புதன், மே 17, 2006

métier

வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.


  • ப்ளாக்ஸ்பாட்டை விட வோர்ட்ப்ரெஸ் சிறந்தது. யார் பின்னூட்டம் இடுகிறார்கள், எப்படி வருகை புரிகிறார்கள் போன்ற சில்லறை விஷயங்களிலிருந்து போலிகளைக் கட்டுபடுத்துவது வரை மேம்பட்ட முறையில் செயல்படுகிறது. இதுவரை வலைப்பதிவு தொடங்காவிட்டால் வோர்ட்பிரஸ் பயன்படுத்தவும்

  • கல்யாணம் என்றால் மாப்பிள்ளை வீடு, மாமியார் வீடு ரெண்டும் முக்கியம்; அது போல், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டிலும் பதிவை சமர்ப்பித்து விடவும்.

  • சாஃப்ட்வேருடன் வரும் manual-களை ஏறெடுத்தும் சீந்தாத சாதியைச் சேர்ந்தவர்கள் நாம். என்றாலும், கில்லியின் தமிழ் தட்டச்சு பக்கம், Indian Language Development WebSite போன்ற உதவிப் பக்கங்களைப் பொறுமையாக ஒரு முறையாவது முழுவதுமாக சிரத்தையாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளவும்.

  • டெக்னோரட்டி, ரோஜோ, போன்ற அகில உலக தில்லாலங்கடி சேவைகளிலும், அனிதா போரா, காமத், போன்ற லோக்கல் தாதா லிஸ்டிங்களிலும் முன்மொழிந்து மொய் போல் சுட்டியை வலைப்பதிவில் சேர்த்துவிட்டு அவர்களின் நோட்டு புத்தகத்தில் இடம் பிடித்துவிடவும்.

  • இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.

  • ப்ராஜெக்ட் டெலிவரி ஆனபிறகு சப்போர்ட் கடுப்படிக்கும். அது போல் நாளடைவில் நனவோடைகள் போரடிக்க, சினிமா, தொலைக்காட்சி, புத்தகம் போன்ற கலைத் துறை விமர்சனங்களை முன் வைக்கவும்.

  • இதுவும் தீர்ந்து போக தினசரி செய்திகளை மேயவும். எல்லோரும் தினத்தந்தி, தினமலர், தினகரன் படிப்பதால் தி ஹிந்து, டெக்கான் * போன்ற ஆங்கில நாளிதழ்களை வாட்ச் செய்யவும். விகடன், குமுதம், கல்கி, துக்ளக், கீற்று.காம் போன்றவற்றையும் கண்காணிக்கவும்.

  • தொடர்ந்து சரக்கில்லாவிட்டால், இந்தியா டுடே, ஃப்ரண்ட்லைன், தி வீக், அவுட்லுக் பக்கம் பார்வையைத் திருப்பவும். இதுவும் redundant ஆனால், எகனாமிஸ்ட், ஃபாரின் பாலிசி,ஃபோர்ப்ஸ் என்று மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் உதவும்.

  • நியுஸ்லெட்டர்ஸ் கொடுக்கும் தளம் அனைத்திலும் பெயரையும் மின்மடலையும் பதிவு செய்து, அவர்களின் வலையகம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தெரிவிக்க வசதி செய்து கொள்ளவும்.

  • இவ்வளைவையும் படித்து அப்படியே கொடுக்க செய்திகள் ஹார்லிக்ஸ் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும். நமக்கு முக்கியமாகப் படுவதை, புல்லட் பாயிண்ட்டாக கொடுத்தால் நேரப் பற்றாக்குறையால் திண்டாடும் படிப்பாளிகளுக்கு வசதியாக இருக்கும். நம்ம கருத்தை சுருக்+நறுக்காக பக்கத்திலேயே சொந்தமாக கிறுக்கலாம். புகைப்படம் இட்டால், காசி சொல்வது போல் (மேலும் விரிவாக இங்கே) எளிதில் வலைப்பதிவில் தோன்ற வகை செய்யவும்.

  • சிந்தையைக் கிளறுவதாக தோன்றும் பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடவும். நமக்குப் பிடித்த பதிவுகளாகத் தேர்ந்தெடுத்து இடவும். நமக்குக் கருத்து இருந்தால் மட்டுமே இடவும். கண்டிக்கிறேன், பிடிக்கவில்லை, ரசிக்கவில்லை, நீங்க நல்லா எழுதலை போன்ற பெரிய மனுசத்தனமான மறுமொழிகள் தேவையில்லாதது; அப்படியும் கை அரித்தால் ஏன் என்றாவது சொல்லி விடவும். நம்ம அலுவல்/வீட்டு ஐ.பி முகவரி தெரியக் கூடாது என்றால் பிகேபி சொல்வது போல் செயல்படவும்.

  • அனானியாக பின்னூட்டமிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நம்ம வலைப்பதிவிற்கு சக கருத்து உடையவரை (& vice versa) வரவேற்பதற்கும் காமெண்ட்கள் உதவுகிறது; அதே சமயம் நம்ம crap-ஐ நாமே சொந்தம் கொண்டாடா விட்டால், வேறு யார் உரிமை பாராட்டுவார்கள்?

  • நேர்மையாக சொல்ல வந்ததை எழுதவும். நம்ம மனசுக்குப் பட்டதை ஒத்துக் கொண்டு எழுதினால் அதற்கு கிடைக்கும் வரவேற்பே தனி. மேலும், எழுத்திலும் வெளிப்படையான எண்ணம் தெரியவரும். அதற்காக சொல்ல வந்ததை அப்படியே சொல்கிறேன் என்று உடனடியாக போஸ்ட் செய்து விடாமல், ஒரு தடவையாவது ப்ரூஃப் பார்த்து தட்டச்சுப் பிழைகளை கூடிய மட்டும் திருத்திப் போட்டால் வாசகரை கௌரவிக்கும்.

  • வலைப்பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து படித்து வரவும். கில்லி, தேஸிபண்டிட், தேஸிகிரிடிக்ஸ் போன்ற பரிந்துரைகளைப் பார்க்கவும். தினசரி தெருமுக்கு பிள்ளையாருக்கு அரகரா போடுவது போல் தேன்கூடு, தமிழ்மணம், மறுமொழி நிலவரம், வாசகர் பரிந்துரை, நட்சத்திரப் பதிவர். அதிகம் பார்வையிடப்பட்டவை ஆகியவற்றை தரிசித்து விடவும். [இந்த வலைப்பதிவரும் கில்லியின் பங்களிப்பாளர் போன்ற disclosureகளை சொல்லிவிடவும்]

  • வலைப்பதிவு என்பது தனி நபர் மடலுக்கு ஈடாகாது. நீங்கள் வலைப்பதிவராக இல்லாவிட்டால், இந்தப் பதிவை நான் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அஞ்சலிட்டிருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வேறு எவரையும் புண்படுத்தாது என்றும் உணர்ந்தால் மட்டுமே பொதுவில் இடவும்.

  • நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.

  • மேலே உள்ள கருத்திற்கு பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விதிவிலக்கு. அரசியல்வாதிகள், நடிகர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைத் திட்டாவிட்டால் வலைப்பதிவுக்கு மேட்டரே கிடைக்காது.

  • வார்ப்புருவில் மாட்டிக் கொண்ட வலையகம் போல் ஒரே மாதிரி monotonous-ஆக எல்லா பதிவுகளும் அமைத்துக் கொள்ளாமல், ஒரு பதிவில் நினைவலை, அடுத்தது அரசியல், தொடர்ந்து சினிமா, கொஞ்சம் வலைப்பதிவு வட்ட அரசியல், சொல்ப தமிழ், லிட்டில் ஆங்கிலம், குடும்ப ரசாபாசம் என்று கலந்து கட்டி கூட்டாஞ்சோறாகக் கொடுக்கவும்.

  • ஃப்ரீயா கொடுத்தா பினாயில் குடிப்போம் என்பதற்காக என்னைப் போல் நிறைய சுட்டிகளையும், ஜாவாஸ்க்ரிப்ட் ஜாலங்களையும் வலைப்பதிவில் இணைப்பதால், அகலபாட்டை இல்லாமல் வருபவர்களுக்கு 'மும்பை எக்ஸ்பிரஸ்' படம் எப்போது முடியும் என்று பொறுமையிழப்பது போல் கோபம் வரும். டெம்பிளேட்டில் அதிகம் கை வைத்தால் சரக்கு கம்மி என்று அர்த்தம். உலகெங்கும் உலாவிகள் தோறும் அதிவேகத்தில் வலைப்பதிவு மின்ன, சின்ன வார்ப்புரு வைத்திருக்கவும்.

  • கொதிப்பு உயர்ந்து வருகிறதா... பதிவு செய்யலாம்; கருத்தை நிறைக்கிறதா... பகிரவும்; அசத்தல் திரைப்படமா... சொல்லவும்; போன பதிவில் பின்னூட்டமிட்டவருக்கு இந்த விஷயம் பிடிப்பதால் மட்டும் பதிய நினைக்கிறோமா... பதிவதற்கு முன் யோசிக்கவும்.

  • அதிகம் ஈஷிக் கொள்ளாமல், முன்முடிவுகளுடன் நட்புக்காக சங்கடமான எண்ணங்களைத் தவிர்க்காமல், இன்றைக்கு மட்டும் நான்கு பதிவுகள் இட்டு விட்டோமே என்று சுயக்கட்டுப்பாடுகள் இட்டுக் கொள்ளாமல், பெருசு போல் டி ஆர் விஜயகுமாரி கண்களுக்கு மயங்குகிறோமே என்று மறைத்து வைக்காமல், தனித்துவமாக நினைத்த விஜய்காந்த் முதல் நாளே சட்டசபை மட்டம் போடும் உள்முரண்களை இருட்டினுக்குள் தட்டிக் கொள்ளாமல் எழுதினால் லேஸிகீக் சொல்வது போல் Raw, naive and unfettered ஆக இருந்தால் வரப்பிரசாதம்.

    ஏதோ சொல்ல நினைத்து, எங்கோ இழுத்து சென்றால் ஃப்ரீயா வுடுங்க... அதுதான் ப்ளாக் போஸ்ட்! இந்தப் பதிவில் ஒரு பயனும் இல்லாவிட்டாலும் தலைப்பு வார்த்தையாவது புத்சு.




    | |

  • 16 கருத்துகள்:

    அப்பாடி.. சுஜாதா கட்டுரை படிச்சி ரொம்ப நாளாச்சேன்னு இப்பத்தான் நினைச்சேன்.. என்னது இது நீங்க எழுதினதா?

    பெருசுக்கு டி ஆர். விஜயகுமாரி ? ?????????

    அப்படின்னா யார்?

    டி.ஆர். ராஜகுமாரியா?
    இல்லே
    எஸ் எஸ் ஆர். விஜயகுமாரியா?

    இப்படிக் குழப்பினால் பெருசுங்களுக்கு நிஜமாவே கஷ்டம்தான்!:-)))

    இன்னொண்ணு சொல்லாம ஓரவஞ்சனை பண்ணுறீங்களே.
    Use <title>....</title> tag before <meta> tags in your template. அப்பத்தான் ஒவ்வொருவரும் நம் வலைப்பதிவை இரண்டு முறை உலாவியில் பார்ப்பார்கள். 'தூஊதூஉ' அல்லது 'பூச்சிபூச்சி'யாய் ஒருமுறை, பிறகு view-encoding->utf-8 தேர்ந்தெடுத்து ஒருமுறை. நம் ஹிட்கவுண்ட்டர்களை வேகமாக ஏற்ற இதுவும் பிரயோசனப்படும்:P

    Dhool!

    ...mmmm :-)

    - Suresh Kannan

    :))

    //ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.//

    Do we have a Vito-Johnny Cakes situation here? Not that there's anything wrong with it... ;-)

    //நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.//

    Nice...

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தலைப்புக்கு என்ன பொருள் என்றும் சொல்லி இருக்கலாம்.

    பலமுறை புரியாததை எழுதினால், வாசகர்கள் தேடித் தெரிந்துகொள்வதை விட அடுத்த சொடுக்குக்குப் போய்விடுவார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-).

    அப்புறம் ஒரு இடுகைப் பக்கத்தில் இருந்து முதன்மைப் பக்கத்திற்கு இட்டுச் செல்லும்படி தலைப்பைச் சுட்டும் வழி தரமாக இருந்தாலும், நீங்கள் அப்படி அமையாத அடைப்பலகை கொண்டு எளிதில் வாசகர்களை நொந்து கொள்ளச் செய்ய முடியும் என்பதையும் சொல்லுங்கள் :-)

    முகமூடி __/\__

    துளசி... கீ தவறிடுச்சு; அழுவாச்சி ராணியை சொல்லவரவில்லை; ராஜகுமாரியை எழுத நினைத்து விஜயகுமாரி விழுந்துவிட்டது. கவனித்ததற்கு நன்றி :-D)

    காசி... நல்ல ஐடியாவா இருக்கிறதே.

    காமெண்ட்களை 'பாப்-அப்' ஆக வைக்காமல், தனிச்சுட்டியில் கொடுப்பது;

    கொஞ்சம் எழுதிவிட்டு 'மேலும்...' என்று முடித்துக் கொள்வது;

    தொடுப்புகளை புதிய சாளரத்தில் துவக்குவதாக வைக்காமல், தற்போது படிக்கும் உலாவியிலேயே துவக்குவது என்று இன்னும் சில டெக்னிக்கள் இருக்கிறது ;-)

    (இட்லி-வடை போன்று பாப்-அப் மறுமொழிகள் கொடுப்பதிலும் பின்னடைவுகள் இருக்கிறது; என்னுடைய கூகிள் பட்டி, அவற்றை 'தேவையற்றவை' என்று சொல்லி, தடுத்து விடும்.

    Theo போல் பெரிய கட்டுரை எழுதும்போது 'மேலும்...' பயனளிக்கிறது.

    என்னைப் போல் பலர், தனி சாளரத்தில் புதிய உலாவியைத் தொடக்கி தொடுப்புகளைப் படிக்கக் கொடுப்பதை விரும்புவதில்லை ;-))

    பிரகாஷ், சுரேஷ் கண்ணன், __/\__

    ---தலைப்புக்கு என்ன பொருள்---

    பதிவின் இறுதியில் சுட்டி கொடுத்திருக்கிறேனே ;-)

    ---Vito-Johnny Cakes ---

    சொப்ரானோஸ் இனிமேல்தான் ரெகுலராக பார்க்க வேண்டும். எச்பீஓ இல்லாதது முதல் பிரச்சினை. நெடுந்தொடரை ஒளிவட்டில் தொடர்ச்சியாக பார்ப்பது அயர்ச்சியைத் தரும் என்பது இரண்டாவது பிரச்சினை.

    தொடர்புடைய முந்தைய பதில்: Thamizh Fonts Help, Resources, Blog Setup, Thamizh Typing - Snap Judgement

    ---Comment moderation ---

    தமிழ்மணத்தில் சேர்க்கும் போதே மறுமொழி மட்டுறுத்தலை செயல்படுத்த வலியுறுத்தி விடுவார்கள். வோர்ட்ப்ரெஸில் சுடுசொல் (ஆங்கிலத்தில்) இடம்பெற்றால் அதை **** என்று மாற்றுமாறு செய்யமுடியும். தமிழுக்கு இனிமேல்தான் ப்ளக்-இன் எழுதவேண்டும்.

    Have linked this in DP

    http://www.desipundit.com/2006/05/19/tamilblogging/

    நன்றி டுபுக்கு :-D)

    உருப்படியான உதவி - முன்னாலேயே படித்திருந்தா, என் பல பதிவுகளை திருத்தியிருப்பேன்; சிலவற்றைப் பதிந்திருக்க மாட்டேன்!

    இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். + ஸ்டாருக்காகவோ, பின்னூட்டம் அல்லது கவுண்டர் நம்பர் ஏறுவதற்காகவோ மட்டும் பதிவதாக இருந்தால் மூன்று முறை யோசிக்கவும். முதன் முதலில் என் ஈகோ அரிப்பை சொரிந்து விடுவது மாதிரி பின்னூட்டங்களும், கவுண்டர் நம்பரும் ஏற, கொஞ்சம் தடம்புரண்டு, தரம் குறைந்தது இப்போது புரிகிறது.

    ரங்கா.

    //இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.//

    ஹாஹா..

    இந்த லிஸ்ட் எழுத்த்தான் இடைவெளியா?

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு