட்டம் கூடுகிறது. மாற்றத்தை விரும்பும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. சினிமா கவர்ச்சிக்கு மவுசு உண்டு. அதையும் தாண்டி திறமையாக 'நடிகர் சங்க'த்தை அரசியல்காரர்களுக்கு நடுவில் அட்ஜஸ்ட் செய்து நிர்வகித்தவர் என்னும் கள சர்டிஃபிகேட் இருக்கிறது. வைகோ விட்ட இடத்தை விஜய்காந்த் பிடித்திருக்கிறார். அதிமுக-வுடன் கூட்டணி என்றாலும், தனித்து நின்றாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை தேதிமுக அடைவது உறுதி. அதிமுக-வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மதிமுக-வின் வாக்கு வங்கியை பாதிக்காமல், மதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள்.

    தனித்து நின்றால் வாக்காளரின் சொந்த செல்வாக்கு மட்டுமே செல்லுபடியாகும். மதுரைப் பக்கம் இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, இரண்டில் நின்று இரண்டிலுமே கேப்டன் ஜெயிப்பார். 1991-இல் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். (அந்தத் தேர்தலில் திமுக-வின் சார்பில் மு. கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார்.) அது போல் தேதிமுக தனித்துப் போட்டியிட்டால் இரண்டு மூன்று இடங்களை மட்டுமே பெறமுடியும். மதிமுகவின் வெற்றியை முடிந்த அளவு பாதித்து வைகோவை சோகத்தில் ஆழ்த்துவது மட்டுமே தேதிமுகவின் முக்கிய சாதனையாக ஆகலாம்.

    தேதிமுக சார்பில் சிவகாசி ஜெயலட்சுமி, செரீனா, சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போன்ற பெயர்பெற்றவர்கள் நிறுத்தப்படலாம். ஊடகங்களுக்கும் வலைஞர்களுக்கும் தீனியாக விமர்சனங்களும் செய்திகளும் கிடைக்குமே ஒழிய அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு எதுவும் இல்லை.

    மகளிருக்கு இட ஒதுக்கீடாக 33 சதவீதத்தை விஜய்காந்த் அறிவித்துள்ளார். பெண் வேட்பாளர்களை நிறுத்துவதில் வேறு எந்தக் கட்சியும் இவ்வளவு அக்கறை காட்டவில்லை. மூவாலூர் ராமாமிர்தம், சிவகாமி சிதம்பரனார், மணியம்மையார் என்று பலர் தனித்துவத்தோடு போட்டியிட்டது அந்தக் காலம். காங்கிரஸின் ஜெயந்தி நடராஜன், அதிமுகவின் வளர்மதி போன்ற ஒரு சிலர் தவிர திமுக, அதிமுக, போன்ற முக்கிய கட்சிகளும் காங்கிரஸ், பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற வளரும் கட்சிகளிலும் தலைமைப் பண்புகளோடு தன்னெழுச்சி பெற்ற பெண்களின் முகங்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.

    காவிரி தந்த கலைச்செல்வி என்று சுவரொட்டிகள் காணப்பட்டாலும் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாததால் ஜெயலலிதா தப்பித்துவிட்டார். நான்கு வருடங்களில் நடுவர் மன்ற ஆணைப்படி 820 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். வந்தது என்னவோ 484 டி.எம்.சி.தான். மத்திய அரசுடன் பிணக்கு போடுவது போல் அண்டை மாநிலத்துடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் ஜெயலலிதா.

    அரசு வகுத்திருக்கும் நிலத்தடிநீர் நிர்வாகக் கொள்கை ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்திக்கிறது.

  • மழைநீர் சேகரிப்புத் திட்டம்,
  • விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு 43 கோடி அளவில் டேனிடா திட்டம்
  • உலக வங்கி உதவியுடன் 840.84 கோடி அளவில் நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு திட்டம்
    என்று நீர்வளத்தை திறம்பட மேம்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு.

    நிர்வாகத்திறனை பாராட்டி மகிழும் அதே வேளையில் அதிமுக அரசின் அகங்கார முதலமைச்சரின் போக்கையும் லஞ்ச ஊழல்களையும் சொன்னால் இணையத்தின் கொள்ளளவே நிரம்பும் அளவு தகவல்களும் வழக்குகளும் நிரம்பியுள்ளன.

    முதலமைச்சரால் எழுந்து நின்று வணங்கப் பட வேண்டிய சபாநாயகர் முதல்வரைப் பார்த்ததும் 'எழுந்து நிற்கவோ, காலில் விழவோ' என்று பணிவாக நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார். அடுத்த ஆட்சியில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால், கூட்டணி கட்சிகளைத் திருப்திசெய்யும் நோக்கில் சபாநாயகர் வேறொரு கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் வாய்ப்பு இருப்பது மட்டுமே நிம்மதி.

    ராபின் மெயின் வங்கி ஊழல் வழக்கு இருபது வருடங்களுக்கு மேலாக தீர்ப்பாகாமல் சபாநாயகர் காளிமுத்துவுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது.

    ஜெயலலிதா, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அண்ணியச் செலாவணி மோசடி வழக்கில் ஆஜராகி dial-up வேகத்தில் கேஸை நகர்த்துகிறார்கள். சொத்து குவிப்பு வழக்கு கொஞ்சம் டி.எஸ்.எல் வேகத்தில் நகர்ந்தாலும் லண்டன் ஹோட்டல் வழக்கில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. அப்படியே இவை எல்லாம் முடிந்தாலும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று ஜெயலலிதா 'நிரந்தர முதல்வரா'க அரியாசனம் தாங்க பல வழிகள் இருக்கும்.

    ஜெயலலிதா 2003-இல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பேரில் ரத்து செய்தார். லோக்சபா தோல்விகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அது வாபஸ் ஆனது. இது போன்ற வெகுஜன கவர்ச்சித் திட்டங்களினால் அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் பின்னடைவே.

    'சாதி, மதம் முதலிய அடிப்படைகளில் அரசியல் நடத்துவதை விட சினிமாப் புகழை வைத்து அரசியல் நடத்துவது எவ்வளவோ மேல்'
    என்னும் ஞாநியின் சிந்தனையுடன் நான் முற்றும் ஒத்துப் போகிறேன்.

    தேவர்களின் வாக்கை குறி வைக்கும் கார்த்திக்; ஜாதிப் படி வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள்; இவற்றில் சரியான மாற்றாக எவருமே இல்லாதது வருத்தத்துக்குரியது. இரண்டு கோடி முக்குலத்தோர் இருப்பதாக சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆண்டு கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி முக்குலத்தோர் இருக்கிறார்கள். வன்னியர் வாக்கு வங்கியைப் போல் தனிக்கட்சியின் கீழ் தேவர்கள் இல்லை. ஃபார்வார்ட் ப்ளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ந. சேதுராமன் என்று பலவாகப் பிருந்திருக்கின்றனர்.

    தலித் வாக்குகள் பள்ளர், பறையர், அருந்ததியர் என்று உட்பிரிவுகளால் பிளவுபட்டிருக்கிறது. 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமியை எந்தக் கட்சியுமே உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட தேவர் சமூக வாக்குவங்கியும் மறவர், அகமுடையர், பிறமலைக் கள்ளர் என்று பிளவுபட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எம்.ஜி.ஆர்; எம்.ஜி.ஆருக்குப் பிறகு சசிகலா செல்வாக்கு உடைய அதிமுக என்று பரிவு காட்டி வருகின்றனர்.

    கடைசியாக சில கணக்குகள்...

  • 4.72 கோடி தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள்
  • இதில் கடந்த 2004 தேர்தலில் அதிமுக-வுக்கு ஒரு கோடி வாக்குகள் விழுந்தது.
  • இப்பொழுது அதிமுக-வுடன் திருமா, வைகோ போன்றோர் அணிமாறி அல்லது தனித்து நிற்பதற்கு பதில் கூட்டு வைத்திருக்கின்றனர்.

  • 12.5 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்கு வங்கி சென்ற லோக் சபா தேர்தல் போல் இல்லாமல் இப்போது திருப்தியாக இருக்கிறது.
  • 86 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பலவித சலுகைகளினாலும் தக்க வானிலையாலும் மீண்டும் வேலைக்கு செல்கிறார்கள்.
  • 51 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத் தள்ளுபடி போன்றவை அள்ளிவிடப்பட்டுள்ளது.
  • 2.11 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன
  • இதில் 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து பயனடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
  • தலித் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் 1.26 லட்சம் பேர்கள் பயனடைகிறார்கள்.
  • வெள்ள நிவாரண நிதியாக அனைவருக்கும் 2000 ரூபாயைக் கொடுத்திருக்கிறது.

    தமிழன் 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்' உடையவன். கடைசியாகக் கிடைத்த 2000 ரூபாயும், கடை கண்ணிக்கு செல்ல உதவும் சைக்கிளும், இலவச மின்சாரமும்தான் மனதில் லயிக்கும்.

    நெரிசலில் சிக்கி இறந்த 48 பேர், கொள்கை அரசியலை மூட்டை கட்டிய மதிமுக, போன்றவை புறந்தள்ளப்படும். இவை எல்லாம் மீண்டும் அதிமுக ஆட்சியையே சுட்டுகிறது.

    இந்த கட்டுரை எழுதும்போது விஜய்காந்த் கூட்டணியில் சேரவில்லை. சேர்ந்தால் ஜெயலலிதாவின் வெற்றி உறுதி செய்யப்படும். சேராவிட்டால், சில தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கு இரண்டாக உடையும்போது, திமுக-வுக்கு பாதகம் விளைவிக்கும். 1989-இல் பெருவாரியான ஓட்டுகள் இரண்டாக ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் கிடைத்தாலும், ஆட்சி அமைத்தது என்னவோ திமுக-தான்.

    2001-இல் சிறப்பான கூட்டணி வியூகம் வகுத்தும் திமுக - ஆளுங்கட்சிக்கு எதிரான அலையில் தோற்றுப்போனது. இன்றைய நிலையில் தமிழக மக்கள் அதேபோல் ஒரு ஷாக் ட்ரீட்மெண்டை அதிமுக-வுக்குக் கொடுத்து, திமுக-வின் கூட்டணி ஆட்சியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.

    80 சீட்களை அதிமுகவும், 100 தொகுதிகளை திமுகவும், மீதமிருக்கும் 54 தொகுதிகளை மற்ற கட்சிகளும் பெற்றால் 'மைனாரிட்டி' அரசு கிடைக்கும். அரசாள்பவர்களும் கொஞ்சம் பயபக்தியுடன் செயலாற்றுவார்கள்.

    திசைகளுக்கு நன்றி

  • 1 கருத்துகள்:

    Vaikkovai Komali akkiyathu sarru over ()

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு